விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.
மதவாதிகள், ஜாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, ஜாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.
அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)
சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக ‘விட்டலாச்சாரியார்‘ பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. ‘பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை‘ என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.
அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.
பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.
அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய ஜனரஞ்கமான கடவுள் தேவைப்படுகிறார்.
அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.
அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.
விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.
(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)
அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.
அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.
விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.
விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.
-வே. மதிமாறன்
விநாயகனே வினை செய்பவனே - வேழ முகத்தோனே வீண் வம்பனே
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode