06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்

இலங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர்.

 மார்க்சியவாதிகளைத் தவிர இந்த அரசியல் நிலையை யாரும் எதிர்வுகூறவில்லை. இதற்கு வெளியில் யாரும் இப்படி நடக்கும் என்று, கற்பனை பண்ணியது கூட கிடையாது. புலியின் சொந்த அழிவில் பிற்போக்கு புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலிக்கு நிகராகவே அதே அரசியலுடன் பவனிவருகின்றனர். இந்த புலியெதிர்ப்பு பிற்போக்கு கும்பல்கள், ஏகாதிபத்திய கால் தூசுகளை நக்குவதாலே வயிறுமுட்டி வீங்கிநிற்கின்றன. இந்தக் கும்பலுக்கு துணையான பேரினவாத சக்திகள், ஏதோ தம்மால் தான், தமது அரசியல் போராட்டத்தால் தான் புலியின் அழிவு நடப்பதாக காட்டமுனைகின்றனர். மொத்தத்தில் புலியின் அழிவு, புலியல்லாத தரப்பின் பிற்போக்கு அரசியலால் தான் நிகழ்வதாகவே காட்டுகின்ற போக்கு எங்கும் எதிலும் தலைகாட்டுகின்றது. ஆனால் புலியின் அழிவு புலியின் சொந்த பிற்போக்கு அரசியலால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுவே உண்மை.

 

இந்த புலி அழிவு நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பல மாறுதலுக்கு உள்ளாகுகின்றது. புலியின் அழிவை வேகப்படுத்தக்கூடிய வகையில், திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை மறுபுறம் சண்டை. இதில் எந்தக் தேர்வும் புலியின் அழிவை மையப்படுத்தி நிற்கின்றது. இதற்கப்பால் மூச்சுவிடவே முடியாத வகையில் அன்றாடம் தொடர் கொலைகள். புலிகள் ஒன்று இரண்டு என்று தொடங்கியதை, ஏன் அதை நான்கு ஐந்தாகவே புலிகளின் பெயரில் நடத்துவோம் என்று பேரினவாதமும் சேர்ந்து நடத்துகின்றது. கடத்தல்கள் காணாமல் போதல் என்று மனித அவலம் தொடருகின்றது. எல்லாம் இனம் தெரியாத நபர்களின் கொலைகள், கடத்தல்கள் என்றாகி விட்டது. மக்கள்படை முதல் எல்லாளன படை வரை காணாமல் போய்விட்டது. ரயர் எரிப்பு முதல் தடி பொல்லுகளுடன் திரிந்த காடையர்களின் அடாவடித்தனங்கள் எல்லாம் நின்று போய்விட்டது. கலாச்சாரம் பேசி பொல்லுகளுடன் திருத்தித் திரிந்த அராஜகக் கும்பல், எங்கு போனார்கள் என்று தெரியாது போய்விட்டனர். இப்படி மொத்தத்தில் அரசியல் அனாதைகளான புலியின் செயல்பாடு, எங்கும் எதிலும் சாவடிக்கப்படுகின்ற நிலை தொடருகின்றது.

 

இந்த நிலையில் மனிதவுரிமை என்றால் என்னவென்று எதுவும் தெரியாத பிழைப்புவாத துரோகக் கும்பல்கள், இதை தீர்ப்பதாக கூறிக்கொண்டு பலர் உலகமெங்கும் அடிக்கடி விமானம் ஏறிப் பறக்கின்றனர். ஏகாதிபத்தியம் கூறுவதுதான், இவர்களின் மனிதவுரிமை பற்றிய எல்லைக்கோடு. ஏகாதிபத்திய அகராதியை புரட்டிக்கொண்டும், தலைமாட்டுக்குள் அதை செருகி வைத்தபடி, விமானங்களில் உயரப் பறக்கின்றனர். உலகின் பல பாகத்தில் தமது மக்கள் விரோத நிலையை தக்கவைக்க கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்கள், ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகள். இப்படி எங்கும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே புலிகளின் பெயரில் எப்படி மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையிடுவது, சூறையாடுவது, சுரண்டுவது என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நின்று விசுவாசமாக குலைக்கின்றனர். இதற்கு வெளியில் புலியெதிர்ப்பு பேசும் எந்த நாய்களும், சுயமாக குலைக்கவில்லை. ஏகாதிபத்திய காலை நக்கியபடி தான், விசுவாசமாகவே வாலையாட்டிக் கொண்டு குலைக்கின்றனர்.

 

அன்றாடம் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?

 

வழமையான நிலைமைக்கு தலைகீழாகவே இன்று நிலைமை காணப்படுகின்றது. புலிகளுக்கு பதில் பேரினவாத அரசே, கடந்த இரண்டு மாதமாக வலிந்த ஒருதலைப்பட்சமாக முன்னேறிய ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். இது கடந்தகால நிலைமைகள் எல்லாவற்றையும் விட, புதியதொரு நிலைமையாகும். வழமையாக புலிகள் தான் ஒருதலைபட்சமாக இப்படி செய்பவர்கள்.

