உலக சமாதனம், ஜனநாயகம், சுபீட்சம் என பலதரப்பட்ட கோரிக்கைகள், கோசங்களை நாள் தோறும் சந்திக்கிறோம். அரசுகள், மதபீடங்கள், அரசு சார்பாக இயங்கும் மனித உரிமை அமைப்புகள்,

அரசு சார்பாக இயங்கும் சமூக நலக் குழுக்கள் என எண்ணற்ற பிரிவுகளால் இப்படிப் பேசப்படுகின்றன.

 

உலக சமாதனத்திற்கு யார் தடை என ஆராயின் யார் இதைச் சொல்கிறார்களோ அவர்களே ஒழிய வேறு யாரும் அல்ல. உலகில் யுத்தங்கள் ஏன் ஏற்படுகின்றன.நாட்டுக்கு நாடு, உள் நாட்டு யுத்தங்கள் என ஏன் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம், மனிதனின் தேவைகள் சமமாகப் பங்கிடப் படாமையே ஒழிய வேறு ஒன்றுமே அல்ல. இப்படிக் கூறும் போது இது ஒரு மாயை போல் தோன்றும்.ஆனால் இதை ஆராயின் உண்மை புரியும்.

 

உலகம் இன்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்துள்ளது. ஒன்று பரம ஏழை மேலும் ஏழையாக, மற்றையது பணக்காரன் மேலும் பணக்காரனாக நடுநிலைப் பிரிவு இவற்றில் ஒன்றை நோக்கிச் செல்கின்றது. இன்று இந்நிலையை ஏற்படுத்துபவன் பணக்காரனே ஒழிய வேறுயாரும் இல்லை. இன்றைய உலகின் சமாதனத்திற்கு ஆப்பு வைப்பவன் பணக்காரனே ஒழிய வேறுயாரும் அல்ல. தற்போது சமாதானம் கெட்டுப் போய் உள்ளதே என்று அழுவது போல் நடிப்பவனும் இவனே தான்.
உலகம் தோன்றிய பொழுதும், மனிதன் உருவான போதும் இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் பொதுவாகவே இருந்தது. உலகில் உள்ள எல்லாச் செல்வமும் பொதுவாக மக்கள் கூட்டத்திற்கு பொதுவாக இருந்ததே ஒழிய, தனிநபர் சொத்தாக என்றும் இருந்ததில்லை. மக்கள் கூட்டத்தின் முன்னிருந்த சொத்து எப்படி தனிமனித சொத்தாக மாறியது? ப+மிக்கு எல்லை போட்டு இது உன்னுடையது, இது என்னுடையது என ஏற்பட்டது எப்படி? எப்படி சிலரிடம் சொத்துக் குவிந்தன? இவையே மனித சமுதாயத்தின் அவலத்திற்கு அடிப்படையாகும்.

 

இங்கு திறமையோ, வீரமோ, வல்லமையோ அல்ல மாறாக மனிதனை, அவனின் உழைப்பை அபகரிப்பதன் விளைவே சொத்துக்கள் இன்று தனிமனிதனுக்கு சொந்தமாகக் காரணமாகின்றது.இன்று உலகில் உள்ள எந்தப் பொருளை எடுப்பினும் அவை இயற்கையில் இருந்து எடுத்த பொருட்களின் தொகுதியே ஒழிய வேறோன்றும் அல்ல. இயற்கையில் இருந்து எடுத்த பொருட்களின் மீது மனிதனின் உழைப்பு (செயற்பாடு) பொருட்களை மீட்டெடுக்க வழிகோலியது. உழைப்பு இல்லாது எந்தப் பொருளையும் மனிதன் பெற முடியாது.

 

இந்த உழைப்பின் பாத்திரம் தான் பின்னால் ஏமாற்றப் பட்டு அதிக உழைப்பை யார் ஒருவன் கூடுதலாக ஏமாற்ற முடிந்ததோ அவன் தான் பொதுச் சொத்தை தனதாக்க முடிந்தது. இது தான் உலக அவலத்திற்கு அடிப்படையாகும்.

