09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...27.

புகை மற்றும் தீ: கண்ணால் பார்த்த சாட்சியளான S-6 பயணிகள்.

கிட்டத்தட்ட காலை 8:30 மணியளவில், S-6 பெட்டியிலிருந்து புகை கிளம்புவதை, மீனா முதலாவதாக கண்டார். S-6ல் பயணம் செய்த பயணிகளும் முதலில் புகை வருவதையும் அதன் பிறகு தீயையும் பார்த்தனர். இராணுவ வீரரான பாண்டே, 1 ஏப்ரல் 2002 அன்று கொடுத்த வாக்குமூலத்தில், “பஜ்ரங்தள் ஆட்களும் மற்ற பயணிகளும் சத்தம் கொடுத்தவர்களாக பெண்களையும், குழந்தைகளையும் கடைசி இருக்கையின் கீழே மறைத்து வைத்தனர். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, இருக்கை எண் 72லிருந்து திடீரென்று புகை கிளம்ப ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்திற்குள் தீ ஜுவாலையை பார்த்தேன். மேல் இருக்கையிலிருந்த நானும் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர்களும் கீழே இறங்கி, பெட்டியின் வலது புற கதவைத் திறப்பதற்காக மிகவும் சிரமப்பட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால், வெளியிலுள்ளவர்கள் கதவைத் திறப்பதைத் தடுக்கும் வகையில் பிரயாணிகள் தங்கள் உடமைகளை பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள கதவுகளின் பக்கமும் நிரப்பி தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். இன்னும் சிலரும் கரசேவகர்களும் பெட்டியிலிருந்து வெளியேறினோம்.

ராஜேந்திரசிங் ராஜ்புத் என்பவர் தனது தந்தையுடன் S-6 பெட்டியில் பயணம் செய்தார். அவர் கூறும் போது, “100 முதல் 150 பேர்களைக் கொண்ட வன்முறை கும்பல் வடக்கு புறத்திலிருந்து கற்களைத் தொடர் வண்டி மீது வீசினார்கள். அந்தக் கும்பலில் இருந்தவர்கள், இரும்பு குழாய்களையும், வாள்களையும் ஆயுதங்களாகத் தாங்கி இருந்தார்கள். நான் ஜன்னல் வழியாக வந்த போது, அவர்கள் எனது காலிலும், தோளிலும் மற்றும் கைகளிலும் இரும்பு குழாய்களாலும் கற்களாலும் தாக்கினார்கள். எனது தந்தையார் புகையின் காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெட்டியிலேயே மயக்கமுற்றார்கள். எனக்கு இரு கைகளிலும் மற்றும் காதுகளிலும் தீக் காயங்கள் ஏற்பட்டது. பிறகு கோத்ராவிலுள்ளவர்கள் என்னையும் எனது தந்தையையும் கோத்ரா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

தொடர் வண்டியிலிருந்து கீழே இறங்கிய போது 15 முதல் 16 வயது மதிக்கதக்க சிறுவர்கள் தொடர் வண்டியைச் சுற்றி வந்ததைப் பார்த்தேன். அவர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்திலே 70 முதல் 80 அடி தூரத்திற்கு ஓடினேன். பிறகு அவர்களில் சிலர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். கல்வீச்சின் காரணத்தால் எனது வலது கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. “அடி...அடிஎன்று அச்சிறுவர்கள் கூச்சலிட்டார்கள். நான் ஒரு இராணுவ வீரன் என்று அச்சிறுவர்களிடம் கூறினேன். அதற்கான அத்தாட்சியைக் கேட்டனர். எனது சட்டைப் பையிலுள்ள எனது வாரண்ட் தாளை எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த அவர்களில் ஒருவன் நான் இராணுவ வீரன் தான் என்று மற்றவர்களிடம் கூறியதோடு என்னை ஒருவரும் தொடக் கூடாது என்றும் உத்தரவிட்டான். மற்றவர்கள் என்னிடம் எனது பெயரை கூறுமாறு கேட்டார்கள். முதலில் கூறிய அதே சிறுவன் எனது பெயரை அத்தாளில் இருந்து படித்தான். இதைக் கேட்ட மற்றவர்கள் நான் ஒரு ஹிந்து என்று கூறவே, அவர்களில் ஒருவன் இரும்பு கம்பியால் என் தலையில் தாக்கினான். இரத்தம் என் தலையிலிருந்து வழிந்தோட, நானும் மயக்கமுற்று கீழே வீழ்ந்தேன். பிறகு என்னை முக்கிய வீதியில் போட்டு விட்டு சென்றனர்என பாண்டே கூறினார்.

முரண்பாடுகளின் உருவாக்கங்கள்: வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களான பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொண்டு சென்றார்களா? S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில், கரசேவகர்கள் மட்டுமே இவ்வாறு கூறுகின்றனர்.

கலவரகாரர்களை மிக நெருக்கமாக பார்த்த ஒரே ஒரு அரசு அதிகாரியான மீனாவும் சரி, அல்லது S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில் கரசேவகர்கள் அல்லாத பயணிகளான இராணுவ வீரர் பாண்டே மற்றும் ராஜேந்திரசிங் ராஜ்புத் ஆகியோர்களும் சரி, கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களான பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளைக் கொண்டு சென்றதைப் பார்த்தாக கூறவே இல்லை. இன்னும் S-6 பெட்டி தீயிட்டு கொளுத்தப்பட்டதையும் பார்த்தாக இவர்களில் எவரும் கூறவில்லை. உத்திரபிரதேசத்திலுள்ள சுல்தான்பூரிலிருந்து தனது குடும்பத்தோடு S-6 பெட்டியில் வதோதராவிற்கு திரும்பிய வியாபாரியான சதீஷ் மிஸ்ரா கூறும் போது,” பெட்டியின் மீது கல்வீசப்படுவதாக கேட்டதுமே, கதவுகளையும் ஜன்னல்களையும் நாங்கள் மூடிக் கொண்டோம்... தீயின் காரணமாக புகை வந்தது. எவரும் கல்வீசியதையோ அல்லது பெட்டியின் மீது தீ வைத்தததையோ நான் பார்க்கவில்லைஎன்று கூறினார். இவருடைய மனைவியும் தீயில் கொல்லப்பட்டார்.

அயோத்தியில் ராம்ஜப் யாஃக்னாவில் அஹுட்டியைக் கொடுக்க சென்று, வீடு திரும்ப S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த மேஹ்சனாவை சேர்ந்த நான்கு கரசேவகர்கள்அம்ருத்பாய் பட்டேல், தினேஷ்பாய் பட்டேல், ராம்பாய் பட்டேல் மற்றும் நிதின்பாய் பட்டேல் ஆகியோர் 8 மார்ச் 2002 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் வாக்குமூலத்தில், எவரும் எரிபொருள்களைக் கொண்டு வந்ததையோ அல்லது பெட்டியைத் தீயிட்டு கொளுத்தியதையோ தாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருந்தனர். மேலும் அவர்கள் புகையின் காரணத்தால் மயக்கமுற்று விழுந்து விட்டதாகவும் கூறியிருந்தனர். S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களும் இன்னும் மற்ற பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்கள் மட்டும் தான், வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு சென்றதாக கூறுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், கடுமையான கல்வீச்சின் காரணமாக கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்திவிட்டதாக கூறும் எல்லா கரசேவகர்களும், அதே மூச்சோடு வன்முறையாளர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு சென்றதை பார்த்தாகவும் கூறுகிறார்கள்.

தொடரும்...


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்