06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும்

இன்றைய சமுதாய அமைப்புமுறை வன்முறைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இன்று காணப்படும் ஜனநாயகம் கூட, வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் கருவியாகும். வன்முறைக்குரிய ஜனநாயக அமைப்பில், சமூகங்களை ஒழுங்குபடுத்தி அடக்கிவைத்துள்ள சமூக அமைப்புமுறையும் கூட வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவேவுள்ளது.

 உண்மையில் சர்வாதிகாரம் என்பது ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமாக உள்ளது. இங்கு எழும் மனிதாபிமானம் என்பது வர்க்கத்தின் எதிர்வினைகளை அடிப்படையாக கொண்டது. இதற்கு வெளியில் எதுவும் இருப்பதில்லை.

 

இந்த சமுதாய எதார்த்த இருப்பை உள்வாங்கி, அதை தத்துவார்த்த ரீதியாக விளக்குவதே மார்க்சியம். சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கும் மார்க்சியம், தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான நீடித்த ஒரு இயக்கமாக காண்கின்றது. வர்க்கங்கள் நீடிக்கும் வரை, வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாக காண்கின்றது. இந்த வர்க்கப் போராட்டம், அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இந்த வர்க்க அமைப்பில் ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் இருப்பதில்லை. இதுவே எதார்த்தம். சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுவனுக்கும் ஒரேநேரத்தில் ஜனநாயகம் நிலவமுடியாது. இப்படி இருக்க முடியும் என்பது, மக்களை ஏமாற்றுகின்ற மோசடி. இந்த மாதிரி மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் மோசடியில், மார்க்சியம் ஈடுபடுவது கிடையாது.

 

பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வரும் போது, பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு என்பதை தெளிவுபடுத்துகின்றது. சுரண்டுபவனுக்கும், சமூக ஒடுக்குமுறை செய்வதற்கும் சுதந்திரம் கிடையாது. இதில் எந்த தனிமனிதனுக்கும், விதிவிலக்குகளை அனுமதிப்பதில்லை. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்தினுள் தான் ஜனநாயகம். இதற்கு வெளியில் இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து எந்த விளக்கமும் பெறாது. சமூகத்தை ஒடுக்கித் தான் பெறமுடியும்.

 

புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இன்றைய சுரண்டல் வர்க்க அமைப்பிலும், உள்ளார்ந்த ஒரு விதியாகவே இது நடைமுறை ரீதியாக உள்ளது. இங்கு சுரண்டுவது மாற்ற முடியாத ஒரு சர்வாதிகார வர்க்க நிபந்தனைக்கு உட்பட்டது. இங்கு ஜனநாயகம் எதுவும் செல்லுபடியாவதில்லை. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மைக்கு எதிராக போராடுவது, இந்த சுரண்டல் வர்க்க சர்வாதிகார அமைப்பின் பொதுவான நடைமுறை ரீதியான எதார்த்தமாகவே உள்ளது. இந்த வகையில் ஜனநாயகம் வெளிப்படையாக மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது. சுரண்டுவதற்குத் தான் ஜனநாயகம் சேவை செய்கின்றது.

 

வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தெளிவு, மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியமும், மக்களை ஏமாற்ற ஜனநாயகம் பேசுகின்றவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இதேபோல் டிரொட்ஸ்கிய வலதுசாரிகளும் சரி, அனைத்து வர்க்க பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில், இவர்களுக்கு இடையில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே குலைக்கின்றனர். மக்களை பொதுத்தளத்தில் நிறுத்தி, அவர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர். பின் அவதூறுகளை வர்க்க நோக்கிற்காக கட்டமைக்கின்றனர். அவதூறுகள் புனையப்பட்டு முன்வைக்கப்படுகின்றது.

 

ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒரு வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்ற வரைதான், அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. அது உயிர் வாழ்தற்கான ஜனநாயக மறுப்புக்குரிய சமூக அடிப்படையே அதற்கு இருப்பதில்லை.

 

இது வர்க்கங்களற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை சுரண்டல் சமூக அமைப்பு மூடிமறைக்கின்றது. இந்த எதார்த்தத்தை எடுத்துக்காட்டி, அனைத்து வர்க்கத்துக்கும் (மக்களுக்கும்) ஜனநாயகம் என்ற பொய்மையையும், அதன் சர்வாதிகாரத் தன்மையை மார்க்சியம் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக போராடுகின்றது. இதை யாரும், எந்த சமூக முரண்பாட்டு பிரிவுகளும் செய்வதில்லை.

 

ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே இனம்காட்டி மார்க்சியம் மட்டும்தான், சமுதாயத்தை மாற்றி மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடுகின்றது. அதாவது எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கையும் துல்லியமாக வேறுபடுத்தி, அதை வெளிப்படுத்திப் போராடுகின்றது. இந்த வகையில் பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டலைக் கோரும் ஜனநாயகத்தை சுரண்டும் வர்க்கத்துக்கு மறுக்கின்றது. மாறாக இதன் எதிர்நிலையில் உள்ள முதலாளித்துவமும், வர்க்கங்களை அடக்கியாள உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும், அதன் பண்பியல் உருவாக்கும் சமூக எதார்த்தத்தை மார்க்சியமே இலகுவாக புரிந்து கொள்ளவைத்து போராடுகின்றது.

 

வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்துள்ள நிலையில், சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை உருவாகின்றது. இதுவல்லாத எல்லா நிலையிலும் சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம், எப்போதும் நிர்வாணமாக வெளிப்படையாக இருப்பதில்லை. மாறாக தன்னை, தனது சுரண்டும் வர்க்க சர்வாதிகாரத் தன்மையை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக, மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை கவர்ச்சிப்படுத்திக் காட்டமுனைகின்றது. மூடிமறைக்கப்பட்ட இந்த ஜனநாயகம், ஒரு முதலாளித்துவ சுரண்டல் சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது. அது சூக்குமமாகவே காட்சியளிக்கின்றது. சமுதாயத்தில் நிலவும் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும், சுரண்டும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை வெளிப்படையாக நிர்வாணப்படுத்திக் கொள்கின்றது. இன்று ஜனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் எல்லா அரசுகளும், உள்ளடகத்தில் சுரண்டலை நடத்துவதற்கான சர்வாதிகார பாசிசக்கூறை உள்ளடக்கியபடி தான், தன்னை மூடிமறைத்துக் கொண்டு கவர்ச்சியாக்கிக் கொள்ள முனைகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே, வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.

 

மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமையும், தனிமனித சுதந்திரமும் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது அதுவாகவே நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ (ஜனநாயக) சர்வாதிகார அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர் வர்க்கத்துக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.

 

ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்து வர்க்கத்துக்குமானதாக இருக்க முடியாது. அது ஒரு சர்வாதிகாரமாக இருக்கின்றது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போடுவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம் அதன் தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதுக்கு அப்பால், சர்வாதிகாரம் ஜனநாயகமாகிவிடாது.

 

மனித அவலமாகவே புரையோடிப் போயுள்ள வர்க்க சமூக அமைப்பில் செழிப்பும் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்களின் அவலம் தான் சிலரின் செழிப்புக்கான ஒன்றாகவும், வாழ்வுக்கான அடிப்படையாகவும் உள்ளது. இதைத்தான் பொதுவாக அனைவரும் ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றனர். இந்த சுரண்டல் அமைப்பில் இதற்கு வெளியில், இதற்கென வேறு கருத்து கிடையாது.

 

பொதுவாக ஜனநாயகம் என்பதை கருத்துச்சொல்லும் உரிமை, வாக்களிக்கும் உரிமை என்ற குறுகிய எல்லைக்குள் தான் விளங்கி, அதுவாக மட்டும் பார்க்கப்படுகின்றது. ஜனநாயகம் எப்படி மனித வாழ்வியல் கூறுகளில் செயல்படுகின்றது என்று பார்க்கப்படுவதில்லை, பார்க்க அனுமதிப்பதில்லை. சாதாரணமான ஊடகங்கள் இதைத்தான் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.

 

மனிதர்களின் சமூக வாழ்வியல் கூறு வன்முறையான சுரண்டல் வழிகளில், சமூக முரண்பாட்டு போக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயகம் என்கின்றனர். மற்றைய சக மனிதனின் உழைப்பை சுரண்டி வாழ்வதைத்தான் ஜனநாயகம் என்கின்றது. அதைத்தான் சுதந்திரம் என்கின்றனர். மற்றைய மனிதனின் உழைப்பை திருடி வாழ்வதை எப்படி ஜனநாயகம் என்று, பகுத்தறிவுடன் நாம் கூறமுடியும். ஆனால் அப்படி கூறப்படுவதுதான் இன்றைய உலக கட்டமைப்பாகும். இதை மறுப்பது, மீறப்படுவதை ஜனநாயக விரோதம் என்று கூறுமளவுக்குத்தான், மனித சிந்தனைத் தளமும் மலடாக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த அமைப்பை இந்த எல்லைக்குள் வன்முறை மூலம் தான் பாதுக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அமைப்பை பாதுகாப்பது ஏது? பாராளுமன்றங்களும், நீதித் துறையும், ஆயுதம் ஏந்திய காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த சுரண்டும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சர்வாதிகார நிறுவனங்களாகும்.

