ஒருவர் பிறக்கும் தேதியைத் தெரிந்து கொள்வதோ அல்லது இறக்கும் நாளை முன்கூட்டியே அறிந்து கொள்வதோ இன்றைய விஞ்ஞான உலகில் ஒன்றும் புதுமையான விசயமல்ல. மரணத்துக்கு அஞ்சும் வலிமையை இழக்கும் மக்கள், இந்த கொடிய சுரண்டும் உலகில் தமது வாழ்வுக்காக நித்தம் நித்தம் செத்துப்பிழைக்கும் மக்கள் இந்தச் சுரண்டலை எதிர்த்து வாழ்நாள் பூராகவே வாழ்ந்துவிடுகிற இந்த உழைக்கும் மக்கள் இவர்கள் தான் புரட்சியின் பாக்கியசாலிகள்!
உலகின் பத்திலொரு பகுதியை தம் இராட்சியமாகக் கொண்டிருந்த ரோம் சாம்ராச்சியத்தில் ’’மண்ணுலகப் பேரரசு’’ இயேசுவின் பெயரால் கோரிக்கையாக இருந்தது. உலகின் நான்கில் ஒரு பகுதியை தம் இராட்சியமாகக் கொண்டிருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்திய சாம்ராச்சியத்தில் ’’சுயராச்சியம்’’ காந்தியின் கோரிக்கையாக இருந்தது. இரண்டும் அகிம்சை வழிப்பட்டதால் இன்று ஏகாதிபத்தியங்கள் உட்பட பலராலும் போற்றி பேசப்படுகின்றன. இயேசுவின் காலத்தில் ரோம் சாம்ராச்சியத்துக்கு எதிராக செலத்தேனியா ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் பற்றியோ, காந்தி காலத்தில் உழவர் இயக்கங்கள் பற்றியோ இந்த சுரண்டும் வர்க்கங்கள் வாய்திறப்பதுமில்லை, வாழ விட்டதுமில்லை.
காந்தியின் சுயராச்சியக் கோரிக்கையானது அவர் பாசையிலேயே சொல்வதென்றால் அது ’’இராமர் இராச்சியம்’’;. காந்தியின் அகிம்சைப் போரில் சிறைவாசம் செல்லுகின்ற அறப்போராட்ட வீரர்களின் துன்பங்களை தர்ம வீரர்களின் துன்பமாக, இராமர் வனவாசம் போகின்ற நோவோடு ஒப்பிட்டு இலக்கியப் புலம்பலாக அதை எடுத்தியம்பினார்கள். இராமர் வனவாசம் போகும் போது, கோசலதேசவாசிகள் வாடி வதங்கியதாகவும், வீழ்ந்து புலம்பியதாகவும், இரத்தக்கண்ணீர் வடித்ததாகவும், பேசும் கிளிகளும் பாடும் பறவைகளும் கதறியதாகவும், கன்றும் பசுவும் கதறி அழுததாகவும், கருவின் சிசுக்கள் கத்தியதாகவும், பூவும் அழுததாகவும், புழுவும் துடித்ததாகவும்… இந்த அறப்போர் வீரர்களுக்கு ஒப்புவமையாக்கினார்கள்.
ஆனால் இந்த கற்பனை வாதிகளுக்கு எட்டாத நிசம் கையளவு தூரத்திலே தான் இருந்தது. பாக்கியசாலிகளின் வாழ்வால் எழுதப்பட்ட அற்புதமான அந்த ஒர் அழகிய இலக்கியம்!
இற்றைக்கு 75ந்து வருடங்களுக்கு முன்பு இவ் அழகிய இலக்கியம் படைப்பாகியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிப்பட்டபோது அது பிறந்தது. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டவுடன் பிரிட்டிஸ் அரசு இவர்கள் பற்றிய நூல்கள் அனைத்தையும் தடைசெய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 11 தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட ஐந்து மாத இடைவெளிக்குள் அவர்கள் பற்றிய புத்தகமொன்று 6 தடவை பதிப்பைப் பெற்றிருந்தது. ஆறாவது பதிப்பு மட்டும் 5000 பதிப்பை பெற்றிருந்தது.
1931.03.23 மாலை 3.00 மணி…..
லாகூர் சிறையின் போக்குவரத்துக்கள் நின்றுவிட்டன. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் வழக்கம் போலவே முகமகிழ்ச்சியுடன் இருந்தனர். மறுநாட் காலையில் தங்களைத் தூக்கிலிடப் போவதாகவே நினைத்துக் கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக கைதிகள் அனைவரும் இன்று முன்னதாகவே அவரவர் அறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் வலிமைமிகு சட்டத்தின் காவலாளிகளான ’மாஜிஸ்ரேட்’ மற்றும் சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர்கள் ’ஜெனரல்’ முதலியோர் வழமைபோல பெரிய வாயில் வழியாக உள்நுழையாமல் மறைவாக விசேட விசாரணை கோட்டுக்குப் போகும் வாயில் வழியாகப் புகுந்து வந்தனர். ’மாஜிஸ்ரேட்’ வந்து பகத்சிங்கை அழைத்தபோது ’’’மாஜிஸ்ரேட்’ அவர்களே! தாங்கள் அதிஸ்டசாலி! சுதந்திரப் போராட்டத்தில் இறக்கும் வீரர் எவ்விதம் தூக்கு மேடையைத் தழுவுவர் என்பதை நாங்கள் தங்களுக்கு இதோ நேரில் காட்டுகிறோம்’’ எனப் பகத்சிங் பதிலளித்தார்.
இதைக்கேட்ட ’மாஜிஸ்ரேட்’ கிறுகிறுத்துப்போனார். அவர்கள் மூவரையும் அறைகளை விட்டு வெளியே கொண்டு வந்ததும், சிறையின் மூலைமுடுக்குக்களில் இருந்து கைதிகள் ’’புரட்சி நீடூழி வாழ்க’’,’’ஏகாதிபத்தியம் ஒழிக’’,’’ஏழைகள் வாழ்க’’ என ஆரவாரித்து கூச்சலாக எழுப்பினர். பிறகு, அவர்கள் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
’’உயிர் பிரிந்திடினும் தாய்திருநாடே!
பிரியாதே உந்தன் இனிய நினைவுகள்:
கலந்திடும் இந்த மண் உந்தன் மண்ணிலே
கலந்ததால் இந்த மண்ணும்
மணங்கமழும் உனதன்பாலே!’’ என்று மூவரும் கைகோர்த்தபடி, துள்ளு நடைபோட்டு ஆனந்தமாகப் பாடிச் சென்றனர். தூக்கு மேடைக்கு அருகில் சென்றதும் மூவரும் அதன் மீது தாவி ஏற முயன்றனர். சம்பிரதாயப்படி சில காரியங்கள் செய்யப்பட்டபின் அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பகத்சிங் நடுவிலும்,வலது பக்கமாக ராஜகுருவும், இடது பறமாக சுக்தேவ்வும் நிறுத்தப்பட்டனர். சுருக்குக் கயிறு அவர்களின் கழுத்தில் மாட்டப்பட்டது. தங்கள் கண்களை துணியால் மறைக்கவேண்டாம் என அவர்கள் சொல்லிவிட்டனர். தாம் இறக்கும் போது கூட தம் தாய்நாட்டை பார்த்தபடியே இறக்கவேண்டும் எனச் சொன்னனர். மூவரும் தூக்குக்கயிற்றை காதலோடு முத்தமிட்டனர். பின்னர் ஆனந்தம் பீறிட்டெழ ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது சுக்தேவ் ’’ ஒரு நிமிடம் சற்றே பிரிந்திருந்தாலும், மீண்டும் மூவரும் ஒன்று சேர்ந்து அஸாத், பகவதி சரணர், யதீந்திரதாஸ் ஆகியோர்களுடன் கூடி, நமது கட்சியின் மத்திய கமிட்டிக்கூட்டத்தை நடத்தச் சொல்லலாம்,’’ என்றார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தூக்குப் பலகை தட்டிவிடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்துக்குள் உயிர் துறந்தார். மெலிந்திருந்த ஏனைய இருவரும் இரண்டொரு விநாடிகளில் உயிர் துறந்தனர். 40 நிமிடங்களின் பின்னர் அவர்களது உடல்கள் இறக்கப்பட்டன.
1931.03.23 மாலை 7.45மணி….
பகசிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்களின் உடல்கள் 8.30 மணிக்கு ஒரு மோட்டார் வண்டியில் ஏற்றப்பட்டதாகவும், 60 மைல்களுக்கு அப்பாலுள்ள ஸட்லிஜிக் நதிக்கரைக்குக் கொண்டுபோகப்பட்டதாவும், பின்னர் 11.45 மணிக்கு தீயிடப்பட்டதாகவும், அப்போது சீக்கிய புரோகிதர்களும், இந்துப்புரோகிதர்களும் கூட இருந்து கிரிகை நடத்தியதாகவும், அதிகாலை 4 மணிக்குள் உடல்கள் நன்கு வெந்துவிட்டதாவும், உடனே சாம்பரையும், எலும்பையும் சாஸ்திரப்படி பொறுக்கி நதியிலே எறிந்ததாகவும் பிரிட்டிஸ் அதிகாரிகள் செய்தி வெளியிட்டனர்.
ஆனால், 24 வயது நிரம்பிய பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட செய்தி கிடைத்ததும் அவர்களது பெற்றார் உறவினர்களும்; மக்களும் உடலைப் பார்வையிடச் சென்றனர். பிரிட்டிஸ் அதிகாரிகள் மக்கள் பார்வை இடுவதை மறுத்ததால் உறவினர்களும் பெற்றோரும் உடல்களைப் பார்க்காமலே திரும்பினர். 23ம் திகதி இரவே லாகூரில் இச் செய்தி தீ போலப் பரவியது. இளைஞர்களும் பெண்களும் மக்கள் திரளும் கூட்டாகக் கிளம்பியது. ’’பகத்சிங் வாழ்க!’’’’ஏகாதிபத்தியம் ஒழிக!!’’ எனக் கூச்சலிட்டவாறு இரவெல்லாம் தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.
1931.03.24
காலையிலே மாணவர்களும், இளைஞர்களும் கூடி, புரட்சி ஓங்குக! எனக் கோசமிட்டவாறு வீதிகளைச் சுற்றி வந்தனர். கடைகளெல்லாம் மூடப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. பகத்சிங்கினதும், ஏனைய தோழர்களினதும் உறவினர்கள் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து வீரர்களின் சாம்பரையும், ஏனைய கரிந்து கிடந்த பாகங்களையும் எடுத்து வந்தனர். உடனே அவை ஒரு பாடையில் வைக்கப்பட்டன. அவை சுமந்து செல்லப்பட்டது. இந்திய உடையிலிருந்த ஐரோப்பிய பெண்ணொருத்தி பகத்சிங்கின் தாயாரின் காலைத் தொட்டு முத்தமிட்டாள். வழி நெடுக மக்கள் பாடையின் மீது மாரியும் பன்னீரும் பொழிந்தனர். பின்னர் ரவி நதிக்கரையிலே தகனம் நடந்தது.
24ம் திகதி காலை முதல் வடக்கே இமயம் முதல் தெற்கெ கன்னியாகுமரி வரை நகரிலும் கிராமங்களிலும் துக்க ஊர்வலங்கள் நடந்தன. மக்களின் கொந்தளிப்பைக் கண்ட அரசு ’’உடலங்களைக் கொண்டு போன பொழுது, பிரிட்டிஸ் துருப்புக்களோ, இந்திய துருப்புக்களோ உடன் செல்லவில்லை: எரிக்கும் முன்பு உடல்களை துண்டாக்கவில்லை: பெற்றோல் எண்ணெய் ஊற்றிக் கொழுத்தவுமில்லை: உடல்களின் பாகங்கள் எதுவும் வெந்து சாம்பல் ஆகாமல் இல்லை: சாஸ்திரப்படியே ஈமைக்கிரிகைகள் நடந்தன’’ என அறிக்கை விட்டும் மக்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை.
1931.03.25 கராச்சி…
காங்கிரஸ் தலைவரை வரவேற்பதற்கான கூட்டம் சோகையிழந்து காணப்பட்டது. காந்தி வந்து இறங்கியதும்.. ’’தலைவர்களே! திரும்பிச் செல்லுங்கள்! என்று தொண்டர்களும் இளைஞர்களும் கூச்சல் போட்டனர். ஒரு இளைஞன் கறுப்பு மலரொன்றை காந்திக்கு பரிசாகக் கொடுத்தான். ’’பகத்சிங்கைக் கொன்ற பேர்வழி எங்கே?’’ என வாலிபர் கத்தினர். இளைஞர்களின் கொதிப்பை சாந்தப்படுத்த காங்கிரஸ் வழிகளைத் தேடியது.
மாலை ஒரு பெருங்கூட்டம் நடந்தது. வங்காளத் தலைவரான பாபு ஸென் குப்தா பேசமுயன்றார். இளைஞர்களோ அவரை பேசவிடாது ’’காந்தி எதற்காக? அவர் ஒழியட்டும்’’என பெரும் குரலெடுத்து கூச்சல் போட்டனர். அவர் பேசமுடியாமல் இறங்கினார். வங்க வாலிபரின் தலைவரான சுபாஸ் சந்திரபோசின் தலைமையில் வாலிபர் கூடினர். காந்தி - இர்வின் ஒப்பந்தம் தூக்கி எறியப்படவேண்டுமென முழங்கினர்….
