திராவிடர்கழகத்தின் இன்றைய தலைமை எப்படி எல்லாம் பெரியார் கொள்கைக்கு எதிராக சிந்தித்து செயல்படுகின்றது என்பதனை வீரமணி எனும் பிழைப்புவாதியின் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ மீதான விமர்சனமாக ‘வாழ்வியல் சிந்தனையா? வக்கிர சிந்தனையா?’ என்ற கட்டுரையின் மூலம் அம்பலப்படுத்தி இருந்தோம். அக்கட்டுரையின் தொடர்ச்சியாக வீரமணியின் பணத்திமிரையும், உழைக்கும் சாமானிய மக்களை அவர் பார்க்கும் ஏளனப் பார்வையையும் “உழைக்கும் மக்களைப் பற்றி தமிழர் தலைவர்” எனும் இக்கட்டுரை வெளிக்கொண்டு வருகிறது.
உழைக்கும் மக்களைப் பற்றி 'தமிழர்' தலைவர்
வீரமணியின் வர்க்க நலன் 'வாழ்வியல் சிந்தனைகள்' முழுவதும் இழையோடுகின்றன எனப்பார்த்தோம். உழைக்கும் மக்களைப் பற்றி வீரமணி என்ன கருதுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால்தான் அந்த ஆய்வு முழுமை பெறும்.
நம் மக்கள் பொதுவாகவே பொறுப்பற்றவர்களாகவும், பொறுப்பை உணராதவர்களாகவும் இருப்பவர்கள். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் கோபப்படாமல் இருக்க முடியுமா? எனக் கேட்கிறாரே! அதற்கு என்ன பொருள்? எந்த நிறுவனங்களிலுமே முதலாளியானவர் தொழிலாளரிடம் எரிந்து விழாமல் இருக்க முடியுமா? பொறுப்பில்லாத வேலையாட்கள் இருப்பதனால்தானே அவர்கள் கோபமுறுகின்றனர் என்று வீரமணி நியாயப்படுத்துவதன் மூலம் எந்த வர்க்க நலனை அவர் முன்னிறுத்துகிறார்?
உழைப்பாளர்கள், பொறுப்பற்ற மக்கள் மட்டுமல்ல. வேலையை ஒழுங்காக செய்ய மறுத்து விட்டு எப்போதுமே வேலை நிறுத்தம் செய்து கொண்டு பொது அமைதியைச் சீர்குலைப்பவர்கள்தான் என்று முதலாளித்துவம் பிரச்சாரம் செய்து வருகிறது அல்லவா? அதனையே தனக்குரிய நடையில் வீரமணி "வேலை நிறுத்தம் எங்கள் அடிப்படை உரிமை என்று அழுத்தந்திருத்தமாக வாதாடும் வக்கணைக்குத்தான் என்ன குறைச்சல்?" என்று எகத்தாளமாக எழுதுகிறார்.
தொழிலாளர் வர்க்கம் உலகெங்கும் பல்வேறு ரத்தம் சிந்திய போராட்டங்களின் மூலமாகப் போராடி வாங்கியதுதான் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையாகும். இந்த உரிமையை வக்கணைப்பேச்சு என்று ஏளனம் செய்யும் வீரமணியின் சிந்தனைகளால் உழைப்பாளிகளின் நலனுக்கு பைசாவாவது பிரயோசனமுண்டா?
இந்நாட்டில் பல விவசாயிகளும் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்துப் பெற்றதுதான் இலவச மின்சாரம். இதனை இலவசமாகத் தரக்கூடாது என்று தனியார்மய,தாராளமய ஆதரவாளர்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சமூக நல அரசு பொதுமக்களுக்குக் கட்டாயமாக வழங்க வேண்டிய குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றையும் இலவசமாகத் தரக்கூடாது என்று உலகவங்கியில் இருந்து காட்ஸ் ஒப்பந்தம் வரை அரசைக் கட்டாயப்படுத்தி அவற்றிற்கு விலைவைக்கத் தொடங்கி விட்டன. இன்று சுகாதாரமான நீர் கிடைக்கவேண்டுமானால் மாதாந்திர வரவு செலவில் கணிசமான தொகை ஒதுக்கியாக வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காசிருப்பவனுக்கே கல்வி என்றாகி விட்டது. அரசு தந்து வரும் மருத்துவ சேவைகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. பல நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் மருந்தே கிடையாது. உலகமயமாக்கலால் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் காசு கொடுத்துத்தான் தண்ணீர் வாங்க வேண்டும் என்று தனது 'வாழ்வியல் சிந்தனை'யைச் சொல்லுகிறார், வீரமணி. ஏன் என்றால் 'இலவசமாக எதை நாம் பெற்றாலும் அதன் மதிப்பை நம்மால் அதிகம் உணர முடியாது; அதையே விலை கொடுத்துப் பெறுகிறபோது நமக்குக் கவலையையும் பொறுப்புணர்வையும் அது தந்து விடுகிறது' என்கிறார். இயற்கையின் கொடையான தண்ணீரையும் விற்பனைப் பண்டமாக்கிய ஏகாதிபத்திய சதியுடன் இசைந்து போகும் இந்தச் சிந்தனை உழைக்கும் மக்களுக்கு ஆதரவானதா? எதிரானதா?