 

ஆனால் புலிகளுக்கு எதிரான கடும் கண்டனங்கள் விமர்சனங்கள் போல் அல்லாது அரசின் இந்த தாக்குதல்கள் அங்கீகாரம் பெற்று நிற்பதும், மறைமுகமாக அவைகளை ஊக்கப்படுத்தி நிற்பதும் பொதுவான போக்காகவுள்ளது. புலிகள் தனிமைப்பட்ட நிலையில், இந்த நிலைமையைச் சொன்னாலே நம்ப மறுக்கின்ற நிலைமைக்குள், அவர்கள் எல்லாத் தளத்திலும் சீரழிந்து நம்பகத்தன்மையற்றவராக காணப்படுகின்றனர். உண்மையையும் பொய்யையும் திரித்து, அதை ஊடகவியல் விபச்சாரம் மூலம் விபச்சாரம் செய்வதன் மூலம், தம்மைத்தாம் அம்மணமாக்கி நிற்கின்றனர்.

 

பேரினவாத சிங்கள அரசு புலிக்கு எதிராக முன்னேறிய வலிந்த தாக்குதலை இன்று அதிகப்படுத்தியுள்ளது. இது அம்பலமாகாது, எதிர்மறையில் புலிகள் மீதே இது குற்றம் சாட்டுவதாக அமைந்துவிட்டது. இதற்கான முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். இது நரி வருது நரி வருது என்ற கதை போல், உண்மையில் நரி வந்த போது அதை யாரும் நம்புவதில்லை. நரி துணிவாக அடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைiயை தான் இன்று புலிகள் சந்திக்கின்றனர்.

 

கடந்தகாலத்தில் எல்லா அமைதி முயற்சியையும் யுத்த முனைப்பு மூலம் சிதைப்பதிலும், எல்லாவிதமான குழப்பதையும் புலிகளே முன்முயற்சியெடுத்து நடத்தினர். ஆனால் அதை அரசின் மீது, ஒரு தலைப்பட்சமாக குற்றம் சாட்டினர். இதை உலகம் ஏற்றுக்கொண்டது கிடையாது. புலிகளின் வால்களும், அதன் பின் தின்று கொழுக்கும் நக்கித் தின்னும் கும்பலும் மட்டுமே, அதை தமது பிழைப்புக்காக மட்டும் ஓப்புவித்தனர். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அதுவும் பொய்யென்று. உண்மையான விசுவாசத்துடனோ, உண்மையான கோட்பாட்டு அடிப்படையோ இன்றி வீம்புக்கே ஒருதலைபட்சமாக ஊளையிட்டனர்.

 

இப்படி புலிகளின் கடந்தகாலம் அம்பலமாகி நிற்கின்ற ஒரு நிலையில், வழமை போல் இம்முறையும் புலிகளே ஒருதலைப்பட்சமாக வலிந்து தாக்கத் தொடங்கினார். அரசியல் பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகள், அதை ஒருதலைப்பட்சமான வலிந்த இராணுவ அரங்கில் வெல்ல நினைத்தனர். கடந்த புலிகளின் 'மாவீரர்"தின உரையைத் தொடர்ந்து, புலிகள் ஒரு தலைப்பட்சமாக இராணுவத்தை தாக்கத் தொடங்கினர். மக்கள் படை என்ற பெயரிலும், மக்களே அதைச் செய்கின்றனர் என்றும் கூறினர். புலிகள் கூற்றை உலகம் மீண்டும் நம்பியது கிடையாது. ஏன் அவர்களே அதை நம்பியது கிடையாது. உலகில் யார் நம்பினார்கள் என்றால் ஒருவருமில்லை.

 

இதன் விளைவு என்ன? மாவீரர் தின உரையின் பின்பாக அண்ணளவாக இராணுவத் தரப்பில் 1000 பேர் கொலலப்பட்டனர். இதேயளவு எண்ணிக்கையில் புலிகளும் கொல்லப்பட்டனர். இதே அளவுக்கு மக்களின் அவலமும், காணாமல் போதல் என்று மற்றொரு பக்க அழிவும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. மாவீரர்தின உரையும், அதைத் தொடர்ந்து அதிகளவில் இராணுவம் இறந்தனர். ஆனால் இன்று அதிகளவில் புலிகள் இறக்கின்ற எதிர்மறை போக்கு, நிலமையை தலைகீழாக்கியது. இரண்டு இராணுவங்கள் என்ற வகையில், ஒன்று மற்றொன்றின் மீதான தாக்குதலை நடத்துவது அல்லது அழிவுகளை ஏற்படுத்து என்பது ஒருதலைப்பட்சமாக ஒரு பகுதியினருக்கு சொந்தமானதாக மட்டும் அமையாது. ஆனால் பொதுவான மொத்த அரசியல் இராணுவ நோக்கில் புலிகளின் தோல்வி என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

 

புலிகளின் அரசியல் தோல்வியைத் தொடர்ந்து இராணுவ தோல்விகள், இதில் இருந்து மீள மீண்டும் பேச்சுவார்த்தையை நோக்கி ஒடுகின்றனர். எங்கே என்று தெரியாத புள்ளியை நோக்கி அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர். என்னசெய்வது என்று தெரியாது, நோக்கே அற்ற நோக்கை கனவாக விதைக்கின்றனர். பிரச்சாரத்துக்காக சிலதை செய்து, அதை வெற்றியாக காட்டுகின்றனர். (உதாரணத்துக்கு 11.10.2006 முகமாலை தாக்குதல். இது புலிகளின் இராணுவ ரீதியான தொடாச்சியான தோல்வியையும், அதன் அரசியல் உள்ளடகத்தையும் மறுதலித்துவிடாது.)