ஏழை எளிய உழைக்கும் மக்களினது சுய அதிகாரத்தை கோரிய பகத்சிங்கும் அவரது தோழர்களும் தமது புரட்சிகர கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக, அதை அச்சேற்றும் செய்தி ஏடாக, ஏகாதிபத்திய பிரிட்டிஸ் அரசின் நிர்வாகத்தை எதிர்க்கும் பீரங்கியாக தமது சிறை வாழ்வை பயன்படுத்தினர். சிறைக்குள் இருந்து கொண்டே அரசுடனும், காந்தியுடனும் புரட்சியாளர்களின் விட்டுக்கொடுக்காத போராட்டத்தை தம் உயிரைப் பணயம் வைத்து நடத்தினர். பகத்சிங்கும் அவரது சகாக்களும், நீதிமன்றம் ஒரு கேலிக்கூத்து என அறிவித்து, அதன் நடவடிக்கைகளில் தாங்கள் பங்குகொள்ளப் போவதில்லை என்று மறுத்து எழுதிய கடிதம்…
கமிஷனர், சிறப்பு விசாரணை மன்றம் (டிரிப்யூனல்)
லாகூர் சதிவழக்கு, லாகூர்.
ஐயா,
விசாரணையின் தொடக்கத்தில், நான் உட்பட எனது ஆறு சகாக்களின் சார்பில், கீழ்க்கண்ட விளக்கங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். இது அதிகாரபூர்வமான பதிவேட்டில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
நீதிமன்ற நடவடிக்கைகளில், நாங்கள் எந்த முறையிலும் பங்குபெற விரும்பவில்லை. ஏனெனில், இந்த அரசாங்கம், சமத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், சட்டபூர்வமான அடிப்படையில் இது நிலைநாட்டப்படவில்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். மனிதன்தான், எல்லா சக்திக்கும் அடிப்படை என்று நாங்கள் திட நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். மக்களால் அளிக்கப்படாத எந்த ஒரு அதிகாரத்தையும் எந்த ஒரு தனிமனிதரோ அல்லது அரசோ உரிமை கொண்டாட முடியாது. இந்தக் கொள்கைகளுக்கு, இந்த அரசு எதிராக இருப்பதால் இது உயிருடன் இருப்பதே செல்லுபடியற்றதாகும். நாடுகளைக் கொள்ளையடித்திடுவதற்காக ஒன்று சேர்ந்திடும் அரசுகள் வாளின் சக்தியினாலன்றி வேறு எந்த வழியிலும், உயிருடன் இருப்பதற்கான ஆதாரமே இல்லை. அதனால்தான் அவை மிருகத்தனமான படைபலத்துடன், மக்களின் சட்டபூர்வமான ஆசைகளையும் அபிலாஷைகளையும், விடுதலை மற்றும் சுதந்திரம் போன்ற கருத்துக்களையும் நசுக்கி நாசப்படுத்துகின்றன.
இத்தகைய அரசுகள், குறிப்பாக விதியற்ற மற்றும் விருப்பமற்ற இந்திய நாட்டின்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ள பிரிட்டிஸ் அரசாங்கம் கொள்ளைக்காரர்கள், முரட்டுத் தடியர்கள் மற்றும் சூறையாடுவோர்களைக் கொண்ட ஒரு காலிக் கும்பலே ஆகும். இந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தும் அவர்களின் ஒற்றுமையை நிலைகுலையச் செய்வதற்கும் என, எல்லா வகையான அதிகாரங்களையும் அவர்கள் ஒன்று திரட்டியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கின் பெயரால், பிரிட்டிஸ் அரசு, தனது எதிரிகளை, தனது இரகசியங்களை வெட்ட வெளிச்சமாக்குவோர்களை நசுக்குகிறது.
ஏகாதிபத்தியம் என்பது, பெருமெடுப்பிலான கொள்ளைக்கான சதித்திட்டமே தவிர, வேறு எதுவுமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். மனிதனை மனிதனே சுரண்டுவதும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டுவதுமான, சுய ஆதாய நோக்குடைய சுரண்டலின் மட்டுமீறிய ஒரு நடவடிக்கைதான் ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியவாதிகள் நீதிமன்றங்களையும், சட்ட விதிகளையும் கொலை செய்வது மட்டுமல்ல மிகப்பயங்கரமான அட்டூழியங்களையும் இழைக்கிறார்கள். மக்களை முழுமையான அளவிற்குச் சுரண்டி, சுய ஆதாயம் தேடும் சுயநல நோக்குடன் அவர்கள், போர் போன்ற பயங்கரமான குற்றங்களை இழைக்கிறார்கள். அவர்களின் வெறுக்கத்தக்க நாசகரமான சதித் திட்டங்களுக்கு, மௌனமாக அடிபணிய மறுக்கும் அல்லது அவர்களின் கொடுமையான, சுரண்டும் தேவைகளுக்கு வளைந்துகொடுத்து, வழிவிடமால் போகும் அப்பாவி மக்களின் குருதியைப் பாயச்செய்வதற்கும், இந்த ஏகாதிபத்திய வாதிகள் தயங்குவதில்லை. சட்டம், ஒழுங்குப் பராமரிப்பு என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், அவர்கள் அத்துமீறிச் செயல்படுகிறார்கள். எல்லாவகையான அடக்குமுறை அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அவித்ழ்துவிடுகிறார்கள்.
சுதந்திரம் என்பது, மனிதனிடம் இருந்து பிரிக்க முடியாத அவனுடைய ஒரு உரிமை என்றே நாங்கள் நம்புகிறோம். ஓவ்வொரு மனிதனுக்கும் தனது உழைப்பின் பலனை அனுபவிப்பது போன்ற, எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஓவ்வொரு நாட்டுக்கும் தனது இயற்கைவளங்கள் அனைத்தின் மீதும், ஆட்சி உரிமை இருக்கிறது. இந்த அடிப்படை உரிமைகளை ஒரு அரசாங்கம், தம் மக்களுக்கு மறுக்குமேயானால், இத்தகைய அரசு ஒன்றுக்கு முடிவுகட்டச் செய்வதான உரிமை, அந்த நாட்டு மக்களுக்கு உண்டு: அது, அவர்களின் கடமையாகும். நாங்கள் எந்த இலட்சியங்களுக்காக இன்று செத்து மடிந்து வருகிறோமோ, அந்தக் கொள்கைகளையெல்லாம், பிரிட்டீஸ் அரசாங்கம் முற்றிலுமாக எதிர்த்துவரும் காரணத்தினால், நாட்டின் புரட்சியைத் தோற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லா வழிமுறைகளுமே அறநெறியின் அடிப்படையில் நியாயமானதுதான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய கட்டமைப்பில், சமூக-பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில், புரட்சிகர மாற்றங்கள் செய்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். தற்போதுள்ள சமுதாயத்தை, புதிதாக, ஒழுங்காக, ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயமாகத்திருத்தி அமைக்க விரும்புகிறோம். மனிதனை மனிதனே சுரண்டுவதான போக்கை சாத்தியமற்றதாக ஆக்குவதன் மூலம், எல்லாத் துறைகளிலும் நம்பகமான சுதந்திரத்திற்கு வழிகோலவே, இந்த முயற்சி. சமுதாயக் கட்டமைப்பு முழுவதுமாகவே, அடியோடு மாற்றியமைக்கப்பட்டு, அதனிடத்தில், சோசலிஸ சமுதாயம் ஒன்று நிலைநாட்டப்படாத வரை, இந்த உலகம், நிலைதடுமாற்றம் கொண்டு பேரழிவு ஒன்றின் வேதனைகளில் வெந்து வாடிக்கொண்டேதான் இருந்துவரும் என்பது எங்கள் கருத்து.
அமைதியான முறையிலோ மற்றெந்த வழியிலோ புரட்சிகரமான குறிக்கோள்களை நிலைநாட்டுவதைப் பொறுத்தமட்டில், ஆட்சியாளர்களின் மனவிருப்பத்தில் தான் இது அடங்கியுள்ளது என்று, நாங்கள் கூறுகிறோம். புரட்சியாளர்கள் தங்கள் உள்ளத்தில் அன்பையும், மனிதாபிமானத்தையும் கொண்டிருப்பதால், அவர்கள் மனிதகுலத்தை வழிபடுபவர்கள். நாங்கள் நிலையான மற்றும் நீதியின் அடிப்படையில் அமைதியை விரும்புகிறோம். பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிமுனையின் துணையோடும், கோழைத்தனத்திலிருந்து உதித்த பொய்யான செயற்கை அமைதியை நாங்கள் விரும்புவதில்லை.
…..மக்களின் அபிலாசைகளின் அடிப்படையில், கூட்டான நலன்களுக்காக மட்டுமே வரையப்பட்டுள்ள செல்லுபடியாகத்தக்க சட்டங்களில் இருந்துதான், அரசு சட்டபூர்வமான அதிகாரத்தை அடைய முடியும். சட்டங்களை வகுப்பவர்கள் உட்பட யாருமே, இதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியாது. மக்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வரைதான், சட்டத்தின் புனிதத்துவத்தை பராமரித்து வரமுடியும். சுய ஆதாயத்துக்காக பிறரைச் சுரண்டும் கும்பல் ஒன்றின் கரங்களில் ஒரு கருவியாகிவிடும்போது அது: தனது புனிதத்தன்மையை இழந்துவிடுகிறது……..சுய ஆதாயச் சுரண்டல்களின் கருவியாய் இருந்துவரும் பிரிட்டிஸ் நீதிமன்றங்கள், நீதியை அளித்திட முடியாது: குறிப்பாக அரசாங்க நலன்களுக்கும், பொதுமக்களின் நலன்களுக்கும் இடையே மோதல் இருந்துவரும் அரசியல் துறையில், அவை நீதியை வழங்கிட முடியாது. இந்த நீதிமன்றங்கள், நீதியை ஏளனம் செய்வதான அமைப்புக்களே அன்றி வேறெதுவுமில்லை என்பது நமக்குத் தெரியும்…
இவ்வாறு தங்கள் கருத்தை முழு உலகத்துக்குமே தெரியப்படுத்தினர்.
பகத்சிங் 1907ம் ஆண்டு செப்ரெம்பர் 28ம் திகதி குகைரா கிரந்த் என்னும் கிராமத்தில் பிறந்தார். உழவர் இயக்கத்தில் ஈடுபட்ட அவருடைய சிறிய தகப்பனாரை பிரிட்டிஸ் அரசாங்கம் லாலா லஜ்பத்ராயுடன் பர்மாவுக்கு நாடுகடத்தியபோது, உழவர்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புப் போருக்குப் பயந்து வெள்ளை அரசு நவம்பரில் அவரை விடுதலை செய்தது. இந்த மகிழ்சியான செய்திகளின் பூரிப்பால் பகத்சிங்கின் பாட்டி பாக்கியசாலி என்ற பொருள்கொண்ட ’பகத்சிங்’ என்ற பெயரை இவருக்குச் சூட்டினார்.
1919.04.13ம் திகதி ஜாலியான்வாலா பாக்கில், ஒரு பாவமும் அறியாத அப்பாவி மக்களை ஆங்கில வெள்ளை அரசு ஈவிரக்கமின்றி கொன்று குவித்தபோது, பகத்சிங் அவ் இரத்தம் தோயந்;த மண்ணை தன்னோடு எடுத்துவந்தார். பஞ்சாபில் அப்பொழுது தலைப்பாகை (பக்டி) கட்டுவது, பஞ்சாபி மொழி எல்லாக் கிராமங்களிலும் படிப்பது போன்ற விறுவிப்பான தீவிர பேரலை வீசிய காலம். 1923ல் லாகூர் நஷனல் காலேஜ் மாணவராக பகத்சிங் இருந்தபோது, நாடகக் குழுக்களுடன் இணைந்து கொண்டதுடன், புரட்சிக்கான விபரமான ஆய்வுகளையும், ஆலோசனைகளும் அவர்களால் தொடந்து நடத்தப்பட்டது. இக்காலத்தில் கான்பூரில் ’பிரதாப்’ செய்தி ஏட்டிலும் வேலைசெய்தார். கான்பூரில் பல புரட்சியாளர்களின் பல தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இதில் சந்திரசேகர் ஆசாத் முக்கியமானவர்.
1924.08.09 திகதி கங்கேரி அருகே இரயில் வண்டியை நிறுத்தி, பல புரட்சியாளர்கள் வெள்ளை அரசாங்கத்தின் கஜானாவைக் கொள்ளையடித்தனர். சந்திரசேகர் ஆசாத் தவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்துப் புரட்சியாளர்களும் விரைவாகக் கைதுசெய்யப்பட்டனர். கோண்டா சிறையில் ராஜேந்திரநாத் தூக்கிலிடப்பட்டார். அஷ்ஃபாக் உல்லாகானும், ரோசன் சிங்கும் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்டனர். இக்கொடுமை நாடு முழுவதையும் ஒர் உலுக்கு உலுக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பகத்சிங் ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.