 

இது பெரும்பான்மை மக்களின் விருப்பை வாக்கில் மட்டும் தான், ஏமாற்றுகின்ற அரசியல் மோசடிகளுடன் அங்கீகரிக்கின்றது. சமூக வாழ்வியல் நடைமுறைகளில் அல்ல. நடைமுறை வாழ்வில் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் ஒரு விடையத்தை, இந்த சர்வாதிகார நிறுவனங்கள் ஜனநாயக உள்ளடகத்தில் ஏற்றுக்கொள்வது கிடையாது.

 

வர்க்க அமைப்பில் ஜனநாயகம் வர்க்கங்களுடையதே. வர்க்க அமைப்பு உருவாக்கும் சமூக முரண்பாட்டிலும் கூட இது பொருந்தும். ஆணாதிக்க அமைப்பின் ஜனநாயகம் பெண்ணுக்கு எதிரானது. பார்ப்பனிய சாதிய இந்துத்துவ அமைப்பின் உயர்சாதிய ஜனநாயகம் தாழ்ந்த சாதிகளுக்கு எதிரானது. இனவாத அமைப்பில் அதிகாரத்தைக் கொண்ட இனத்தின் ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு எதிரானது. இப்படி சமூக முரண்பாட்டின் அனைத்துக் கூறிலும், ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே இயங்குகின்றது. சிறுபான்மையினரின் நலனில் இருந்து இயங்குகின்ற ஜனநாயகம், பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகார சமூக அமைப்பு வழியாகத்தான் பேணப்படுகின்றது. இந்த வகையில் தான் கல்வி முதல் சமூகத்தின் அனைத்துத் துறையும் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. மக்கள் தாமாக சுயமாக சிந்திக்க, செயலாற்ற அனுமதிப்பதை மறுப்பதின் சாரம் தான், ஜனநாயகமாகவுள்ளது. இதை மக்கள் எதிர்க்கின்ற போது, சர்வாதிகார பயங்கரவாத வன்முறை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. சுரண்டப்படும் சக மனிதர்கள் எந்தக் கேள்விகளுமின்றி அடங்கிவாழும் வாழ்க்கை முறை தான், ஜனநாயமாக காட்டப்படுகின்றது. இதுவே இன்றைய உலக எதார்த்தமாக உள்ளது.

 

இந்த எதார்த்தம் மனித அவலத்தின் பிறப்பிடமாக உள்ளது. மக்கள் ஒரு கஞ்சிக்கே வாழமுடியாத அவலம். ஒருபுறம் சுரண்டல் அவலங்கள், மறுபுறம் சமூக அவலங்கள். இந்த தனிச்சொத்துரிமை அமைப்பு கட்டமைத்துள்ள தனிச் சொத்துரிமைச் சட்டங்களையே, உலகமயமாதல் மறுக்கத் தொடங்கியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மையினர், சிறிய சொத்துடைய பெரும்பான்மையினரின் சொத்துக்களை பலவழிகளில் அபகரிப்பது ஜனநாயகமாகியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மை சட்டங்களை வளைத்து, தனக்கு இசைவாக உருவாக்கியும், இதற்கு அப்பால் சிறுபான்மை சொத்துரிமையை வன்முறை மூலமும் அபகரிக்கின்றது. சொத்துடமையை இழத்தல், சுரண்டல் வழிமுறைகளால் மட்டும் நடக்கவில்லை. சமூக முரண்பாடுகளால் மட்டும் நடக்கவில்லை. சொத்துடமையை அபகரிக்கும் பொதுச் சட்டங்களாலும் அபகரிக்கப்படுகின்றது. மக்கள் காலகாலமாக வாழ்ந்த வாழ்விடங்கள், வாழ்வை அளித்த நிலங்கள், அவர்களின் வாழ்வியல் அறிவு என அனைத்தையும், மக்களிடம் இருந்து பலாத்காரமாக புடுங்கி கொடுப்பதே ஜனநாயமாக பீற்றப்படுகின்றது. உலகமயமாதலில் உலகளாவிய சொத்தை சிலரின் தனிப்பட் சொத்தாக்கி வரும் சட்ட நடைமுறைகளைத் தான், இன்று ஜனநாயகம் என்கின்றனர்.

