பிரான்சில் தொடரும் புலிக் கைதுகள், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா?

இந்தக் கைதுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு கும்மியடித்த பலர், நாய் உண்ணிபோல் கழன்று ஒடுகின்றனர். பலர் தமது தலையை மண்ணுக்குள் குத்திக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களாகி விட்டனர். இனம் தெரியாத ஒரு அச்சம் பீதி கலந்த மௌனம். எதுவும் நடவாத மாதிரி இருக்க முற்படுதல். எதுவும் தெரியாதவர் போன்று பிரமை. பலர் மௌனவிரதம். வசனம் பேசிய வீரர்கள், நடைப்பிணமாக நடமாட முனைகின்றனர்.

 

 

பாரிசில் புலிகள் மீதான பொலிசாரின் திடீர் பாய்ச்சலும், கைதுகளும் புலிகளுக்கு எதிராக ஐரோப்பாவின் முதல் சம்பவம். பிரான்சில் புலிகளுக்கு எதிரான முதல் சம்பவம். பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு அப்பால், நீண்டகாலமாக நீடித்த புலிகளின் சட்டதிட்டங்களுக்கு எதிரான முதல் சம்பவம். இதன் மீதான அதிர்வு, தமிழர் அதிகம் நடமாடும் பாரிஸ் வீதிகளில் இனம் தெரியாத புதிராகவே பிரதிபலிக்கின்றது. பிரஞ்சு சமூகம் எம்மை ஆச்சரியத்துடன் பார்க்கின்றது. அதுவும் அவர்களுக்கு புதிர்தான். புலிகளால் பாதிக்கப்பட்டவர் மீதான அனுதாபமா! அல்லது புலிகள் மீதான வெறுப்பா! இரண்டில் ஒன்றையாவது ஒவ்வொரு பிரஞ்சு மக்களும் பிரதிபலிக்கின்றனர். என்றுமில்லாத வகையில் எம்மை நோக்கி அவர்களின் கேள்விகள் வருகின்றது. செய்தி ஊடகங்கள் இந்த சம்பவத்தை சுற்றி வருகின்றன. தகவலை திரட்ட முடியாத ஒரு மாபியா உலகத்தில், அவர்களே அறியாத வண்ணம் வலம் வருகின்றனர்.

 

இவை எல்லாம் பல விடையத்தை எடுத்துக்காட்டுகின்றது. மக்கள் விரோத முடிவுக்கு வரும் போது, ஒட்டுண்ணிகள் செய்யும் துரோகம் மட்டுமல்ல, போலியான கட்டமைப்பு அதிர்ந்து பொடிப்பொடியாகும் என்பதை பாரிஸ் நிகழ்வுகள் மறுபடியும் ஒரு வரலாறாகவே எடுத்துக்காட்டுகின்றது. மறுபக்கத்தில் இந்தக் கைதுகளை நாம் எப்படி புரிந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலான, ஆனால் அடிப்படையான கேள்வியாக எம்முன் தொங்கி நிற்கின்றது.

 

1. ஒருபுறம் பிரஞ்சு ஏகாதிபத்தியம். அது உலகம் தழுவிய வகையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் ஒடுக்கும் கொடுவாளை கொண்டு இயங்குகின்றது. இந்த வகையில் சொந்த நாட்டிலும் அது செயல்படுகின்றது.

 

2. பிரஞ்சு ஏகாதிபத்தியம் சொந்த நாட்டு சட்டதிட்டத்துக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றது. அதாவது அந்த நாட்டின் வாழும் மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மீறலுக்கு எதிராக செயல்படுகின்றது.

 

இப்படி இரண்டு அம்சங்கள் உண்டு. இதில் வெளிநாட்டு போராட்ட இயக்கங்கள் மீது நடிவடிக்கையை எடுக்கின்ற போது, இவ்விரண்டு அம்சமும் அக்கபக்கமாகவே இயங்குகின்றது.

 

புலிகள் மீதான நடவடிக்கையை எந்த வகையில் நாம் புரிந்து கொள்வது? புலிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் சார்பிலும் இதை புரிந்து கொள்ளத் தூண்டுகின்றது.

 

அடுத்து புலிகள் ஒரு விடுதலை இயக்கமாக இருக்கின்றார்களா என்ற அடிப்படைக் கேள்வியும், புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எவை எவை முன்வைக்கப்படுகின்றது என்பதும் பதிலளிக்கின்றது.

