08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

என் மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாதவர்களுடன் ஒத்துழைத்தேன்

நான் காங்கிரஸ் அரசில் ‘காபினட்’ அமைச்சராகப் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியிலேயே நான் சேர்ந்து விட்டதாகப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘அம்பேத்கரே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, பட்டியல் சாதியினர், இன்னும் ஏன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருக்கின்றனர்’ என்று சில விமர்சகர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இத்தகைய விமர்சனங்கள் குறித்து நான் லக்னோவில் தெளிவுபடுத்தினேன். பூமியும் பாறையும் இருவேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்று சேராது. பாறை, பாறையாகவும்; பூமி, பூமியாகவுமே இருக்கும். நான் பாறையைப் போன்று உறுதியானவன். நான் யாருடன் இருந்தாலும், என்னுடைய தனித்த அடையாளத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்.

Ambedkar எந்தவொரு நற்பணிக்காக, யார் என்னுடைய ஒத்துழைப்பை நல்கினாலும், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக என்னுடைய ஆற்றலை உண்மையுடன் பங்களிக்க, காங்கிரஸ் அரசுடன் நான்கு ஆண்டுகள் ஒத்துழைத்தேன். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் நான் காங்கிரஸ் கட்சியில் சங்கமமாகிவிட என்னை அனுமதித்தது இல்லை. சிந்தனையிலும் செயலிலும் என்னுடைய மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாத அனைவருடனும் நான் ஒத்துழைத்தேன்.

 

வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை பட்டியல் சாதியினர் வாழ்வா சாவா என்று எண்ணி செயல்பட வேண்டும். நம்டைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, நம்டைய அத்தனை திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்குப் பின்னால் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் கொண்டிருக்கும் வளத்தை வைத்துமே அவன் ஆற்றலைப் பெறுகிறான். நாம் சிறுபான்மையினர், நம்மிடம் பொருள்வளம் இல்லை. நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இந்து போலிஸ்கள், நாம் முன்வைக்கும் உண்மையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு மாறாக, குற்றம் சுமத்திய ஒரே காரணத்திற்காக நம்மை ஒடுக்குகிறார்கள். வறுமையில் உழலும் நம்மால், அரசு எந்திரத்தை நமக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை.

 

இருப்பினும், நம்மிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அதுதான் அரசியல் அதிகாரம். இதை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த அதிகாரத்தின் உதவியுடன் நாம் நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். விடுதலை பெற்ற இந்தியாவில், நம்டைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றீர்களா? நம்டைய நாடு விடுதலை பெறுவதை நாம் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கான நேரடியான பதிலையே நாம் எதிர்பார்த்தோம். விடுதலை பெற்ற இந்தியாவில் நம்டைய நிலை என்ன? காந்தியிடம் நான் இக்கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

 

சுயராச்சியத்தில் என் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் தற்பொழுது இருப்பது போல ‘பாங்கி’களாக, ‘சமார்’களாக நீடித்து இருப்போமா? இப்போது இருப்பது போலவே எங்களுடைய குழந்தைகள், பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுமா? கிராமங்களில் தற்பொழுது எங்கள் மக்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுமா? வட்டமேசை மாநாட்டிலும் நான் காந்தியாரிடம் இதே கேள்வியைத்தான் எழுப்பினேன்.

 

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டதைப் போல, எங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமா? ஆனால், பட்டியல் சாதியினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமைகள் 1932 இல் அளிக்கப்பட்டபோது, இந்த உரிமைகளை திரும்பப் பெறும்வரை, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் எங்களிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடக்கிறதோ, அது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திட்டத்திற்கு நேர் எதிரானது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

 

நம்டைய மக்களை தனித்தொகுதி மூலம் அனுப்ப நாம் விரும்பும்போது, அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. சுயநலன்களுக்காக செயல்படும் மூடர்களையும், காங்கிரசுக்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்களையும் காங்கிரஸ் தனித்தொகுதியில் வேட்பாளர்களாக்க முயல்கிறது.

 

தற்பொழுது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில், 30 பட்டியல் சாதி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பது பேரும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அங்கு அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை; எந்தத் தீர்மானத்தையும் முன்மொழிவதில்லை; நாடாளுமன்றத்தின் முன்பு எந்தச் சட்டவரைவையும் முன்வைப்பதில்லை. எனவேதான், நாம் நம்டைய உண்மையான பிரதிநிதியை அனுப்ப விரும்புகிறோம். அவர்கள்தான் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நம்டைய கோரிக்கைகளை முன்வைத்து, அதைத் தீர்க்க முயல்வார்கள்.

 

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு