"பாசிசம் இருக்கும் வரை கிடைக்கும் எந்த உரிமையுமே அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர்" என்ற தலைப்பில், அரசியல் அனாதை ஒன்று தேனீயில் ஒரு கட்டுரை மூலம் கூறியிருந்தது. இந்தக் கட்டுரையை ரி.பி.சி பெருமையாக தனது வானொலியில் வாசித்தது.

 தன்னையும் தனது அரசியலையும் நேர்மையாக வெளிப்படுத்த முதுகெலும்பற்ற இந்த திரொக்சிய காவடி, புலிகளை யுத்தத்தின் மூலம் ஒழித்தால் சோசலிசம் வரும்; என்று கதை சொல்ல முனைகின்றது. இந்த கட்டுரையின் கானல் நீர் அனுட்டானங்களைப் பார்ப்போம்.


"பாசிசம் இருக்கும் வரை கிடைக்கும் எந்த உரிமையுமே அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர்" என்றால், பாசிசத்தை ஒழிப்பது எப்படி? இதை நீங்கள் நேர்மையாக மக்களுக்கு விளங்கும் வகையில் சொல்லவேண்டியது தானே. ஏன் சுற்றி வளைத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு காப்பு போட முனைகின்றீர்கள்;. இந்த பாசிசத்தை ஒழிக்க, இந்த சோசலிச தொழிலாளர் வர்க்க சூரப்புலி உடனடியாக வைப்பது தான் என்ன? ஏகாதிபத்திய தலையீடு. அதற்காகவே வாய்பிளந்து நிற்கும் இவர்கள் முன், அது எதார்த்ததில் கானல் நீராகவே இருப்பதால் வேறு வழியின்றி அதிருப்தியுற்று புலம்பத் தொடங்குகின்றனர். "ஏகாதிபத்தியங்கள் ஒரு நாளும் புலியை ஒடுக்க முன்வரப்போவதில்லை." என்று ஒப்பாரியாகவே அது மாறுகின்றது. ஐயோ இது என்ன அநியாயம், என்று ஏகாதிபத்தியத்தை நோக்கி முழங்காலில் நின்று ஓலமிடுகின்றனர். புலியை ஒடுக்க ஏகாதிபத்தியம் வரும் வரும் என்ற எங்கள் அரசியல் எதிர்வு கூறல்கள், கனவுகள் எல்லாம், கானல் நீராகவே தொடர்கின்றதன் வெளிப்பாடுதான் "ஏகாதிபத்தியங்கள் ஒரு நாளும் புலியை ஒடுக்க முன்வரப்போவதில்லை." என்ற அங்கலாய்ப்பாக வெடிக்கின்றது.

 

ஏகாதிபத்தியம் இல்லாவிட்டால் பாசித்தை ஒழிக்க பேரினவாத சக்திகளையும் நாங்கள் நம்பினோம். அவர்களும் எம்மை நட்டாற்றில் இறக்கி தத்தளிக்க வைக்கின்றனர். அதை அவர்கள் அழகாகவும் நளினமாகவும் விளக்கவும் செய்கின்றனர். "கதிர்காமரைக் கொன்ற பொழுது சந்திரிக்கா குமாரத்துங்கா நடந்துகொண்ட விதத்திலிருந்தே அவர்கள் எந்த மட்டத்திற்குப் புலியைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெளிவு." என்று ஒலமிடுகின்றனர். சந்திரிக்கா புலிக்கு எதிராக கதிர்காமரின் கொலையை அடுத்து யுத்தம் தொடங்காததைக் கண்டு திரொக்சிய வழியில் கொதித்துக் கொட்டுகின்றனர். புலிக்கு எதிராக, அவர்கள் பாசையில் கூறின் புலிப்பாசிசத்தை ஒழிக்க யுத்தம் உடன் அவசியம். இதுவே இதன் அரசியல் உள்ளடக்கம். இன்று யுத்தத்தை புலிகளின் பினாமிகள் மட்டும் விரும்பவில்லை, அரசுசார்பு ஏகாதிபத்திய சார்பு புலியெதிர்ப்பு பினாமிகளும் கூடத்தான் விரும்புகின்றனர். சொல்லுகின்ற விதங்கள் தான் வேறு. இதை ஏகாதிபத்தியம் தொடர்பாகவும், பேரினவாத அரசு தொடர்பாகவும் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் தெளிவாகவே அம்பலமாக்கின்றன.

 

யுத்தம் வரவில்லை இனி என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்து இவர்கள் "எந்தப் பாசிசமும் பேச்சுவார்த்தை மூலம் தானாகவே தானெடுத்து ஆயுதத்தைப் போட்டது கிடையாது" என்று திடீரென கண்டுபிடித்து அறிவித்ததுடன், பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியமும் வரவில்லை, பேரினவாத சக்திகளும் வரவில்லை. ஆகவே என்ன செய்யலாம்; என்று மண்டையைக் குடைந்து கண்டுபிடித்த மாற்றுவழி "இன்று ஈ.பீ.டீ.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், மட்டக்களப்புக் கருணா அணி போன்ற அமைப்புகள் மீண்டும் ஆயுதபாணியாகினால் மாத்திரம்தான் தம்மையும் தமது உறவினரையும் நண்பர்களையும் தோழர்களையும் பாதுகாக்கலாம்." என்று புல்லரிக்கும் அரசியல் வழிமுறை வைக்கின்றனர். இது தான் பாசிசத்தை ஒழிக்கும் என்பதாக பாலசிங்கம் வழியில் அறிவுறை கூறுகின்றனர்.

 

சரி ஏகாதிபத்தியம், பேரினவாதமும் வராவிட்டால் என்ன, எங்களிடம் பாசிசத்தை ஒழிக்க மாற்று வழி இல்லையா என்ற கேட்டு, இதோ பார் இருக்கின்றது என்று புதிய சரக்கொன்ற மாற்றாக முன்வைக்கின்றனர். அது என்ன என்று ஆச்சரியமாக இருக்கலாம். அந்த திரொக்சிய பினாமிய வழி "புலிவிரோத அரசியற் சக்திகளுக்கு முன்னால் மீண்டும் ஓர் மாபெரும் கைங்கரியத்தையும் கடமைப்பாட்டையும் வரலாறு திணித்துள்ளது. அது எண்பத்தி மூன்றை விடவும் மிகப்பெரியது, கடினமானது. அதுதான் புலிக்கெதிராக மீண்டும் ஆயுதமேந்திய எழுச்சியை மேற்கொள்ள வேண்டும்." ஆக இறுதியாக புலிப்பாசித்தை ஒழிக்க ஒரு வழியைக் கண்டு பிடித்தாயிற்று. இதைவிட்டால் வேறு வழி கிடையாது. ஆகவே புலிப் பாசித்தை ஒழிக்க இதுவே மாற்று என்கின்றனர். எனவே ஈ.பீ.டீ.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ,மட்டக்கிளப்புக் கருணா அணியுடன் கூடி, பாசிச ஒழிப்பில் ஈடுபட வருமாறு தேனீயும், ரி.பி.சியும், திரொக்சிய காவடியும் புலியெதிர்ப்பு அணிகளிடம் கோருகின்றனர். இதைக் கேட்டு யாருமே சிரிக்க வேண்டாம். தேனீ வாசகர்கள் எதிர்வினை இன்றி இதை வாசித்து சேகரிப்பதும், ரி.பி.சி வாசகர்கள் இதை செம்மறியாடாக கேட்டு நிற்பதும், எந்த விதத்திலும் புலிப்பாணி பிரச்சாரத்துக்கு குறைந்தவையல்ல. இதைத்தான் அவர்கள் உங்களைச் செய்யக் கோருகின்றனர். அதைத்தான் உங்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

