06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலியெதிர்ப்பு ஆசாமிகளின் புலியொழிப்பு அரசியலோ புளுக்கின்றது

புலியொழிப்பை வைக்கும் புலியெதிர்ப்பு புளுக்க வைக்கும் கட்டுரை ஒன்றை தேனீ வெளியிட்டுள்ளது. 'புலம் பெயர் நாடுகளில் மதில்மேல் குந்தியிருக்கும் ஆசாடபூதி பூனைகள்.

" (http://www.thenee.com/html/170807.html )என்ற தலைப்பில், ம.அரவிந்தன் என்ற மூகமுடி ஆசாமி, புலியொழிப்பு மட்டும் தான் முற்போக்கானது என்கின்றார்.

 

புலி அல்லது புலியெதிர்ப்பு என்று சமூகத்தை இரண்டாக வறட்டுத்தனமாக பிரித்து, இதற்கு அப்பால் மூன்றாவது அணி என்பது புலிகளின் ஐந்தாம் படை என்கின்றனர். இந்த கயவாளிகள் அன்று, பேரினவாதம் அல்லது குறுந்தமிழ் தேசியம் என்று இரண்டாக பிளந்தனர். இதற்கு அப்பால் உள்ள அனைத்தும் ஐந்தாம் படை என்று கூறி, நூற்றுக் கணக்கில் படுகொலைகளை நடத்தியவர்கள் தான், இன்று புலி அல்லது புலியெதிர்ப்பு என்கின்றனர்.இந்த ஆசாமி கூறுகின்றார் 'ஒரு புறம் தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாள்கின்ற புலிகள் இயக்கம், மறுபக்கம் அதை எதிர்த்து நிற்கின்ற பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள். இவை தவிர, இதுவுமில்லை அதுவுமில்லை என்ற மூன்றாவது சக்தி எதுவுமில்லை." இதற்குள் உலகத்தை வகைப்படுத்தி ஆடுகின்ற புலியெதிர்ப்பு புலியொழிப்பு, சாராம்சத்தில் புலியை ஒழிக்கும் பேரினவாதத்தை பரந்துவிரிந்த ஜனநாயக சக்தி என்கின்றது.

 

'தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாளுகின்ற புலிகள் இயக்கம்" என்கின்ற புலியெதிர்ப்புக் கோட்பாடு, தமிழ் மக்கள் மேல் பாசிச அடக்குமுறையைக் கையாளுகின்ற பேரினவாத அரசை பாதுகாக்கின்றது. இதை மறுக்கின்ற, மறைக்கின்ற கோட்பாடு தான், புலியெதிர்ப்பு புலியொழிப்பு கோட்பாடாகும். தமிழ் மக்களின் எதிரியை வெறும் புலியாக காட்டுகின்ற புலியெதிர்ப்பு, அனைத்தையும் இரண்டாக வகுக்கின்றது.

 

புலியை மட்டும் எதிராக காட்டுகின்ற இந்த இரண்டு கோட்பாடு, பேரினவாதத்தை எதிராக காட்டுகின்ற மூன்றாவது அணியை மறுக்கின்றது.

 

புலிகள் பேரினவாதத்தை எதிராக காட்டிக் கொண்டு நடத்துகின்ற அரசியல் எதுவோ, அதே அரசியலையே புலியை எதிரியாக காட்டிக்கொண்டு புலியொழிப்பு முன்வைக்கின்றது. இதை இரண்டு அணியாக காட்டிக்கொண்டு, மூன்றாவது அணி இல்லை என்கினறனர். இது துரோகி தியாகி என்ற அதே கோட்பாடு.

 

மூன்றாவது அணி தெளிவாக தமிழ் மக்களின் எதிரியாக பேரினவாதத்தையும், புலியையும் முன் வைக்கின்றது.

