பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை

பிலிப்பைன்ஸில் தனிநாட்டுக்காக போராடி வரும் மின்தானாவோ (Mindanao) போராளிகளுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்கனை பிலிப்பீனிய இராணுவம் நடத்தி வருகிறது. பிலிப்பீனியப் பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் பங்குகொண்டதாக தெரிவித்திருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் "பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்களின் இலக்கு" என்றும் "தற்பாதுகாப்புக்காக தாக்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை" என்றும் சொல்லியிருந்தது. இத்தாக்குதல்களில் மின்தானாவைச் சேர்ந்த அப்பாவி மக்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.



யாரும் எங்கும் எப்போதும் கொல்லப்படலாம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதன் பெயரால்.


தற்கொலைகள் சொல்லும் உண்மை

தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தனது ஏகாதிபத்திய ஆசைகளுக்காக உலகின் ஏனைய நாடுகளை அடக்கியாள ஆசைப்படும் அமெரிக்க அரசின் பேராசைக்கான பரிசாகவே இதைக் கொள்ள முடியும். உலகெங்கும் "ஜனநாயகம்" பற்றிப் பேசும் அமெரிக்கா தனது படைவீரர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுப்பதில்லை. வெளியே தெரிகின்ற பகட்டான அமெரிக்காவிற்குள்ளே இருப்பதல்லாம் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளுமே. வாய்திறந்து எதையும் பேச முடியாத அமெரிக்க படைவீரர்களால் செய்யக் கூடியது தற்கொலை மட்டும்தானா? என்பது ஒருபுறமிருக்க இந்தத் தற்கொலைகளின் பின்னால் இருக்கின்ற ஏழ்மையும் இங்கே கவனிப்புக்குள்ளாக வேண்டியது. சொந்த நாட்டு மக்களின் நலனையே கவனிக்காத அமெரிக்க உலக மக்களின் நலனுக்காக உலகெங்கும் போர் செய்கிறது.


யாருடைய நாடு

பொலிவிய அரசாங்கம் தனது நாட்டுக்குள் வரவிரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் விசா அனுமதி பெற்ற பின்னரே தனது நாட்டுக்குள் வர முடியும் என்று ஒரு புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதுவரை காலமும் பொலிவியாவிற்குள் வருவதற்கு விசா அனுமதி தேவையில்லை. நாட்டின் பாதுகாப்புக் கருதியும் நலன் கருதியும் இப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிவிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இப்புதிய நடைமுறையை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்க அரசு இவ்வாறான செயற்பாடுகளால் அமெரிக்க - பொலிவிய இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்திருக்கிறது. ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டுப் பிரஜை விசா பெற்றுப்போவது தான் நடைமுறையாக உள்ளது. விசா இல்லாமல் ஒரு நாட்டுப் பிரஜை இன்னொரு நாட்டிற்குள் நுழைவது சட்டவிரோதம். வழமையிலேயே சட்டவிரோதமான செயற்பாடுகளைச் செய்யும் அமெரிக்கா, பொலிவிய தனது மாநிலங்களில் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதோ என்னமோ.

 

http://tamilgarden.blogspot.com/2008/09/blog-post_11.html