09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...26.

முதல் நிறுத்தம்:

சங்கிலி இழுக்கப்பட்டு, தொடர் வண்டி நிலையத்திற்கு சற்று வெளியே சபர்மதி தொடர் வண்டி நிறுத்தப்பட்டது.


சில நிமிடங்கள் கழித்து, தொடர் வண்டி நடைமேடையிலிருந்து சென்றது. தொடர் வண்டியின் ஓட்டுனரான ராஜேந்திர ராவ் ரகுநாத் ராவ் கூற்றுப்படி காலை 7:45 மணியளவில் தனக்கு பச்சை சமிக்ஞை காட்டப்பட்டதாகத் தெரிவித்தார். “தொடர் வண்டி வதோதரா நோக்கி புறப்பட ஆரம்பித்து” என ராவ் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். "காலை 7:47 மணியளவில் சங்கிலி இழுக்கப்பட்டதும் தொடர் வண்டி நின்று விட்டது. பெட்டி எண்கள் 83101, 5343, 51263 மற்றும் 88238 ஆகியவற்றிலிருந்து சங்கிலி இழுக்கப்பட்டிருப்பதை, எனது உதவி ஓட்டுனரும், தொடர் வண்டி பாதுகாவலரும் அறிந்து கொண்ட பின் தொடர் வண்டி நிலைய அதிகாரிக்கு கை தொடர்பு பேசியின் மூலமாக தகவல் அளித்தோம்”.இந்தச் சமயத்தில் நடைமேடையிலிருந்து கல்வீச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தகவல் இராணுவ வீரரான பாண்டே மற்றும் இன்னொரு பயணியான 19 வயது அமர்குமார் (இவர் தனது தந்தை தாய் அண்ணி மற்றும் மருமகள் ஆகியோருடன் உத்திரபிரதேசத்திலுள்ள சொந்த ஊரிலிருந்து அஹ்மதாபாத்திற்கு பயணம் செய்தார்) ஆகியோரால் உறுதி செய்யப்பட்டது.

பாண்டேயின் கூற்றுப்படி, “தொடர் வண்டி 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு ஓடிய பிறகு சங்கிலி இழுக்கப்பட்டதால் நின்றது. அதன்பிறகு பஜ்ரங்தள் ஆட்கள் அதிகமானோர் ஓடி வந்து நாங்கள் இருந்த S-6 பெட்டிக்குள் ஏறினார்கள். இந்தச் சமயத்திலும் நடைமேடையின் புறத்திலிருந்து கற்கள் வீசப்பட்டு கொண்டிருந்தது.”

தொடர் வண்டி நடைமேடையை விட்டு புறப்பட்ட மறு கணத்திலேயே நிறுத்தப்பட்டதாக திவாரி என்பவரும் கூறினார். “பெட்டியின் மீது கல் வீசும் சத்தத்தையும் கேட்டேன்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறும் போது, “சில கற்கள் ஜன்னல்கள் வழியாக பெட்டியின் உள்ளேயும் வர ஆரம்பித்தது”. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே தொடர் வண்டி ஊழியர்கள், மேலே குறிப்பிட்ட 4 பெட்டிகளில், சங்கிலி இழுக்கப்பட்டதால் உருவான பிரச்சனையை தீர்த்து வைத்ததால் தொடர் வண்டி மீண்டும் நகர ஆரம்பித்தது.

மிகவும் துரதிஷ்டவசமான நிறுத்தம்: மீண்டும் சங்கிலி இழுக்கப்பட்டதால், சபர்மதி தொடர் வண்டி அறை A அருகே நின்றது.

காலை மணி 8:00. சிறிது தூரம் சென்றவுடன், மீண்டும் சங்கிலி இழுக்கப்பட்டதால், சபர்மதி தொடர் வண்டி அறை A அருகே நின்றது. அந்த அறையில் இருந்த தொடர் வண்டி நிலைய உதவி அதிகாரியான ஹரிமோகன் மீனா இந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டார். 900 முதல் 1000 வரை எண்ணிக்கையிலான வலுவானதொரு கும்பலை தான் அறை A அருகே கண்டதாக ஓட்டுனர் ராவ் கூறினார். கல்வீச்சு சம்பவம் மிகவும் வலுவானதைத் தொடர்ந்து, பெட்டியின் ஜன்னல்கள் உடைய தொடங்கின. மீனாவும் மற்றும் இச்சம்பவத்தின் போது S-6 பெட்டியில் பயணித்து உயிர் பிழைத்தவர்களும் இதனையே தங்களது வாக்குமூலத்திலும் தெரிவித்தனர்.

அமர்குமார் திவாரி என்பவர் கூறும் போது, இரண்டாவது முறையாக தொடர் வண்டி ஓடத் தொடங்கி பின் நிறுத்தப்பட்ட தருணத்திலிருந்தே, இடது புறத்திலிருந்து கல்வீச்சுகள் தொடர்ச்சியாக இருந்தது. “இதன் காரணமாக எங்களது பெட்டியிலுள்ள ஜன்னல்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு, எனது சகோதரரின் மனைவி, தாய் மற்றும் நானும் கற்களால் தாக்கப்பட்டோம்.” இராணுவ வீரரான பாண்டேயும் இதே போன்றே கூறினார், “இரண்டாவது முறையாக தொடர் வண்டி நிறுத்தப்பட்ட தருணத்தில், இடது புறத்திலிருந்து கடுமையான கல்வீச்சுகள் வந்தன. பெட்டியின் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டும், சில ஜன்னல்களில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் சில பயணிகள் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்து இரத்தம் ஓடியது.

பூஜ்ஜிய தளம்: கலவர கும்பல்களின் கோபம் தீவிரமடைந்தது. முஸ்லிம் கலவர கும்பல் அறை A வரை தொடர் வண்டியை விரட்டி கொண்டு ஓடினார்கள். ஓட்டுனர் ராவ் கலவர கும்பலைப் பார்த்தார், ஆனால் 8 முதல் 10 பெட்டிகள் வரை பிரிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேராத இந்நிலையில், அறை Aயிலிருந்த அதிகாரிகளான மீனாவும் அவருடன் பணிபுரியும் AK சர்மா என்பவரும் பூஜ்ஜிய தளத்திற்கு மிக அருகாமையிலிருந்த அதிகாரிகளாகும். இதுவே, கோத்ரா சம்பம் நிகழ்ந்ததற்கு மறுநாள்,1 மார்ச் மாதம் 2007 அன்று மீனா காவல்துறையிடம் வாக்குமூலத்தில் கூறியவையாகும்.

“கிட்டதட்ட காலை 7:55 மணியளவில் மீண்டும் தொடர் வண்டி ஓட தொடங்கியது. 5 நிமிடத்திற்குள் அது அறை A அருகே வந்தது. அந்த சமயத்தில் சபர்மதி தொடர் வண்டியின் ஓட்டுனர் சங்கிலி இழுக்கபட்டதற்கான விசில் ஒலியை எழுப்பினார். தொடர் வண்டியும் நின்றது. கிட்டதட்ட 8 முதல் 10 பெட்டிகள் ஏற்கனவே அறை Aயையும் கடந்து சென்றுவிட்டது. சங்கிலியைச் சரி செய்யும் பொருட்டு அறையை விட்டு நான் வெளியே வந்ததோடு என்ன நடந்தது என்றும் விசாரித்தேன். தொடர் வண்டி அருகே நான் சென்ற போது, பின்பக்கத்திலிருந்தும் சுற்றுபுற இடங்களிலிருந்தும் 200 முதல் 500 பேர் வரையில் ஒரு கலவர கும்பல் தொடர் வண்டி நோக்கி வருவதை கண்டேன். அவர்கள் கற்களை வீசினார்கள். நான் எனது அறையை நோக்கி ஓடிச் சென்றதுடன், அங்கிருந்தே பெட்டியின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொள்ளுமாறு பயணிகளிடம் கூறினேன். (தொடர் வண்டியிலிருந்து) கீழே இறங்கிய பயணிகளில் சிலர் கலவர கும்பலால் தாக்கப்பட்டார்கள்.

மீனாவுக்கும் கலவர கும்பலுக்கும் இடையே உண்மையில் நிகழந்தது என்ன?

காவல்துறையிடம் தந்த தனது வாக்குமூலத்தில், மீனா பிரச்சனை குறித்து மெளனம் சாதித்தார். ஒரு ஆய்வு நிபுணராக காட்டிகொண்டு மீனாவை சந்திக்க, (குஜராத் உண்மைகளை வெட்டவெளிச்த்திற்கு கொண்டு வந்த) தெஹல்காவின் நிருபர் முடிவு செய்தார். தான் ஒரு நிருபரிடம் பேசுவதாகவோ இன்னும் தனது பேச்சுக்கள் பதிவு செய்யபடுகின்றன என்பனவற்றை உணராத நிலையில் மீனா சொல்லும் போது, தான் தனது அறையிலிருந்து வெளியேறி பிறகு, ஏன் தொடர் வண்டியை பின் தொடர்ந்து ஓடுகிறீர்கள் என கலவர கும்பலிடம் கேட்ட போது, தங்களில் ஒருவர் கரசேவகர்களால் தொடர் வண்டிக்குள் இழுத்து செல்லபட்டதாக அவர்களில் சிலர் கூறினார்கள். இன்னும் அவர்களில் சிலர், தொடர் வண்டிக்கு தீவைப்பதன் மூலம் அவற்றில் உள்ளவர்களை வெளியேற்றி விடலாம் என்று யோசனை சொன்னதை தான் கேட்டதாகவும் மீனா கூறினார். ஆனால் வாள்களையோ, கூரிய ஆயுதங்களையோ அல்லது எரிபொருள்களையோ கலவர கும்பல் கொண்டு சென்றதைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் மாறுபட்டதாக அவர் கூறிய மற்றொரு கூற்றானது, கலவர கும்பலில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். அவர்கள் தங்கள் கைகளில் தடிகளைத் தூக்கி சென்றதுடன், கற்களையும் வீசினார்கள்.

தொடரும்...


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்