உலகின் முதல்நிலைப் பணக்காரர்கள் மட்டும் உயர்ந்து கொண்டே செல்லும்போது பல பேரும் கடனாளியாகி அவதிப்படுகின்றனரே என்று இரக்கம் பீறிட்ட வீரமணியின் மனம் "மக்கள் எல்லோருமே 'கிடைக்கும் பணத்தை இலக்கின்றி கண்ணை மூடிக் கண்டபடி செலவழித்து விட்டால் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி ஏது?" எனக் காரணம் கண்டு பிடித்துள்ளது.
உண்மையில் மக்கள் அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டுதான் செலவழிக்கிறார்களா?
கிடைக்கும் சம்பளத்தை ஏறிவரும் விலைவாசி துரத்தும்போது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செலவு செய்யும் நிலையிலுள்ள உழைப்பாளர்களை ஊதாரித்தனமானவர்கள் என ஏளனப்படுத்தும் பார்வைதானே இது.
இதே நூலில் ஒரு சாராரை 'எடை மிஷினை'யும், 'உடற்பயிற்சி சைக்கிளை'யும் வாங்கி வீட்டில் போடச் சொல்லும் வீரமணி, பாதாம்பருப்பை நொறுக்குத்தீனிக்குப் பரிந்துரைக்கும் வீரமணி, இன்னொரு சாராரை 'கண்ணை மூடிக்கொண்டு பணத்தை விரையம் செய்பவர்கள்' என எழுதுவதற்கு என்ன சிந்தனை என்று பேர்வைக்கலாம்?
ஒருவர் நமக்கு உதவி செய்து விட்டால் நன்றி உணர்ச்சி காட்டப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நமக்குப் புத்திமதி சொல்லவந்தவர், 'நன்றி உணர்ச்சியைக் காட்டாதவர்கள் மனிதப் பிறவிகளே அல்லர். அவர்கள் மிருகங்களை விடக் கேவலமானவர்கள்' என்று எழுதி உள்ளார். இதற்கு 'நன்றி காட்டுதல் என்பது ஏழை மக்கள் திருப்பி அடைக்கும் கடனாகும்' எனும் ஆங்கிலப் பழமொழியை வேறு துணைக்கு அழைக்கிறார். நன்றி காட்டுதல், விசுவாசமாக இருத்தல் என்பதெல்லாமே நிலப்பிரபுத்துவ சிந்தனைகளாகும். இந்தப் பண்புகளை ஏழைகளிடமும், உழைப்பாளிகளிடமும் நிலப்பிரபுக்கள் எதிர்பார்ப்பது எதற்காக? சிந்திக்காமல், காலமெல்லாம் அடிமையாகவே அவர்களை வாழ வைக்கத்தானே.
நிலப்பிரபுத்துவம் தனக்கு எவ்வித ஆபத்துக்களையும் வராமல் தடுக்க பல அறச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து வந்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் 'வறுமையில் செம்மை'. அதாவது பண்ணைகளால் ஒட்டச்சுரண்டப்படும் பண்ணையாட்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமாம். எப்படிப்பட்ட நேர்மை? நியாயத்தின் நிழலைக்கூடத் தீண்டாத அநியாயச் சுரண்டலிலும், காம, கேளிக்கைகளிலும் பண்ணையார்கள் திளைத்திருக்கையில், கொடிய வறுமையில் ஒடுக்கப்பட்டோர் வாடி செத்துப்போகும் நிலை வந்தாலும் கூடத் திருடக் கூடாது. பொய் சொல்லக்கூடாது என அச்சுறுத்தி வைக்க இதுபோன்ற நீதி போதனைகளை அறமாக்கி வைத்திருந்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் தர்மம். அதே சிந்தனையைத் தன் தொண்டரடிப்பொடிகளுக்கு கி.வீரமணி "கையில் ஒரு மனிதனுக்கு காசில்லாத நிலை ஏற்பட்டாலும் மனத்தில் மாசில்லாத நிலையிலிருந்து அவன் மாறிடக்கூடாது" என எச்சரிக்கிறாரே! எந்தத் தொண்டனாவது தனது கல்லாப்பெட்டிச் சாவிக்கு மாற்றுச்சாவி தயாரித்து விடுவார்களோ எனும் அச்சமாய் இருக்குமோ?