 

இதை எதிர்த்து மக்கள் தமது கருத்தை வெளியிடுகின்றனர், போராடுகின்றனர். இதை இந்த ஜனநாயகத்துக்கு எதிரானதாக காட்டுவது முதல் ஒடுக்குவது வரை, சாதாரணமான நிகழ்ச்சிப் போக்காகவே உள்ளது. இதைத்தான் ஜனநாயகம் என்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமையை மறுத்து, மக்கள் மேல் வன்முறையை ஏவுவதையே மனிதவுரிமை என்கின்றனர். இந்த நிலையில் அரச பயங்கரவாதமே, ஜனநாயகத்தின் அச்சாக மாறி நிற்கின்றது. இது உலகம் தளுவியது. மக்கள் இந்த ஜனநாயக அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தமது சொந்தவழிகளில் சொந்த கோரிக்கைகளுடன் போராடுகின்றனர். அரச பயங்கரவாதம் வன்முறையாகும் போது, இது தனிமனித பயங்கரவாதம் முதல் அணிதிரட்டப்பட்ட புரட்சிகர வன்முறையாக வளர்ச்சியுறுகின்றது.

 

மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கம் இந்த ஜனநாயகம், மக்களை வேட்டையாடுவதையே அன்றாட நிகழ்ச்சி போக்காகவும் அதுவே உலகம் தளுவியதாகியும் விட்டது. இதனால் இதன் எதிர்வினைகள் பலவாக மாறுகின்றது. ஜனநாயகபூர்வமான போராட்டம் முதல் புரட்சிகரமான வன்முறை போராட்டங்கள் உலகெங்கும் அன்றாடம் நடக்கின்றது. இந்த போராட்டத்தை வன்முறையாக, பயங்கரவாதமாக சித்தரிப்பதே அரச பயங்கரவாதத்தின் சுரண்டல் சர்வாதிகர அரசியலாகவுள்ளது.

 

இந்த புரட்சிகரமான வன்முறைக்குள் தனிமனித பயங்கரவாதத்தை, அதாவது மக்களை அவர்களின் பிரச்சனையூடாக அணிதிரட்டாத பயங்கரவாதத்தை நாம் உள்ளடக்கி விடவில்லை. இருந்தபோதும் கூட தனிமனித வன்முறைக்கு பின்னால் உள்ள காரணம், அரச பயங்கரவாதத்தின் விளைவுகளே என்பதை அடித்துக் கூறுகின்றோம்.

 

பொதுவாக ஜனநாயகம் பேசும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், மக்கள் திரள் அமைப்புக்களால் நிகழ்த்தப்படுகின்றது. மற்றது உதிரி வர்க்க நபர்களால் அல்லது உதிரி குட்டிபூர்சுவா குழுக்கால் மக்களின் பிரச்சனைகளில் இருந்து விலகி நடத்தப்படுகின்றது. இந்த வகையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான வன்முறைகளே இவைகள். மக்களுக்கு எதிரான சுரண்டும் அரசபயங்கரவாதமே, எதிரான வன்முறைக்கு அரசியல் அடிப்படையாகும். இதில் அந்த மக்கள் சார்ந்து நிற்கத் தவறுகின்ற போக்கின் மீது, மக்கள் சார்ந்து நிற்ககோரும் எல்லைக்குள் தான், மக்களைச் சாராத வன்முறை மீதான எதிர்வினையையும் போராட்டத்தையும் கோருகின்றது.

 

புரட்சிகரமான மக்கள் வன்முறை, மக்களுக்கு எதிரான அனைத்துக் கூறுகளின் மீதும் சரியானதும் நியாயமானதுமாகும். இதை மக்கள் தமது சொந்த போராட்ட வழிமுறைகள் மூலம் தெரிவு செய்கின்றனர். புரட்சிகர வன்முறை ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து சமூகக் கோரிக்கையையும் உள்வாங்கி செயல்படுவது மட்டும் தான் முரணற்றது. அந்த வகையிலான போராட்டம், மக்களின் ஜனநாயகத்தை மீட்பதை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள், இதை சிறுபான்மை சுரண்டும் வர்க்கம் மீதான போராட்டத்தில் எதிர்ப்பதில் வன்முறை வடிவமும் ஒன்று.

