பிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி
விடுகின்றது. இன்றைய முதலாளித்துவமே சிறந்தது இறுதியானது என்ற கற்பனைகளை தகர்க்கின்ற ஒரு அரசியல் பணியை இப் போராட்டம் பரந்துபட்ட மக்கள் முன் செய்கின்றது. மூலதனத்துக்கும் அரசுக்கும் உள்ள இனிய உறவை அம்பலப்படுத்திவிடுகின்றது. இவர்கள் கூறும் ஜனநாயகத்தின் போலித்தனத்தையும் தன்னெழுச்சியான இப் போராட்டங்கள் மீண்டும் மீண்டும் தோலுரிக்கின்றது.
பிரஞ்சு அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய சட்டம், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கே ஆப்பு வைத்துள்ளது. கல்வியை முடித்த பின்பு, அவர்களை கிடைக்கும் வேலைகளில் இருந்து எந்தநேரமும் எப்படியும் விரட்டியடிக்கும் சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. முன்பு இருந்த சட்டம் மிக குறுகிய ஒரு இரு மாதங்களுக்குள் மட்டும, வேலையை விட்டு துரத்த மூலதனத்துக்கு வழி செய்தது. தற்போதைய புதிய சட்டம் இதை பல வருடங்களுக்கு இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது. சட்டத்தின் சாரம், வேலையில் நிரந்தரமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் மூலதனத்துக்கு கிடையாது.
இது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. அச்சமும், பீதியும் கொண்ட வாழ்வாக மாற்றி, இதையே இளைஞர் சழுதாயத்தின் உணர்வாக மாற்றுகின்றது. மூலதனத்தின் கொடூரங்களுக்கு அடிபணிந்து கூனிக்கூறுகி நடக்க வைக்கும் இச்சட்டம், இளைஞர்களின் இளமையை இழிவுபடுத்துகின்றது. நவீன அடிமையாக மூலதனத்தின் இழிவுக்குள்ளாகி நலிந்து கிடப்பதையே இச்சட்டம் ஜனநாயகமென்று உறுதிசெய்கின்றது. இதன் மூலம் இளைஞர்களின் இயல்பான போராட்ட குணாம்சத்தை சிறுவயதிலேயே நலமடித்துவிட இது வழிசமைக்கின்றது. இதை எதிர்த்து மாணவர்கள் தமது சொந்த போர் குணாம்சத்தின் மூலம் பதிலளிக்கின்றனர்.
இந்த சட்டத்தை மீளப் பெறக்கோரி தன்னினெழுச்சியாக மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இவர்களுடன் பெற்றோர்களும், தொழிச்சங்கங்களும், எதிர்கட்சிகளும் படிப்படியாக இணைந்து வருகின்றனர். 70 சதவீதமான மக்கள் இச்சட்டத்தை முழுமையாக வாபஸ் வாங்கக் கோருகின்றனர்.
1968 க்கு பின்னால் மாணவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்துச் சட்டங்களும் மாணவர்களின் வீரமிக்க போராட்டங்களினால் திருப்பிப்பெறப்பட்டன. இந்தக் கதியே இச்சட்டத்துக்கு வருவது தவிர்க்க முடியாது. மாணவர்களின் கொந்தளிப்பான போர்க்குணாம்சமிக்க அரசியல் போராட்டத்தைக் கண்டு பிரஞ்சு அரசு நடுங்குகின்றது.
மிக அண்மையில் தான் வலதுசாரிய நாசி கோட்பாடுகளால் தூண்டப்பட்டு, கறுப்பு அரபு இனத்து மக்கள் ஒரு அராஜகத்தின் மூலம் அரசுக்கு பதிலடி கொடுத்தனர். இனவாத நிறவாத அரசின் கொள்கையால், ஆளும் வர்க்கம் பெற்றுவந்த ஆதரவு தளத்தை மாணவர் போராட்டம் தவிடுபொடியாக்கி வருகின்றது.
ஜனநாயகம் சுதந்திரம் மூலதனத்துக்கு தானே ஒழி மக்களுக்கு அல்ல. மக்களுக்கு எதிரான இச்சட்டங்கள் மக்களின் பெரும்பான்மை விருப்பை கண்டு கொள்வதில்லை. அதற்கு பதிலாக பொலிஸ் அடக்குமுறையை ஏவிவிடுகின்றனர். இதன் எதிர்வினையாக வீதிகளில் வன்முறை உருவாகுகின்றது. அரசின் மக்கள் விரோத கொள்கையால் மீண்டும் பிரான்ஸ் வன்முறைக்குள்ளாகி எரிகின்ற காட்சிகள், அரசின் அடக்குமுறையின் எதிர்வினையாக உள்ளது.
மக்கள் போராட வேண்டியதையும், போராடித் தான் மக்கள் வாழமுடியும் என்பதையும், பிரஞ்சு மாணவர்கள் மீண்டும் உலகுக்கு புகட்டத் தொடங்கியுள்ளனர்.
17.03.2006