 

இயற்கையில் எல்லாப் பொருளும் உண்மையில் அதன் பெறுமதி பூச்சியமே ஒழிய, தனியாக அதற்கு பெறுமதி இருப்பதென்பது மனிதனை ஏமாற்றுவதாகும். ஏனெனில் எல்லாப் பொருட்களும் பெறுமதி அற்ற இயற்கையின் விளைவே ஆகும். இயற்கையில் எடுக்கும் எல்லாப் பெறுமதி அற்ற பொருட்களின் மீது ஏற்படுத்தும் மாறுதல் மனித உழைப்பு மூலம் நகர்த்தப்படுகின்றது.
மனித உழைப்புத்தான் அப்பொருளை மனிதனின் பயன்பாட்டிற்கு இயற்கையில் இருந்து மாற்றி அமைக்கிறது. இந்த பயன்பாட்டுப் பொருட்களின் மீதான உழைப்பு சக்திதான் ஒவ்வொரு பொருட்களுக்கும் வேறுபடுகிறதே ஒழிய அப்பொருட்களின் பெறுமானம் எப்போதும் பூச்சியம் தான். எல்லோரும் உழைப்பார்களாயின் உழைப்பின் பயன்பாடு பூச்சியமானது. இயற்கையில் இருந்து சேகரிக்கும் பொருட்களின் பெறுமானம் பூச்சியமாகவும் உள்ளது. எனவே உற்பத்தியின் பின் பொருட்களின் விலையும் பூச்சியமாகின்றது.

 

இதை இன்று உலகை ஆளும் பிரிவு சுயநலத்துடன் மறுக்கின்றது. இது மற்றவனை ஏமாற்றி அவனின் உழைப்பைக் கொள்ளையிட உழைக்க விரும்பாத பிரிவு செய்யும் சதியாகவும் உள்ளது. இது தான் மூளை உழைப்பை உழையாத பிரிவுக்கு அடுத்த தட்டில் கொண்டு வருவதன் மூலம் இந்திய சாதிக் கட்டமைவுபோல் உடல் உழைப்பில் ஈடுபடுபவனையும், மூளை உழைப்பில் ஈடுபடுபவனையும் மோதவிடுகின்றது.

 

இன்று உடல் உழைப்பில் ஈடுபட மறுப்பின், அல்லது அது நின்று போயின் உலகத்தில் எந்தப் பொருளையும் பெற முடியாது போய்விடும். முளை உழைப்பு உடல் உழைப்பைச் சார்ந்தே உள்ளது. இருந்து போதும் இன்று மூளை உழைப்பு உடல் உழைப்பைவிட முன்னுக்கு உள்ளது எனின் அது உடல் உழைப்பில் ஈடுபடுபவரின் உழைப்பை சுரண்டி மறைக்க செய்யும் சதியாகவே உள்ளது.

 

உலகில் அமைதி என்பது பெறுமதியற்ற இயற்கையின் பொருள் மீதான, எல்லா மனிதனின் உழைப்பையும் பயன் படுத்திக் கிடைக்கும் பெறுமதியற்ற பொருளை தேவையுடன் பயன் படுத்தும் உலகம் தோன்றும் போது தான் உண்மையில் சமாதானம் உருவாகும்.

 

இல்லாத வரை மக்கள் தமக்குள் மோதுவது தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதை ஆதார பூர்வமாகப் பார்ப்போமாயின் மதங்கள் கூறுகின்றன ஆண்டவன் செல்வத்தைக் கொடுக்கிறான். எனவே ஆண்டவனை வணங்குங்கள் என்கின்றன. ஆண்டவனே பூமியையும் அதன் செல்வத்தையும் படைத்ததாகக் கூறும் மதங்கள் அந்த சொத்து தனிமனிதனுடையதாக எந்த ஆண்டவன் எப்போது ஏற்படுத்தினான் என விளக்குவது இல்லை. ஆனால் ஆண்டவன் படைத்த சொத்தை வழிபாட்டு மூலம் தனிமனித சொத்தூக்கு சூறையாட முடியும் என கூறுவதில்லை. இது எந்த மதத்திற்கும் விதிவிலக்கல்ல. வழிபடுங்கள் எல்லாம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றும் மதம், நாட்டுக்கு நாடு உள்ள ஏற்றத் தாழ்வை விளக்குவதில்லை. ஆண்டவன் நாட்டுக்கு நாடு ஏற்றத் தாழ்வைத் தந்துள்ளதாக அல்லவா அர்த்தப்படும். இதுபோல் உள்ள பல ஏமாற்றங்களைக் காண முடியும்.

மறுபுறம் படித்தவனுக்கு, அவன் மூளை உழைப்பிற்கும் உயர் சம்பளம்.  உடல் உழைப்பில் ஈடுபடுபவனுக்கு குறைந்து சம்பளம். இதை நியாயப்படுத்தும் உலகம் இரண்டு பேரின் உழைப்பின் சமபாட்டை மறுக்கின்றது. மனித தேவையை மறுக்கும் ஜனநாயக விரோதியாக உள்ளனர். ஆணுக்கு உயர் சம்பளத்தைக் கொடுக்கவும், பெண்ணுக்கு குறைந்து கூலியைக் கொடுக்கும் உலகம் சம உழைப்பை மறுக்கும், சம தேவையை புறக்கணிக்கும்  ஜனநாயக விரோதத்திற்குள் மூள்கின்றது.