 

இந்தக் கும்பல் கருத்துகளில் ஒரு விதண்டாவாதமும், முரண்பாடும் இருப்பதை அதன் வாசகர்கள் கவனிக்காது இருக்கவே இருக்கிறது புலியெதிர்ப்பு அரசியல். ரிபிசியும், தேனீயும் அது சார்ந்த கும்பல்களும் புலியை மடக்க முன்வைக்கும் அரசியல் இங்கு நெருடுகின்றது. புலிகளை மடக்க முன்வைக்கும் ஒருவாதம் கேள்விக்கு உள்ளாகின்றது. அனைத்து அரசியல் படுகொலைகளை எதிர்க்கும்; இந்த கும்பலின் அரசியல், அதாவது யாரையும் யாரும் கொல்வதற்கு உரிமை இல்லை என்ற விடையத்தை, இந்த ஆயுதம் ஏந்த விடுக்கும் அரசியல் எப்படிக் கையாளும். அங்கு யாரையும் யாரும் கொல்லும் கொலைகள் இருக்காதோ! தாங்கள் ஆயுதம் ஏந்துவது, யாரையும் யாரும் கொல்வதற்காக அல்ல, சும்மா கவர்ச்சிக்கு ஏந்துவதற்கே என்கின்றனர். நம்புங்கள் இந்த அரசியல் கோமாளித்தனத்தை. புலிக்கு நிகரான இவர்களின் கபடமான அரசியலை. தேனீ ஆசிரியர் ரி.பி.சியில் தொலைபேசி மூலமே கொலையை கண்டியுங்கள் என்று புலிகளை மடக்கி வாய்கிழிய உபதேசித்த அதே கிழமை தான், ஆயுதம் ஏந்திய பாசிசத்தை ஒழிக்கும் வரலாற்று கடமைக்கு அறைகூவல் விடுத்த கட்டுரை ஊர் பெயர் தெரியாது அனாதையாகவே பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை ரி;பி.சி பெருமையுடன் ஒளிபரப்பியது.


யாரையும் யாரும் கொல்லமுடியாது என்று கூறும் இந்த கயவாளிகள் தான், புலிப் பாசிச ஒழிப்புக்காக ஏகாதிபத்தியம் இலங்கை அரசு இராணுவ ரீதியாக தலையிடக் கோருகின்றனர்?. அத்துடன் ஆயுதம் ஏந்தவும் கோருகின்றனர். இந்தப் புலிப் பாசிச ஒழிப்பில் யாரும் யாரையும் கொல்ல முடியும் என்பது இவர்கள் சொல்லாத சொல்லும் செய்தி. இன்றைய அவர்களின் சந்தர்ப்பவாத நிலவரப்படி, வலிந்து கோரும் தலையீட்டின் மூலமான படுகொலை கண்டு கவரிமானாட்டம் தற்கொலையா செய்வார்கள்! செய்வார்கள் என்று நம்புகின்றீர்களா!

 

இனி இந்த கும்பலின் அரசியல் வழிமுறைக்குள் புகுவோம். புலிகள் பாசிட்டுகள் என்பதால், ஏகாதிபத்தித்துக்கு கம்பளம் விரிக்க முடியுமா? கானல் நீர் அல்லாத அனுட்டானத்தை அடைய, ஏகாதிபத்தியத்துக்கு பாய் விரித்து கொடுக்கும் தரகு வேலை செய்வோம் என்கின்றீர்கள். இதற்கு வேறு எந்த அரசியல் விளக்கமும் கிடையாது. கானல் நீராகவே உள்ள, உங்கள் ஏகாதிபத்திய தலையீடும், பேரினவாதம் யுத்தத்தை தொடங்காமை என்ற ஒப்பாரி தாண்டி நீங்கள் எதையும் மக்களுக்கு வழிகாட்ட வக்கற்றவர்கள் தான். உண்மையில் பார்த்தால் புலியெதிர்பு அணிக்கு ஆயுதமேந்த விடும் அழைப்பும் கூட கானல் நீர்தான்.

 

ஐயோ திரொக்கியவாதிகளே உங்கள் திருட்டு முகத்தை சோசலிசத்தின் பின்னால் ஒளித்துவைத்துக் கொண்டு, புலிப் பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்துக்கு தூது செல்வதைத் தான் நவீன அரசியலாக இன்று வழிகாட்ட முனைகின்றீர்கள். இதை விட்டால் வேறு எதுவுமில்லை. ஐயா திரொக்கிய சாமிகளே "கிடைக்கும் எந்த உரிமையும்" என்றால் அது என்ன ஐயா? கிடைக்கும் ~உரிமை| மக்களுக்கு கிடைத்தால், அது எப்படி கானல் நீராகும். இதற்கு வெளியில் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்ற எதேனும் உரிமையாக உலகில் உண்டோ! என்ன புலம்பல். புலம்புவதே ஏகாதிபத்தியத்தின் வருகைக்கான ஊளையிடல் தான். புலிகள் ஏதாவது பேரம் பேசிப்பெறின், அது மக்களின் உரிமையாகவே இருப்பதில்லை. அது புலிக் கும்பலின் நலனை மட்டும் அடிப்படையாக கொண்டது. இதை உரிமையாக, உங்களையும் புலிகளையும் தவிர யாரும் சொல்வதில்லை.


அடுத்த அரசியல் கண்டுபிடிப்பு எப்படி புளுத்து வெளிவருகின்றது எனப் பார்ப்போம். "இன்றுள்ள மாபெரும் பிரச்சனை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏதோ உரிமை தர வேண்டுமென்பது முதற் பிரச்சனையில்லை." ஆகா என்ன அரசியல். தமிழ் மக்களின் உரிமையை அரசு தருகின்றதோ இல்லையோ என்பதற்கு அப்பால், இவை யாராலும் தரப்படும் பிச்சையல்ல. மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமை தான் இது. இதை அங்கீகரிக்க மறுப்பது, இதை பாசிச பேரினவாத அரசு தர மறுப்பதை கோட்பாடு ரீதியாக பாதுகாப்பது, மிகவும் இழிநிலை சார்ந்த பேரினவாத வக்கிரமாகும். இதை புலிப் பாசித்துக்கு முன் பின் என்ற பிரித்து அது இப்ப அவசியமில்லை என்பது, கடைந்தெடுத்த கழிசடைகளின் அரசியலாகவே வெளிப்படுகின்றது.


