Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடகம், சினிமாவில் - கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய - இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் கலை சேவையை செய்து கொண்டிருந்தார்கள்.

 

இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத்தான் ஒலித்தது.

தான் சார்ந்திருக்கிற இயக்கதின் கருத்துகளை அதுவும் பெருவாரியான மக்கள் விரும்பி பார்க்கிற ஒரு ஊடகத்தில், (மூடநம்பிக்கையில் ஊறிய முதலாளியின் பணத்தில்) அவர்கள் ஒத்துக் கொள்ளாத, ஆனால் அவர்களுக்குத் தேவையான கருத்துகளை சொல்வது முடியாத காரியம் என்கிற மூடநம்பிக்கையை தகர்த்து, பகுத்தறிவாளர்களுக்கு திரைத்துறையில் வழி அமைத்துக் கொடுத்த படம் கலைஞரின் `பராசக்தி`.

 தமிழ், தமிழன், பகுத்தறிவு என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இறைநம்பிக்கையை கேள்விக்கேட்டும் உருவான இந்தப் படம், பார்ப்பனியத்தை கேள்வி கேட்க தயங்கியது.

 அதனால்தான்,

ஏய் குருக்கள், அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரை பார்த்து கேட்க வேண்டிய வசனம்,

ஏய் பூசாரி, அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்று பார்ப்பனரல்லாத பூசாரியைப் பார்த்து சீறியது.

அன்றைய சூழலில் இந்தக் கேள்வியே பெரிய விஷயம். இருந்தாலும், இப்படி `சுதி` குறைந்து ஒலித்ததற்கு சென்சார் போர்டு மட்டுமல்ல, பெரியாரிடம் இருந்து திமுக கொள்கையளவில் வேறுபாடுகள் கொண்டிருந்ததும் காரணம்.

 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்கிற காங்கிரஸ்காரர் எழுதிய மலைக்கள்ளன் என்கிற நாவல், திரைவடிவமாக மாறியபோது, அதற்கு வசனம் எழுதிய கலைஞர் மு. கருணாநிதி, தனது சாமார்த்தியத்தால், மலைகள்ளனை பகுத்தறிவு வசனங்களோடு, காங்கிரஸ் எதிர்ப்பு படமாகவும், திமுகவின் பிரச்சார படமாகவும் மாற்றினார்.

போதாகுறைக்கு, இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று காங்கிரசை விமர்சிக்கிற பாடலும், அந்தப் பாடலின் இடையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ‘தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்என்று திமுகவின் பிரச்சாரமும் ஓங்கி ஒலித்தது.

 தனது திறமையால் காங்கிரஸ் கம்பதில், திமுக கொடியை ஏற்றினார் கலைஞர். ஆனாலும் அந்தப் படத்திலும் பார்ப்பன எதிர்ப்பு இல்லை.

 நடிகவேள் எம்.ஆர். ராதா நடித்து திருவாரூர் தங்கராசு வசனத்தில் வெளிவந்த ரத்தக்கண்ணீர் திரைப்படம், இந்து நம்பிக்கையை தீவிரமாக கேள்வி கேட்டது, ஆனாலும் அந்தப் படத்திலும் பார்ப்பன எதிர்ப்பு இல்லை.

 அதன் பிறகு பலபடங்கள், பகுத்தறிவு டச்சசோடுவந்திருந்தாலும், பார்ப்பன எதிர்ப்பு என்கிற எல்லைக்கு அவைகள் செல்லவே இல்லை. பார்ப்பன கதாபாத்திரம் கெடுதல் செய்வதாக காட்டுகிற துணிச்சல்கூட, திராவிட இயக்க அரசியல் ரீதியாக இருந்த யாருக்கும் வரவில்லை.

 பெரியார் கருத்துகளிலோ, திராவிட இயக்க சிந்தனைகளிலோ எந்த ஈடுபாடும் இல்லாத இறை நம்பிக்கையாளரான பாரதிராஜாதான் முதன் முதலில் ஒரு பார்ப்பன கதாபாத்திரம் கெடுதல் செய்வதாக காட்டியிருந்தார்.

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில், பார்ப்பனராக வரும் ஜனகராஜ், ‘ஊரில் மழை நிற்க வேண்டும் என்றால், ஒரு பெண் நிர்வாணமாக ஊரை சுற்றி வரவேண்டும்என்ற யோசனையை தந்து, ராதிகாவை அதில் சிக்கவைப்பார். அதேபோல் அவரின் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில், கதாநாயகன் கொலைக்காரனாக மாறியதற்கு ஒரு பார்ப்பன குடும்பம்தான் காரணம் என்று சொல்லியிருப்பார்.

அவருக்குள் சுழன்று கொண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்வு, பின்நாட்களில் வேதம் புதிதாகவெளிப்பட்டது.

