12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்திய மூலிகைகளுக்கு வந்தது ஆபத்து!

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சான்டோ' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயாஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது.

 `இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் அமெரிக்காவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.


இதுபற்றி `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் செயலாளரான சித்தா டாக்டர் சிவராமனிடம் பேசினோம்.


``இந்த மூலிகைச் சுரண்டல் இந்தியாவின் இறையாண்மையையே கேள்விக்குறியாக்கும் செயல். இதைப் பற்றி இதுவரை எந்த அரசியல் கட்சியும் கவனம் செலுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அமெரிக்க நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நம்மூரில் `அமுக்கிராங் கிழங்கு' என்ற மூலிகை இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே விளையும் இது, நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக்குறைவு நோய்க்கு அருமருந்து ஆகும். இதில் `விதானலைட்ஸ்` என்ற ரசாயனம் மூன்று சதவிகிதம் இருக்கிறது. அதுதான் மருந்து. இந்த அமுக்கிராங் கிழங்கை, மான்சான்டோ நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதன் செல்லை உடைத்து, அதன் மரபணுவில் வேறொரு மரபணுவைப் புகுத்துவார்கள். அதன்மூலம் அமுக்கிராங் கிழங்கின் மூன்று சதவிகித மருத்துவக் குணத்தை முப்பது சதவிகிதமாக உயர்த்துவார்கள்.

நினைவாற்றலைப் பெருக்கும் நீர்பிரமி, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கீழாநெல்லிக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மூலிகைகளின் நோய் தீர்க்கும் மருத்துவக் குணம் கொண்ட ரசாயனத்தை இவர்கள் பலமடங்கு பெருகச் செய்து அந்தவகை மூலிகைக்குக் காப்புரிமை வாங்கி விடுவார்கள். பிறகு அதை அதிகஅளவில் பயிர்செய்து தரும்படி இந்திய விவசாயிகளுக்கு கடனுதவி தந்து நிர்ப்பந்திப்பார்கள். நமது அரசும் அதற்கு உடந்தையாக இருக்கும்.

மரபணு மாற்ற மூலிகையில் இருந்து பரவும் மகரந்தம் நம்நாட்டின் இயற்கை மூலிகைகளை முடமாக்கி விடும். அவை மலட்டுத்தன்மை அடையும். கால ஓட்டத்தில் இயற்கை மூலிகைகள் அழிந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மூலிகைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். அதற்கான விதைகளை வாங்க அமெரிக்க கம்பெனியிடம் நாம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை உருவாகும்.

நாம் ஒரு மூலிகையின் மணம், குணம், ருசி ஆகிய மொத்தத்தையும் கணக்கிட்டு மருந்தாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், மரபணு மாற்ற மூலிகையில் வெறும் மருத்துவக் குணத்தை மட்டுமே அதிகரிப்பது எந்த விதத்திலும் பயன் தராது. அதோடு மரபணு மாற்ற மூலிகைகளால் புதுவகை பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. அது நமது உடலுக்கு எந்தவகையில் கேடு செய்யும் என்பதை இப்போதே கூற முடியாது. எதிர் கால தலைமுறையைக் கூட அது நாசமாக்கி விடலாம்.

இந்த மரபணு மாற்ற மூலிகைகளால் நம் மண் வளமும் கெட்டு குட்டிச்சுவராகப் போவது உறுதி. கடைசியில் உணவுக்கும், மருந்துக்கும் வக்கில்லாமல், நாம் முழுக்க முழுக்க அமெரிக்காவையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அப்போது இந்தியாவை பரிசோதனைக் கூடமாக்கி அவர்கள் தரும் மருந்துகளால் மேலும் பல புதுப்புது நோய்கள் உண்டாகும். அதற்காக மீண்டும் மீண்டும் அவர்களிடமே நாம் சரணடைய வேண்டியிருக்கும்.

நம் பாரம்பரிய மூலிகைகளைப் பாழாக்கப் போகும் மான்சென்டா மருந்து நிறுவனம், இந்தியா உள்பட நான்கைந்து நாடுகள் போடும் பட்ஜெட்டுக்கு நிகரான பணத்தை வைத்திருக்கிறது. `உள்ளூரில் ஆராய்ச்சி செய்யாதே!' என்று அமெரிக்க அரசால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிறுவனம் இது. அதிலிருந்தே இந்த நிறுவனத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ளலாம். `அந்நிய நாட்டு உயிரியல் மரபணு எதுவும் நம்நாட்டில் நுழைகிறதா? அதனால் ஆபத்துண்டா?' என்று கண்காணிக்க வேண்டிய நம் நாட்டின் `ஜெனடிக்கல் இன்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டி (ஜி.ஈ.ஏ.சி.) கூட அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி தந்து ஒத்து ஊதுவதுதான் அதிர்ச்சி'' என்றார் சிவராமன்.