 

புலியும், புலியெதிர்ப்பும் தனித்தனியாகவே தனது ஒற்றைப்பரிமாண கோசத்தை வைக்கின்றது. புலி தமிழீழத்தை வைக்கின்றது. புலியெதிர்ப்பு புலியொழிப்பை வைக்கின்றது. இவ்விரண்டும் சகல சமூக ஒடுக்குமுறைகளையும் முன்னெடுக்க மறுக்கின்றது. மற்றவனை ஏமாற்ற, அதை புலி புலித்தமிழீழத்தின் பின், புலியெதிர்ப்பு புலியொழிப்பின் பின், சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கப் போவதாக கூறுவதில் கூட, அரசியல் ஒற்றுமை.

 

இந்த இரண்டு அணிக்கு வெளியில் மூன்றாவது அணி, சமூக ஒடுக்குமுறையையும் ஒழிக்கக் கோருகின்றது.

 

புலிகள் புலித்தமிழீழத்தை அடைவதற்காக மக்களை சார்ந்து நிற்பதில்லை. மாறாக மக்களை எதிரியாக பார்க்கின்றனர். புலியெதிர்ப்பு புலியொழிப்புவாதிகள் புலிகளை ஒழிக்க, தமிழ் மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. பேரினவாத பேய்களையும், ஏகாதிபத்திய பிசாசுகளையும் சார்ந்து நிற்கின்றனர். இப்படி இந்த இரண்டு அணியும் தமது இலட்சியத்தை அடைய, மக்களை அணிதிரட்டுவது சாத்தியம் இல்லையென்கின்றனர். இப்படி மக்களை எதிரியாக காட்டி, அந்த வழி சாத்தியமற்றது என்கின்றனர்.

 

இதில் இருந்து மூன்றாவது அணி, இதற்கு மாறாக மக்களைச் சார்ந்து நின்று போராடக் கோருகின்றது. மக்கள் மட்டும் தான், தமது விடுதலைக்காக போராட முடியும். இதுவல்லாத அனைத்தும் மக்கள் விரோரதத்தன்மை கொண்டவை.

 

இப்படி மூன்றாவது அணி புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் இருந்து தெளிவாக அனைத்திலும் வேறுபட்டது.

 

1. பேரினவாதம் மற்றும் புலியை மக்களின் எதிரியாக மூன்றாவது அணி பார்க்கின்றது


2. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் மூன்றாவது அணி ஒழிக்க கோருகின்றது.


3. மக்கள் தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டும் என்கின்றது.


4. ஏகாதிபத்தியத்தை எதிரியாக பார்க்கின்றது.

 

இப்படி புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியில் இருந்து முற்றிலும் தனித்துவமானவர்கள் நாங்கள். இப்படி மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டுள்ள, மூன்றாவது அணிதான், உண்மையாக மக்களைப் பற்றி பேசுகின்றது. அனைத்தையும் வர்க்க அடிப்படையில் அணுகுகின்றது. வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் வர்க்க அடிப்படையில் அங்கீகரிக்கின்றது.

 

இந்த உண்மையை புலியொழிப்பு புலியெதிர்ப்பு அணி எதிர்கொள்ள முடிவதில்லை. அதனால் மூன்றாவது அணியின் கோட்பாட்டுடன் தொடர்பற்றவர்களை உள்நுழைத்து, எம்மை புலியாக காட்டி எம் மீது காறித் துப்ப முனைகின்றனர்.

 

இந்த வகையில புதுசு ரவியை கொண்டு வருகின்றனர். புலியிடம் நக்கித் தின்னுவதையே அரசியலாக கொண்ட ஒட்டுண்ணி. இந்த பிழைப்புவாத ஓட்டுண்ணியை மூன்றாவது அணிக்குள் பொருத்திக் காட்டுவது கடைந்தெடுத்த புலியெதிர்ப்பு கயவாளித்தனம். இதுபோன்று சேரன் என்ற சந்தர்ப்பவாதி. புலிக்கு பின்னால் காவடியெடுக்கும் ஒரு அற்பவாதி. இந்த சந்தர்ப்பவாத அற்பவாதிக்கும், மூன்றாவது அணி கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் அரசியல் ரீதியாக கிடையாது. புலியெதிர்ப்பு அணி இப்படி இழிவாக தான், அரசியல் செய்யமுனைகின்றது.

