ஏகாதிபத்தியம் மக்களின் எதிரி என்பதையும், புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உதவுகின்றது என்பதையும் கண்டு கொள்ளும் போது இவை மக்களைச் சார்ந்து நிற்பதன் அவசியத்தையும் மீண்டும் எமக்கு உணர்த்துகின்றது. ஜனநாயகம்,
தேசியம் இரண்டுமே மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதையும், இதை மறுக்கும் அனைவரையும் இனம் கண்டு எதிர்த்துப் போராடவும் கூட இது வழிகாட்டுகின்றது.
அண்மையில் புலிகள் மீதான தடைகள் கனடா முதல் ஐரோப்பா (மிதமான மட்டுப்படுத்தபட்ட வகையில் நடைமுறையில் கையாளுகின்றது) வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடைபற்றி புலிகள் ஒரு விதமாகவும், புலியெதிர்ப்பு அணி மற்றொரு விதமாகவும், மூன்றாம் தரப்பு வேறுவிதமாகவும் பார்க்கின்றனர். ஆனால் இதைப்பற்றி மூன்றாம் தரப்பு தமக்குள் ஒருமித்த அரசியல் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் தடையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? இதை எப்படி எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான விடையமாகிவிட்டது.
ஒருபுறம் இலங்கை அரசு மறுபுறம் புலிகள் என இருவரும் மக்கள் விரோத செயற்பாட்டில் செயற்படுகின்ற ஒரு நிலையில், புலிகள் மட்டும் ஒருதலைப்பட்சமாக தடை செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில், மூன்றாம் தரப்பு நடைமுறையில் செயற்படாத நிலையில், குழப்பம் மேலும் அதிகரிக்கின்றது. எப்போதும் புலியாதரவு, புலியெதிர்ப்பு என்ற இரண்டு எதிர்நிலைக்குள் செயல்பட்ட முனைந்தவர்கள், சிந்திக்க முற்பட்டவர்களிடையே இந்தக் குழப்பம் மேலும் ஆழமாகிவிடுகின்றது.
முதலில் ஏகாதிபத்திய புலித் தடைபற்றி நாம் பார்க்கும் போது, புலிகள் மீதான தடை என்பது புலிகளின் பாசிச அரசியல் மீதானதல்ல. அதாவது புலிகளின் அரசியல் சார்ந்த மக்கள் விரோத நடத்தைகள் சார்ந்து இந்தத் தடையை ஏகாதிபத்தியம் செய்யவில்லை. தடையை புலிகளின் நடத்தை மீது மட்டும் கூறி தடை செய்ததே ஒழிய, அதன் அரசியலையல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலையே, ஏகாதிபத்தியமும் தனது அரசியலாக கொள்கின்றது. எனNவு தமிழ் பேசும் மக்கள் புலிகளின் பாசிசம் அல்லாத தமது சொந்த வழியில், சொந்த தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் தடை வந்திருக்கும்.
தடை என்பது இன்றைய உலகமயமாதல் பொருளாதார அமைப்பில், ஏகாதிபத்தியங்களின் தேவையொட்டி வருகின்றது. ஏகாதிபத்திய நலனுக்கு பாதகமான அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. அதாவது ஒடுக்குமுறை ஏவிவிடப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு சாதகமான அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றது.
இங்கு புலிகள் பாசிட்டுகளா இல்லையா என்பதல்ல, மாறாக ஏகாதிபத்திய பொருளாதார நோக்கத்துக்கு பாதகமான அனைத்தும் உலகளாவில் தடைசெய்யப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு தேவையான அனைத்துப் பாசிசமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான், இந்தத் தடைபற்றிய உள்ளடகத்தை நாம் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள முற்படவேண்டும்.