 

மாவீரர் தின உரையைத் தொடர்ந்து ஒரு வலிந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள், எல்லை மோதலை வலிந்து திணித்தனர். மாவிலாறு அணைக்கட்டை மூடியதும், பின்னால் முதூர் மீதான தாக்குதல் மூலம் வலிந்து ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்தினர். இந்தப் பின்னணியைத் தான் பேரினவாதம் பயன்படுத்திக்கொண்டு, புலிகளை அழிக்கத் தொடங்கினர். புலிகள் வலிந்து தாக்குகின்றார்கள் என்று கூறிக் கொண்டு, தானே தான் விரும்பிய இடத்தில் தாக்குகின்ற நிலைக்கு முன்னேறியது. புலிகளின் வழமையான செயல் வடிவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு தாக்குகின்றனர். வலிந்து புலிகளின் எல்லைகளை தாக்கி, புலிப் பகுதிகளை பிடிக்கின்றனர் அல்லது பெருமளவில் புலிகளை அழிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கூடிய உளவியல் பலத்தை புலிகள் இழந்துவிட்ட நிலையில், திடீர் அதிரடித் தாக்குதல் மூலம் மிதக்க முனைகின்றனர்.

 

இந்த நிலையில் புலிகளினுள் சல்லரித்துப் போன உணர்வுகள், போராட்டத்தின் நின்று பிடிக்கும் அனைத்து மனவாற்றலையும் இழந்து நிற்கின்றனர். நான் முன்பு குறிப்பிட்டது போல் ('அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?") உளவியல் ரீதியாக, போராடும் தார்மிக பலத்தை புலி உறுப்பினர்கள் இழந்து இழிந்து விட்டனர்.

 

இவைகள் புலிகளின் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளுக்கு வழிகாட்டுகின்றது. பெருமளவில் விட்டில் ப+ச்சியாக பலியாகின்றனர். வடக்குகிழக்கின் இராணுவ எல்லைகளில் புலிகளின் தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இதிலிருந்து மீள்வதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு சில வெற்றிகள் எப்போதும் மாற்று அல்ல. தோல்வி என்பது புலி உறுப்பினர்களின் மக்கள் விரோத உளவியலில், அவர்களின் இந்த இருப்பில் இருந்தே தோன்றுகின்றது.

 

இந்த தோல்வி மனப்பான்மையை பேரினவாதம் பயன்படுத்தி, வலிந்த ஒரு முன்னேறிய ஒருதலைப்பட்சமான தாக்குதலை நடத்துகின்றனர். இன்றைய 90 சதவீதமான தாக்குதல்களை பேரினவாதமே நடத்துகின்றது. மணலாறு சம்பவத்துக்கு முன்னம் 90 சதவீதமான தாக்குதலை புலிகளே நடாத்தினர். ஆனால் இன்று புலிகள் வலிந்து தாக்குவதாக கூறிக்கொண்டு, இதை இராணுவம் செய்கின்றனர். புலிகள் தான் இன்றும் வலிந்து தாக்குவதாகவும், இதை உண்மையானதாகவும் உலகுக்கு காட்டிவிடுகின்றனர். புலிகளின் கடந்த செயல்பாடுகளும், அதை மறுத்துவந்த ஒருதலைப்பட்சமான பொய், இன்று அதுவே அவர்களுக்கு எதிராகவே மாறி நிற்கின்றது.

 

அரசியல் தோவ்வியும் அதைத் தொடர்ந்த இராணுவ தோல்வியும், புலிகளை மீண்டும் பேச்சவார்த்தைக்கு செல்ல வைக்கின்றது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் மூலம், இதில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையை நோக்கி வலிந்து ஒடுகின்றனர். பேரினவாதம் இதை மேலும் நுட்பமாகவே கையாள முனைகின்றது. ஒருபுறம் பேச்சுவார்த்தை மறுபுறம் தாக்குதல் என்ற உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது. இதையே முன்பு புலிகள் கையாண்டனர். இன்று இதை அரசு கையாளுகின்றது.

 

குறிப்பாக பேரினவாதிகளின் உடனடி நோக்கம் கிழக்கை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவிப்பதே. இதை தடுக்கத் தான் புலிகள் வடக்கில் வலிந்து மோத முனைகின்றனர். புலிகள் கிழக்கில் நிலைகொள்ள பேச முனைகின்றனர். கிழக்கை மீட்கும் பேரினவாத முயற்சி முழுமையாக உடனடியாக சாத்திமில்லை என்றால், புலிகளை அழித்தொழித்து ஒரு பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும் வகையில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் கருணா தரப்பை புலிகளின் பிரதேசத்தில் ஆழ ஊடுருவி, புலிகளின் செயல்பாட்டை முடக்கிவிட முனைகின்றது. இதில் படிப்படியாக பேரினவாதம் வெற்றி பெற்று வருகின்றது.

 

கிழக்கில் புலிகளின் பலத்தை சிதைக்கும் வகையில், புலிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பயன்படுத்தியது. தமிழ் மக்களின் வாழ்விடங்களை அழித்தொழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதியாக்கி, அவர்களை தமிழ் மக்கள் வாழும் மற்றொரு செறிந்த பிரதேசத்துக்குள் அனாதைகளாக தள்ளிவிடுவதை செய்கின்றது. இதன் மூலம் மூன்று இனவாத இலாபத்தை பேரினவாதம் அறுவடை செய்கின்றது.

 

1. குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறையில் இருந்து நிரந்தரமாகவே தமிழ் மக்களின் குடியிருப்பை அகற்றி, அதை துப்பரவு செய்கின்றது. அதாவது அப் பிரதேசத்தை தமிழ் மக்களின் வாழ்விடம் அற்ற ஒரு சூனிய பிரதேசமாக்கி அதை பேரினவாதம் திட்டமிட்டு அபகரிக்கின்றது.