 

புலிகள் இயக்கம் ஐரோப்பிய யூனியனால் தடைசெய்யப்பட்ட போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எவை? அவை மக்கள் நலன் சார்ந்த விடையங்களை முன்வைத்து தடை செய்யப்படவில்லை. மாறாக அனைத்தும் மக்கள் விரோத நடவடிக்கையை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. தடை ஏகாதிபத்திய தன்மை வாய்ந்ததாக இருந்த போதும் கூட, அந்தக் காரணத்தை மறுக்க முடியாத மனித உரிமை மீறலாகவே இருந்தது. இந்த மனித உரிமை மீறலை, புலிகள் நிவர்த்தி செய்யவே மறுத்தனர். இப்படி ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு ஊக்கியாகவே செயலாற்றினர்.

 

புலிகள் தம்மைத் தாம் சுயவிமர்சனம் செய்யவும், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தவும் தவறினர். மாறாக இந்த தடையை எதிர்த்து, ஐரோப்பிய கண்காணிப்பாளர்களையே வெளியேற்றினர்.

 

ஏகாதிபத்திய தன்மை வாய்ந்த தடை, இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை என்பது உண்மை. ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையைக் கொண்ட, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்ததாக அமைந்தது என்பது உண்மை.

 

அதை அடிப்படையாக கொண்டு, இலங்கை அரசுடன் ஓப்பிட்டு தமிழ் மக்களை புலிகள் ஒடுக்குவதை நியாயப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் மனித உரிமைகளை அங்கீகரிப்பது, அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க மறுப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் மனித உரிமை மீறலைச் செய்யும் உரிமையைக் கோரி, பிரஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிறுத்துவதை நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது.

 

ஆனால் புலிகள் அப்படித்தான் கோரினர். ஐரோப்பிய தடையை அப்படித் தான் விளக்கினர். பாரிஸ் கைதை இலங்கை அரசின் தூண்டுதலாக விளக்குகின்றனர். இலங்கை அரசின் தூண்டுதல் பங்களிப்பு ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம் கைதுக்கான அடிப்படை தமிழ் மக்கள் மீதான புலம்பெயர் அடாவடித்தனங்கள் மீது தான் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசின் தூண்டுதல் என்பதை , இந்த நாட்டு சட்டம் அங்கீகரித்துச் செல்லாது. மாறாக இந்த குற்றச்சாட்டுகள் இங்குள்ள குற்றங்களை அடிப்படையாக கொண்டு செயலாற்றுகின்றது. மக்களுக்காக சட்டத்தை மீறியதால் அல்லது மனிதாபிமான செயல்களை செய்ததால் இக் கைதுகள் நடக்கவில்லை.

 

புலிகள் சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பு. மறுபக்கத்தில் சட்டப்படியான வேறு அமைப்புகள் மூலம் தான் இயங்கியவர்கள். சட்டப்படியான அந்த பினாமி அமைப்பைச் சுற்றித் தான் கைதுகள் நிகழ்ந்துள்ளது. சட்டப்படியான அமைப்பு சட்டவிரோதமான அமைப்புடன் கொணடிருக்கின்ற உறவும், சட்டபடியான அமைப்பு தமிழர் மீதான தனது சட்டவிரோத செயல்பாட்டை எப்படி செயற்படுத்தியது என்பதை நிறுவும் வரை, இவை சட்டப்படி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்நிலை இலங்கை அரசின் தலையீட்டினால் இவை நிகழ்ந்தது என்ற கூற்றை மறுத்து அம்பலப்படுத்துகின்றது.

 

வெளிப்படையான சட்டப்படியான இந்தக் கைது தமிழ் மக்களின் எந்த உரிமையையும் கைவிடக் கோரியோ, தமிழ் மக்களின் மனிதாபிமான நடிவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று கூறியோ நடக்கவில்லை. அதை ஏகாதிபத்தியம் கோருமளவுக்கு, அதை ஒடுக்கும் அளவுக்கு புலிகள் இக்கூறுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இவை வெளிப்டையான குற்றங்களை அடிப்படையாக கொண்ட கைதுகள்.

 

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என எவ்வழிமுறைகளைத் தான் புலிகள் கொண்டுள்ளனர்? எந்த மனிதாபிமான செயல்களில் ஈடுபடுகின்றனர்? இந்தக் கேள்வி, இதன் எதிர்மறைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. பிரஞ்சு ஏகாதிபத்தியம் தமிழ் மக்களின் உரிமையை கைவிடக் கோருவதற்கு முன், புலிகள் அதற்காக எந்தவகையிலும் போராடவில்லை என்பதே உண்மை. மக்களின் நலன் சார்ந்த செயற்பாடுகளை கைவிடக் கோருவதற்கு, புலிகள் அவை போன்றவற்றில் ஈடுபவதில்லை என்பது உண்மை. பெயரளவில் அமைப்புகள் மட்டும் உண்டு.