 

அவர்களை புரிந்துகொள்ள

மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும் (புதுசு ரவி பற்றி)

புலியெதிர்ப்பின் அலம்பலும், சேரனின் புலம்பலும்

 

மற்றும் எஸ்.கே. விக்கினேஸ்வரன், செழியன் போன்றவர்கள் அரசியல் ரீதியாக மூன்றாவது அணியின் அரசியலை முன்வைப்பவர்கள் அல்ல. எந்த அரசியல் செயல்பாட்டையும் இன்று வைப்பவர்கள் அல்ல. மூன்றாவது அணி இதற்கு மாறாக தெளிவான அரசியலைக் கொண்டது.

 

எம் கோட்பாட்டை எடுத்து விவாதிக்க துணிவு இருந்தால், அரசியல் நேர்மை இருந்தால், நாம் அவர்களை சந்திக்கமுடியும். நாங்கள் அதற்குத் தயார்.

 

இதை விடுத்து "இதுவுமில்லை அதுவுமில்லை என்ற மூன்றாவது சக்தி எதுவுமில்லை." என்று புலம்புவதற்கு அர்த்தம் கிடையாது. புலியுமில்லை, புலியெதிர்ப்பு அணியுமில்லை என்ற எமது நிலைப்பாடு, தெளிவாகவே மக்கள் நலனைச் சார்ந்துள்ளது. மக்களைச் சாராத, எந்த போக்குடனும் எம்மை இணைத்துக்கொள்ள மறுப்பவர்கள்.

 

புலியெதிர்ப்பு புரட்டல்வாதிகள் கூறுகின்றனர். 'சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையிலிருந்து தமிழ் மக்கள் விடுதலையடைவதற்கான முன்நிபந்தனை, அதற்கு தடையாகவுள்ள புலிகள் என்ற பாசிச இயக்கம் அழிக்கப்படுவதே என்பது நிதர்சன உண்மையாகும்." என்கின்றனர். பேரினவாதத்தை ஒழிக்க புலிகளை ஒழிக்க வேண்டும் என்றால், பேரினவாதிகளை ஒழிக்க யாரை ஒழிக்க வேண்டும். இதன் சாரம் உள்ளடக்க ரீதியாக புலியை ஒழிக்க வேண்டும் என்றால் பேரினவாதத்தை இப்ப ஒழிக்க கூடாது என்கின்றனர்.

 

புலியை ஒழிக்க முனையும் பேரினவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தை, புலியை ஒழிக்கும் நட்பு சக்தியாக காட்ட முனைகின்றனர். இதைத்தான் நிதர்சமான உண்மை என்கின்றனர். இதை அவர்கள் '‘மூன்றாவது அணி’ ‘நடுநிலைமை’ பிரச்சாரங்கள் யாவும் புலிகளுக்காக செயற்படும் ஐந்தாம் படை ஒற்றர்களின் வேலையே தவிர வேறொன்றுமில்லை." என்கின்றனர். நல்ல வேடிக்கை. புலிகள் துரோகி தியாகி இடையில் எப்படி நடுநிலை கிடையாது என்கின்றனரோ, அப்படிப்பட்ட பொறுக்கித்தனமான எதிர்புரட்சிகர அரசியல்.

 

பேரினவாத அரசுடனும், இந்தியக் கைக் கூலிகளாகவும், ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்த இயங்குகின்ற இந்த கொலைகார புலியெதிர்ப்புக் கும்பல், தன்னை மறைக்க மற்றவனை ஐந்தாம்படை என்கின்றனர். இந்திய இலங்கை அரசின் கூலிப்படையாக இயங்குகின்ற ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி:டி.பி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், கருணா குழு என்று, இக்குழுக்கள் எப்படிப்பட்ட ஐந்தாம் படை. அரசியல் ரீதியாக வெறும் கூலிக் குழுக்கள். பேரினவாததத்தின் நிதி மற்றும் ஆயுததுணையில் இயங்குகின்ற கொலைகார நாசகாரக் கும்பல்கள். புலிகள் இருந்தால் தான் இவர்களுக்கு வாழ்வு என்ற நிலை.