இன்றைக்கு தனியார்மயமாக்கல் கொள்கை வேலைவாய்ப்புகளை பலதுறைகளிலும் ஒழித்துக்கொண்டு வருகிறது. இதனால் உயர்கல்வி கற்றுவிட்டு வேலை ஏதும் கிடைக்காத இளைஞர்களின் தொகை ஆண்டுதோறும் பலமடங்கு பெருகிக்கொண்டே வருகிறது. தனது வர்க்கத்தினரின் உடலில் அதிகமாய் சேர்கின்ற கொழுப்பைக் குறைக்க வழிமுறையை எழுதிய வீரமணி, வேலை கிடைக்காத இந்த இளைஞர்களை எல்லாம் "வெட்டியில்" பொழுதைக் கழிப்பவர்கள் என்றும் விரக்தியில் காலத்தை ஓட்டுபவர்கள் என்றும் எழுதுகிற கொழுப்பை எப்படிக் குறைப்பது?
பெண்கள் பலருக்கும் ரத்த சோகை நோய் உள்ளது என்பதை எண்ணி வருந்துகிறார் தமிழர் தலைவர். அந்நோய் வருவதற்குக் காரணத்தையும் அந்த மக்கள் மீதே போடுகிறார். எதனால் சோகை வருகிறதாம்? இன்னமும் பல வீடுகளில் கணவன், மாமனார் என ஆண்கள் சாப்பிட்ட பிறகே பெண்கள் சாப்பிட உட்கார வேண்டும் எனும் நடைமுறை உள்ளதே பெண்களுக்கு ரத்தசோகை வரக்காரணமாம். ஆனால் நடைமுறை என்ன?
சென்னைக் குடிசைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கின்படி ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதால் அங்குள்ள பெண்களில் 44 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. ஊட்டச்சத்து கிடைக்காததற்கு உணவு தாமதமாகக் கிடைப்பதா காரணம்? அங்குள்ள ஆண்கள் உட்பட அனைத்து மக்களிலும் 86 சதவீதம் பேருக்கு போதிய வருமானம் இல்லாததால் ஒருநாளைக்கு ஒருவேளைதான் உணவு உண்கின்றனர் என்று அந்த ஆய்வே சொல்கிறதே.
மக்களின் வறுமையை மறைத்துவிட்டு, ரத்தசோகைக்கான காரணத்தை அம்மக்கள் மீதே போடும் கொழுப்பை என்ன செய்வது?
உடல் ஊனமுற்ற குழந்தைகள் ஏன் பிறக்கின்றன தெரியுமா? என ஆரம்பிக்கும் வீரமணி 'துத்தநாகச்சத்து தூவப்பட்ட சோயாபீன்சு எண்ணெய்யை குறைந்த விலைக்கு கர்ப்பிணிகளுக்கு தரவேண்டும்' என்று அதற்கான தீர்வை சொல்கிறார். அடுத்த வரியிலேயே 'இலவசம் என்றால் அக்கறையுடன் பயன்படுத்த மாட்டார்கள்' என்று சொல்கிறாரே..அங்குதான் ஏழை மக்களை இழிவாகப்பார்க்கும் உலக வங்கியின் பார்வை வெளிப்படுகிறது.
ஏழை மக்களை இதை எல்லாம் விடக் கேவலமாக சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது இவர் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார் தெரியுமா?
திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 'இலவச கலர் டிவி'யை அறிவித்தபோது அதற்கு வீரமணி, 'மக்களுக்குப் பொழுதுபோக்கு சாதனம் ஏதும் இல்லாததால்தான் மக்கள் தொகை பெருகிவருகிறது. கலர் டிவி கொடுத்து விட்டால் குடும்பக்கட்டுப்பாடுப் பிரச்சாரத்திற்கான செலவு மிச்சம்' என்று பிரச்சாரக்கூட்டங்களில் உரையாற்றினார்.
கலர் டிவி இல்லாத மக்கள் யார்? பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள். 'அவர்கள் எப்போதுமே காமவெறி பிடித்துக்கொண்டு அதே சிந்தனையில் கிடப்பவர்கள்தான்' எனும் நாற்றம் பிடித்த சிந்தனைதானே வீரமணியை இவ்வாறு பேச வைத்திருக்கிறது? ராமகோபாலனும் கிட்டத்தட்ட இதே அலைவரிசையில்தான் சிந்திக்கிறார். இந்த இருவராலும் இழிவுபடுத்தப்படும் மக்கள்தான் வெவ்வேறானவர்கள். வீரத்துறவி ராமகோபாலன், முசுலீம்களை மட்டும் காமாந்தகர்கள் என்றால், வீரமணியோ, அடித்தட்டு மக்கள் அனைவரையுமே காமாந்தகர்கள் என்கிறார்.
உழைப்பை மட்டும் நம்பி வாழும் கோடிக்கணக்கான ஏழைமக்களை வக்கிரமான திமிரோடு இழிவுபடுத்தி அதனையே புத்தகமாகப் போடும் வீரமணியின் இக்கேடுகெட்ட சிந்தனைகளைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? மக்கள் விழிப்படைவார்கள். விரைவிலேயே முடிவுரையும் எழுதுவார்கள்.