இரண்டாவதாக ஏகாதிபத்தியங்கள் இந்தத் தடையை எதன் மீது நியாயப்படுத்துகின்றது என்பது மிக முக்கியமான விடையமாகின்றது. இதுவும் குழப்பத்தையும், அரசியல் பிறழ்ற்சியையும் ஏற்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் தனது நோக்கத்தை நிறைவு செய்ய காரணத்தை கண்டுபிடிப்பார்கள். இந்த உண்மை உலகம் தழுவியது. ஆனால் அவர்களின் மக்கள் விரோத தடைக்கு, நாமே அரசியல் காரணமாக இருப்பது வேறு. இதை நாம் வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டும். புலிகளின் தடைக்கு கூறும் காரணங்களை, புலிகளே தமது சொந்த மக்கள் விரோத நடவடிக்கை மூலம் வலிந்து உருவாக்குகின்றனர். புலிகளின் தடையை நியாயப்படுத்தும் வகையில், ஏகாதிபத்தியத்துக்கு புலிகள் சதா உதவுகின்றனர். மறுக்க முடியாத மக்கள் விரோத உண்மை சார்ந்து ஏகாதிபத்தியம் நிற்பதன் மூலம், தனது சொந்த மக்கள் விரோத நிலைக்கே ஏகாதிபத்தியம் முற்போக்கு மூலாம் பூசமுடிகின்றது.
புலிகளின் மாபியாத்தனமும், பாசிசமும் உலகம் தழுவியதாக அதுவே கொலைக் கலாச்சாரமாக மாறிவிட்டது. இன்று பணம் தர மறுத்தாலே கொல்லவும், கைது செய்யவும், அவர்களை தமது சித்திரவதைக்கு உள்ளாக்கவும் போதுமான காரணமாகி, அடிப்படையில் மாபியாத்தனமே புலித் தேசியமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் தவறுகள் என்று உலகளாவில் ஒத்துக் கொள்பவைகளைக் கூட, நடைமுறையில் அதை செய்வதன் மூலம் தமது சொந்த விலங்குக்கு தாமே வலிந்து வடிகால் அமைக்கின்றனர். மனித உரிமை மீறலின் உச்சத்தில் நின்று சதா கொக்கரிக்கின்றனர். அச்சத்தையும், பீதியையும் சமூக உணர்வாக வளர்த்து, அதில் தமது புலித் தேசிய பாசிச வக்கிரத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இன்று தமிழ் தேசியம் என்பது, பணம் அறவிடுவதும், அவர்களுக்கு அடங்கி நடப்பதும், தாம் சொல்வதை நம்ப வேண்டும் என்றாகிவிட்டது. இதை தவிர வேறு எதையும் தமிழ் தேசியமாக கருதுவதைக் கூட துரோகமாக கருதி சதா அழிக்கின்றனர்.
இந்த நிலையில் ஏகாதிபத்திய தடைகள், தடைக்கான காரணத்தை புலிகளின் நடத்தை சார்ந்து ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்படுகின்றது. புலிகளின் சொந்த நடத்தைக்கு வெளியில், அவர்கள் வழமைபோல் காரணங்களை புலிகள் விடையத்தில் புனையவில்லை. ஏகாதிபத்தியத்தின் சொந்த அரசியல் நரித்தனத்தை இனம் காணமுடியாத வகையில், புலிகளின் கொடூரமான வக்கிரமான மனிதவிரோத நடத்தைகள் மேவி நிற்கின்றன. இதனால் ஏகாதிபத்திய ஆதரவு பலமானதாக மாறிவிட முனைகின்றது.
அரசியல் குழப்பத்தின் விளைவு
இந்த நிலையில் அரசியல் மயக்கம், கோட்பாட்டு திரிபு ஏற்படுகின்றது. புலிகளின் பாசிசம், மாபியாத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது அதை உணர்பவர்கள் புலியை ஒழித்தல் என்ற அடிப்படையில் ஏகாதிபத்திய தடையை ஆதரிக்கின்றனர். அதைக் கொண்டாடுகின்றனர். ஏகாதிபத்திய தடையை புலியின் நடத்தை சார்ந்ததாக நம்புகின்றனர் அல்லது அதை அப்படிக் காட்ட முனைகின்றனர். புலிகளை அழிக்க, இதைவிட்டால் வேறுவழியில் எதிர்கொள்ள முடியாது என்கின்றனர். இப்படி ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடாக மாறிவிடுகின்றது. இது சார்ந்த செயற்பாடுகள் முடுக்கிவிடப்படுகின்றது.