இவர்களின் முதல் பிரச்சனையே புலிகளை ஒழித்தலாகும். அது சரி, எப்படி ஐயா அந்த பிசாசை ஒழிப்பது என்றால், மேலே இந்த கும்பல் குறிப்பிட்டதைத் தாண்டி எங்கேயாவது நேர்மையாக பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இருந்தா? எனின் இல்லை. இவர்கள் புலியை ஒழிப்பது என்பது இலங்கை, இந்தியா அரசுகளையும், ஏகாதிபத்திய அரசுகளின் பாதத்தை நக்கி ஒழிக்கவே அழைக்கின்றனர். இந்த புலிப் பிசாசை ஒழித்த பின்பு, சோசலிசத்தையும், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் போராட வேண்டுமாம். நம்புங்கள் இவர்களின் அரசியல் நேர்மையை. இப்படி நாயாகவே சோரம் போகும் அரசியலே, நவீன திரொக்சிய கழிசடை அரசியலாகும். இதைத்தான் இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவியத்துக்கு எதிராக திரொக்கிய கொள்கையாக இருந்தது. சோவியத்தை ஏகாதிபத்தியத்தை ஆக்கிரமித்ததன் பிற்பாடு, ஸ்ராலின் என்ற பிசாசை ஒழித்து சோசலிசத்தை நிர்மாணிப்பதாக பசப்பினர். இதையே இன்று அவர்கள் மீண்டும் இலங்கை விடையத்திலும் பினாற்றுகின்றனர்.


இந்த கும்பல் சொல்வது புலிகளை ஒழிப்பது தான் இன்று முதற் கடமை. மற்றையவற்றைக் கண்டு கொள்ளாது அரசியல் செய்வதே முற்போக்கு அரசியல் என்பது, இந்க கூட்டத்தின் அரசியல் போதனை. இங்கு ஏகாதிபத்திய தலையீடு, இலங்கை பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை எல்லாம் இரண்டாம் பட்சமானவை என்பது இவர்களின் அரசியல். இது எதையோ பிரதிபலிக்கின்றது அல்லவா? புலிகள் கூறும் அதே "தமிழீழத்துக்கு பின்தான் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சனைக்கு தீர்வு" என்பதைத் தான் பிரதிபலிக்கின்றது. இந்தக் கயவாளிக் கூட்டம் புலிகளை ஒழித்த பின்னர் தான் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு முதல், தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை வரை பரிசீலிக்க முடியும் என்கின்றனர். கடைந்தெடுத்த சமூகவிரோத அரசியல் நிலைப்பாட்டை கடைபோட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

 

"இன்றுள்ள மாபெரும் பிரச்சனை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏதோ உரிமை தர வேண்டுமென்பது முதற் பிரச்சனையில்லை." என்று கூறுவதன் அரசியல், உண்மையில் பெரும் தேசிய இனவாதத்தின் ஒடுக்குமுறைக்கு துணைபோவது தான். அரசியல் வார்த்தையில் சொன்னால், இவர்கள் அரசியலில் அயோக்கியர்கள். கடைதெடுத்த அயோக்கியர்கள்;. ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டுமென்று லெனின் கூறுவதைப் பார்ப்போம்; "சோஷலிசப்புரட்சி என்பது ஒரே தனிச்செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல. கூர்மையான வர்க்கச்சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது. எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்கள் நடக்கும் சகாப்தம் அது." என்றார்.

 

இந்தக் கும்பலின் அரசியலுக்கு எந்தளவு தெளிவானதும் துல்லியமான பதில்; இது. இது பாசிச சமூக கட்டமைப்பிலும் கூட பொருந்தும். பாசிசத்தை முதலில் ஒழித்துவிட்டுத் தான் தேசிய பிரச்சனை, சோசலிச புரட்சி என்று கூறுபவர்கள் தமிழ் மக்களின் மிகபெரிய அரசியல் எதிரியாவார். பாசிசத்துக்கு எதிரான போராட்டம் கூட மக்களைச் சாhந்தவைதான். மக்கள் நலனை உயர்த்திப் போராடுவதுதான். மக்களின் எதிரிகளை தெளிவாக இனம் காட்டி போராடுவது தான். பாசித்தை ஒழித்த பின் மக்களின் நலனையும், மக்களின் எதிரியை இனம் காட்டுவோம் என்று புலம்புவது கடைந்தெடுத்த கயவர்களின் நிலைப்பாடாகும்.

 

சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை மறுக்கின்ற இன்றைய எதார்த்த சூழலில், அதை பற்றி பேசவே கூடாது எனக் கூறும் அரசியல் இழிந்து போன ரொக்சிய வாந்தியாக வெளிவருகின்றது. தமிழ்மக்களின் ஜனநாயகப் பிரச்சனைக்கு, அரசியல் ரீதியாக தீர்வை முன்வைக்க நாங்கள் கோருகின்றோம். இந்த நிலையில் இலங்கையில் சிங்கள கட்சிகள் எவையும் சொல்லலங்கார வார்த்தைகளைத் தவிர, ஒரு சமூகத் தீர்வை முன்வைக்கவில்லை. மாறாக பேரினவாத அரசியலை அடிப்படையாக கொண்டு இக்கட்சிகள், தமிழ் மக்களுக்கு எதிராகவே இயங்குகின்றன.

 

இதில் ஜே.வி.பி ஒரு படி மேலே சென்று, புலிகளை ஒழித்த பின்தான் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி பினாற்றுகின்றனர். தமிழ்மக்களின் எதிரி புலிகள் என்றும், அவர்களை ஒழித்த பின்தான் தமது தீர்வையே சொல்ல முடியும் என்கின்றனர். இதையே புலியெதிர்ப்பு திரொக்கிகள் கூறுகின்றனர். முதலில் புலியெதிர்ப்பு பல்லவி, அதன் பின்பு தான் தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி நாம் சிந்திக்கவே முடியும் என்கின்றனர்.