பாரதிராஜாவின் பார்ப்பன எதிர்ப்பு, சரியான அரசியல் காரணங்களால் வடிவம் பெறாததால், சாதி ஒழிப்பை நோக்கி நகர வேண்டிய பார்ப்பன எதிர்ப்பு, சுயஜாதி பிரியம் என்கிற சகதியில் சிக்கிக் கொண்டது.

 பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்க வந்த வேதம் புதிது, பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவமான சுயஜாதி அபிமானத்தை சுற்றி வந்து மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது. அதனால்தான் வயது முதிர்ந்த அந்த பாலு தேவர், பார்ப்பன சிறுவன் முன் பரிதாபமாக கை கட்டி நின்றார். தேவர் ஜாதிஎன்கிற இடை நிலை ஜாதி நிலையில் இருந்து பார்ப்பனியத்தை அனுகி இருந்தார் பாரதிராஜா. அதனால் அவரால் ஜாதி ஒழிப்பு என்கிற அடுத்த நிலைக்கு நகர முடியவில்லை.

 

ஆனால் இதே கருத்தை உள்ளடக்கமாக கொண்டு வந்தது பாக்கியராஜின் இது நம்ம ஆளு.

வேதம் புதிதைவிட ஒரு படி மேலே போய் பார்ப்பனியத்தை, ஒரு நாவிதரின் நிலையில் இருந்து அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நாவிதர் நிலையில் இருந்து அனுகி இருந்தார் பாக்கியராஜ்.

 தொழிலில் நேர்மையாக நடந்து கொள்பவர்கள் பிற்போக்காளர்களாக இருந்தாலும், தன்னுடைய சுயவிருப்பு வெருப்புகளுக்கு இடம் தரமாட்டார்கள். பாக்கியராஜும் அந்த நிலையில் இருந்துதான், தன்னுடைய திரைக்கதை யுக்தியாக ஜாதியை இரண்டு எக்ஸ்டீரீம்நிலையில் அணுகியிருந்தார்.

 பார்ப்பனராக வரும் சோமையாஜுலு, மிகவும் நல்ல மனிதர். இரக்கமானவர்தான், ஆனால் பார்ப்பன ஆச்சாரத்தை (பார்ப்பனியத்தையும், தீண்டாமையையும் கடைப்பிடிப்பது) காப்பதில் மிகத் தீவிரமானவர் என்பதை காட்டுவதற்காக இது நம்ம ஆளு படத்தில் இப்படி ஒரு காட்சி அமைந்திருக்கும்;

 தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் எரிந்து அவர்கள் நிற்கதியாகி வந்து, “சாமி நீங்கதான் சாமி எங்களுக்கு வழிகாட்டணும்.” என்று சோமையாஜுலுவிடம் கதறுவார்கள். அவர்களுக்கு உணவு, உடை, பணம் கொடுத்து உதவுவார் சோமையாஜுலு. அப்போது அவர் மேல் இருந்த துண்டு காற்றில் பறந்து போய் கீழே விழுந்துவிடும். அதை ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் கையில் எடுத்து சோமையாஜுலுவிடம் தருவான். அந்தக் குழந்தை தொட்ட துணி தீட்டாகி விட்டது என்பதற்காக அதை வாங்க மறுத்து கோபமாக சென்றுவிடுவார் சோமையாஜுலு.

 இந்தக் காட்சியை பார்ப்பன எதிர்ப்புக்காக பாக்கியராஜ் பயன்படுத்தவில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அரசியல் உணர்வு பாக்கியராஜுக்கு இருக்கவும் வாய்ப்பில்லை. சோமையாஜுலு காதாபாத்திரத்தை பார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கான காட்சியாகவும், இப்படி பட்டவரின் பெண்ணைத்தான் ஒரு நாவிதர் திருமணம் செய்து கொள்ள போகிறார், என்ன ஆகுமோ என்கிற திகி லை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தவே இதை அமைத்திருக்கிறார்.

இதுபோன்ற தற்செயல் காட்சியாக பார்ப்பன எதிர்ப்பு என்கிற காட்சியமைப்புகள், அந்த அரசியலில் நம்பிக்கையில்லாதவர்களால்தான் தமிழ் சினிமாவில் காட்டப்பட்டிருக்கிறது.

 பெரியாரின் கருத்துகளில் தீவிர ஈடூபாடு கொண்ட, சத்யராஜ் இயக்கி நடித்த ஒரே படமான வில்லாதி வில்லன்திரைப்படத்தில் கூட பார்ப்பன உயர்வையும், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான வசனமுமே இடம் பெற்றிருந்தது. பார்ப்பன எதிர்ப்பிற்காகவே கட்சி நடத்துகிற திராவிடர் கழகம்எடுத்த திரைப்படங்களில் தற்செயலாக கூட பார்ப்பன எதிர்ப்பு வந்து விடக்கூடாது என்று கவனமாக படம் எடுத்திருந்தார்கள். பெரியார்படமே அப்படி ஒரு பரிதாபமான நிலையில்தான் இருந்தது. வேலுபிரபாகரனை வைத்து அவர்கள் எடுத்த புரட்சிக்காரன் படத்தில் பார்ப்பனர்தான் கதாநாயகன். வில்லன் முஸ்லீம். (பேலன்ஸ் பண்ணறாங்கலாமா!) பெரியாரின் பேரனைப் போல் பேசுகிற வேலுபிரபாகரன், பார்ப்பன எதிர்ப்பை தன் படங்களில் காட்டியதே இல்லை.