இந்த சோரம் போதல் இயல்பாக ஏகாதிபத்தியத்தில் காணப்படும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தை உயர்ந்த ஜனநாயகமாக விளக்குவதும், அதற்காக வாலாட்டுவதும் தொடங்குகின்றது. இந்த அடிப்படையில் புலியெதிர்ப்பு அணி என்ற ஒரு கும்பல், தெளிவாக ஏகாதிபத்திய கோட்பாட்டு ஆதரவுடன் களத்தில் முன்னுக்கு வந்துள்ளது. இதற்கு ஏகாதிபத்திய அனுசரனை உண்டு.
ஏகாதிபத்தியம் புலிகள் மீதான நெருக்குவாரம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த புலியெதிர்ப்பு கும்பலின் பலமும் அதிகரிக்கும். இது இன்றைய எதார்த்தம். இந்த எதார்த்தம் புலிக்கு தலையசைக்கும் ஒரு பெரிய கும்பல் எப்படி உருவாகி ஆட்டம் போடுகின்றதோ, அப்படி இந்தக் கும்பலுக்கு பின்னாலும் தடை மீதான கடும் போக்கையொட்டி வளர்ச்சியுறுகின்றது. பெரும்பான்மை சமூகம் இந்த இரண்டு போக்கிலும் அங்குமிங்குமாக நிற்பதன் மூலம், மக்கள் விரோதப்போக்கு பலமான ஒன்றாக வளர்ச்சியுறுகின்றது. மக்கள் பற்றி இந்த இரண்டு போக்கும், எதிர்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.
இதன் விளைவை எப்படி நாம் புரிந்து கொள்வது
உண்மையில் தமிழ் பேசும் மக்களின் அவலமான சமூக வாழ்வு இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்றது.
1.சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, பாசிசத்தை தனது சொந்த பேரினவாத நடத்தைய+டாக மொத்த தமிழ் மக்கள் மீது ஏவுகின்றது. தமிழன் என்ற ஒரு காரணமே, அடக்கியொடுக்க போதுமான அடிப்படைக் காரணமாக உள்ளது. இதை இன்று புலிகளின் பெயரில் பேரினவாதம் செய்கின்றது. புலிகளின் பாசித்தின் பின்னால் தன்னையும் தனது பாசித்தையும் மறைத்துக் கொள்கின்றது. புலிகளின் பாசித்தைக் கொண்டு, தமிழ் மக்களைப் பிளந்து பெரும்பகுதியை செயலற்ற நிலைக்குள் நடுநிலைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலிகளின் பாசிசத்துடன் ஓப்பிடும் போது, பேரினவாதத்தை மென்மையான ஒன்றாக காட்டுகின்றது.
இது அரசியல் குழப்பத்தை, எதிரி பற்றிய தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. இலங்கையில் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாக உள்ள நிலையில், பிரதான எதிரி தொடர்ந்தும் அரசாகவே உள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மக்கள் சார்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில், சமூக முரண்பாடுகள் உள்ளது. இந்த அரசியல் அடிப்படையில் புலிகளும் கூட போராடுவதில்லை என்பதே, புலிகள் பாசிசத்தினை சார்ந்திருக்கும் அரசியல் உள்ளடக்கமாகும். பிரதான எதிரியான அரசை, சொந்த மக்களைச் சார்ந்து நிற்காது ஒரு நாளும் வெற்றி கொள்ளமுடியாது. இந்த பேரினவாத மக்கள் விரோத அரசை, ஏகாதிபத்தியமே கட்டமைத்து பாதுகாக்கின்றது. இந்தப் புரிதலின்றி மக்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் ஜனநாயகத்தைக் கூட யாராலும் மீட்க முடியாது.