இங்கே பிரச்சனை என்னவென்றால், இந்த பேரினவாத களவாணி கோ

ஸ்டிகள் தமிழ் மக்களுக்கு பிரசச்னை உண்டு என்று புலம்புவதுதான்;. ஆனால், அதை புலி ஒழிப்பின் பின்புதான் அதைப்பற்றி பேசமுடியும் என்கின்றனர். ஏகாதிபத்தியம் பயங்கரவாதத்தை ஒழித்த பின்புதான், பயங்கரவாதத்தின் சமூக அடிப்படைகளையே ஆராயமுடியும் என்று கொக்கரிப்பதற்கு நிகரானது இந்த அரசியல். சமகாலத்தில் தமிழ்மக்களின் ஜனநாயக கோரிக்கையை பாதுகாக்க மறுக்கும் அரசியல், இங்கு புலியெதிhப்பு பல்லவியாகவே அரங்கேற்றப்படுகின்றது. இங்கு உண்மையில் புலிகள் கூட தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிகையை மறுக்கின்றனர் என்பதையே, இந்த கேனப் பயல்கள் மூடிமறைக்கின்றனர். இதை;தான் இந்த புலியெதிர்ப்பு கோஸ்டியினரும் கூட மறுக்கின்றனர். இவர்களுக்கு இடையில் என்ன அரசியல் ஒற்றுமை. இருவருமே தத்தம் சொந்த அரசியல் வழியில், தமிழ்மக்களின் ஜனநாயக் கோரிக்கையை மறுக்கின்றனர். மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை புலியெதிர்ப்பு அணியினர் புலி அழிப்பின் பின்பும், புலிகள் தமிழீழத்தின் பின்னும் தருவதாக மக்களுக்கு கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு மக்கள் விரோத கோஸ்டிகளும் மக்களுக்காகவே தாம் போராடுவதாக கூறுவதே, இன்று ஆதிக்கம் பெற்ற மக்கள் விரோத அரசியலாக உள்ளது.

 

இந்த மக்கள் விரோத அரசியல் விபச்சாரத்துக்கு எதிராக நாம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டுடன் இருப்பதால், கடுமையாக இருதரப்பு முரண்பாட்டையும் எதிர்கொள்கின்றோம்;. நாங்கள் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைக்காக இன்றே உடனடியாகவே போராடுவதன் அவசியத்தை முன்வைக்கின்றோம். இந்த அரசியல் வழியையும், இதைப் பிரச்சாரம் செய்யும் நடைமுறை சார்ந்த அரசியலையே நாம் கோருகின்றோம்;. மக்களுக்கு வெளியில், யாரும் எந்த சக்தியும் புலிகளை ஒழிப்பதை கடுமையாகவே நாம் எதிர்க்கின்றோம். அதற்கான அனைத்து கருத்துகளையும், அது சார்ந்த நடைமுறைகளையும் கூட நாம் எதிர்கின்றோம். உங்கள் வார்த்தையில் இது "அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர்" என்றால், எவ்வளவு பெரிய மக்களுக்கு எதிரான ஒரு துரோகம்;. மக்களுக்கு உதவாத, மக்கள் பங்கு கொள்ளாத எந்த அனுட்டானமும், மக்கள் விரோதத்தன்மை கொண்டவையே. இதுவே புலி மற்றும் புலி அல்லாத தரப்பின் மிகப் பெரிய அரசியல் துரோகமாகும். இதை எதார்த்த உலகமும், மனித வரலாறும் ஒருக்காலும் மன்னிக்காது.

 

சொந்த மக்களுக்கு எதிரான துரோகத்தை எப்படி மேலும் கூற முனைகின்றனர் எனப் பாhப்போம்; "... இன்றைக்கு கொழும்பு அரசாங்கம் சமஷ்டி தர வேண்டும், தமிழுரிமையைத் தீர்த்தாற்தான் புலி அழியும் என்று பேசுபவர்கள் எல்லாருமே அரசியல் அயோக்கியர்கள்." என்று கூற முனைவதன் பின்னுள்ள அரசியலே, மக்கள் விரோதத்தின் மற்றொரு பக்கம்தான்;. இங்கு சமஸ்டியா அல்லது வேறு ஒன்றா என்பது பற்றியதல்ல எமது விவாதம். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல் ரீதியாக கோருவதையும், அதை வழங்கக் கோருவதையும் எதிர்க்கும் இந்த அரசியல் என்ன என்பதே?. இப்படிக் கோருபவர்களை இந்த கும்பல் அரசியல் அயோக்கியர் என்கின்றனர். எங்களையும் இப்படித் தான் இந்த கும்பல் கூறுகின்றனது என்பதும் உண்மை.

 

தமிழ்மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், பேரினவாதத்தின் கால்தூசு துடைப்பவராகவே உள்ளனர். பேரினவாதத்துடன் கூடி நின்று ஏகாதிபத்தியத்தின் குண்டியை நக்கியே சுத்தம் செய்பவர்கள் தான் இந்த அயோக்கியாகள். இவர்கள் தமிழ் மக்களின் எதிரி மட்டுமல்ல, சிங்கள மக்களின் எதிரியும் கூட. மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை முன்வைப்பதையும், அதை வழங்கக் கோருவதை எதிர்ப்பவர்கள் தான் இவர்கள். பின் எப்படித் தான் மக்களின் நலன் என்று இவர்களால் சமூகத்தில் நீடிக்கமுடியும். மக்களின் ஜனநாயக கோரிக்கையின் ஒரு பகுதியாகவே பாசிசம் என்ற பிரச்சனை உள்ளது. புலிகள் கொண்டுள்ள பாசிசம் என்பதே, தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை திரித்து அதை மறுத்து அதன் மேல் ஏறி உட்கார்ந்துள்ளது. தமிழ் மக்களின் பின்தங்கிய சமூக அறிவியலை அடிப்படையாக கொண்டு, தனது அரசியல் ஆணையை தமிழ் மக்களின் மேல் நிறுவியுள்ளது. இதற்கு தமிழ் சமூகத்தில் ஒரு பிடிப்பான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தமிழ் சமுதாயம் பாசிசக் கூறுகளால் நிரப்பபட்ட நிலையில், அதுவே அதிகாரமுள்ள சிந்தனையாக உள்ள நிலையில், இது புலியின் சமூக இருப்புக்கான சமூக அடிப்படையை வழங்கியுள்ளது. அதாவது புலிகள் தனித்து இயங்கவில்லை. சமூகத்தில் அதற்கும் ஒரு சமூக வேரூண்டு. தமிழ்மக்கள் மத்தியில் புலிகளின் இருப்பு, இப்படித்தான் நீடிக்கமுடிகின்றது.

 

இந்த இடத்தில் புலிகளின் அரசியல் அழிவு பலவழிகளில் இருந்தபோதும், இந்த விவாதத்தின் உள்ளடகத்தினுள் மட்டும் பார்ப்போம்.

 

1.தமிழ்மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து மக்களை அணிதிரட்டும் செயல்பாட்டுத் தளம், இயல்பாகவே புலியை அழிக்கும்.


2.தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வொன்றை, இன்றைய ஆதிக்க சக்திகள் (புலிகள் உள்ளிட்ட) தமக்கு இடையில் ஒரு அரசியல் உடன்பாட்டு வருவார்கள் எனின் புலிகள் அழிவர்.