 

இந்த உண்மை ஒருபுறம், மக்கள் உரிமைப் போரைக் கைவிடக் கோரி அல்லது அதனை ஒடுக்கும் அடிப்படையில் கைது நடந்தது என்பதை மறுதலிக்கின்றது. இல்லை அப்படியே தான் நடந்தது என்றால், கைதுக்கான காரணங்களை யார் உருவாக்கியது. ஐரோப்பிய தடைக்கான காரணத்தை யார் உருவாக்கியது புலிகள் தான். இந்த கைதுகளுக்கான காரணத்தை அன்றாடம் புலிகள் உற்பத்தி செய்தனர். இந்த வகையில் புலிகளின் செயற்பாடுகள் என்ன?

 

கட்டைப்பஞ்சாயத்து, அடிதடி, உருட்டல் மிரட்டல், பொறுக்கித் தின்னும் தமது அதிகாரத்துக்காக தமக்கு இடையிலான மோதல்கள், போராட்டத்தைச் சொல்லி வர்த்தகம், பணத்தை திரட்டுதல், இதுதான் அவர்களின் அன்றாட நடடிவடிக்கைகள். பண திரட்டுதலுக்காக சில பாடசாலைகள், கலாச்சார மையங்கள், விளையாட்டு சங்கங்கள், அதைச் சுற்றி நிகழ்ச்சிகள், அனைத்தையும் தழுவிய வர்த்தகம். இதைச் சுற்றி அடாவடித்தனமான மிரட்டல் கலந்த சமூக அதிகாரம். எங்கும் எதிலும் இதை நாம் காணமுடியும். எல்லா சமூக பொது வேலையிலும் இது பிரதிபலிக்கின்றது.

 

சபாலிங்கம் படுகொலை, நாதன் கஜன் படுகொலை, லட்சமி வீட்டில் ஆவணங்களைத் திருடியது, குகநாதனுக்கு எதிரான அவதூறு, சோபாசக்தி மீதான அவதூறு, லாச்சப்பலில் கம்பத்தில் துரோகியாக காட்டி கட்டியது முதலாக எத்தனையோ வெளிப்படையான சம்பவங்கள். இதற்கு வெளியில் இரகசியமான எத்தனையோ நிகழ்ச்சிகள். அரசியல் ரீதியாக இப்படி சமூகத்தை அச்சம் பீதியால் மிதக்கவிடப்பட்ட ஒரு சூழல். இதைவிட ரவுடிக் கும்பல்களைக் கொண்ட அடிதடிகள் வரை எத்தனை சூக்குமான விதவிதமான நடைமுறைகள்.

 

புலம்பெயர் சமூகம் மத்தியில் ஆதிக்கம் வகிக்கும் ஒரே மொழி மிரட்டல், அச்சுறுத்தல் ஊடாக காரியங்களை சாதிக்கும் வன்முறை. இதுவே பொதுவான அதிகாரத்துக்கான குரலாக உள்ளது. இதற்குள் பணத்தை எப்படி எந்த வழியில் கறப்பது என்பதற்கு, சாம பேத என அனைத்து வழிகளும் கையாளப்படுகின்றது.

 

நீண்டகாலமாக அமைதியும் மவுனமுமாக நீடித்த புலம்பெயர் புலிக்கெடுபிடிக்கு எதிரான ஒன்றாகவே இக் கைது உள்ளது. இது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கைளில் ஒன்றாக, நாம் இதை எந்த வகையிலும் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. அதை அவர்களே புலிகளே என்றோ இல்லாதாக்கிவிட்டனர்.

 

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை கைவிட்டு அன்னியமாகிப்போன புலிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரஞ்சு மக்களின் நியாயமான ஆதரவை நினைத்துக் கூட பார்க்க முடியாது. சட்ட ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரச்சனையாகவே இது இருப்பதை, அரசியல் ரீதியாக நாம் மறுக்கமுடியாது.

 

மீண்டும் நாம் கோருவது தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை, மக்களின் அடிப்படை உரிமையை அங்கீரித்து போராடுவதன் மூலம் தான், தமிழ் மக்களையும் உலகத்தையும் நாம் வெல்லமுடியும்.

பி.இரயாகரன்
06.4.2007