2.இனமுரண்பாட்டின் அடிப்படையில் உருவான போராட்டம் குறுந்தேசியமாகி, இறுதியாக பாசிசமாகி மாபியாத்தனமாகவும் பரிணமித்து நிற்கின்றது. மாபியாத்தனத்தை ஆணையில் கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்டு கொலை கொள்ளை சூறையாடலே புலித் தேசியமாகிவிட்டது. இதை அவர்கள் அமுல்படுத்தவும், இதற்கு ஆதரவு தளத்தை பெறவும் அரசை எதிர்க்கின்றனர். இங்கு எதிர்ப்பு என்பது, அரசின் அரசியலையல்ல. அரசின் சில நடத்தைகளையே எதிர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக இராணுவ நடத்தைகளையே எதிர்க்கின்றனர். இதன் மூலம் தனது சொந்த பாசிச சூழலை தக்கவைக்கின்றனர்.
இந்த இரண்டு போக்கும் மக்களுக்கு எதிராக நடைமுறையில் செயல்படுகின்றது. இதை சுயாதீனமாக எதிர்கொள்ள, மக்கள் நடைமுறை சார்ந்த வழியின்றி செயலற்ற அசமந்தப் போக்கு, இதை எதிர்கொள்ளும் வழி தொடர்பாகவே நமது குழப்பத்தை அதிகரிக்கவைக்கின்றது. எம்மை மீறிய ஒவ்வொரு நிகழ்வின் போதும், இது பாரிய அரசியல் குழப்பத்தை தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. நாம் எமது சொந்த நிலை மீது தடுமாறுகின்ற போது, அரசியல் குழப்பமும் முரண்பாடுகளும் சதா உருவாகின்றது. இதற்கு எமது நடைமுறை ரீதியான தெளிவான செயற்பாட்டு அடிப்படையின்மை ஒரு முக்கியமான காரணமாகிவிடுகின்றது. இது கோட்பாட்டு ரீதியான தடுமாற்றத்தை உருவாக்குகின்றது.
நாம் ஒவ்வொரு விடையத்தையும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் இருந்து புரிந்துகொள்வது அவசியம். மக்கள் நலன் என்பது பற்றிய குழப்பம் அவசியமற்றது. மக்களுக்கு வெளியில் எந்தத் தீர்வும், மக்களுக்கு எதிரானது என்பதில் உள்ள புரிதல் முதலில் அவசியமானது. மக்கள் செயலாற்றாத அனைத்தும் மக்களுக்கு எதிரான பாசிசமாகவே மாறும். இது புலியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மக்கள் தமது சொந்த நடிவடிக்கை மூலம், தமது சொந்த நோக்கை நிறைவு செய்வதை உள்ளடக்கியதே, மக்கள் நலன் அடிப்படையிலான உள்ளடக்கமாகும். மக்களின் நலன் சார்ந்த உண்மைகளை, அவர்களின் வாழ்வு சார்ந்து, அதாவது அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு சார்ந்து இனம் காண்பது அவசியம். இதுவே ஒரு சமூக முன்னோடியின் அரசியல் கடமையுமாகும்.
மக்களுடன் தொடர்பற்ற எந்தச் செயற்பாடும் மக்களுக்கு எதிரானது. இது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி, புலிக்கு எதிராக இருந்தாலும் சரி பொதுவானதே. புலிகளின் போராட்டம் மக்கள் விரோதமானது என்பது, மக்களைச் சாராத புலிப் போராட்டத்தைக் குறிக்கின்றது. இது போல்தான் புலிக்கு எதிரான புலியெதிர்ப்புப் போராட்டம் கூட மக்களுக்கு எதிரானது. மக்களைச் சாராத ஒரு சதிக்குழு, ஏகாதிபத்திய துணையுடன் அரசு சார்பாக இயங்குகின்றது. மக்கள் சார்ந்த செயற்பாட்டை நிராகரிக்கும் புலிகள் மற்றும் புலியெதிர்ப்புக் கும்பல், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக பயன்படுத்துவதை மட்டும் சார்ந்து நிற்கின்றனர்.
