Language Selection

இறை நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டன:

வன்முறைகள் நிகழ்த்தப்பட்டக் காட்சிகளும் நிகழ்விடங்களும், விசாரணை நடத்துபவர்களுக்கு மிக முக்கியமான சான்றுகளாகும். நரோடா பாட்டியாவிலும் இன்னும் நரோடா காவ்னிலும், காவல்துறையினர் மிக நேர்த்தியாக அனைத்துச் சான்றுகளையும் முற்றிலுமாக அழித்ததனால் ஒரு வழக்கிலிருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஒரு குழிக்குள் வைத்து அதிகமான பேர் எரிக்கப்பட்டச் சம்பவம் விசாரிக்க கூடப்படவில்லை - மனித திசுக்களின் தடயங்களோ அல்லது சிந்தப்பட்ட எரிபொருள்களின் தடயங்களையோ அம் மண்ணிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக, படுகொலைகள் பற்றிய காவல்துறையின் கூற்றில் இந்தக் குழியைப் பற்றியத் தகவல்களே இடம்பெறவில்லை. தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 7 பேர்களின் மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. இவர்களில் இருவர் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை கொடுக்கபட்டப் பின்பும் மார்ச் 11ம் தேதியன்று இறந்து விட்டனர். இவர்களுடைய வாக்கு பிரமாணங்கள் ஏன் பதியப் படவில்லை என்பது பற்றி எந்தவொரு விளக்கமும் குற்றப் பத்திரிக்கையில் வரவில்லை.

பாஜக சட்டமன்ற மன்ற உறுப்பினர் (MLA) குற்றச்சாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டாள்:

நரோடா படுகொலை சம்பவங்களின் போது உயிர் தப்பியவர்கள், "உள்ளூர் MLA-வான மாயாபென் கோட்னானி தான் வன்முறை வெறியர்களைக் கொலைகள் செய்வதற்கு ஊக்குவித்தாள்" என்று பெயர் குறிப்பிட்டு கூறினார்கள். ஆனால் இம்மனிதப் பேரழிவு பற்றியக் குற்றப்பத்திரிக்கையில், இவளது பெயர் குற்றம் சாட்டப்பட்டக் குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து காவல்துறையினரால் நீக்கம் செய்யப்பட்டது. இதற்குக் காவல்துறையினரால், "இவருக்கு எதிராக எந்தச் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை" என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் படுகொலைகள், வன்முறைகளில் இவளுடைய பங்குகள் மிகப்பெரிய அளவில் இருந்ததாக ரிச்சர்ட் கூறினான். மாயாபென் நாள் முழுவதும் நரோடா பாட்டியாவின் தெருக்களில் சுற்றி வந்தவளாய் வன்முறையாளர்கள் முஸ்லிம்களைக் கொன்றொழிக்குமாறு ஊக்குவித்தாள் என ரிச்சர்டும் இன்னும் அவனுடன் சேர்ந்து இப்படுகொலை சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷ் ரத்தோடும் கூறினார்கள்.

நூரானி மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படவில்லை:

குற்றம் நிகழ்ந்த நூரானி மசூதி இடத்தில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் அசோக் லேய்லண்ட் டாங்கர் லாரி, அதன் பின் பகுதி மசூதியின் சுவரில் ஒட்டியிருக்கும் நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் முன்பகுதியிலுள்ள எண் தகடு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் இருந்துள்ளதோடு, அந்த லாரியின் எண் GT-1T 7384 தெளிவாகப் படிக்கும் விதத்திலும் இருந்துள்ளது. ஆனால் இந்த லாரி பறிமுதல் செய்யப்படவில்லை. இதனுடைய உரிமையாளரைக் கண்டுபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை. தடயவியல் பரிசோதனை செய்வதற்காக அதிலுள்ள பொருளிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. 12க்கும் அதிகமான காவல்துறையினரால் தொடர் கண்காணிப்பில் உள்ள பகுதியான நூரானி மசூதிக்கு மிக அருகில் இவ்வளவு பெரிய டேங்கர் லாரி எப்படி ஊடுருவ முடிந்தது என்பது உண்மையில் இன்றும் மர்மமாகவே இருக்கிறது.


தலைமறைவான முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை:

குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்ட உடன் அநேக முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர். பாபு பஜ்ரங்கி, கிஷன் கோரனி, பிரகாஷ் ரத்தோட் இன்னும் சுரேஷ் ரிச்சர்ட் போன்றவர்கள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு முன்று மாதங்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டனர். பிபின் பன்ச்சால் என்பவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே கைது செய்யப்பட்டான். குற்றவாளி தலைமறைவானால் பொதுவாக செய்யப்படும் நடவடிக்கைகளான, தலைமறைவான குற்றவாளி என்னும் எச்சரிக்கை அறிவிப்பை அவனது வீட்டுக்கு வெளியே ஒட்டுவது, அவனது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எதையும் காவல்துறையினர் செய்யவில்லை.

குற்றத்தை ஒப்புக் கொணடதாகப் பதிவு ஒன்று கூட இல்லை:

நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையால் விசாரிக்கப்படுவதற்காக ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு போலீஸ் காவலில் கொண்டுச் செல்ல நீதிமன்றத்தால்அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் காவலும், விசாரணைகளும் வெறும் கபட நாடகமாகவே அமைந்தது. இரண்டு நரோடாக்களிலும் நடத்தப்பட்டப் படுகொலைகள் சம்பந்தமாக, குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொணடதாக ஒரு பதிவு கூட குற்றப்பத்திரிக்கைகளில் இணைக்கபடவில்லை.

ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது:

2004ல் பிபின் பன்ச்சாலிடம் இருந்து கைபற்றபட்ட ஒரே ஒரு வாளைத் தவிர, வேறு ஆயுதங்கள் ஏதும் வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்திலிருந்தோ அல்லது குற்றவாளிகளிடம் இருந்தோ காவல்துறையினரால் கைபற்றப்படவில்லை. ஆனால், "குற்றம் சாட்டப்பட்ட கொடியவர்கள் உட்பட தங்களைத் தாக்கியக் காட்டுமிராண்டி கயவர்கள் அனைவரும் பல்வேறு வகையான கொடிய ஆயுதங்களான கத்திகள், வாள்கள், சூலாயுதங்கள், எரிவாயு உருளைகள், கைத்துப்பாக்கிகள் போன்ற உயிருக்கு ஊறுவிளைவிக்கும் ஆயுதங்களைத் தாங்கியிருந்தனர்" என்று வன்முறை வெறியாட்டத்தின் போது உயிர்தப்பியவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள். 105 பேர் ஈவு இரக்கமின்றி கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கூட ஆயுதங்கள் ஒன்றும் கைபற்றப்படாததே, விசாரணைகளின் தரம்கெட்டத் தனத்தின் அளவை பறைசாற்றுவதாக உள்ளது.

இன்னும் சொல்லப் போனால், இனஅழிப்பு அக்கிரமங்கள் நிகழ்த்தப்பட்ட தினத்தன்று தனது கிடங்கிற்கு அறிமுகமில்லாத 20 பேர் மாருதி வேனோடு வந்திறங்கி எக்கச்சக்கமான வாயு உருளைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக வாயு உருளைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வாக்குமூலம் எழுதிக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் நடைபெறும் போது தனது நிறுவனத்தின் காவலாளியும் இருந்ததாகக் கூறினார். ஆனால், காவலாளியின் வாக்குமூலம் பதியப்படவில்லை. மட்டுமல்லாது கொள்ளையடித்தவர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது இக்குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html