 

இந்த இரண்டு விடையங்களும் குறிப்பாக இந்த உள்ளடக்கத்தினுள் புலிகளின் அரசியலை கேள்விக்குள்ளாக்கும். இதை மறுக்கும் இந்த முதுகெலும்பற்ற தேனீ எழுத்தாளர், இதற்கு வெளியில் புலியை அழிப்பது பற்றி கானல் நீராகவே பினாற்றுகின்றனர். அது சரி, எப்படி ஐயா அழிக்கப்படுவர் என்றால் உளறுகின்றனர். உண்மையில் இந்த சமூகவிரோத கயவாளிகள் முன்னுள்ள அரசியல் வழி, இந்தியா மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்காக வாலையாட்டுவதைத் தான் புலி பாசித்துக்கு மாற்றாக செய்கின்றனர். இதன் மூலமே புலிகளை, அதாவது பாசிசத்தை அழிப்பது பற்றி பிரச்சார உபதேசம் செய்ய முனைகின்னர். ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய ஆக்கிரமிப்பு ஊடாக உருவாகும் புலியெதிர்ப்பு பாசிசத்தை, புலி பாசிசத்துக்கு நிகராகவே, தமிழ்மக்களின் மற்றைய காதுக்கு புதுப் ப+வாக செருகவே இவர்கள் விரும்புகின்றனர்.

 

இந்தக் கும்பல் தனது இந்த இழிவான அரசியலை நியாயப்படுத்த எதை எப்படி முன்வைக்கின்றனர் எனப் பார்ப்போம்; "நாம் ஒரு சின்ன உரிமைக்காகப் போராடப் புறப்பட்டு முழு உரிமையையுமே இழந்து புலி அடிமை ஆகிவிட்டோம். எந்தச் சட்டமும், எந்தச் சம்பிரதாயமும். எந்தத் தேசவழமையும், எந்த ஆன்மீக நன்நெறியும் புலியைக் கட்டுப்படுத்தாது. புலியின் பிரச்சார ஊடகங்களின் கடைந்தெடுத்த பொய்களெல்லாம் மறுத்துப்பேச முடியாத தாரகமந்திரமாகத் தமிழ்மக்கள் ஏற்றுத்தான் தீர வேண்டும என்ற நிலையே நிலவுகிறது. புலி இயங்குவது எந்தத் தமிழனின் நலனுக்காகவுமல்ல. இலங்கை அரசாங்கம் உண்மையிலேயே தமிழ் விரோதிகளாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து உணவையோ மருந்து வகைகளையோ சம்பளங்களையோ அனுப்பியிருக்காது. தமிழ் மக்களும் துணிந்து நாலு லட்சம் பேர் கொழும்பில் குடியேறியிருக்க மாட்டர்ர்கள்." அருமையான ஒரு அரசியல் விளக்கம்.

 

இப்படிச் சொல்பவர்கள் என்ன செய்ய சொல்லுகின்றனர் என்றால், அதை சூக்குமமாக புதைத்துவைத்து புலியை எதிர்ப்பில் பினாற்றுகின்றனர். புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு மாற்றாக எதை முன்வைக்கின்றனர் என்பதே மிகமுக்கியமானது. புலிகள் மக்களுக்கு செய்யும் மனிதவிரோத செயலில் மட்டும் அரசியல் நடத்தும் இந்தக்கும்பல், மக்களுக்கான மாற்று அரசியலை முன்வைக்கவில்லை. பாசிசத்தை ஒழிக்க புலியெதிர்ப்பு அணியை அணிதிரளக் கோரும் இவர்கள், அதை எப்படி எந்தத் தலைமையில் எந்த வர்க்கத்தின் தலைமையில், எந்த எதிரிகளுக்கு எதிராக நடத்துவது என்பதை பற்றியெல்லாம், எந்த சமூக அக்கறையும் கொணடிருக்கவில்லை. இவர்களுக்கு அப்படியொரு மக்கள் நலன் சார்ந்த உணர்வே கிடையாது. ஏகாதிபத்தியதின் தலையீட்டை எதிர்பார்த்த அதற்கு ஏற்ப குலைக்கும் இந்த புலியெதிhப்பு கும்பலுக்கு அவை முக்கியத்துவம் உடையதல்ல. அன்னிய சக்திகளின் கால்தூசு துடைத்து கம்பளம் விரித்து அதில் புரண்டெழுகின்றனர். இதனால் தான் மக்களை சார்ந்த எந்த அரசியல் வழியையும் இவர்கள் மக்களுக்காக முன்வைப்பதில்லை. மக்கள் நலனை உயர்த்தி செய்தி வெளிவிடுவதில்லை. புலிகள் எதைச் செய்தாலும் அதை எதிர்த்து எதிர் கட்சியாக அதே பாணியில் செயல்படுகின்றனர்.

 

இலங்கை அரசாங்கம் சம்பளம் கொடுக்கின்றது. மருந்துகளை வழங்குகின்றது என்ற அரசியல் வாதங்களை எல்லாம் நாங்கள் தான் அரசியல் ரீதியாக முதலில் தெளிவாக முன்வைத்தவர்கள். அதைத் திரித்துப் புரட்டி மக்களுக்கு எதிராக வளைத்துக் காட்டுவதே இந்த மோசடிக்காரர்களின் இன்றைய புலியெதிர்ப்பு கலையாக புணருகின்றனர். இலங்கை அரசு இதை வழங்குகின்றது என்பதால், அது மக்கள் அரசாகிவிடுமா? ஒரு அரசு அவற்றை வழங்க வேண்டும் என்பது கட்டயமானது. தமிழ் மக்களுக்கு இதை அரசு வழங்குகின்றது என்றால், அரசு இதை விரும்பி வழங்கியதென்பதல்ல. சமூக நிர்ப்பந்தம் அதை வழங்க வைக்கின்றது. இது சிங்கள மக்களுக்கு வழங்குவதை விடவும் குறைவானது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதையும், தமிழ் சிங்கள இனவாதம் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது என்பதையும் எனது நூலான "யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்" என்ற நூலில் ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளேன். இந்த இணையத்தின் நூல் பகுதியில் அக ;கட்டுரைகள் உள்ளது. இதில் பேரினவாத அரசின் சிங்கள மேலாதிக்கம் சார்ந்து, தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி இயங்குகின்றது என்பதை தெளிவான தரவுகளுடன் தரப்பட்டுள்ளது. http://tamilcircle.net/books/book-04/article_list13.htm

 

உலக வங்கியின் எடுபிடியாக உள்ள இனவாத அரசு இன்று அரசுதுறையை ஒழித்து, வெறும் அடக்குமுறை இயந்திரமாக மாறிவருகின்ற இன்றைய உலக நிலையில் தான், அரசு சம்பளம் கொடுப்பது பற்றி திரொக்சிகள் உளறுகின்றனர். புலிகளும் கூட சம்பளம் கொடுக்கும் ஒரு துறையை உருவாக்கியுள்ளனர். அரசுகள் கூலிக்கும் சம்பளம் கொடுத்தல் என்பது மக்கள் நலன் மீதான கருசனைகளில் இருந்தல்ல, மாறாக மக்கள் மீதான அடக்குமுறை அரசு இயந்திரம் இயங்குவதற்கான அடித்தளத்தைத் தான் இது ஏற்படுத்துகின்றது.