மக்களின் சமூக பொருளாதார நலனில் இருந்து செயற்படுவதை, திட்டவட்டமாக மறுக்கின்றனர். எந்தச் செயற்பாடும் மக்களைச் சார்ந்த, அவர்களின் நலன் சார்ந்து இருக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தும் படுபிற்போக்கானது. மக்களுக்கு எதிரானது. புலித் தடையை எடுத்தால், தடை செய்தவன் சர்வதேச ரீதியாகவே மக்கள் விராதி. உலகளாவிய மக்கள் இந்த மக்கள் விரோதிக்கு எதிராக, உலகம் தழுவிய அளவில் நாள் தோறும் போராடுகின்றனர். ஆனால் எம்மில் ஒரு பகுதியினர் அதற்கு பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.
இந்த ஏகாதிபத்தியங்கள் சொந்த மக்களுக்கே எதிரானவர்கள். அதேபோல் மற்றைய நாடுகள் மீதான அதன் அணுகுமுறை, தனது நாட்டின் பொருளாதார நலனுடன் மட்டும் தொடர்புடையது. எப்போதும் எங்கும் தனது நலன் சார்ந்து, படுபிற்போக்காகவே ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் இயங்குகின்றது. இங்கு எந்த மக்கள் நலனும் இவர்களிடையே இருப்பதில்லை. தனது நலன் சார்ந்த உலகமயமாதல் போக்குக்கு இசைவாக, அதன் செயற்பாடுகள் படுபிற்போக்கான மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவை. புலித் தடையும் இப்படித் தான். ஆனால் தன்னை முற்போக்கு வேடமிட்டுக் காட்ட, புலிகளின் மக்கள் விரோத செயலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு தனது நோக்கையே மூடிமறைக்கின்றது.
புலித் தடைக்கு புலியெதிர்ப்பு அணி காரணமா?
புலிகள் கூட ஏகாதிபத்திய தன்மையை மூடிமறைத்தபடி, புலித்தடைக்கான காரணத்தை இட்டுக்கட்டி விடுகின்றனர். குறிப்பாக புலியெதிர்ப்பு அணியும், அரசின் பொய்பிரச்சாரமும் தான் புலித் தடைக்குக் காரணம் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதில் இதைவிட யாரும் விசுவாசமாக வாலாட்டிச் செயற்பட முடியாது தான்.
புலியெதிhப்பு அணிக்கு பெருமை தான். ஆகாகா எம்மை பார், எமது செயலைப் பார் என்பது போல் புலியெதிர்ப்பு பிரசாரமுள்ளது. தடை ஏகாதிபத்திய தனத்தால் உருவானது, அதற்கான காரணத்தை புலிகளின் நடத்தைகளே உற்பத்தி செய்தன. இதை மறுத்து புலிகள் என்ன செய்கின்றனர்.
1.ஏகாதிபத்தியத் தன்மையையும், அதன் உலகளாவிய மக்கள் விரோதப் போக்கையும் புலிகள் மூடிமறைக்கின்றனர்.
2.தமது தடைக்கு காரணமாக கூறப்பட்ட மக்கள் விரோதத் தன்மையை மூடிமறைக்கின்றனர்.
இதன் மூலம் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்றனர். தமது மக்கள் விரோத நடத்தைகளையும் தொடருகின்றனர். மறுபக்கத்தில் தடையை புலியெதிர்ப்பின் செயற்பாடுகளே காரணம் என்று காட்டமுனைகின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்தியத்தை அப்பாவிகளாகவும், முட்டாளாகவும் தமக்குதாமே தனக்குள் நிறுவமுனைகின்றனர். ஒரு சில ஐந்தறிவற்ற முதிர் முட்டாள்களின் புலியெதிர்ப்புக்கு, உலகமே முடிவு எடுக்குமளவுக்கு தாழ்ந்து விட்டதாக காட்டுவது புலியின் மக்கள் விரோத அரசியலுக்கு அவசியமாகிவிடுகின்றது. இவர்கள் செய்வது மக்களை படுமுட்டாளாக்குவது தான்.