 

2. இரண்டாவதாக இதன் மூலம் புலிகளின் இருப்புக்கான சமூக கட்டுமானத்தை இல்லாததாக்கி, அப்பிரதேசத்தை புலியிடமிருந்து விடுவிக்கின்றது.

 

3. அகதியாகிய மக்கள் நாளை மீளவும் குடியேறாத வண்ணம், அவ் அகதிகளை பராமரிப்பதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளது. மக்களைப் பஞ்சை பரதேசிகளாக வீதி வீதியாக அலையவிட்டு, ஒரு சமூகமாக கூடி வாழும் சமூக அடிப்படையையே திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. அகதியாகக் கூட கூடி ஒரு சமூகமாக வாழக் கூடாது என்ற நாசிய உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் அவ் அகதிகள் எதிர்காலத்தில் சொந்த மண்ணுக்கு மீளத் திரும்புவதை இல்லாததாக்குகின்றது.

 

அனைத்தும் புலிகளின் வக்கிரமான இராணுவ அரசியல் வக்கிரத்தின் மூலம் பேரினவாதம் வெற்றிகரமாக இலாபம் சாதிக்கின்றது. அகதியாகும் மக்களுக்கு கோடிகோடியாக சேர்த்த பணத்திலிருந்து ஒரு துளிதன்னும் போய் சேர்ந்துவிடுவதில்லை. அதுவும் கிழக்கு என்றால், நாம் அதைச் சொல்லத் தேவையில்லை. தமிழ் மக்கள் தமது சமூக இருப்பையே இழந்து, நாயிலும் கீழாக கேவலமாக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்தும் உணர்வு எம் சமூகத்திடம் கிடையவே கிடையாது. இதுவே கிழக்கின் இன்றைய நிலை.

 

பேரினவாதத்துடன் கூடிக்குலாவி விபச்சாரம் செய்யும் கருணா என்ற பாசிச புலிக் கும்பல்

 

இந்த நிலையில் தனிமனித முரண்பாட்டுக்குள், தமது மக்கள் விரோத அரசியலுக்குள் புலிகள், கருணா என இரண்டு தரப்பும், பாய் விரித்து விபச்சாரம் செய்கின்றனர். இரண்டுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. மக்களை இழிவாக கருதும் இரு கும்பலும், மக்களை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் மக்கள் விரோத ஓட்டுண்ணிகள் தான்.

 

இவை எல்லாமே வெட்டவெளிச்சமாகவே அம்பலமாகின்றது. திடீர் ஜனநாயகம் பேசிய கருணா, புலிகள் போன்ற மற்றொரு புலிக்கு நிகரான கொலைகாரக் கும்பல்தான். பேரினவாதத்தின் கைக்கூலிக் கும்பலாக, இந்தியாவின் எடுபிடிகளாகி அவர்களால் வளர்க்கப்படுகின்றனர். இதை அவர்களே தமது சொந்த உளறல்கள் மூலம் அம்பலமாக்கிவிடுகின்றனர். அண்மைய வாகரை மீதான தாக்குதலில் இரண்டு தரப்பும், நாம் தான் தாக்கினோம் என்று ஒரே பிணத்தை காட்டி இருவரும் தாக்குதலை உரிமை கோரிய போதும், அவர்கள் மீளவும் ஒருமுறை அம்பலமாகினார்கள். இரண்டு தரப்பும் தாங்களே அனைத்தும் என்ற போது, கடந்தகாலத்தில் நாம் சொன்னவை மீளவும் உறுதியாகியுள்ளது.

 

கிழக்கு மக்கள் என்று போலியாக நீலிக்கண்ணீர் வடித்து புலம்பும் புலியெதிர்ப்பு பாசிசக் கும்பல்களும் சரி, கொலைகளுக்கு எதிராக தாம் குரல் கொடுப்பதாக கூறும் புலியெதிர்ப்புக் கும்பலும் சரி, கருணாவை தலைக்கு மேல் உயர்த்தி கிழக்கின் விடிவெள்ளியாக காட்டியவர்கள் எல்லோரும், கமுக்கமாகவே பதுங்கிக் கிடக்கின்றனர். நாங்கள் அன்று இந்த பாசிச மக்கள் விரோத கோமாளியை பற்றிச் சொன்னபோது, திமிரெடுத்தவர்கள், இன்று தமது பாசிச கையை பிசைந்தபடியே அதை ஒழிக்கின்றனர்.

 

புலிகளைப் போல் கிழக்கின் விடிவெள்ளியாக தம்மைத் தாம் மகுடம் சூட்டிய கருணா தரப்பும், அப்பட்டமான பாசிச கொலைக்காரக் கும்பல்தான். புலிகளைப் போல் சிறுவர்களை கடத்துவது முதல், கொலைகைள் செய்வது வரை, ஏன் மக்கள் வாழ்வை சூறையாடுவது வரை கைதேர்ந்த புலி வாரிசுகள் தான். கிழக்கில் நடக்கும் உதிரிக்கொலைகள் முதல் கொழும்பில் நடக்கும் கடத்தல்கள் கொலைகள் என எல்லாமே, கருணாதரப்பின் பங்கு எத்தனை சதவீதம் என்பதில் மட்டும் தான், அவர்கள் புலிகளுடன் முரண்படலாம். ஆனால் தொழில் ரீதியாக, அரசியல் ரீதியாக இருவருமே பாசிச மாபியாக் கும்பல்கள் தான்.