பெரும் தொகையான தமிழ் மக்கள் கொழும்பில் வாழ்கின்றனர் என்பதெல்லாம் புலிகளின் ஒடுக்குமுறையின் விளைவின் ஒருபகுதி என்பதால், தமிழ் மக்களின் உரிமையை மறுப்பது எங்ஙனம் சாத்தியம்;. புலியின் ஒடுக்குமுறை வேறு, தமிழ் மக்களின் உரிமை வேறு. தமிழ் மக்களின் உரிமையை மறுக்கும் அனைத்து தரப்புக்கும் எதிராக போராட மறுப்பது எந்த விதத்தில் மக்கள் நலன் சார்ந்தது? உலகளவிலான அனைத்து போராட்டங்களிலும் சமூகங்களிலும் இடப்பெயர்ச்சி முதல் ஒடுக்குமுறைகள் இருப்பதால், ஜனநாயகப் போராட்டம் தவறானதாகிவிடுமா? இங்கு பிரச்சனை ஒரு போராட்டம் மக்களுக்கு எதிராக எப்படி இயங்குகின்றது என்ற அரசியல் தெளிவும், அது சார்ந்த சமூக நடைமுறையும் தான். இது அந்த மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுப்பதற்காக அல்ல. மாறாக அந்த மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை முதன்மைப்படுத்தி, மக்கள் விரோத சக்திகளை மக்களிடம் தனிமைப்படுத்தும் அரசியல் வழி தான் சரியான ஒரேயொரு அரசியல் மார்க்கமாகும்.

 

கொழும்பில் வாழும் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளைக் கூட முன்வைக்க மறுக்கும் நீங்கள், அதற்கு பதிலாக அவர்களின் நியாயமான அரசியல் உணர்வுகளைக் கூட மறுத்து நிற்கின்றீhகள். இங்கு சிங்கள மக்களின் ஜனநாயக கோரிக்கைகளைக் கூட பேரினவாத அரசு மறுத்து நிற்கின்றது. இதைத்தான் ஜே.வி.பியும் செய்கின்றது. சிங்கள மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் ஜே.வி.பி, எப்படி தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும். புலியெதிர்ப்பு கும்பல் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் நிலையில், சிங்கள மக்களின் ஜனநாயகக் கோரிக்கையைக் கூட இவாகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிந்த தெளிவே. இவர்களுக்கு இடையில் மக்களுக்கு எதிராக இயங்குவதில் உள்ள ஒற்றுமை, முரண்நிலையில் உள்ள சமூக முரண்பாடுகளினால் தம்மைத் தாமும், தமது அரசியல் இருப்பையும் கூட தற்காத்துக் கொள்ளுகின்றனர். புலிகள் இருப்புத் தான் இவர்களையும், இவர்களின் மக்கள் விரோத அரசியலையும்; கூட தக்கவைக்கின்றது. சமூக இருப்பு நிலையில் கூட மக்களின் நலனை உயர்த்துவதை இவர்கள் விரும்புவதில்லை. மக்களின் நலன் இவர்களின் சமூக இருப்பை, புலிகளைப் போல் இல்லாததாக்கிவிடும்.

 

வார்த்தை ஜாலங்கள் மூலம் விடையங்களை திசை திருப்புவது கைவந்த கலையாக உள்ளது. தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சதி என்று கூறுவதன் மூலம், அதாவது "இந்த ஏகாதிபத்தியங்களே தமிழர்களைக் கொல்லுவித்தவர்கள்" என்று கூறியபடி, தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுக்கும் வகையில் திரிப்பது ஏன். உலகின் சமூக முரண்பாடுகள் இந்த வரையறைக்குள் தான் இயங்குகின்றது. ஏகாதிபத்தியமும் அதன் தொங்குசதை இராணுவக் கும்பல்களும் இப்படித் தான் உலகெங்கும் இயங்குகின்றனர். இது இலங்கைக்கு ஏதோ விதிவிலக்கல்ல. இதற்கு எதிரான உலகளவிலான போராட்டங்கள் அனைத்தும், இந்த சமூக எதார்த்தத்தை எதிர்கொள்ளாது போராடமுடியாது. ஆனால் புலியெதிர்ப்பு திரொக்கிய காவடிகள் மட்டும் திடீரென கனவுகண்டு எழுந்து, ஆகாகா புலியை ஒழித்த பின்தான் நாங்கள் சோசலிச மூகமுடியை போட்டு மக்களிடையே நடமாடமுடியும் என்கின்றனர். அதுவரை நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமைகளை கோரக் கூடாது என்கின்றனர். புலிகள் மறுக்கும் சில ஜனநாயக உரிமைகளை மட்டும் கோருங்கள், ஒட்டுமொத்த உரிமையைக் கோருவது அரசியல் அயோக்கியத்தனம் என்கின்றனர்.

 

புலிகள் தமிழ் மக்களுக்கு மறுக்கும் சில ஜனநாயக் கோரிக்கைக்கு அப்பால், தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகப் போராட்டத்தை புலிகள் குழிதோண்டி புதைப்பதற்கு எதிராகவும் கூட போராடவே கூடாது என்கின்றனர். புலிகள் பேரினவாத சிங்கள அரசு போல், தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளையே மறுதலிக்கின்றனர். இதை நீங்கள் கண்டு கொள்ளவே கூடாது என்பது புலியெதிர்ப்பு அரசியல் சாராம்சமாகும். கண்டு கொள்வது அரசியல் அயோக்கியத்தனமாகவே இருக்கும் என்கின்றனர். புலிகளும், பேரினவாத அரசும் தமிழ் மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகக் கோரிக்கையை, புலி பாசிசத்தை ஒழித்த பின்பு தான் தாங்கள் கண்டு கொள்வோம் என்கின்றனர். மக்களே செம்மறி ஆடு போல் புலியெதிர்ப்பு பின்னால் ஆயுதம் ஏந்த வாருங்கள் என்கின்றனர். இதைத் தான் தமிழ் சிங்கள மக்களுக்கு ஜே.வி.பியும் கூறுகின்றது.