தடைபற்றிய காரணத்தை மக்கள் சிந்திக்கவிடாது, அவர்களை மந்தைக் கூட்டமாக மேய்ப்பதற்காக, இப்படி எதிரி பற்றி மலிவான பிரச்சாரம் மூலம், எதிரியைத் திடட்மிட்டு பாதுகாக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது உலகளாவிய அனைத்து மக்களுக்கும் எதிரானது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில், புலிக்கு எதிரான ஒரு சிலர் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் மக்களுக்கே துரோகம் செய்கின்றனர்.
புலித்தடையின் விளைவு மொத்த மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது.
ஏகாதிபத்தியம் பற்றிய புரிதல் இன்றி அதுவே ஏகாதிபத்திய விசுவாசமாக மாறுகின்றது. ஏகாதிபத்தியத்தை ஒரு சிலர் திசை திருப்பிவிட்டதாக கருதி, ஏகாதிபத்தியத்தின் பின் மக்களை ஒடவைக்கின்றது. இது புலி தரப்பிலும், புலியெதிர்ப்பு தரப்பிலும் ஒருங்கே ஒரே புள்ளியில் நிகழ்கின்றது.
இதற்கு மற்றொரு பக்கம் உண்டு. புலித் தடை என்பது, தனிப்பட்ட புலியை மட்டும் குறிப்பாக தடை செய்யவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான உரிமையையும் மறுதலிக்கின்றது. சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கின்றது. இது சூக்குமமாகவே புலித்தடையின் பின் நடக்கின்ற ஒரு உண்மையாகும். தமிழ் தேசியம் என்பது வேறு, புலித் தேசியம் என்பது வேறு. இதை பலர் புரிந்து கொள்ளாத ஒன்றாக பார்க்கின்றனர். புலிகள் புலித் தேசியம் தான் தமிழ் தேசியம் என்கின்றனர், புலியெதிர்ப்பும் புலித் தேசியம் தான்தமிழ் தேசியம் என்கின்றனர். என்ன அரசியல் ஒற்றுமை. இந்த சூக்குமத்தை, இந்த மயக்கத்தை ஏகாதிபத்தியம் பயன்படுத்தி தமிழ் தேசியத்தை மறுக்கின்றது. இதையே பேரினவாதம் அனைத்தையும் புலிப்பிரச்சனையாக காட்டி, தமிழ் தேசியத்தை மறுக்கின்றது.
தமிழ் தேசியம் என்பது, அதாவது தேசியத்தின் உள்ளடகத்தில் அது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. அது தான் தேசியம். தேசியம் என்பது அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, சொந்த மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது. தமிழ்மக்களின் சொந்த பொருளாதார தேசியக் கொள்கையை ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது. இதையும் சேர்த்துத் தான் தடைசெய்துள்ளது.
ஆனால் புலித் தேசியத்தை அங்கீகரிக்கும். அதுதான் தடையின் பின்பும், கடுமையான நடிவடிக்கையின்றி புலியின் செயற்பாடுகளை பல்வேறு மாற்று வழிகளின் ஊடாக அனுமதிக்கின்றது. இதன் மூலம் புலிகளை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம், தமிழ் தேசியத்தை புலிகளின் வழியில் அழிப்பது ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக உள்ளது. தமிழ் மக்களின் தேசியத்துக்கு பதில், ஏகாதிபத்திய பொருளாதார அடிப்படையைக் கொண்ட புலித் தேசியத்தை அமுல்படுத்த, ஒரு அரசியல் கூட்டு இணக்கப்பாட்டை இலங்கை அரசுடன் ஏற்படுத்த ஏகாதிபத்தியம் முனைகின்றது. இதை நிர்ப்பந்திக்கவே மட்டுப்படுத்தப்பட்ட தடையும், புலிகள் மீதான நெகிழ்ச்சியான அணுகுமுறையை ஏகாதிபத்தியம் கையாளுகின்றது.