அடுத்ததாக `தென்னகம்' அமைப்பின் வழிகாட்டுக் குழு உறுப்பினரான அரச்சலூர் செல்வம் நம்மிடம் இப்படிக் கூறினார்.``மான்சான்டோ நிறுவனம் கோவை வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே பருத்தியை மரபணு மாற்ற பரிசோதனைக்கு உட்படுத்தி விளைய வைத்திருப்பது எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது என்ன ஓர் அபத்தம் பாருங்கள்.

`தமிழகத்தில் 3500 ஏக்கரில்தான் பப்பாளி பயிராகிறது. பப்பாளியைத் தாக்கும் வைரஸ் நோயைத் தடுக்க பப்பாளியையும் மரபணு சோதனைக்கு உட்படுத்துகிறோம்' என்கிறார்கள் இவர்கள். `தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கரில் பயிராகும் தென்னையில் அடிக்கடி வைரஸ் நோய் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே. அந்தத் தென்னையைப் பற்றி ஆராயாமல் பப்பாளியை ஏன் ஆராய்கிறீர்கள்?' என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை.

விஷயம் வேறு ஒன்றுமில்லை. பப்பாளி அதிகம் பயிராகும் இந்தோனேசியா நாட்டில் மான்சென்டா நுழைய வழியில்லை. அதனால், இங்கே நுழைந்திருக்கும் அவர்கள் இதன்மூலம் `இந்தியாவிலும் ஆராய்ச்சி செய்கிறோம்' என்று கணக்குக் காட்டுகிறார்கள். இயற்கை விவசாயத்திலேயே நல்ல மகசூல் வருகிறது, பூச்சி, நோய்த் தாக்குதல் எதுவுமில்லாத நிலையில் அது உண்மையா? என்று பதில் சொல்ல வேண்டிய கடமை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறதா? இல்லையா? இதுபற்றிக் கேட்டாலும் பதிலே இல்லை.

இங்கே நம் அரசும் சரி, ஆராய்ச்சியாளர்களும் சரி, அமெரிக்கா மற்றும் அமெரிக்க மருந்து கம்பெனிகளுக்காகத்தான் இருக்கிறார்கள். இப்போது நமது மூலிகைச் செடிகளிலும் அமெரிக்க நிறுவனத்தை இவர்கள் கைவைக்க விட்டுவிட்டார்கள். இந்தியாவில் ஏற்கெனவே அஸ்வகந்தா என்ற மூலிகையை ரகசியமாக மரபணு மாற்ற ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கென மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இவர்கள் அனுமதி பெறவில்லை.

மூலிகைகளில் மரபணு மாற்றுப் பயிர் சோதனை செய்தால் அதன் பக்கவிளைவுகள் என்ன? வரும் நோய்கள் என்ன? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இந்தவகை மூலிகைகளில் இருந்து காற்று மூலமாகவோ, தேனீக்கள் மூலமாகவோ பரவும் மகரந்தம் நம் பாரம்பரிய மூலிகைகளைப் பாதித்தால் என்னவாகும்? இதற்கு யார் பதில் சொல்வது? இதனால் நாட்டின் பொருளாதாரம் கூட பாதிப்படையலாம்.

உதாரணமாக, பேயர் (Bayer) என்ற அமெரிக்க நிறுவனம், கலிபோர்னியாவில் உள்ள ஒரு வயலில் மரபணு மாற்ற நெல் ஆராய்ச்சியை நடத்தியது. ஆய்வு நடந்து ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி ஆனது. அப்போது அதில் மரபணு மாற்ற அரிசியும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து அத்தனை கோடி டன் அரிசியையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மரபணு மாற்றுப் பயிர் சோதனை அந்த அளவுக்கு உலகத்தைப் பயமுறுத்தி வைத்துள்ளது.

அவ்வளவு ஏன்? மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைவிதித்திருக்கும் நிலையில், கேட்பாரற்ற நாடு என்று இந்தியாவை இவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இதுபோல ஆய்வு செய்ய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், பலநூறு ஆய்வியல் பேராசிரியர்கள் தேவை என்பதால் அவ்வளவு சிரமம் நமக்கெதற்கு என்று நம் நாட்டு விவசாயப் பல்கலைக்கழகங்களை இவர்கள் வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. நம் நாட்டு மூலிகைச் செல்வங்கள் மீது அந்நியர்கள் கைவைக்க உடனே தடைவிதிக்க வேண்டும். இதற்காக நாடு தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்'' என்றார் அவர் குமுறலுடன்.