 

இங்கு இந்த கயவாளிகள் பின்னுள்ள அரசியல் சூழ்ச்சியின் உள்ளடக்கம் தான் என்ன? புலிகளும் அரசும் எப்படி மக்களுக்கு எதிராகவும், கூட்டாகவும் ஏகாதிபத்திய சார்பு அரசியலை வைத்திருக்கின்றனர் என்பதை நீங்கள் கண்டு கொள்ளவே கூடாது என்கின்றனர். அதைத்தான் நாங்களும் கொண்டுள்ளோம் என்பதை கண்டுகொள்ளக் கூடாது என்கின்றனர். ஏனெனின் புலி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இது அவசியம் என்கின்றனர். புலிப் பாசிசம் தான் பிரதான எதிரியே ஒழிய, ஏகாதிபத்தியமல்ல என்கின்றனர். இதை நீங்கள் முரண்பாடாக கண்டு கொண்டால், அதுவே அரசியல் அயோக்கியத்தனம் என்கின்றனர். ஏகாதிபத்திய அரசியல் கொள்கையை வைத்துள்ள புலிகளை விரும்பின், புலியெதிர்ப்பு உள்ளடகத்தில் மட்டும் எதிர்த்தால் அது அரசியல் நேர்மை என்கின்றனர். ஆனால் அது புலிக்கு எதிரான தலையீட்டின் போதல்ல என்கின்றனர். ஏகாதிபத்திய தயவில் உள்ள இலங்கை அரசாங்கம் கொழும்பில் தமிழர்கள் வாழவும், வடக்கு கிழக்கு அரசு ஊழியருக்கு சம்பளத்தையும், மருந்துகளையும் அனுப்புவதால் அதை எதிர்க்க கூடாது என்று, இந்த திரொக்கிய காவடிகள் அரசியல் உபதேசம் செய்கின்றனர்.

 

இந்த நிலையில் ஏகாதிபத்திய தலையீட்டுக்காக கண்விழித்து ஏங்கும் இவர்கள், ஏகாதிபத்திய தலையீட்டை நடத்த தடையான சில நிலைப்பாட்டை கண்டு கொதித்துப் போகின்றனர். அதை அவர்கள் "ஏகாதிப்பத்திய நாடுகளின் தலைவர்கள் நாளாந்தம் அரசியல் கொலைகளைச் செய்யும் புலிப்பாசிசத்தை நிராயுதபாணியாக்க வேண்டும் என்று சொல்லாமல் பாசிசத்திற்கு எதிராக எவ்வளவோ நிராகுலமான சூழலில் வாழும் துணைப் படைகளை நிராயுதபாணியாக்க வேண்டும் என்ற கேலிக் கூத்தைச் செய்கிறார்கள்." இப்படி அங்கலாய்க்கும் இவர்கள், எமது நாட்டில் ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார தலையீட்டை எதிர்க்கவில்லை. மாறாக தலையீட்டை புலிக்கு எதிராக நடத்தும் வழியில் ஆதரிக்கின்றனர். சோசலிசம், ஏகாதிபத்தியம் என்ற வாhத்தையில் எழுதும் இவர்கள் தான், ஏகாதிபத்திய அணுகுமுறையில் தவறு உள்ளதாக காட்ட முனைகின்றனர். இந்தக் கும்பல் இதற்கு மாறாக "இந்த ஏகாதிபத்தியங்களே தமிழர்களைக் கொல்லுவித்தவர்கள்"; என்று கூறுவதற்கு பின்நிற்கவில்லை. அதேநேரம் புலிகளின் ஆயதங்களை களையும்படி கோரவில்லை என்று கொதித்து நிற்கின்றனர். "ஏகாதிபத்தியங்கள் ஒரு நாளும் புலியை ஒடுக்க முன்வரப்போவதில்லை." என்று புலம்புகின்றனர். ஏகாதிபத்தியம் பற்றிய இந்தக் கும்பலின் நிலைப்பாடு, புலிக்கு எதிரான தலையீட்டை ஆதரித்து எழுதும் வக்கிரத்தைவிட வேறு எதுவுமில்லை.

 

புலிகளை நிராயுதபாணியாக்குவது என்றால் எப்படி? இதை ஏகாதிபத்தியம் சொன்னால் உடனே புலிகள் களைந்து விடுவார்களா? இங்கு புலிகளை நிராயுதபாணியாக்கும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டைத் தான் இதன் மூலம் தெளிவாக அழுத்திக் கோருகின்றனர். ஏகாதிபத்தியம் புலியை அழிக்க தடையாக உள்ள காரணங்களைக் கூட அரசியல் ரீதியாக கண்டுபிடிக்க முனைகின்றனர். அதில் இருந்து தமது அரசியல் கண்டுபிடிப்பை மார்க்சியமாக காட்டமுனைகின்னர். அதை இந்த திரொக்சிய கும்பல் எப்படிக் கூறுகின்றது எனப் பார்போம். "புலிக்கும் ஏகாதிபத்தியம் காலனித்துவ நாடுகளைச் சுரண்டும் பொருளாதாரக் கொள்கைக்கும் இடையே ஒரு முரண்பாடும் கிடையாது. இலங்கையில் என்று பரிபூரண தனிச் சொத்துடமை முறை நிலவுகிறதோ அன்றுதான் ஏகாதிபத்தியங்கள் புலியை அழிக்க உடன்படும்." ஏகாதிபத்தியம் புலிகளை அழிக்க உடன்படும் அந்தக் கணம் தான், இவர்களின் அரசியல். அதுசரி உலகில் ஏகாதிபத்தியம் தலையிட்ட நாடுகளில் உங்கள் அரசியல் கண்டுபிடிப்பு பொருந்துகின்றதா? எப்படி?

 

புலிகளை அழிக்கும் அந்த நாளுக்காக தமது ஏகாதிபத்திய சார்பு அரசியலை மூடிமறைக்க காலனித்துவம், ஏகாதிபத்தியம் என்று வழமையான திரொக்சிய பல்லவிகள். இதில் ~பரிபூரண தனிச் சொத்துரிமை| என்று புதிய அரசியல் அகாராதி ஏகாதிபத்திய தலையீட்டுக்கான வரையறையில் முன்வைக்கின்றனர். அது எனன் ஐயா ~பரிபூரண| மான தனிச் சொத்துரிமை. இலங்கை தனிச்சொத்துரிமை அமைப்பில் உள்ள ஒரு சமூக அமைப்பே. இதில் பரிபூரணம் என்று கூறுவதற்கு எந்த அரசியல் உள்ளடக்கம் கிடையாது. தனிச் சொத்துரிமை அமைப்பு என்பது ~பரிபூரண|மாக மாற்றப்பட வேண்டும் என்ற வரையறை எதுவும் தனிச்சொத்துரிமை உலகில் கிடையாது. தனிச்சொத்துரிமை கூட ஜனநாயக பூர்வமான தனது இருப்பில் தனிச்சொத்துரிமையை அங்கீகரிப்பதில்லை. உலகமயமாதல் தனிச் சொத்துரிமை அமைப்பில் எதை சாதிக்க முனைகின்றது என்பதை குருட்டுக் கண் இல்லாதவர்கள் இனம் காணமுடியும். இதற்குள் நான் விவாதத்தை நகர்த்திச் செல்வதை விடுத்து, வெளிவரவுள்ள எனது புதிய நூல்களில் அதை பார்க்கவும். சில கட்டுரைகள் இணையத்தில் உள்ளது.