உண்மையில் புலித்தடை என்பது தமிழ்பேசும் மக்களின் உண்மையான தேசியம் மீதே ஒழிய, புலித் தேசியம் மீதல்ல. அதாவது புலியின் தேசியம் சார்ந்த அரசியல் அல்ல, தமிழ் தேசிய அரசியல் தான் புலியின் பெயரில் தடைக்குள்ளாகியுள்ளது. புலித்தேசியம் ஏகாதிபத்திய நலனுடன் பின்னிப்பிணைந்து கைக்கூலியாக செயற்படத் தயாரான ஒன்றாகும். இதனுடன் ஏகாதிபத்தியம் சமரசம் செய்வதை அனுமதிக்கின்றதே ஒழிய உண்மையான தேசியத்தின் பால் அல்ல. இது மிகவும் நுட்பமான சூக்குமானது. இதனால் தான் புலித் தடையை புலிகள், ஒரு சிலரின் தனிப்பட்ட நடவடிக்கையாக காட்டுகின்றனர்.
மறுபக்கத்தில் புலித் தடை ஊடாக புலியையும், அதன் அரசியலையம் தடை செய்யவில்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த, மக்கள் அரசியலையே தடை செய்கின்றது. இந்தத் தடை மூலம், புலியுடன் இணக்கப்பாட்டை உருவாக்கி, தமிழ்தேசியத்தை இல்லாதாக்க முனைகின்றது. மக்கள் நலன் எதையும் ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது, அனுமதிக்காது.
புலித் தடையை எதிர்கொள்வது எப்படி
தடைபற்றிய புரிதலுக்கு அப்பால், இதற்கு சார்பாகவோ, புலி தடைக்கு எதிராக புலிக்கு ஆதரவாகவே செயல்படமுடியாது. மாறாக புலித் தடையின் பெயரில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை எதிhத்துப் போராட வேண்டும். மிக நுட்பமாக இரண்டு கூறிலும் உள்ள மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி, தனித்துவமாக மக்கள் நலனை முதன்மைப்படுத்தி போராடவேண்டும் தடைக்கான காரணத்தை இரண்டு தரப்பும் எப்படி மூடிமறைக்கின்றது என்பதை அம்பலப்படுத்தி, அவர்களின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.
1.புலித்தடையை ஆதரிப்பவர்களின் ஒரு பகுதி, புலிகளால் பாதிகப்பட்டவர்கள் அல்லது புலிகளால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுபவர்கள். இவர்களை தனித்துவமாக பிரித்து அதை அணுக வேண்டியுள்ளது. இப்படி கூறி தடையை ஆதரிப்பவர்களின் வாதத்தின் பின் உள்ள உள்ளடகத்தை கவனமாக தெளிவாக பிரித்து, அதை அம்பலப்படுத்த வேண்டும். குறித்த நாடுகளின் சட்ட எல்லைக்குள் புலியின் பாதிப்பை எதிர்கொள்ள முனைவது தவறானதல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புலிகளால் ஏற்படும் நேரடி பாதிப்பை, அந்த நாட்டின் சட்ட எல்லைக்குள் அணுகுவது சரியானது. ஆனால் அதை இலங்கை அரசியலுக்குள் பொருத்தி, அதை விரிவுபடுத்தி மக்களை சாராது நிற்பதை தெளிவாக அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் அணுகுமுறையில் சொந்த மக்களையும், குறிப்பாக அந்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் சார்ந்து நிற்பது தவறல்ல. அதை விடுத்து அரசுடன், அதன் வன்முறை அமைப்பான பொலிசுடன் அல்லது இரகசிய புலனாய்வு அமைப்புடன் செயற்படுவது அம்பலப்படுத்த வேண்டும். மக்களைச் சாராது, இலங்கை அரசியலில் செயற்படுவது படுபிற்போக்கான மனிதவிரோத செயற்பாடாகும். தமிழ் மக்களின் தேசியத்தை அங்கீகரித்து போராடாத வரை, அந்த அரசியல் மக்கள் விரோதமானவை.