 தமிழ் சினிமாவில் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ, ஆதரவாளர்களோ எடுக்கத் துணியாதா பார்ப்பன எதிர்ப்பை, அதற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத யாரோ ஒரு இறைநம்பிக்கையாளரால் திரைக்கதை யுக்திக்காக தனம் என்கிற திரைப்படத்தில் மீண்டும் காட்டப்பட்டிருக்கிறது, பார்ப்பன எதிர்ப்பு.

 இந்தப் படத்தின் சிறப்பு, இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிக்காத அளவிற்கு பார்ப்பன எதிர்ப்பு அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

பார்ப்பனியம், தனக்கு லாபம் என்றால் அது தன் ஆச்சாரத்தைக் கைவிட்டுவிடும். தனக்கு நஷ்டம் என்றால், தன் ஆச்சாரத்தின் பெயரில் கொலை செய்யக் கூட தயங்காது, என்பதை இந்திய வரலாறு தெரிவித்திருக்கிறது.

அதுவே இந்தப் படத்தின் உள்ளடக்கமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் இந்த வரலாறுகளை எல்லாம் தெரிந்தும், அப்படி ஒரு அரசியல் நிலையில் இருந்தும் இந்தப் படத்தை இயக்கி இருக்க வாய்ப்பில்லை.

இருந்தும் தமிழ் சினிமாவில் இவ்வளவு துணிச்சலாக இதுவரை யாரும் பார்ப்பனியத்தை அதன் பூணூலோடு சேர்ந்து பிடித்து இழுத்து கேள்வி கேட்டதில்லை. இந்தப் படம் கேட்டிருக்கிறது.

 விபச்சாரியை, ஒரு இளைஞன் காதலிக்கிறான். “உன் பெற்றோர் சம்மதித்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்என்று அந்தப் பெண் சொல்கிறாள். பிறகு அந்தப் பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இதை ஒரு சாதரணப் பார்ப்பனரல்லாத நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் சொன்னால், வெறுமனே ஒழுக்கம்என்கிற அளவுகோலில் மட்டும்தான் கதை சுற்றி வந்திருக்கும்.

 பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் என்றும், தன்னை போன்ற உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத குடும்பத்தரோடு நெருக்கமாக பழுகுவதையே ஆச்சாரக் கேடு என்றும் நினைக்கிற ஒரு பார்ப்பன குடும்பத்திற்குள், விபச்சாரி மருமகளாக போனாள் என்ன ஆகும்? என்று கதையை விறுவிறுப்பாக சொல்வதற்கு ஒரு களமாகத்தான் பார்ப்பனக் குடும்பத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.

 அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், சேதுமாதவன் போன்ற அவார்டுஇயக்குநர்கள் பார்ப்பனக் குடும்ப சூழலில் பார்ப்பனிய மேன்மையோடு ஒரு கதையை சொல்வதின் மூலம், கூடுதல் கலை தன்மையும் - இந்திய அடையாளமும் தெரியும், அங்கிகாரமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் படம் எடுத்த முறையையே திருப்பிப் போட்டு படம் எடுத்திருக்கிறார், தனம் படத்தின் இயக்குனர் ஜீ. சிவா. ஆனால் அவர்களின் படம் போல் ஜவ்வாகஇல்லாமல் விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். திரைக்கதையிலும், வசனத்திலும், காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய வெற்றி படமாகவும் இது அமைந்திருக்கும். ஆனாலும் வந்த வரை பழுதில்லை.

 துணிச்சலாக இப்படி ஒரு படம் எடுத்த இயக்குநர் ஜீ. சிவா அவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதோடு, தமிழர்கள் இந்தப் படத்தை குடும்பம், குடும்பமாக சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

 குறிப்பு;

 தனம் படத்தின் கதையை ழுழுவதுமாக சொல்லி அதை தனி தனியாக பிரித்து, விமர்சிக்க விரும்பவில்லை. இந்த விமர்சனமே, இந்தப் படத்தை பார்ப்பதற்கான பரிந்துரைதான்.

 ஒரு பார்ப்பனர் - விபச்சாரியிடம் செல்ல, பிச்சை எடுத்து பணம் சேர்க்கிறார் என்று காட்டுவதற்காக, ‘பிச்சைக்காரர்கள் பொருளாதார ரீதியாக உயர்வாக இருக்கீறார்கள்‘, என்ற வழக்கமான தமிழ் சினிமாவின் காமெடிக்காக, அவர்களை இழிவுப் படுத்திக் காட்டியதை தவிர்த்திருக்கலாம்.

http://mathimaran.wordpress.com/2008/09/15/article-117/