இங்கு புலிக்காயச்;சல் நோயுள்ள இவர்களின் பிரச்சனையே, ஏகாதிபத்தியம் புலியை உடனடியாக அழிக்காது முன்வைக்கும் சில காரணங்கள் மீதே சினந்து வெடிக்கும் போதே இப்படி கண்ணீர் விடுகின்றனர். இந்தக் கும்பல் தனது புலியெதிர்ப்பின் எல்லையில் நின்று குலைக்கும் போது, "சோஷலிசம் வருவதைத் தடுப்பதற்கு ஏகாதிபத்தியங்களுக்கு தமிழர் கொலை தவிர்க்க முடியாதது." என்று புலியின் கொலைகளை ஏகாதிபத்தியம் இப்படி ஊக்குவிப்பதாக அழுகின்றனர். ஐயா ஏகாதிபத்தியம் புலிகளை அழிக்க தலையிட்டாலும், தமிழ் மக்கள் கொல்லப்படுவர். இது தமிழ்மக்களின் சோசலிசம் வருவதற்காகவா கொல்லுவார்கள் என்பதே இவர்களின் தர்க்க விளக்கம். புலிகள் கொல்வது சோசலிசத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சதி என்றால், இலங்கை அரசும் ஏகாதிபத்தியம் கொல்வது அதற்காத்தானே இருக்கமுடியும். ஏன் கருணா குழுவும், மற்றைய தமிழ் மக்களுக்கு எதிரான துரோகக் குழுக்களும் கொல்வது எதற்காக? சோசலிசம் வருவதற்கா? நீங்கள் கூவி அழைக்கும் "புலிவிரோத அரசியற் சக்திகளுக்கு முன்னால் மீண்டும் ஓர் மாபெரும் கைங்கரியத்தையும் கடமைப் பாட்டையும் வரலாறு திணித்துள்ளது. அது எண்பத்திமூன்றை விட மிகப்பெரியது. கடினமானது. அதுதான் புலிக்கெதிராக மீண்டும் ஆயுதமேந்திய எழுச்சியை மேற்கொள்ள வேண்டும்." இந்த கும்பல் நடத்தும் கொலைகள் சோசலிசத்துக்காக! எப்படி?

 

நரித்தனத்தின் அரசியல் உள்ளடக்கம் சந்தியில் கிழியும் போது, கோவணத்தையே இழந்த விடுவது நிகழ்கின்றது. அது இப்படி தான் வெளிப்படும்; "ஏகாதிபத்திய சதிகாரர்களின் அடுத்த விவாதம் என்னவென்றால் அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே யுத்தம் நிகழ்ந்தால் இரணடு தரப்பும் வெல்ல இயலாதாம்." ஏன், புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு யுத்தகோசம் இப்படித் தான் வெளிப்படுகின்றது. அது தன்னை மூடிமறைக்கவே விரும்பவில்லை. "புலிப் பாசிசத்தோடு பேசவேண்டும் என்பவர்கள் எல்லாம் கயவர்கள்." என்று வெடித்துப் புலம்புகின்றனர். யுத்தம் மட்டும் தான் புலிப்பாசித்துக்கு தீர்வு என்கின்றனர். இந்த அமைதி, இந்த யுத்த நிறுத்தம் எல்லாம் அவசியமற்ற ஒன்று என்கின்றனர். புலிக்கும், புலியெதிர்ப்புக்கும் இதில் ஒன்றுபட்ட நிலைப்பாடு இருப்பது ஆச்சரியமானதல்ல. ரி.பி.சி இக்கட்டுரை தனது யுத்தத்துக்கு எதிரான வாசகர்களுக்காக பெருமையுடன் வாசித்த போது, அங்கு வெளிப்பட்டது யுத்தவெறிக் கோசமே. புலிகள் கொல்லப்படுவதை ரசிக்கும் மிருகவெறியுடன் கூடிய களிப்பு, கட்டுரையை ரி;பி.சி தனது வாசகர்களுக்கு வாசித்த போது பிறீட்டது.


"யுத்தம் தொடங்கினால் கிழக்கு மாகாணத்தைவிட்டு புலிகள் 24 மணித்தியாலத்தில் வெளியேறுவது திண்ணம். வடமாகாணத்தில் உள்ள தமிழர்களும் புலிக் கெதிராக எழுச்சி கொள்ளுவது திண்ணம். அல்வாயிலே புலிக்கெதிராகப் புலிகளின் வீடுகளை எரித்த நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது." ஆகவே யுத்தத்தை உடன் தொடங்குங்கள்;. பாசித்தை ஒழியுங்கள். இதற்காக அரசாங்கம் யுத்தத்ததை தொடங்கியேயாக வேண்டும்; இதைத்தான் "கதிர்காமரைக் கொன்ற பொழுது சந்திரிக்கா குமாரத்துங்கா நடந்துகொண்ட விதத்திலிருந்தே அவர்கள் எந்த மட்டத்திற்குப் புலியைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெளிவு." என்று கொதித்தெழுகின்றார். ஆம் யுத்தம் மட்டுமே இன்று தீர்வு. இதை புலிகள் மட்டும்; சொல்லவில்லை. புலியெதிhப்பு அணியினரும அதையே கூறுகின்றனர்.

 

இதுவே இந்த கட்டுரை மூலமான தேனீ மற்றும் ரிபிசி யின் வேண்டுகோள். கிழக்கில் புலிகள் ஒழிவார்கள். வடக்கில் புலிகளை மக்கள் ஓட்டுவார்கள்;. இதற்கு இலங்கை அரசாங்கம் உதவும். தேவை ஏற்படின் இந்தியா அல்லது ஏகாதிபத்தியம் புலிப் பாசிச ஒழிப்புக்காக தலையிடுவர். அதை நாம் புலிப் பாசிச ஒழிப்புக்காக ஆதரிக்க வேண்டும். இது இந்தக் கட்டுரையின் மையச் செய்தி. அதனால் தான் "பாசிசம் இருக்கும் வரை கிடைக்கும் எந்த உரிமையுமே அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர். புலியின் அழிவின் பின் ஒருகாலமும் பழைய சமுதாய முறை நீடிக்காது." என்கின்றனர். அங்கு புலியெதிhப்பு தலைமையில் பூத்துக் குலுங்கும் சோசலிசம் என்கின்றனர்.


குறிப்பு:

 

கருத்தை கருத்தாக எதிர்கொள்ள முடியாத பலர், உலகெங்கும் எனக்கு எதிராக தனிப்பட்ட அவதூறுகளை அன்றாடம் கட்டமைக்கின்றனர். அதாவது நிதர்சனம் டொட் கொம் புலியுடன் முரண்பட்டவர்கள் மீது எதைச் செய்கின்றதோ, அதை எனது கருத்துடன் உடன்பட முடியாதவர்கள் எனக்கு எதிராக செய்கின்றனர்.
நான் மீண்டும் உங்கள் முன் சவால் விடுகின்றேன். கருத்தை கருத்தாக எதிர் கொள்ளுங்கள்;. என் நடத்தை சார்ந்து தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தால், அதை தனியாக முதுக்கு பின்னால் அவதூறாக பரப்புவதை விடுத்த நேர்மையாக விவாதியுங்கள்.
01.10.2005