1929 மார்ச்சில், இந்திய உறுப்பினர்களால் சட்டசபையில் நிராகரிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டபோது, 1929.04.08ம் திகதி பகத்சிங் இதை எதிர்த்து சட்டசபையில் குண்டொன்றை வெடிக்கச் செய்தார். மூன்று நாட்களில் சுக்தேவ் கைதுசெய்யப்பட்டார். இச் சட்டசபை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை நாடகம் முடிவடைந்து 1929.06.12ம் திகதி பகத்சிங்குக்கும், படுகோஸ்வர் தத்துக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. டில்லியில் இருந்து பகத்சிங்கை பஞ்சாப் சிறைக்கும், படுகோஸ்வர் தத்தை லாகூர் மத்திய சிறைக்கும் அழைத்துக் கொண்டுபோன இரயில் வண்டிப்பயணத்தில் இவர்கள் அடுத்த திட்டத்தைத் தயாரித்தார்கள். ’’நமது இனத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள், சிறைகளில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்’’ எனக்கூறி அதற்கெதிராக மறுநாள் யூன் 13ம் திகதி படுகோஸ்வர் தத்தும், யூன் 15ம் திகதி பகத்சிங்கும் உண்ணாவிரதப் போரைத் தொடங்குவதாக தனித்தனியாக அறிக்கையை அரசிடம் கொடுத்தனர். இவ்வறிக்கை சட்டசபையில் செப்ரெம்பர் 14ம் திகதி படிக்கப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதாக அரசு ஒப்புக்கொண்டதால் இப்போராட்டம் கைவிடப்பட்டது. கண்துடைப்பாக சிறை விசாரணைக் கமிட்டி நிறுவப்பட்டதோடு, மேற்கொண்டு எதுவும் நடைபெறாததால் ஒரு வாரக் கெடுவின் பின்னர் 1030.02.04ம் திகதி மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இதன் பின்னர் இது விசயத்தில் அரசு நடவடிக்கையை மேற்கொண்டது.
1930.10.17ம் திகதி பகத்சிங்குக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே ராஜ்குருவுக்கும், சுக்தேவிற்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
சாண்டர்சின் கொலை, சட்டசபை குண்டுவெடிப்பு, பஞ்சாப் நசனல் வங்கிக் கொள்ளை மற்றும் யோகேஸ் சந்திர சட்டர்ஜியை சிறையிலிருந்து மீட்பதற்கான முயற்சி போன்ற முக்கிய நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். லாலாவில் நடத்தப்பட்ட தடியடிப்பிரயோகத்துக்கு பதிலடியாக ஸ்காட்டை சுட்டுக்கொல்வதென முடிவுசெய்தனர். இந்த நோக்கத்துக்காக டீ.ஏ.வீ (னு.யு.ஏ) கல்லூரி உணவகக் கூரைமீது ஏறினார்கள். ஸ்காட்டை நன்குதெரிந்த பகத்சிங் முதலில் சுடவேண்டும். கொஞ்சத் தூரத்துக்கப்பால் ராஜகுரு இவருக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும். பகத்சிங்கை யாராவது தாக்கினால் ராஜகுரு உடனே எதிர்த்துத் தாக்கவேண்டும். இருவரும் சுட்டுவிட்டு தப்பியோடும்போது திரும்பி துரத்துபவர்களை குறிவைக்க முடியாததால் பண்டித்ஜி (சந்திரசேகர் ஆசாத்) அவர்கள் இருவருக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தார். ஸ்காட் மருத்துவமனையில் இறந்து போவதை இவர்கள் விரும்பவில்லை. ராஜகுரு சுட்டபின்னரும் பகத்சிங் தொடர்ந்தும் துப்பாக்கியால் சுட்டார். அவர் இறந்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகும் வரை ராஜகுருவும் சுட்டார். இது ஓர் அரசியல் படுகொலை துண்டுப்பிரசுரம் மூலமாக வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் நடவடிக்கையை மக்களுக்கு மூடுமந்திரமாக வைத்திருக்கவில்லை. நலிந்த பெருந்தொகையான இந்திய வறிய பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் இரகசியமாக கொள்கைபரப்பு செய்யும் கடினத்தை விடவும் தம் உயிரை துச்சமாக மதித்து எல்லா வழிகளிலும் வெளிப்படையாகவே தமது வாழ்நாளில் இதைப் பிரச்சாரமாகப் பரப்பினர்.
முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தின் முகிழ்வைக் கவனித்தால், 1757 முதல் 1850 வரையிலான இந்தியா முழுவதுமான பட்டினி மரணங்கள் 75லட்சத்தை தாண்டியிருந்தது. இத்தொடர் பட்டினி மரணங்கள் ஏழை எளிய விவசாய வறிய உழைக்கும் மக்களின் எதிர்ப்பை உலைக்கலனில் ஏறியது. பட்டினியுடன் நிலச்சுவாந்தர்களை எதிர்க்கமுடியாத ஏழை விவசாயிகள் கிராமங்களை விட்டு வெளியேற, போக்கிடமற்றவர்கள் நிலச்சுவாந்தர்கள் மீது தம்மால் முடிந்தளவு கலகத்தைத் தொடந்து நடத்தினர். உடனடியான ஆயுதப் பழக்கத்தில் இருந்த முஸ்லீம் தாழ்த்தப்பட்ட இராணுவ வீரர்களும், இராணுவத்துக்குள் கூலியாகச் சென்றிருந்த வறிய விவசாய கூலி இராணுவத்தினரும் பிரிட்டிஸ் இராணுவத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முதலில் கல்கத்தாவில் இராணுவ முகாம்களில் கலகங்களைத் தொடங்கினர். இக்கலகம் தொடங்கியதும் அதிருப்தியும் வெறுப்புணர்ச்சியும் கொண்டிருந்த உழவர்கள் பெருந் தொகையாகக் கலந்து கொண்டனர். மீரத்தையும், டெல்கியையும் கைப்பற்றினர். கலகத்தில் ஈடுபட்ட உழவர்கள் பிரிட்டன் அதிகாரிகளைக் கொன்றனர். கைதிகளை விடுவித்து தம்முடன் இணைத்துக் கொண்டனர். அரசுக் களஞ்சியங்களைக் கொள்ளையடித்தனர். அரச கட்டிடங்களை எரித்தனர். அவுரிச் சாய முதலாளிகளைக் கொன்று குவித்தனர். இந்தியாவின் வடகிழக்கே தோன்றிய இப் பேரியக்கம் இரண்டு ஆண்டுகளில் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டாலும், இக் கலகத்தின் ஊடாக ஏழை விவசாயிகள் தாம் கைப்பற்றிய பிரதேசத்தில் பிற்போக்கான பழைய நிலச்சுவாந்தர்களை தலைமைக்கு மீண்டும் கொண்டுவரத் துடித்திருப்பினும் ஏகாதியத்துக்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சி வடிவம் எதிர்காலத்தில் வெடித்துவிடக்கூடாது, இந்தியப்பகுதிகளில் இது பரவலாகப் பற்றி படரக்கூடாது என்பதிலும் பிரிட்டன் மிகக் கவனமாகவே இருந்தது.