 

வெள்ளையனை விட கறுப்பன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடும் பணக்கார நாட்டுக்கும் மூன்றாம் உலக ஏழை நாட்டுக்கும் இடையில் உள்ள தேவை, சம உழைப்பை மறுக்கும் ஜனநாயக விரோதக் கட்டமைவை நியாயப்படுத்துகின்றது.

 

உலக அமைதி இன்மைக்கு இவைதான் காரணம் என்பதை இனி நாம் சொல்ல வேண்டியிருக்காது. இனி நாம் இதை விரிவாகப் பார்ப்போம்.

 

1995ம் ஆண்டு உலகம் உற்பத்தி செய்த மொத்த செல்வத்தின் பெறுமதி 28,05,619 கோடி டொலராகும். இதை உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரித்தால் 5010 டொலர்கள் ஆகும். ஆனால் உலகில் உள்ள அமெரிக்க, யப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஏழு நாடுகளும் (பு7) பெற்றுக் கொண்டது 18,66,730 கோடி டெலராகும். அதாவது 66.53 வீதமாகும். ஏன் எல்லா மேற்கு நாடுகளும் பெற்றுக் கொண்டது 21,81,891 கோடி டொலர்களாகும் இது 77.76 வீதமாகும்.

 

மிகுதியைத்தான் மிகுதி நாடுகள் தமக்குள் பகிர்ந்து கொண்டதுடன் உலகில் 20 வீதமான பரம ஏழை மக்கள் வெறும் 1 வீதத்தை மட்டும் தமதாக கொண்டு தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட நிலையில் மிகப்பரம ஏழையாக உள்ளனர். அதாவது உலகில் 20 வீதமான பணக்காரர்களும், பணக்கார நாடுகளும் உலக செல்வத்தில் 80 வீதத்தை அனுபவிக்க, இன்னுமொரு 20வீதமான மக்கள் 1 வீதத்தை அனுபவிக்க மிகுதி 60 வீதமான மக்கள் 19 வீத செல்வத்தை அனுபவிக்கின்றனர்.

 

இது தான் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள விடையமாகும். இது எப்படி சாத்தியமாகின்றது. உலக செல்வம் பகிரப்படல் என்பது ஒரு சூதாட்டமாகவே நடக்கின்றது. ஏழை நாட்டின் பொருள்களின் விலையைத் தீர்மானிப்பது பணக்கார நாடாக உள்ள அதே நேரம் பணக்கார நாட்டின் பொருள்களின் விலையைத் தீர்மானிப்பது பணக்கார நாடாகவே உள்ளது. ஒரு ஏழை நாடு எதை உற்பத்தி செய்வது என்பதைக் கூட தீர்மானிப்பது பணக்கார நாடுகளே ஒழிய வேறு யாரும் அல்ல. அதாவது உலக உற்பத்தி, வர்த்தகம் என்பன பணக்கார நாடுகளுக்கு சமமாக வறிய நாடுகள் உள்ள அதேநேரம், இதற்கான உலக சட்டங்களை பணக்கார நாடுகளும், பணக்காரனும் தனக்கு சாதகமாக உருவாக்கி வைத்துள்ளது.

 

உலகில் இதை மீறாத வகையில் உள்நாட்டு சந்தையைக் கட்டுப்படுத்தி அதன் வரவு செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவனைக் கடன் வாங்க நிர்ப்பந்தித்துள்ளது இந்த பணக்கார நாடுகள். இந்த உலகக் கடன் 1995 இல் 148900 கோடி டொலராக உள்ளது. இது உலக வருட தேசிய வருவாயில் பதினெட்டுக்கு ஒன்றாகும். இக்கடன் மூன்றாம் உலக நாடுநாடுகளின் மேல் உள்ள சுமையாகும் இந்தக் கடன் மூன்றாம் உலக வருமானத்தில் நாலில் ஒன்றாகும். இதற்கு வட்டியாகவே ஒரு பெருந் தொகை வருடா வருடம் இந்த நாடுகளுக்கு இந்தத் தேசிய வருவாயில் கொடுக்கும் அதே நேரம் புதிய கடனை நிர்ப்பந்தப் படுத்தி கொடுக்கின்றன இந்த பணக்கார நாடுகள். இதுதான் உலக அமைதிக்கு சவாலாக இருக்கின்றது. இதை விளக்கிக் கூறுன் ஊரில் உள்ள ஒரு பணக்காரன் ஊரில் உள்ள ஏழைகளுக்கு கடன் கொடுத்த பின் அதற்கு வட்டியையும் முதலையும் கெடுக்கும் போது அதை கொடுக்க வசதியற்ற அந்த ஏழைகளின் சொத்தை எழுதி வாங்கி பின்னர் அவர்களையே கொத்தடிமைகளாக்கும் நடைமுறையில் இருப்பது போன்றுதான் இன்று உலகம் உள்ளது.

