ஆதிக்க வகுப்பின் அதிகார வெறியைத் தடுக்க அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்- IX

Ambedkar

ஆதாயம் அதிகாரம் அளிக்கக்கூடிய பதவிகள், தமது வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் திருப்தியடையவில்லை. வெறும் ஒதுக்கீடு மட்டும் போதாது என்பதை அவர்கள் அறிவர். தன்னைப் போலவே இந்தப் பதவிகளை வகிப்பதற்கு - முற்றிலும் தகுதி படைத்தவர்கள், பார்ப்பனரல்லாத வகுப்பினரிடமிருந்து தோன்றி, இந்த ஒதுக்கீட்டு முறையையே அவர்கள் தகர்த்தெறிந்து விடாதபடி பார்ப்பனர்கள் தடுத்தாக வேண்டும். எல்லா அரசாங்க நிர்வாகப் பதவிகளும் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, கல்வி வசதி பெறுவதை பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக்குவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

 

நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த சட்டத்தின் படி, இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள சூத்திரர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது. இத்தகைய சலுகைகள் எல்லாம் இப்போது பார்ப்பனர்களுக்கு இல்லை என்று கூறி, காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சலுகைகள் இப்போது மறைந்து விட்டாலும், அவற்றின் மூலம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த சலுகைகள், இன்னும் நீடிக்கவே செய்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மிகவும் மோசமான வகுப்புவாத முறைகளைக் கைக்கொண்டுதான் பார்ப்பனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பதை முற்றிலும் அறிந்துள்ள காங்கிரஸ்காரர்கள், அடிமை வகுப்பினர் முன்வைக்கும் கோரிக்கையை வகுப்புவாதம் என்று கூறி நிராகரிப்பது நேர்மையாகுமா?

 

மேலும், அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று இன்று கோரும் நிர்பந்த நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றால், அதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்கள் தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அடிமை வகுப்பினர் கல்வி கற்பதையும், சொத்துகள் வைத்திருப்பதையும் குற்றமாக்கக் கூடிய சட்டங்களை இயற்றியதால்தானே அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்புகள் கோரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா, மறைக்க முடியுமா? தங்களது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் செய்ததுடன் ஒப்பிடும்போது, அடிமை வகுப்பினரின் கோரிக்கைகள் எவ்விதம் நியாயமற்றவையாக இருக்க முடியும்?

 

இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து ஆதிக்க வகுப்பினரின் தலைமையில் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் அடிமை வகுப்பினரின் கண்ணோட்டத்தில் ஒரு மோசடிப் போராட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு சுயநலப் போராட்டமாகவே அமைந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினரின் சுதந்திரப் போராட்டம், அடிமை வகுப்பினரை ஆள்வதற்கான சுதந்திரமேயாகும். அடிமட்டத்திலுள்ள இனத்தை, மேல் மட்டத்திலுள்ள இனம் ஆளும் சுதந்திரத்தையே அது விரும்புகிறது. இது, நலிவுற்றவனை வலிமை மிக்கவன் ஆளும் நாஜி அல்லது நீட்சேயின் சித்தாந்தமே தவிர வேறல்ல.

 

இந்திய அரசியலையும், அது செல்லும் திசைவழியையும் தெரிந்து கொள்ளவும், அதனால் எழக்கூடிய பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவ விரும்பும் அயல்நாட்டவர், இந்திய அரசியலுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான அம்சங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றை அவர் முழு அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளத் தவறினால், கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவரைப் போல் ஆகிவிடுவார்; அவரைத் தனது வலைக்குள் வீழ்த்துவோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுவார்; ஆட்டுவித்தபடி ஆடும் தலையாட்டி பொம்மையாகி விடுவார்.

 

இந்திய அரசியலின் அடிப்படையான அம்சங்கள் :

 

1. அடிமை வகுப்புகள் சம்பந்தமாக ஆளும் வகுப்பினர் கடைப்பிடிக்கும் சித்தாந்தம் கண்ணோட்டம்


2. ஆளும் வகுப்பினருக்கும் காங்கிரசுக்குமுள்ள உறவு


3. அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் வேண்டுமென அடிமை வகுப்பினர் முன்வைத்துள்ள அரசியல் கோரிக்கைகளுக்கான மூல காரணங்கள்.

 

முதல் அம்சத்தைப் பொறுத்தவரையில், அயல்நாட்டவர் இது குறித்து தனது சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு போதிய தகவல்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. அவசியமான தகவல்களுடனும் வாதங்களுடனும் இங்கே நான் முன்வைக்க முயலும் கோட்பாடு, மிக எளிதானது. அது பின்வருமாறு கூறுகிறது: முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியா, முற்றிலும் வேறுபட்டதொரு புதுமையான இந்தியாவாக, உலகமே வியந்து போற்றும் இந்தியாவாக இருக்க வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினருக்குத் தொண்டூழியம் புரியும் ஓர் அடிமைத்தனமான வகுப்பினர் இல்லாதிருக்கும் ஒரு புதுமையான இந்தியா பூத்து மலர வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்தக் கூடிய, இது சம்பந்தமாக முறையான பாதுகாப்புகளை அளிக்கக்கூடிய, ஆதிக்க வகுப்பினரின் கொள்ளைக்காரத்தனமான அதிகார வெறிக்கு “லகான்’ போடக்கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும். இதைத்தான் தீண்டத்தகாதவர்கள் நெடுகிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்; இதைத்தான் காங்கிரஸ் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது.

 

“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 9 பக்கம் : 230
http://ambedkarr.wordpress.com/