 

கிழக்கு மக்களுக்கு அவர்கள் காட்டும் விடிவு தான் என்ன? அவர்களின் வாழ்வுக்கு என்ன தீர்வைத்தான் வைக்கின்றனர். புலியைப் போன்று அதே அரசியல் மாபியாக் கும்பல் வாழ்வுக்கும், வழிக்கும் அப்பால் எதுவுமில்லை. இதை அவர்கள் அன்றாடம் நிறுவி வருகின்றனர். புலிகளை விட மேலதிக தகுதியாக, இலங்கை அரசின் கைக்கூலி கொலைகாரக் கும்பல் தான் தாங்கள் என்பதையும் நிறுவிவிட்டனர். இவர்களுக்கு ஓளிவட்டம் காட்டிய ரீ.பீ.சீ நரிக் கும்பல் முதல், புலியெதிர்ப்பு நாய்கள் வரை இதற்கு முழுப்பொறுப்பாகும். புலிக்கு மாற்று கருணா தரப்பு என்று எத்தனை ஆய்வுகள், அறிக்கைகள், கொள்கை விளக்கங்கள். அந்த கொலைகார நபர்களை முன்னிலைப்படுத்தி பேட்டிகளை ஒளிபரப்பியவர்கள், வெளியிட்டவர்கள், இந்த புலியெதிர்ப்பு பாசிச கும்பல்தான். இப்படி கேடுகெட்ட நாய்களாக குலைத்தவர்களின நாய் வேஷம் அம்பலமாகும் போது, வாலை சுருட்டி கமுக்கமாக குண்டிக்குள் செருகியபடி நரியாக ஊளையிடுகின்றனர்.

 

இப்படி கொலைகளும், கடத்தலும், கொள்ளையுமாக, ஒரு கூலிக் கும்பலாக இழிந்த மட்டக்களப்பு கருணா மைந்தர்கள், கிழக்குக்கு எப்படி எதை விடிவாக காட்டுவார்கள். புலிகளில் இருந்து எந்தவிதத்தில் எப்படி வேறுபடுகின்றனர். தம்மளவில் கூட வேறுபாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இதை நாங்கள் கடந்த காலத்தில் தெளிவாக கூறியவர்கள். இப்படி பல அரசியல் உண்மைகள் ஜனரஞ்சகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதவாழ்வு சார்ந்த உண்மை, அனத்தையும் நிர்வாணமாக்கிவிடுகின்றது. ஊடகவியலை புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் கைப்பற்றி வைத்துக் கொண்டு நடத்துகின்ற ஊடக வக்கிரத்தில், தமது பாசிச மக்கள் விரோத உண்மையை மூடிமறைக்கலாம். ஆனால் வரலாறு அப்படி அல்ல! உண்மை நடைமுறை சார்ந்த எல்லா பொய்களையும் அம்பலப்படுத்திவிடுகின்றது.

 

புலிகள் அல்லாத மக்கள் விரோத மாற்றுக் குழுக்கள் மீதான  ஏகாதிபத்திய திடீர் கருசனைகள்

 

இந்த நிலையில் மக்கள் விரோத பாசிச ஜனநாயகவாதிகள் மீதான ஏகாதிபத்திய அக்கறை அதிகரித்துள்ளது. இந்தியா இலங்கை அரசில் கைக்கூலிகளை தமிழ் மக்களின் மாற்றுக் கருத்தாக காட்டுகின்றதும், அவர்களுக்கு மகுடம் சூட்டுகின்றதுமான போக்கு அதிகரிக்கின்றது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள் என்று புலிகள் கூற, மறுபக்கத்தில் மாற்றுக்கருத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று இந்த கைக்கூலிக் கும்பல் ஓலமிடுகின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் இதன் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓடுகின்றது.

 

இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு கும்பலை தமது கைக்கூலிக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் சதி ஆலோசனைகளை பேச்சுவார்த்தையின் பெயரில் நடத்துகின்றனர். இந்த வகையில் பல சந்திப்புகள், அழைப்புகளையும், சர்வதேச கைக்கூலி விருதுகளையும் வழங்குகின்றனர். புலிகள் மீதான அழித்தொழிப்பை செய்கின்ற நிலை உருவாகும் பட்சத்தில், மாற்று புலியெதிர்ப்பு எடுபிடிகள் தயாராகவே உள்ளனர். அது டக்கிளஸ் தேவானந்தாவாகவும் இருக்கலாம், ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம், கருணாவாகவும் இருக்கலாம், வரதராஜப்பெருமாளாகவும் இருக்கலாம் அல்லது ரீ.பீ.சீ கும்பலாகவும் இருக்கலாம். எல்லோரும் தயாராகவே பையித்தியம் பிடித்த நிலையில் விசர் நாய்கள் போல், நாக்கைத் தொங்கவிட்டபடி அலைகின்றனர். அந்த வகையில் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை தொடர்ச்சியாக பெரும் தொகை செலவில் கையாளுகின்றனர். அவர்களை தமது தீவிரமான விசுவாசமான கைக்கூலியாக மாற்றுகின்ற அரசியல் தயாரிப்புக்குள் உள்ளகப்படுகின்றனர்.

 

இதை ஊக்கப்படுத்திய பணமுடிப்புகள் முதல் பலவகையான பொருளாதார இராணுவ உதவிகள் இக் குழுக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றது. புலிகளை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அதையும் செய்தபடி, மறுபக்க சீரழிவையும் புகுத்துகின்றனர். அவர் அவர் சொந்த வர்க்க அரசியலைப் பயன்படுத்தி, இந்த சீரழிவுக்கு ஏற்ற வகையில் காய் நகர்த்துவது துல்லியமாக இன்று அரங்கேறுகின்றது. சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைவரையும், புலியெதிர்ப்பில் பண்படுத்தி அதை ஊக்கப்படுத்துகின்றனர்.