2.புலித் தடையை புலிசார்பு நிலையில் நின்று எதிர்த்தல் என்பது தவறானது. புலிகள் மக்கள் சார்ந்த மக்கள் இயக்கமல்ல. மக்களை அடிமைப்படுத்தி, அவர்கள் மீது மாபியாத்தனத்தையும் பாசிசத்தை கட்டமைக்கும் நிலையில் அதை ஆதரிக்க முடியாது. தடைக்கான காரணத்தை ஏகாதிபத்தியத்துக்கு புலிகளின் நடத்தைகளே வாரி வழங்குகின்றது. தடைக்கான காரணத்தை புலிகளை நீக்கக் கோரியும், அதாவது மக்கள் விரோத நடத்தைகளை ஒழிக்க கோருவதன் மூலம், தடைக்கு எதிரான போராட்டத்தை நடத்த மக்களைச் சார்ந்திருக்க கோருவது அவசியம். மக்களுக்கு ஜனநாயகம் அவசியமான நிபந்தனையாகும். இதை மறுக்கின்ற புலிகளுடன், புலித்தடைக்கு எதிராக இணைந்து நிற்க முடியாது. தனித்துவமான வழியில் தனித்து போராடவேண்டும். அதே நேரம் ஏகாதிபத்திய தடைக்கான உண்மைக் காரணத்தை, புலிகள் திட்டமிட்டு மூடிமறைப்பதை அம்பலப்படுத்த வேண்டும். இந்நிலையில்
1.ஏகாதிபத்தியத் தடையை புரிந்து அதை எதிர்க்க வேண்டும்.
2.தேசியத்தை முன்னிலைப்படுத்தி தடையை அம்பலப்படுத்தி போராட வேண்டும்.
3.ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, ஏகாதிபத்திய தடையை எதிர்த்துப் போராடவேண்டும்.
4.தடையை எதிர்த்து மக்களைச் சார்ந்து நிற்றல் வேண்டும். இதுவல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தவேண்டும். மக்கள் என்கின்ற போது சொந்த மக்களையும், குறித்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் முழுமையாக சார்ந்து நிற்கவேண்டும்.
5.ஜனநாயகம் தேசியம் இரண்டும் மையமான கோசமாக வேண்டும். இந்த இரண்டையும் புலியும், புலியெதிர்ப்பும் மக்களுக்கு மறுக்கின்றது. இதன் மூலம் இதற்கு எதிரானவர்களை தனிமைப்படுத்தி, தனித்துவமாக போராடவேண்டும்.
6.தடையை தனித்துவமாக இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தி பார்க்கும் குறுகிய அரசியலை மறுத்து, சர்வதேச நிகழ்ச்சிப் போக்குடன் அனைத்தையும் பொருத்திப் பார்க்கவேண்டும்.
7.இலங்கை அரசு பாசிசத்தை, அதன் இனவிரோத அழித்தொழிப்பு அரசியலையும் அம்பலப்படுத்துவது அனைத்துக்குமான அரசியல் முன்நிபந்தனையாகும். புலியை தடை செய்ய கூறிய அதே காரணத்துக்கு நிகரானதாக அரசும் செயற்படுகின்றது என்பதை அம்பலப்படுத்தி அதை தடை செய்யாத ஏகாதிபத்தியதனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
8. இலங்கையின் பிரதான எதிரி அரசே ஓழிய புலிகள் அல்ல. புலிகள் இரண்டாவது எதிரி என்பதை தெளிவுபடுத்தி போராடவேண்டும்.
இப்படி விரிந்த அரசியல் தளத்தில் மக்கள் எதிரிகளை இனம் காணும் வகையில் இத்தடையின் நோக்கத்தை இனம் காட்டிப் போராடவேண்டும். இதைவிடுத்து இதற்குள் குறுகி, ஒன்றுக்குள் பகுதியாக முடங்குவது தவறானது. மயக்கமும், குழப்பமுமின்றி விடையத்தை சூக்குமமாக்காது வெளிப்படையாக தெளிவுபடுத்தும் வகையில், கோசங்கள் செயற்பாடுகள் முழுமையானதாக செயலூக்கமுள்ளதாக இருக்கவேண்டும்.