தன் ஆட்சிமீது ஏற்படும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுகளை சட்டவரம்புக்கு உட்படுத்துவதும், பாராளுமன்ற வடிவத்திற்குள் உட்படுத்தி கையகப்படுத்தவேண்டிய அவசியமான அரசியல் மார்க்கம் பிரிட்டனுக்குத் தேவைப்பட்டது. இதன் விளைவாக 1867ல் ’பம்பாய் மாகாண மன்றம்’ உருவாக்கப்பட்டது. மேத்தா, வாச்சா, டாட்டா போன்ற ஆலை முதலாளிகளால் உருவாக்கப்பட்ட இம்மன்றமே 1885ல் காங்கிரசை நடத்தியது. 1885.12.28ம் திகதி நன்பகல் 12 மணிக்கு பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்வாய் வடமொழி கல்லூரி மன்றத்தில் முதல் காங்கிரஸ் மாநாடு கூடியது. இம்மாநாட்டுக்கு 73 பேர் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக வந்தனர். ஆங்கிலேய அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பார்வையாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்துகொண்ட 73 பேரில் 80 சதவீதமானவர்கள் ஆங்கிலம் கற்றவர்கள். 40 பேர் வழக்கறிஞர்கள். இவ் 40 வழக்கறிஞர்களில் 23பேர் பிராமணர்கள். 5 பார்சிகள். 9 பத்திரிகையாளரில் 7பேர் பிராமணர்கள். ஆலைமுதலாளிகள் வணிகர்கள் என 7 பேரும், 6 ஜமீந்தார்களும் இதில் அடங்குவர். கல்கத்தாவில் இருந்து இருவரைத்தவிர எவரும் வரவில்லை. 1886ல் கல்கத்தாவில் நடந்த இரண்டாவது மாநாட்டில் 431 பேர் அதிகாரபூர்வமாகக் கலந்து கொண்டனர். கல்கத்தாவில் இருந்து 230 பேர் வந்திருந்தனர். 15 ஆண்டுகளின் பின்னர் இருந்த 13,892 அதிகாரபூர்வ பிரதிநிதிகளில் 1442 வழக்கறிஞர்களும், 2095 ஆலைமுதலாளிகளும், 1642 நிலச்சுவாந்தர்களும் இருந்தனர். இவர்களே நிர்வாகப் பொறுப்புக்களின் தலையாக இருந்தனர்.
சென்னை, பம்பாய், வங்காளம் போன்ற வட்டார சங்கங்களின் கூட்டுத்தொகுப்பாக உருவாகிய இக் காங்கிரஸ், வெள்ளை அரசின் பரிபூரண ஆசியுடன் தொடங்கியது. உதாரணமாக ’காங்கிரஸ் தோற்றத்தில் தனக்கு இருக்கும் பங்கு குறித்து தான் இந்தியாவில் இருக்கும் காலத்தில் வெளியிடக்கூடாது’ என்று டப்பின் கேட்டுக்கொண்டதை காங்கிரஸ் தன் வரலாற்றில் மறைத்து வைத்தது. காங்கிரஸ் தன்னலம் மிக்க கபடம் நிறைந்த நடுத்தர வர்க்க சுரண்டல் லாப தித்திப்புக்களில் மிதந்துவந்த அமைப்பாகும். பிறவியில் ஊனமான தேசியத்தின் பிரநிதிகளான முதலாளித்துவ ஜனநாயக விதேச பக்தியைக் கொண்ட இவர்கள் மக்களின் நீர்க்குமிழி பிரச்சனைகளோடு மட்டுமே விளையாடும், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பிரச்சனையை உதாசீனம் செய்கிற ஏகாதிபத்திய நலன்களுடன் தம்மை இனைத்துக்கொள்ளும் தீராத விளையாட்டுப்பிள்ளைகளாகவே இருந்தனர்.
இந்தியாவில் 1905க்குப் பின் முழு விடுதலை கோரிய ஆயுதப்புரட்சியாளர்கள் மிருகங்களைப்போல வேட்டையாடப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக இருந்த திடமான தேசிய சக்திகள் கடும் சிறையில் தள்ளப்பட்டனர். இவ் மிருகத்தனமான வேட்டையாடலுக்கு துணை போன கோகலே, பானர்ஜி, மயிலாப்பூர் கிருஸ்ணசாமி போன்றோருக்கு பதவிகள் பரிசாகக் கொடுக்கப்பட்டன. புரட்சியாளர்களை கைது செய்யாததால் தூத்துக்குடி கலவரம் தோன்றியதென தூத்துக்குடி காங்கிரஸ் மிதவாதிகள் சென்னை கவனரிடம் முறையிட்டனர். கடைந்தெடுத்த காங்கிரசின் இந்த இரத்தத் துரோக நடவடிக்கையால், இந்தக் கயவர்கள் வைசிராய் கவுன்சில் பதவிகளை கூலியாகப் பெற்றனர்.
1928ல் காந்தி கலந்து கொள்ளாத சென்னை காங்கிரஸ் மாநாட்டில் முழு விடுதலையை காங்கிரசின் தீர்மானமாகக் கொண்டு வந்தனர். காந்தி கலந்து கொள்ளாத இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவை, காந்தி நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தந்திரோபாயமாக நேரு அறிக்கையை கொண்டுவந்தார். 1929 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டு பந்தலுக்கு எதிரே 50,000 மக்கள் முழுவிடுதலை கோரும் தீர்மானத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1929ல் தேஷ்பாண்டே நேருவின் அறிக்கையை நிராகரித்து முழுவிடுதலை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அனைத்துக்கட்சியின் தீhமானமாக –லாகூர் தீர்மானமாக- எடுக்கப்பட்டிருந்தது.