 

இப்படி சொந்த மக்களை சார்ந்து நிற்காத அனைத்து அரசியலும் துரோகத்தனமானது. அதை மக்களுக்கு எதிராக முன்னெடுப்பவர்கள் அனைவரும், மக்களின் துரோகிகள் தான். இதற்கு மாற்று வழிகளை இந்த புலியெதிர்ப்பு பாசிச கைக்கூலிக் கும்பல் தரமுடியாது. புலியைச் சொல்லி ஒப்பாரி வைப்பதே, இவர்களின் பாசிச புலியெதிர்ப்பு அரசியலாகும்.

 

இம்மாதிரியான மக்கள் விரோத துரோகிகளையும், கைக்கூலிகளையும் ஒருங்கிணைத்த ஒரு புலியெதிர்ப்பு செயல்பாட்டை நோக்கி நகர்த்துவதில் ஏகாதிபத்தியம் முனைப்பாக உள்ளது. இதற்கான முன்முயற்சிக்கு இந்தியா தலைமை தாங்குகின்றது. புலியை ஒழிக்க இலங்கையின் பிரதான இரு பேரினவாத கட்சிகளை இணைத்தது போல், புலியெதிர்ப்புக் தமிழ் கும்பல்களை ஏகாதிபத்திய கைக் கூலி அரசியல் வரையறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதற்கு நேரெதிராக புலிகள் சாரைப் பாம்பினைப் போல் அடிக்க அடிக்க வலுவிழந்து துடித்தபடி ஊர்ந்து தப்பிவிட முனைகின்றது.

 

பேரினவாதிகளுக்கு இடையிலான பாசிசக் கூட்டு

 

புலியழிப்பில் முகிழ்ந்த இந்த பாசிக் கூட்டு, அவர்கள் தாமாக தேர்ந்து செய்து கொள்ளப்பட்டவையல்ல. இதற்கு ஏகாதிபத்தியம் துணை நிற்க, இந்தியா முன்னின்று இதை உருவாக்கியது. இதன் அரசியல் மூலம் புலிஅழிப்பும், புலியெதிர்ப்புமாகும். இந்த அரசியல் போக்கு பலமாகி வருகின்றது. இதற்கு பின்னணியில் ஏகாதிபத்திய அனுசரணையும், ஆலோசனையும், ஊக்கப்படுத்தலும், பலமான வழிகாட்டலும் வழங்கப்படுகின்றது.

 

புலி அழிப்பு, புலியெதிர்ப்பு பலமான ஸ்தாபன வடிவமும், கோட்பாட்டு அடிப்படையையும் பெற்று வரும் நிலையில், புலிகள் தரப்பு பலவீனமாகி வருகின்றது. புலிகள் என்றுமில்லாத அளவில் அம்பலமாகி வருகின்றனர். தார்மிக ஆதரவுகளை இழந்து வருகின்றனர். தூசணம் மட்டும் பேசக் கூடிய ஒரு லும்பன் கும்பலின் ஆதரவுடன், பிழைப்புவாத பொறுக்கிகளின் அனுசரணையுடன், மக்களின் உழைப்பை தட்டிப்பறித்து வாழ்கின்ற சமூக விரோதிகளின் துணையுடன் தங்கி வாழும் ஒரு மாபியாக் குழுவாகவே புலிகள் மாறிவிட்டனர்.

 

இந்த நிலையில் பேரினவாத சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ய+.என்.பிக்கும் இடையிலான கூட்டு சதி முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. பேரினவாத அரசு இயந்திரமும், அதற்கு துணையான பேரினவாத பிரதான எதிர்கட்சியும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களின் தலைவிதியை நசுக்கி ஏகாதிபத்தியத்துக்கு மேலும் சேவையாற்ற சங்கற்பம் பூண்டு நிற்கின்றனர்.

 

புலிகள் மீது என்றுமில்லாத ஒருமித்த தாக்குதலையும், அரசியல் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. புலிகளின் பாசிச மாபியாத்தனத்தின் மீது இந்த பாசிச பேரினவாத கூட்டணி செழிக்கவுள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலியை தனிமைப்படுத்தும் உத்தியை வேகமாக முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ஆதரவை முழுமையாக பெற்றுவிடவும், புலியை மேலும் அரசியல் ரீதியாக பிளந்தும், புலியல்லாத மற்றொரு குழு மூலம் தீர்வை அமுல்படுத்தி, புலியை சின்னாபின்னமாக்கி அழிக்கும் உத்தி நடைமுறைக்கு வரவுள்ளது. இதை நோக்கி இந்தக் கூட்டு முயற்சி அமைந்துள்ளது. புலிகளை அழித்தொழித்தலையே தனது வேலைத் திட்டமாக கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதையே உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை, அதன் உள்ளார்ந்த சாராம்சத்தை இல்லாதொழிக்கும் புலிகளின் பாசிச மாபியாத்தனத்துக்கு நிகராகவே, இந்தக் கூட்டும் நாட்டை ஏகாதிபத்தியத்திடமும் இந்தியாவிடமும் மறுகாலனியாக்கும் முயற்சியில் முக்கி முனைகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ள மறுகாலனிய அரசியல், தமிழ்மக்கள் மீது தாம் விரும்பிய ஒரு இனவாத தீர்வை திணிப்பதாகும். இதன் மூலம் ஏகாதிபத்திய ஆதரவுடன், தமிழ் மக்களின் உரிமையை புலிகளின் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்குவதே, இவர்களின் உள்ளாhந்த வேலைத்திட்டமாகவுள்ளது.

