இதற்கு முன் MOS என்ற வகை டிரான்ஸிஸ்டரின் அமைப்பையும் அது வேலை செய்யும் விதத்தைப் பற்றியும் பார்த்தோம். டிரான்ஸிஸ்டர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மிக அதிகமாகப்பயனில் உள்ளது MOS டிரான்ஸிஸ்டர்களே. அதனால் தான் மாஸ் டிரான்ஸிஸ்டர் பற்றி முதலில் பார்த்தோம்.



ஆனால், நாம் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது இதைப்பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அங்கு N-P-N என்ற டிரான்ஸிஸ்டர் பற்றியும், P-N-P என்ற டிரான்ஸிஸ்டர் பற்றியும் மட்டுமே படித்திருப்போம். அதற்கு காரணம், முதன்முதலாக கண்டுபிடிக்கப் பட்ட (அ) தயாரிக்கப் பட்ட டிரான்ஸிஸ்டர் அந்த N-P-N டிரான்ஸிஸ்டர்தான். தவிரவும், நாம் படிக்க ஆரம்பிக்கும் பொழுது, N-P டையோடு என்ற சாதனத்தைப் பற்றி படிப்போம். அடுத்து N-P-N என்பதைப் பற்றி படிப்பது சுலபம் என்ற எண்ணத்திலும் அந்த டிரான்ஸிஸ்டர்கள் பற்றி பாடத்தில் கொடுத்திருக்கலாம்.



N-P-N, P-N-P ஆகிய டிரான்ஸிஸ்டர்களை, பை-போலார் டிரான்ஸிஸ்டர் (Bipolar transistor) என்று சொல்வார்கள். Polarity என்பது பாஸிடிவ் அல்லது நெகடிவ் என்ற வேறுபாட்டை சுட்டிக்காட்டும் சொல். உதாரணமாக, பேட்டரியில் ஒரு முனை நெகடிவ் போலாரிடி (Negative polarity) என்றும், மற்ற முனை பாஸிடிவ் போலாரிடி (positive polarity) என்றும் சொல்லப்படும். மற்றொரு உதாரணமாக, உலகத்தில் வடக்கு முனையை நார்த் போல் (North Pole) என்றும், தெற்கு முனையை சௌத் போல் (South Pole) என்றும் சொல்லலாம்.



"Bi" என்பதற்கு, இரண்டு என்று பொருள் ( உதாரணமாக, இரண்டு சக்கரம் இருப்பதால் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சைகிளுக்கு Bicycle என்று பெயர்). Bipolar என்றால், இரு வித போலாரிட்டியும் கொண்ட டிரான்ஸிஸ்டர் என்று பெயர். N-P-N டிரான்ஸிஸ்டரில் "N" (அதாவது நெகடிவ் டைப் சிலிக்கன்) மற்றும் “P" (அதாவது பாஸிடிவ் டைப் சிலிக்கன்) இரண்டும் இருக்கின்றன. ஆனால், மாஸ் டிரான்ஸிஸ்டரில் முழுதும் N வகை இருக்கும். அல்லது முழுதும் P வகைதான் இருக்கும்.



இந்த பை-போலார் டிரான்ஸிஸ்டர்களை ‘அனலாக்' டிரான்ஸிஸ்டர் என்றும் சொல்வார்கள். அதைப்போலவே, மாஸ் டிரான்ஸிஸ்டர்களை ‘டிஜிட்டல்' டிரான்ஸிஸ்டர் என்றும் சொல்வார்கள். அனலாகுக்கும் டிஜிட்டலும் என்ன வித்தியாசம்? ஏன் டிஜிட்டல் டிரான்ஸிஸ்டரான மாஸ் டிரான்ஸிஸ்டர் மட்டும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது? எங்கு அனலாக் டிரான்ஸிஸ்டரைப் பயன்படுத்துகிறோம்?



டிரான்ஸிஸ்டர்களைப் பொறுத்த வரை, டிஜிட்டல் என்பது ”ஒன்று ஆன், அல்லது ஆஃப்” என்ற நிலையைக் குறிக்கும். உதாரணமாக, நமது வீட்டில் உள்ள 60 வாட்ஸ் விளக்கை நாம் ‘ஆன்' அல்லது 'ஆஃப்' செய்யலாம். சுவிட்சை பாதி அழுத்தி, 30 வாட்ஸ் விளக்கு போல எரிய வைக்க முடியாது. (வோல்டேஜ் குறைந்தால், அது 30 வாட்ஸ் விளக்கு போல எரியும், அது வேறு விஷயம். நாம் சுவிட்சை ஒன்று ஆன் அல்லது ஆஃப் தான் செய்ய முடியும் என்பதுதான் இங்கு சொல்ல வரும் விஷயம்). இவ்வாறு இருப்பது ‘டிஜிட்டல்' எனப்படும்.



ஆனால், நமது TVS XL / டி.வி.எஸ். எக்செல், அல்லது ஸ்கூட்டி Scooty வண்டிகளில், ஆக்சிலரேட்டரை கொஞ்சம் முறுக்கினால், வண்டி மெதுவாக செல்லும். சற்று அதிகம் முறுக்கினால், இன்னும் வேகமாக செல்லும். மிக அதிகமாக முறுக்கினால், அதிவேகமாக செல்லும். இவ்வாறு முறுக்கும் (தூண்டுதலின்) அளவிற்கு ஏற்ப செயல் நடந்தால், அது Analog / அனலாக் என்று சொல்லப்படும்.



N-P-N (அல்லது P-N-P) டிரான்ஸிஸ்டர்களில், கதவில் கொஞ்சம் மின் அழுத்தம் (voltage) கொடுத்தால், டிரான்ஸிஸ்டரில் கொஞ்சம் மின்சாரம் (current) போகும். அதிகம் மின் அழுத்தம் கொடுத்தால் அதிகம் மின்சாரம் போகும். அதனால், இந்த வகை டிரான்ஸிஸ்டர்கள் அனலாக் ஆகும். ஆனால், மாஸ் டிரான்ஸிஸ்டர்களில், ஒன்று ஆன் அல்லது ஆஃப் தான் இருக்கும். (அதாவது கதவில் சரியான மின் அழுத்தம் கொடுத்தால், ஓரளவு மின்சாரம் போகும். அதிகமாக மின் அழுத்தம் கொடுத்தாலும் அதே அளவுதான் மின்சாரம் போகும். மின் அழுத்தம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்தால், மின்சாரமே போகாது). அதனால், மாஸ் டிரான்ஸிஸ்டர்கள் ‘டிஜிட்டல்' டிரான்ஸிஸ்டர்கள் ஆகும்.

 

http://fuelcellintamil.blogspot.com/2008/01/types-of-transistors.html