 

இங்கு நிகழும் வன்முறை மீது மனிதாபிமானப் பிரச்சனையை, எப்படி புரட்சிகரமான வன்முறையாக கையாள்வது என்பதை அவர்கள் தமது சொந்த நடைமுறையில் புரிந்து கொள்கின்றனர். அரச பயங்கரவாதத்தை நடத்துகின்ற அதன் உறுப்பினர்கள், அதை வழி நடத்துகின்றவர்கள் மீதான புரட்சிகர வன்முறைகள், மனிதாபிமான பிரச்சனைகளை எழுப்புவதில்லை. அங்கு ஒரு வர்க்கத்தின் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தையே நடத்துகின்றனர்.

 

மனித அவலத்தை உருவாக்கும் மனிதாபிமானத்துக்கு எதிரான மனிதவிரோதிகள், மனிதாபிமானிகளாகவே இருக்கமுடியாது. இங்கு இருக்கலாம் என்பது, மனிதாபிமானத்துக்கே எதிரானதாகவே இருக்கும். குடும்ப உறுப்புகள் சந்திக்கும் மனிதாபிமான பிரச்சனைகளை, புரட்சிகர வன்முறை நிராகரிப்பதில்லை. அதை புரட்சிகரமான மக்கள் திரள் வழிகளில் அணுகுகின்றது, சக மனிதன் என்ற எல்லைக்குள், அவனின் உணர்வுகளையும் உரிமைகளையும் பரஸ்பரம் அங்கீகரித்து அணுகி தீர்வு காண்கின்றது. மாறாக அவர்களை எதிரியாக காண்பதில்லை. புரட்சிகரமான மக்கள் திரளின் ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் எந்த எதிர்புரட்சிகர நபர் சார்ந்த சமூக உறுப்பினரை உள்வாங்கி, அவர்களையும் புரட்சிகர உறுப்பாகவே கண்டு போராடுகின்றது.

 

புரட்சிகர மக்களின் அதிகாரத்தை பொறுத்து, அந்த சமூக உறுப்பினரின் வாழ்வுக்கு வழிவகைகளை செய்து கொடுக்கின்றது. புரட்சிகரமான வன்முறை மனிதனை மனிதன் மதிக்கும் எந்த சக மனிதனையும் அழிப்பதுமில்லை, தண்டிப்பதுமில்லை. மாறாக புரட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படும் எதிரியை கூட, வென்று எடுக்க முனைகின்றது.

 

இந்த வகையில் தான் புரட்சிகரமான போராட்டங்கள், வன்முறைகள் கையாளப்படுகின்றது. பரந்துபட்ட மக்களின் தேவைகள், குறிக்கோள்களை அடைத்தல் என்பது, அதன் மையமான நோக்கமாக உள்ளது. சமூக ரீதியாக ஒடுக்கவோ, சுரண்டவோ அனுமதிக்காத போராட்டங்கள், வன்முறைகள், இதற்கு எதிரானவர்கள் மீது கையாளுகின்றது.

 

இதை மறுக்கின்ற, சக மனிதனை ஒடுக்குகின்ற, மற்றவன் உழைப்பை சுரண்ட விரும்புகின்ற உதிரியாக கொண்ட சமூக விரோத உறுப்புக்கள், தம்மை பாதுகாக்க சித்தாந்த ரீதியாக மனிதாபிமானப் பிரச்சனை பற்றி கூச்சல் போடுகின்றனர். ஆனால் அவர்கள் சாதாரணமாக இயல்பில் நிலவுகின்ற மனிதாபிமான சமூகப் பிரச்சனைகள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதே, அந்த ஒட்டுண்ணி வர்க்கத்தின் மிகச் சிறந்த அடையாளமாகும். சமூக ரீதியாகவே அவலங்களை உருவாக்கி, மனிதாபிமான பிரச்சனைகள் உற்பத்தி செய்யும் இழிவான வர்க்கமும் இவாகள் தான். இவர்கள் புரட்சிகர வன்முறை நிகழும் போது, அதை ஓட்டி எழுப்பும் ஆபாசமான மனிதாபிமானக் கூச்சல்கள் அனைத்தும், சக மனிதனை சுரண்டும் உரிமைக்காகவும், சமூக ஒடுக்குமுறை செய்து வாழும் அற்பத்தனத்தை காப்பதற்காகவும் தான். இழிந்து போன இந்த வர்க்கம், தான் கொண்டுள்ள மனித முகத்தின் பின் இதைத் தவிர வேறு எதையும் காட்சிப்படுத்துவது கிடையாது.

பி.இரயாகரன்
28.03.2007


பி.இரயாகரன் - சமர்