 

நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடல்

 

நோர்வேக்கும் புலிக்கும் உள்ள ஊடலே, அமைதி சமாதானத்தின் மற்றொரு தடைக்கல்லாகியுள்ளது. இது மக்களுக்கு எதிரானதாக, மக்களின் அவலத்தை கோருவதாக அமைந்துள்ளது. சரி நோர்வேக்கு சமாதானத்தில் என்ன தான் அக்கறை?

 

உண்மையின் உண்மையான அக்கறை வடகிழக்கின் வளங்கள் மீதானதே. ஓப்பந்தம் கையெழுத்தானவுடன் நான் எழுதிய கட்டுரையில், இதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருந்தேன். மன்னார் கடல் படுக்கையில் உள்ள எண்ணெய், புத்தளம் 25000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கைக்கு நோர்வே 40 கோடி ரூபாவை முதலிட்டது. இப்படி நோர்வே இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தான், சமாதான நாடகத்தை இலங்கையில் அரங்கேற்றியது. மற்றும் வள்ளம் கட்டுதல், கடல் சார்ந்த நோர்வே கழிவுகளை வடக்கில் கொண்டு வந்து கொட்டுதல், மீன்பிடி, உல்லாசத்துறை என்று மிகப்பெரிய கனவுடன் நோர்வே பாசிச ஆட்டம் போட்டது.

 

இப்படி வடக்கிழக்கைச் சுரண்ட, வடகிழக்கில் அதிகாரத்தை தக்கவைக்க முனையும் புலிகளுடன் ஊடல் செய்யத் தொடங்கினர். ஏகாதிபத்திய சதி மரபுக்கு இணங்க நோர்வே செயற்பட்டது. பணத்தைக் கொடுத்தும், ஆசைகாட்டியும் புலிகளை சிதைத்த அதே நேரத்தில், இணக்கமான ஒரு ஏகாதிபத்திய பாசிச அக்கறையுடன் ஊடல் செய்து, வடகிழக்கை தனது சுரண்டலுக்கு சாதகமான ஒரு புனித ப+மியாக்க முனைந்தனர். இக்காலத்தில் வடகிழக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பெருமளவு நிதியை வாரிவழங்கினர்.

 

நோர்வேயின் சமாதான முயற்சி இலங்கையையும், வடக்குகிழக்கில் அதிகமாக சுரண்டுவதையும் அடிப்படையாக கொண்டது. இது உண்மையான சமாதானத்துக்கு பதில், நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட சமாதான முயற்சியாக மாறியது. இதற்காக நோர்வே பிரதிநிதிகளும், சமாதான நடிகர்களும், அவர்கள் எடுபிடிகளும் அங்குமிங்குமாக பறந்து திரிந்த விமானச் செலவு மட்டும் பல நூறு கோடி பெறுமதியானது. உள்நோக்கம் கொண்ட சமாதான நடிகர்களின் நாடகங்கள், புலிகளுடன் இணக்கமான ஒரு பாசிச சமரசத்தை ஏற்படுத்தவே முனைந்தது. புலிகளின் துணையுடன் வடகிழக்கை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டு, எல்லாவிதமான மனித உரிமை மீறலுக்கும் செங்கம்பளம் விரித்தனர்.

 

புலிகளுக்கு அதிகளவிலான சலுகைகள், இலஞ்சங்கள் வழங்கியதுடன், மனித உரிமை மீறலுக்கு ஏற்ற ஓளியைப் பாய்ச்சினர். புலிகள் நோர்வேயின் துணையுடன் தொடர்ச்சியாக பெருமளவில் மனித உரிமை மீறலை செய்ததுடன் அதற்கு நோர்வேயின் வழித்துணையையும் பெற்றுக்கொண்டனர். புலிகளின் மனித உரிமை மீறலை திரித்து, அதை மூன்றாவது தரப்பே செய்வதாக வலிந்து கூறினர். இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறலுக்கு, நோர்வே புலிகளுக்கு துணை நின்றனர். அமைதி சமாதான காலத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் கொல்லப்பட்டனர்.

 

இப்படியான படுகொலைகள் முதல் எத்தனையோ சம்பவங்கள் மீது கருத்து சொல்ல மறுத்தனர். நோர்வேயும் கண்காணிப்புக் குழுவும் சேர்ந்து நடத்திய அப்பட்டான மனித உரிமை மீறல்கள் தான் இவை. அதற்கான முழுப்பொறுப்பும் அவர்களைச் சாரும். தங்கள் கடமையையே செய்ய மறுத்த இவர்கள், எப்போதும் கருத்துக் கூறும் போது இரண்டு பக்கத்தின் இரண்டு சம்பவத்தையும் சமப்படுத்தி, இரண்டையும் ஒன்றாக குற்றம் சாட்டும் (புலி) யுத்தியைக் கையாண்டனர். இப்படி மனித உரிமை மீறலுக்கு துணைபோனார்கள். சம்பவங்கள் மீது காலம் கடந்த நிலையில், அவை நீர்ந்துபோன ஒரு சூழலில், தமது சொந்த இழுபறி ஊடாக மக்களின் காதுகளில் ப+வைப்பதையே நோர்வே திட்டமிட்டு செய்தது, செய்து வருகின்றது. இப்படி மனித உரிமை மீறல்கள் அங்கீகாரம் பெறுகின்றது.