 

இதற்கு எதிரான கலகம் தான் உலக அமைதியைக் கெடுக்கின்றது எனக் கூச்சல் எழுப்பும் பணக்காரன், மறுபுறம் உலக அமைதிக்கு சவால் விடுபவனாக உள்ளான். உலகம் இன்று ஒற்றைப் பொருளாதார அலகுக்குள் செல்கிறது. அதாவது விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் உலக செல்வத்தை அபகரித்தல் இன்று அதிகரிக்கின்றது. சிறு மீனை பெரிய மீன் விழுங்கும் தொடர் நிகழ்ச்சிப் போக்கு போல சிறு முதலாளி முதல் பெரிய முதலாளிவரை விழுங்கல் தொடர்கின்றது. இது உலகில் சில பணக்கார ரவுடிக் கும்பலை உருவாக்குவதுடன் அவர்கள் ஆட்சியை உலகில் நிலைநிறுத்துகின்றது.

 

இன்று உலகப் பணக்காரரை எடுப்பின் உலகில் மிகப் பெரிய பணக்காரனின் சொத்து 1800 கோடி டொலராகும். உலகில் உள்ள முதல் பத்துப் பணக்காரர்களின் சொத்து 11320 கோடி டொலராகும். பிரான்சின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து 7672 கோடி டொலராகும். பிரான்சின் முதல் 435 பணக்காரர்களின் சொத்து 9987 கோடி டொலராகும். பிரான்சின் 435வது பணக்காரனின் சொத்து 2 கோடி டொலராகும்.

 

உலகில் உள்ள நாடுகளை எடுப்பின் முதல் உலக 10 பணக்காரனின் சொத்தை விட கூடுதலாக வருட தேசிய வருவாயைப் பெற்ற நாடுகள் 64 மட்டுமே.162 நாடுகள் அதில் உள்ள மக்களின் வருட தேசிய வருமானம் இந்த 10 பணக்காரனைவிடக் குறைவாகும். பிரான்சில் உள்ள முதல் 435 பணக்காரர்களை விட 30 நாடுகள் மட்டுமே வருடவருமானமாக இவர்களை விட அதிகமாகப் பெறுகின்றன. மிகுதி 196 நாடுகளும் இவர்களை விடக் குறைவாகவே உள்ளது.

 

அதாவது உலகில் உள்ள முதல் பணக்காரன் சைரிஸ்சின் சராசரி வருமானத்தைவிட 15 கோடி மடங்கால் பணக்காரனாக உள்ளான். இது தான் உலக அமைதிக்கு சவலாகின்றது. உலகில் உள்ள சிலர் உலகில் உள்ள எல்லா மக்களின் சொத்தையும், உழைப்பையும் வைத்திருப்பதை நியாயப் படுத்தும் ஜனநாயகம், கடவுள் வழிபாடு, உலக அமைதி, என்பன ஏமாற்றமும் கபடமும் நிறைந்ததே.

 

இன்னுமொரு புறம் உலக வறுமைக்குக் காரணம் மூன்றாம் உலக மக்களின் அதிகரிப்பு எனக் கூறவும், அதை கிளிப்பிள்ளை போல் செல்லவும் நாம் தயங்குவதில்லை. ஆனால் இதுபொய்மை நிறைந்து தமது கொள்ளையை மறைக்க பயன்படுத்தும் வாதங்களே.

 