காந்தியின் தரும இராட்சியத்துக்கான ஒத்துழையாமை இயக்கம் என்பது, தம் வர்க்க நலன்களுக்கு இசைவில்லாத அரசின் சில சட்டங்களை மறுப்பதாகும். ஆனால் இத்தகைய சட்டமறுப்புக்கள் கூட வெள்ளை அரசு பிறிதோர் சட்டத்தால் ’தவறென்று’ குறிப்பிடும்போது அச்சட்டத்தை ஒத்துக்கொள்கின்ற பரந்துபட்ட மக்கள் விரோத ஏகாதிபத்திய இயக்கம் தான் காங்கிரஸ். காங்கிரசின் சிறை நிரப்பும் அறவழிப் போராட்டம் கூட இவ்வகையானது தான். சட்டமீறலுக்காக சிறை சென்று மீண்டும் அதே சட்டத்துக்கு உட்பட்டு சிறைவாசம் அனுபவிப்பது தான். இவர்களின் அறவழிப் போராட்டம் சிறைக்குள் தொடராத, சிறைக்கு வெளியே நடத்தப்படும் மக்களைப் பம்மாத்தும் அரசியல் போராட்டம் தான். அகிம்சையை நிராகரித்த இம்சைப் போராட்ட ஆயுதக் கிளர்ச்சியாளர்களான பகத்சிங் போன்றவர்கள் ஆயுத நடவடிக்கைக்காக சிறை சென்ற பின்னர், நிராயுதபாணிகளாக காந்தியின் அதே அகிம்சை வழியிலான சட்டமறுப்பை போராட்டமாக சிறைக்குள் தொடர்ந்தபோது, காந்தி போன்ற அகிம்சைவாதிகள் அதை நிராகரித்த இந்த வர்க்கத்தினரின் சூட்சுமத்தை கண்டுகொள்ளலாம். புரியும் படியாக இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்: திடமான தேசியம் எப்போதும் ஏகாதிபத்தியுத்துடன் கைகோர்த்து நடக்க இயலாது. திடமான தேசியத்தை அழிக்காமல் ஏகாதிபத்தியத்தால் வாழவும் முடியாது. விதேசியம் ஏகாதிபத்தியத்துடன் சேராமல் வாழவும் முடியாது. ஆகவே விதேசியத்தை தன் நலன்களுக்கு உட்படுத்தி அரவணைத்து வளர்க்காமல் ஏகாதிபத்தியம் இருக்கவே முடியாது. ஏகாதிபத்தியமும், விதேசியமும் தம் பொது எதிரியான திடமான தேசியத்தை அழித்தொழிக்காமல் இவற்றுக்கு வாழ்க்கையே இல்லை.
காங்கிரஸ் போன்ற விதேசிகளின் தேசபக்தியும், ஜனநாயகமும் இந்த நாட்டு மக்களுடன் பங்கிடும் விசயங்களாக இல்லாமல், பிரிட்டன் ஏகாதிபத்தியத்துடன் பங்கிடும் விசயங்களாக மட்டுமே இருந்தன. 1930 ஒட்டோபர் 7ம் திகதி பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்குத் தண்டணையும், ஏனைய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் தீர்ப்பாகியது. அம்மாதம் 27ம் திகதி தூக்கிலிட வேண்டுமெனவும் தீhப்பாகியது. காங்கிரசின் மாநாட்டுக்கு முன் பகத்சிங்கைத் தூக்கிலிட வேண்டாமென காந்தி வெள்ளை அரசுக்குத் தந்தி கொடுத்தார்(இத் தந்தியை ஆதாரத்துடன் ’சுட்டி’ என்ற சிறு சஞ்சிகை பின்நாளில் பிரசுரித்திருந்தது). அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு எட்டும் காலமாக இருந்ததால் காந்தி இதில் பூந்து விளையாடினார். உடன்பாடு எட்டப்பட்ட பின் 1931 மார்ச் 29-30 களில் கராச்சியில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்துக்குப்பின் கூட இருந்த காங்கிரஸ் மகாசபைக்கு பின்னதாக தூக்குவதாக இர்வின் பிரபு பகிரங்கமாக அறிவித்தார். காந்தியோ தூக்கிலிடுவதாயின் அதற்கு முன் தூக்கிலிடும்படியும் நாடகங்கள் ஆடப்பட்டன. பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிட்ட 23ம் திகதி அதிகாலை காந்தி இர்வின் பிரபுவுக்கு ஓர் அந்தரங்கக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இன்னும் வரலாற்றில் அந்தரங்கமாகவே இருக்கிறது. 24ம் திகதி அதாவது மறுநாளே தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோது காந்தியின் கடிதம் கையில் கிடைத்த அன்றே தண்டனை திடீரென நிறைவேற்றப்பட்டது.
1931 மார்ச் மாதத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் தொடர்பாக காந்திஜிக்கு சுக்தேவ் சிறையிலிருந்து பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.
பெரும் தர்மசிந்தனை மிகுந்த மகாத்மாஜிக்கு…
சமரசம் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதையடுத்து புரட்சியாளர்கள் தங்களுடைய இயக்கத்தை தற்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் உங்களுடைய அகிம்சை முறையைப் பயன்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பினை தங்களுக்கு அளித்திட வேண்டுமென்று கோரி, புரட்சிச் செயல் வீரர்களிடம் தாங்கள் அவசர வேண்டுகோள் விடுத்திருப்பதாக, இப்போது கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. உண்மையில், இலட்சிய நோக்கங்கள் மற்றும் மன உணர்ச்சிகள் மூலமாக மட்டுமே எந்த ஒரு இயக்கமும் நின்று போய்விடப் போவதில்லை. வேறுபட்ட பல சந்தர்ப்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே தலைவர்கள் தங்கள் உத்தியை மாற்றிக்கொள்ள வெண்டிய கட்டாயம் நேரிடுகிறது. இந்த சமரச ஒப்பந்தம், இறுதியான ஒப்பந்தமாக இருக்காது என்ற கருத்தை பேச்சுக்களின் போது நீங்கள் ஒரு நொடிக்குக்கூட, சிந்திக்கவோ அல்லது மூடிமறைத்திடவோ இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தாங்கள் முன்வைத்த சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் நாம் நமது குறிக்கோளை எட்டிவிட்டோம் என்பதை புத்திசாலிகள் அனைவருமே எளிதில் புரிந்துகொண்டிருப்பார்கள். பூரண சுதந்திரம் கிடைக்காத வரை, விடாமுயற்சியுடன் போராட்டத்தை நடத்திவர வேண்டுமென்ற லாகூர் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்டுப்படிருக்கிறது. இந்தத் தீர்மானம் காரணமாக, தற்போதைய அமைதியும், சமரச சமாதானமும், வெறுமனே நடைமுறை ரீதியிலான ஒரு சண்டை நிறுத்தம்தான்: எந்த ஒரு தருணத்திலும் நிகழவிருக்கும் போராட்டத்திற்காக, பெரியதோர் அளவில் சிறப்பான படைப்பலத்தை திரட்டுவதற்கான ஒரு இடை ஓய்வுதான் இது என்றே பொருள்படுகிறது. இந்தக் கருத்தை மட்டுமே மனதில் இருத்திப் பார்க்கும்போது, சமரசம் மற்றும் சண்டை ஓய்வுக்கான வாய்ப்புப்பற்றி கற்பனை செய்ய முடிகிறது: அதன் உசித தன்மையும் ருசுவாகிறது.