 

உண்மையில் நோர்வே வடக்கு கிழக்கில் புலிகளுடன் சேர்ந்து, சுரண்டலுக்கு ஒரு சாதகமான சூழலுக்காக மொத்த மக்களின் அவல வாழ்வின் மீது நோர்வே மிதக்கின்றது. இந்த நிலையில் நோர்வேயின் போக்கை அம்பலப்படுத்த முடியாத நிலையில், பேரினவாத அரசும் கூட மனிதவுரிமை மீறல் ஊடாக மிதந்து கிடந்தனர். பேரினவாத ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் நோர்வேயின் சுரண்டும் நலனை விமர்சிக்காது, புலிக்கு சாதகமான பக்கத்தை மட்டும் எதிர்த்தனர். இதன் மீது தமது பேரினவாத கூச்சலையிட்டனர், இடுகின்றனர்.

 

நோர்வே இந்தியாவை பின்தள்ளிவிட்டு ஒரு இணக்கப்பாட்டை நடத்துவதன் மூலம், அதிக சுரண்டலை நடத்தமுடியும் என்று கருதி செயற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் தலையீடு அதிகரித்துள்ள ஒரு நிலையில், நோர்வே சமாதானத்தின் பெயரில் நகர்த்தும் சுரண்டல் நலனை தகர்ப்பதில் இந்தியா குறிப்பாக காய்நகர்த்தி வருகின்றது. இந்த வகையில் மன்னார் எண்ணை வயல்களை சுரண்ட நோர்வே பெற இருந்த உரிமையை, இலங்கை ஊடாக இந்தியா அண்மையில் இரத்து செய்தது. இந்த சுரண்டல் ஒப்பந்தை கிழித்து எறிந்ததன் மூலம், இந்தியா நேரடியாகவே அந்த உரிமத்தைப் பெற்றுக்கொண்டது. அதேபோல் சீனாவும் அதன் மீதான உரிமத்தை பெற்றுக் கொண்டது. இந்த உரிமை மாற்றம் எந்தவிதமான வர்த்தக முறைகளுக்கும் ஊடாக நடைபெறவில்லை.

 

மாறாக நேரடியாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் எண்ணை படிமங்கள் மீது சீனா மற்றும் இந்தியாவும் பெற்றுக்கொண்ட உரிமை, படிப்படியாக நோர்வேயை அதன் சுரண்டல் நலனில் இருந்து வெளியேற்றி வருகின்றது. அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக புலிகளை கையாளும் நிலைக்குள், இந்தியா மற்றும் சீனாவினது தலையீடு அதிகரித்து வருகின்றது. நோர்வை இதன் மூலம் ஒரங்கட்டப்பட்டு, வடகிழக்கில் அதிக சுரண்டல் நலன் என்பது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் மறுபேச்சுவார்த்தை என்ற மீள் கூத்தை நோர்வே முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

 

மீள் பேச்சுவார்த்தையும் சர்வதேசமும்

 

முதன் முதலாக புலிகள் எதிர்பாராத ஒரு பேச்சுவார்த்iயை மேசையில் சந்திப்பார்கள். நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட, புலிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையாகவே இவை அமையும். புலி லூசுக் கூட்டம் பல்லைக்காட்டி, இதை எதிர் கொள்ளமுடியாது திணறும். இதை முன்கூட்டியே எடுத்துக் கூறக் கூடிய அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

 

இந்த வகையில் பேரினவாதம் இராணுவ ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலமடங்கு முன்னேறித் தாக்கும். அதை நோக்கி அரசு தயாரிப்புடன் கூடிய ஒரு அம்பலப்படுத்தலை செய்யவுள்ளது. புலிகளுக்கு சவால்விடும் வண்ணம் பேரினவாதம் களத்தில் செயற்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் வைக்கும் ஒரு தீர்வை புலிகள் ஏற்க மறுத்தால், அதை புலிகள் அல்லாதவர்கள் மூலம் அமுல் செய்யும் பிரகடனங்களைக் கூட விடுக்கும் நிலைக்கு பேரினவாத அரசு முதல் முறையாக முன்னேறுகின்றது. இந்த தீர்வை சர்வதேச ரீதியாக அரசு அங்கீகாரம் பெற்று அதை அமுல் செய்வதன் மூலம், புலிகளையே மூச்சுத் திணறடிக்கவுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரீதியாக தமது நிலையை பேரினவாதம் மேலும் பலப்படுத்திவிடுகின்ற சூழல் நெருங்கிக் காணப்படுகின்றது. பேரினவாத அரசின் முடிவை ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை அங்கீகரிக்க வைப்பதன் மூலம், புலிகளை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக தனிமைப்படுத்தி விடுவதே, இந்தப் பேச்சுவார்த்தையில் நடக்கவுள்ள அரசியல் மூலவுபாயமாகும். புலிகளின் இறுதிக்காலம் இப்படி பல வழிகளில் அரங்கில் நுழைகின்றது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ வழிகளில், தாமே வலிந்து தமக்குரிய அழிவை நிர்ணயித்து, அதை நோக்கி தாவிச் செல்லுகின்றனர். அதை யாரும் இனியும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் மக்கள் பெறப்போவது புலிகளின் அடிமைத்தனத்துக்கு பதில், மீளவும் பேரினவாத அடிமைத்தனத்தைத் தான்.

பி.இரயாகரன்
15.10.2006


பி.இரயாகரன் - சமர்