 
கிரீன்பீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜெய்கிருஷ்ணாவை நாம் தொடர்பு கொண்டோம். டெல்லியிலிருந்த அவர், ``மூலிகைகளில் மரபணு மாற்று ஆராய்ச்சி செய்வது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற ஆய்வுகளை முதலில் ஆய்வுக் கூடங்களிலும், பின்னர் கண்ணாடி வீடுகளிலும் செய்து விட்டு அதன்பின்தான் விவசாய நிலத்தில் செய்ய வேண்டும். அதன்பின் வர்த்தக ரீதியான அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போதோ நேரடியாக விவசாய நிலத்தில் இவர்கள் ஆய்வு செய்வதாகத் தெரிகிறது. இது ஒரு தேசிய பிரச்னை. இதுகுறித்து பல அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறோம்.

இந்தமாதிரி ஆய்வுகள் ரசாயனப் போருக்கும் உதவும் என்பதால் மத்திய வேளாண்துறைக்கு மட்டுமல்ல, மத்திய பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறையும் இதில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் `டொரிடோஸ்' என்ற மக்காச் சோள சிப்ஸ்களை, கிரீன்பீஸ் அமைப்புக்குச் சொந்தமான ஓர் ஆய்வகத்துக்கு அனுப்பி, நாங்கள் சோதித்தபோது அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து உருவானதைக் கண்டு பிடித்தோம். மத்திய சுகாதாரத்துறைக்கு இதுபற்றி நாங்கள் புகார் அனுப்பியும் ஆறுமாத காலமாக அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்த மரபணு மாற்ற மக்காச்சோள சிப்ஸை மனிதர்கள் தின்றால், அதிலுள்ள புதிய வகை பாக்டீரியாக்கள் உடலுக்குள் புகுந்து செல், ஜீன்களோடு கலந்து புதுமாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்!'' என்றார் அவர்.

நாம் கடைசியாக சந்தித்தது, இந்த மரபணு மாற்றுப் பயிர் உற்பத்திக்கு எதிராகப் போராடி வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரை. ``இந்தக் கொடுமை பற்றிப் பேச நிறைய இருக்கிறது'' என்ற அவர், ``மூலிகைச் செடிகளின் செல்லைப் பிளந்து அதில் புதிய மரபணுவைப் புகுத்தியபின் அந்தப் புதிய செல்கள் ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நகரத் தொடங்கி விடும். அதை யாராலும் தடுக்க முடியாது. நோய் தரும் பூச்சிகளை கட்டுப்படுத்தத்தான் மரபணு மாற்றம் செய்கிறோம் என்று கூறும் இவர்களால் அனைத்து வகைப் பூச்சிகைளயும் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிஜம். அதோடு மரபணு மாற்றம் எந்தவித எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இதுவரை முழுமையான ஆய்வுகள் இல்லாத நிலையில், இவர்கள் செய்யும் வேலையால் மனிதகுலத்துக்கே ஆபத்துதான். உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு உலகுக்கே இது ஆபத்தாகக் கூட முடியலாம்.

மரபணு மாற்ற உயிரினம் (பாக்டீரியா) நம் வயிற்றுக்குள் சென்றால் குடல் அழற்சி, ஒவ்வாமை, புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். கோவைப் பகுதியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியைப் பயிர் செய்து மண்ணே கெட்டுப்போய் விட்டது என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அதோடு அந்த வகை பருத்தியைப் பயிர் செய்தவர்களின் கை கால்கள் தடித்து வீங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்தநிலையில்தான் இப்போது மூலிகைகளிலும் மரபணு மாற்றம் செய்ய அமெரிக்க கம்பெனி துடிக்கிறது. `நாம் எதைச் சாப்பிட வேண்டும்? என்ன மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்?' என்று முடிவு செய்ய இவர்கள் யார்? உணவுக்கும், இயற்கை மருந்துக்கும் கூட உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லையென்றால் இது என்ன சுதந்திர நாடு'' என்று ஆதங்கப்பட்ட நம்மாழ்வார்,

``தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில், `மரபணு மாற்று, பயிர் விவசாயம் எதுவும் பஞ்சத்தைப் போக்காது. மரபணு மாற்ற ஆய்வுகளை நெறிமுறைப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியா, சீனாவெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறது.

அங்கே அப்படி கையெழுத்துப் போட்டுவிட்டு இந்திய அரசு இங்கே மரபணு மாற்ற சோதனைக்கு மூலிகைகளை உட்படுத்துவது என்ன நியாயம்? இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை'' என்றார் அவர்.

`ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?' என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அமெரிக்க கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது.

 

 

-பா. ஏகலைவன்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 25-09-08

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்