சண்டை நிறுத்தத்திற்கான உரிய தருணத்தையும், அதன் நிபந்தனைகளையும் நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு, இயக்கத் தலைவர்களைச் சார்ந்ததாகும். லாகூர் தீர்மானம் இருந்தபோதிலும் கூட தற்போதைக்கு இந்த இயக்கத்தை நிறுத்தி வைப்பது சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படவில்லை. ’’கிந்துஸ்தானி சோசலிஸ்ட் குடியரசுக் கட்சி’’ என்ற பெயரே, பரட்சியாளர்களின் லட்சிய சமுதாயம், சோசலிச குடியரசு ஒன்றினை அமைத்து நிலைநாட்டப் போகிறது என்பதை தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்தக் குடியரசு, ஒரு இடையாச்சிக் காலமல்ல: அந்தப் புரட்சியாளர்கள், தங்கள் குறிக்கோளை அடையும் வரை, போராட்டத்தை கொண்டு செலுத்துவார்கள்………… முற்றிலும் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் ஒரு புரட்சிப் போராட்டத்திற்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் எதையும் தருவதில்லை.
சமரசம் ஏற்பட்டதை அடுத்து, நீங்கள், உங்கள் இயக்கத்தை கைவிட்டு விட்டீர்கள். இதன் பலனாக, சிறைபிடிக்கப்பட்டுள்ள உங்கள் ஆட்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் புரட்சியாளர்களின் கதி என்ன ஆயிற்று? புரட்சி கட்சியைச் சேர்ந்த பலரும் 1915-ம் ஆண்டு முதற்கொண்டே சிறையில் வாடி வருகிறார்கள். தங்களின் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும் கூட, அவர்கள் சிறையிலேயே இன்னும் இழிவுபட்ட நிலையில் உள்ளனர். இராணுவச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருபது பேர் சிறை என்னும் கல்லறையில் இன்னும் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். பப்பர் அகாலி கைதிகளின் நிலையும் இதே மாதிரித்தான் இருந்துவருகிறது. தேவ்கர், காக்கோரி, மச்சுவா பஜார் மற்றும் லாகூர் சதிவழக்கில் சம்மந்தப்பட்ட கைதிகள் இன்னும் சிறையில் உள்ளனர். லூகூர் தில்லி, சிட்டகாங், பம்பாய், கல்கத்தா மற்றும் வேறு இடங்களில் சதித்திட்ட வழக்குகள் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான புரட்சியாளர்களும், தப்பி ஓடி தலைமறைவாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். உண்மையில் சுமார் 6 புரட்சியாளர்கள் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். இவர்களின் கதி என்ன? அதிருஸ்டவசமாக லாகூர் சதிவழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று குற்றவாளிக் கைதிகள் இப்பொழுது பிரபலமாகி விட்டதுடன், பொதுமக்களின் பெருமளவுக்கான அனுதாபத்தையும் பெற்றிருக்கிறார்கள். ……..
இவையெல்லாம் நடந்திருந்தும் கூட, அவர்களின் இயக்கத்தை நிறுத்திவிடுமாறு நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் இயக்கத்தை ஏன் நிறுத்தவேண்டும்? இத்தகைய ஒரு நிலையில், இந்த இயக்கத்தை நசுக்கிச் சிதைப்பதற்காக நீங்கள் அதிகார வர்க்கத்தினருக்கு உதவி அளித்து வருகிறீர்கள் என்றே உங்கள் வேண்டுகோள் பொருள்படுகிறது. கிளர்ச்சி எழுந்து, ஆர்ப்பாட்டம் செய்யும்படியும், தப்பி ஓடிச் செல்லுமாறும், நம்பிக்கை துரோகம் செய்யுமாறும், உங்களுடைய வேண்டுகோள் அந்தக் கட்சியினருக்கு உபதேசம் செய்வதாகவே பொருள்படுகிறது…..
இவ்வாறு அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்தை முன் வத்தனர். இக்கடிதமானது சுக்தேவ் தூக்கிலிடப்பட்ட பின் ஏப்பிரல் மாதம் 30 திகதி காந்தியின் பதிலோடு பிரசுரிக்கப்பட்டது. பகத்சிங் போன்றவர்கள் சிறைச்சாலையில் போராட்டத்தைத் தொடங்கியபோது, அறவழிப் போராட்டத்தால் சிறை சென்றவர்களும் இப்போராட்டத்தால் ஈர்க்கப்படுவது யதார்த்தமானது. கடைசி ஒருவருட காலத்துக்குள் காந்திக்கு நிகராக பகத்சிங் பேசப்பட்டதும், அவரின் கொள்கைளை மக்கள் முழு மனதுடன் ஆதரிப்பதும் காந்திக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தது. சட்டமறுப்புப் போராட்டத்தில் சிறை செல்பவர்கள், எந்த அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை எதிர்த்து சிறை செல்கின்றார்களோ, அதே சட்டத்திற்கு மௌனமாகிப் போவதையும், அல்லது அச்சட்டதிட்ட ஓட்டைகளின் ஊடாக தப்பித்து வெளியே வருவதும் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகே முரணானது என்றும் பரந்துபட்ட மக்களுக்கு செய்யும் துரோகமென்றும் பகத்சிங் போன்றோர் தமது போராட்டத்தின் ஊடாக மக்களுக்குப் பரப்பினர். இவ்வாறான இவர்களின் புரட்சிபோர் பரந்துபட்ட மக்களை தவிர்க்க முடியாது முழு விடுதலையின் பால் ஈர்த்தது. அதனால் காந்திக்கு அரசுடன் உடன்படிக்கைக்குச் செல்வதும் அறவழிப்போராட்ட வீராகளை உடனடியாக விடுதலை செய்து, போராட்டத்தின் களமான சிறைச்சாலையில் இருந்து துண்டித்து வெளியே கொண்டுவருவதும் காந்தியினதும், காங்கிரசினதும் வர்க்க நோக்கமாக இருந்தது. பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்பது பரந்துபட்ட மக்களின் ’மகாஜன ஆணையாக’ இருந்தபோதிலும் இவ்வாணையை வெள்ளையரசும் ஏன் காங்கிரசும் கூட இதை மதிக்கவில்லை. இவர்கள் சாகடிக்கப்பட்ட பின்னர் கூட அவ் ஒப்பந்தத்தை பொதுமக்களின் ஆணையை மதித்து காங்கிரசால் தூக்கியெறிய முடியாத வர்க்கநலன் சார்ந்த லாபகலமான ஒப்பந்தாக அது இருந்ததைக் காணலாம்.
உதவிய நூல்கள்
எப்போதாவது எண்ணிப் பாருங்கள் -தியாகச் செம்மல்களின் கடிதங்கள்-
வீரத்தியாகி சர்தார் பகத்சிங்
சுதேகு
28.03.06