 

இதையும், இதைச் சார்ந்து இயங்குகின்ற புலியெதிர்ப்பு புலியொழிப்பு அணியை 'பரந்துவிரிந்த தமிழ் ஜனநாயக சக்திகள்" என்கின்றனர். கேடுகெட்ட கொலைகார கூட்டம்.

 

மக்களைச் சார்ந்து நிற்காத, மக்களையே ஒடுக்குகின்ற பாசிச கும்பல். இந்தக் கும்பல் எம்மை புலியின் ஐந்தாம் படை என்கின்றனர். ஒற்றர்களின் வேலையே தவிர வேறு எதுவும் தாம் செய்வதில்லை என்கின்றனர். புலியெதிர்ப்பை முன்வைத்து புலியொழிப்பை வைத்து எதைச் செய்கின்றனரோ, அதை எம் மீது தலைகீழாக்கி காறி துப்புவதால் புலியெதிர்ப்பு அரசியல் நேராகிவிடாது.

 

புலியை நாம் விமர்சித்த அளவுக்கு, புலியெதிர்ப்பு அணி புலியை விமர்சித்தது கிடையாது. முக்கியமாக புலியின் அரசியலை புலியெதிர்ப்பு அணி விமர்சிப்பதே கிடையாது. புலியின் அதே அரசியலைக் கொண்ட, புலியெதிர்ப்பு அரசியல். புலியின் மக்கள் விரோத அதே அரசியலே, புலியெதிர்ப்பின் அரசியலாகும்.

 

இந்த புலி அரசியலை விமர்சிக்காத புலியெதிர்ப்புவாதிகள் கூறுகின்றனர் 'வரட்டு மார்க்சியம் பேசி வருகின்ற இவர் அரசாங்கம் முதலாம் எதிரி, புலிகள் இரண்டாம் எதிரி என்ற ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றார். மார்க்சிய கண்ணோட்டத்தில் இதன் அர்த்தம் என்னவெனில் பிரதான எதிரியை அழிப்பதற்கு இரண்டாம் கட்ட எதிரியுடன் தற்காலிக கூட்டுச் சேரலாம் என்பதாகும். அதாவது சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துச் தோற்கடிப்பதற்கு புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துச் செயற்படலாம் என்பதாகும்." மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக்கி, அதை திரித்துப் புரட்டி, அதுவாக எம்மை விளக்க முனைகின்ற வக்கிரம்.

 

இரண்டாவது எதிரியுடன் ஐக்கிய முன்னணி கட்டுவது என்பதை, இவ்வளவு எளிமையாக அற்பமாக விளக்குகின்ற கொச்சையான வறட்டுச் சூத்திரம். பிரதான எதிரி என் நாம் கூறுவது பேரினவாத ஏகாதிபத்திய சக்தியைத்தான். இரண்டாவது எதிரியாக கருதுவது புலி மற்றும் புலியல்லாத ஏகாதிபத்திய சக்தியையும் தான். எமது அணுகுமுறையானது வர்க்க ரீதியானது. எந்த எதிரியை, எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது, வர்க்க ரீதியானது. எதிரியை ஒழித்து கட்டுவது என்பது, வர்க்க நலன்களின் அடிப்படையிலானது. வறட்டுக் கோட்பாட்டிலான வெறும் சூத்திரங்களின் அடிப்படையிலல்ல. வர்க்க நலனை பூர்த்திசெய்யாத எந்த அரசியலையும் ஆதரிப்பதுமில்லை, முன்னெடுப்பதும் கிடையாது.

 

சூத்திரங்கள் எதையும் தீர்மானிப்பதில்லை. வர்க்க நலன்கள், அதை அடையும் உத்திகள் தான் போராட்டம்.

பி.இரயாகரன்
18.8.2007

இதை மேலும் புரிந்துகொள்ள

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் சார்பாக தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல


பி.இரயாகரன் - சமர்