இன்று உலகில் உணவுத் தட்டுப்பாடு உண்மையில் உள்ளதா? என்பதை ஆராய்வோமாயின் உலக மா உற்பத்தியை எடுப்பின் 53,76,81,000 மெற்றிக் தொன் 1995 இல் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒரு நபருக்கு 96 கிலோப்படியாக உற்பத்தியானது. கோப்பி உற்பத்தி 9 கிலோவாக உற்பத்தியானது. 4 மனிதனுக்கு ஒரு மாடும், 5 மனிதனுக்கு ஒரு ஆடும் 6 மனிதனுக்கு ஒரு பன்றியும், வேறு மிருகங்கள் என ஒரு வருடத்திற்கு உற்பத்தி ஆனது. பெற்றோலை எடுப்பின் ஒரு மனிதனுக்கு 576 லீற்றர் உற்பத்தியானது. சோளத்தை எடுப்பின் ஒருவனுக்கு 90 கிலோ உற்பத்தியானது. வாற்கோதுமை 25 கிலோ உற்பத்தியானது மீன் 19 கிலோ உற்பத்தியானது. உருளைக்கிழங்கு 50 கிலோ, அரிசி 97 கிலோ, சோயா 23 கிலோ, சீனி 27.1 கிலோ உற்பத்தியானது. இப்படி தனி நபர்களுக்கு ஒரு வருடத்திற்கு உற்பத்தியானவையே இவை இது மனித தேவைக்கு மிஞ்சியது. ஆனால் மக்கள் பஞ்சத்தில் இறக்கின்றனர் எனின் ஏன்?


இன்று மேற்கு நாட்டில் உள்ளவர்கள் தாம் இறைச்சி உண்ணவேண்டும் என்பதற்காக தீனியாக தானியத்தை மிருகங்களுக்கு கொடுக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்தின் இன்று உள்ள உலகத் தானிய உற்பத்தியைக் கொண்டு உலகில் உள்ள இன்றைய சனத்தோகையைப் போல் ஆறு மடங்கு மக்களுக்கு உணவாக வழங்க முடியும். ஏன் ஆச்சரியமாக உள்ளதா? இது தான் உண்மை. உலக பஞ்சத்துக்கு காரணம் மேற்கு நாட்டவனே (பணக்காரனே) ஒழிய மூன்றாம் உலக ஏழையல்ல. மேற்கு நாட்டில் ஒருவன் பிறந்தால் அவன் ஏழை நாட்டில் உள்ள பலரை பஞ்சத்திற்கு உள்ளாக்கிறான்.

 

மற்றொரு புறம் உணவு, மற்றம் உற்பத்திகளை கடலிலும், நிலத்திலும் அழிப்பது தொடர்கிறது. தமது பொருளைக் கூடிய விலையில் விற்க தட்டுப்பாட்டை ஏற்படுத்த மிகப் பெரிய அளவில் பொருளை அழிக்கின்றனர்.

 

இன்னும் ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்ப்போம். பிரான்சில் உள்ள மொத்த நாயின் எண்ணிக்கை 76 லட்சம், பூனையின் எண்ணிக்கை 82 லட்சம் ஒரு நாயின் வருடச் செலவு 780 டொலர் ஒரு பூனையின் செலவு 596 டொலர்களாகும். இப்படி செலவில் மேற்கு நாடுகளிலும், மூன்றாம் உலக பணக்கார வீடுகளிலும் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய்களாகும். 25 கோடி பூனைகளும் உலகில் உண்டு. அதாவது 60 கோடி நாய், பூனைகள் உள்ளது. அவற்றின் வருடச் செலவு 34,400கோடி டொலராகும். இவையே பணக்கார வீட்டு நாய், பூனைகளுக்கான உலக வரவு, செலவு தனியாக ஆகும்.

 

34,400 கோடி தேசிய வருவாயை விட கூடுதலாக உலக வருமானம் பெறும் நாடுகளின் எண்ணிக்கை 13 மட்டுமேயாகும். ஒரு நாயை விட கீழான வாழ்வு வாழும் 68 நாடுகள் உள்ளன. ஒரு பூனையை விட கீழான வாழ்வை வாழும் நாடுகள் 54 ஆகும்.

 

இந்த உலக வாழ்கை தான் உலக அமைதியின்மைக்கு முக்கிய காரணம். இது தான் உலக சமாதானத்திற்கு சவால் விடுகின்றது. பணக்காரனின் ஆடம்பரமும் அவனின் அநியாய அழிப்பும் தான் உலக சமாதானத்திற்கு வேட்டு வைக்கிறது.

 

உலகில் வறுமை, பட்டினிக்கு அடிப்படைக் காரணம் உலக பணக்காரனின் கொட்டமே ஒழிய வேறு எந்தக் காரணமும் அல்ல. இதை மறுப்பதே, மறுதலிப்பதோ எல்லாம் ஏமாற்றும் மோசடியும் நிறைந்ததே.  உலகில் இன்று 125 கோடி மக்கள், 5 பேருக்கு ஒருவர் வறுமையில் உள்ளனர் எனின், 30 கோடிச் சிறுவர்கள் உழைக்கிறார்கள் எனின், பணக்காரனின் திமிர்த்தனமான உழையாத சொகுசு வாழ்கை தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்வோம். இதை எதிர்த்துப் போராடுவோம்.