05222022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்தியா - புலிகள் அரசியல் நகர்வுகள்

ரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் இந்தியா தனது மூக்கை இலங்கைத் தீவினுள் நுழைத்தது. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனையையும் சிங்கள மக்களிடம, தெற்கின் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருந்த இந்தியவிஸ்தரிப்பு எதிர்ப்புவாதத்தையும் மிக மிக போடிபோக்காக கணிப்பிட்டபடி ஒரு வகை சண்டித்தனத்துடன் நடந்து கொண்டது இந்தியா இது நாமறிந்த உண்மை.

 

இதனை கூடிய சீக்கிரமே, பிரபாகரன் - பிரேமதாச தேனிலவுத் தந்திரோபாயத்தின் மூலம் படிப்பினையாக கற்றுக்கொண்டது இந்தியா. உலகின் 'நான்காவது" பெரிய இராணுவத்தை கொண்ட இந்தியா தனது தலைக்குனிவை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டது.

இதன் விளைவாக தற்போதைய தனது அரசியல் நகர்வில, இலங்கையில் குறிப்பாக பிராந்திய அதிகாரத்தினை நிலைநிறுத்த, அதிலும் முக்கியமாக புலிகளின் விடயத்தில் தொலைநோக்குடனும் பழிவாங்கும் நயவஞ்சகத்துடனும் தனது காய்களை நகர்த்துகிறது.

 

உள்நாட்டிலும். . . .

ஓவ்வொரு நகர்வும் இந்தியா, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மிக அவதானமாக புலிகளின் பக்கம் பச்சாதாபம் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டின் மாநில அரசின் அனுசரணையுடன் நடாத்திவருகிறது. அதற்கு சாதகமாக கருணாநிதியின் கட்சி காங்கிரசினுடனான கூட்டமைப்பு என்கின்ற நிலமை 'புலிக்கு புதர் காவல் - புதருக்கு புலி காவல்" என்று சாதகமாக அமைந்துள்ளது.

 

மிகவும் சிறுபான்மையான ஒரு கூட்டம் அதாவது புலிகளிடம் சம்பளம் வாங்கும் திருமாவளவன், நெடுமாறன், கோபால்சாமி போன்றவர்களின் கூக்குரலை மிகவும் இலகுவாக அடிபட்டுப்போகக்கூடிய முறையில் நகர்த்தி வருவதும் வெளிப்படை.

 

உதாரணம், இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான பிரச்சனைகளை புலிகள்தான் செய்தார்கள் என்பதை தாங்கள் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாவலனாக தெரிவிக்கின்றது. இதன் மூலம் புலிகளுக்கான ஆதரவு வட்டத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதிலிருந்து நன்றாக புரிவது ஒன்று, முன்னர் போன்று பாய்ந்து விழுந்து தன்னியல்பில் சண்டித்தனத்தை காட்டுவதை தவிர்த்து மிகப் பாரிய அளவில் உலக அங்கீகாரத்தை பெறுவதற்காக காத்திருக்கின்றது.

 

இதற்கு சாதகமாக அமைவது புலிகளின் ஆழமான அரசியலற்ற, தொலை நோக்கற்ற, வெறும் பழிவாங்கும், வீரப்பிரதாபம் காட்டும் முட்டாள்த்தனம்.


தமது அரசில் முட்டாள்தனத்தை வெளிப்படுத்த இடைக்கிடை 'மன்னிப்பு" 'துன்பியல் சம்பவம்" போன்ற வெளிப்பாடுகள்.

 

புலிகளின் போராட்ட அரசியலானது தான் விரும்பும் 'யாழ்ப்பாணிய மையவாத" அரசியலுக்குக்கூட சாதகமாக அமையப்போவதில்லை என்பது தான் பெரிய உண்மை.உலகளாவிய அளவிலும். . .

 

கடந்த சில வருடங்களில் உலகமேலாதிக்க நாடுகளில, ஜரோப்பிய வல்லரசுகளில, கனடாவில, அமெரிக்காவில், புலிகளின் மீதான தடை ஏற்பட்டது ஒருபுறமிருக்க சர்வதேசிய அளவில் புலிகளை பற்றிய எதிர்ப்பரப்புரை ஆங்கிலத்திலும், ஜரோப்பிய மொழிகளிலும், புலம்பெயர்ந்த தமிழரின் புலியெதிர்ப்புப்பரப்புரை தமிழர் ஊடகங்களிலும் வளர்ச்சி கண்டது எவ்வாறு. . ?

 

இது சிங்கள் இனவாத அரசாங்கத்தினால் மட்டும் ஏற்படுத்தமுடியுமா. . ?

 

இல்லை . . உலகின் வல்லரசுகளுக்கு சவாலாக முதலாளித்துவத்தை வளர்க்க முடியும் என்று வளர்ந்து வரும் பிராந்திய வல்லரசுகளில் இந்தியா முக்கியமானது.

இந்தியாவின் வளர்ச்சியில் மேலைத்தேய நாடுகளின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ. . ? மேற்கத்தைய நாடுகளிற்கு இந்தியா போன்ற பாரிய நாடுகளின் அனுசரணை அந்தந்தப் பிராந்தியத்தில் அவசியமாகின்றது.

 

இதனை. . அதாவது இந்த உபாயத்தினை தனது பிராந்திய நலன்களிற்கு சாதகமாக்குவது இந்தியாவின் தந்திரோபாயம்.

 

வெளிப்படையாக சொல்வதானால் இந்தியாவின் செல்வாக்கானது சர்வதேச ரீதியாக தற்போது புலிகள் மேல் ஏற்படுத்திய கடும் அழுத்தங்கள் என்று சொல்வதுதான் எதிர்மறையான உண்மையாகும்.

 

இந்தியா தனக்கிருக்கும் சர்வதேசிய செல்வாக்கினை பயன்படுத்தி சிறிய அண்டை நாடான இலங்கையில் இனப்பிரச்சனையில், குறிப்பாக புலிகளின் செயற்பாட்டினை நசுக்குவதற்கு மிகவும் திட்டமிட்டபடி காய்களை நகர்த்துகிறது. அந்த அளவிற்கு ஈழத்தின் 'பிரிவினை" என்பது இந்திய உபகண்டத்திற்கு முக்கியமானதாகும்.

 

கடந்த காலங்களில் புலி தவிர்ந்த சில இயக்கங்கள் எழுந்தமானமாக இந்தியாவின் ஆயுத உதவி, இராணுவப்பயிற்சி என்பவற்றைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் இந்த உதவிகளின் உள்நோக்கங்களை புரிந்துகொள்ளாமல் இந்தியாவின் தூண்டிலில் மாட்டிக்கொண்ட வரலாறுகள் வெளிப்படை.

 

புலிகள் மிகப்பெரிய அளவில் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்திற்குள் இதுவரை விழவில்லை என்பது ஓரளவு உண்மை. இதற்குக்காரணம் புலிகளின் ஆழமான அரசியல் காரணமல்ல. எதுவும் தனது ஆழுமைக்குள் நகரவேண்டும் என்ற பிரபாகரனின் எதேச்சாதிகாரப் போக்குதான்.

 

இவ்வளவு கால வரலாற்றில் புலிகளின் போராட்டமானது மிக மூர்க்கமானதாக இருந்த போதிலும் தனது 'புலித்தேசிய" அரசியலில்கூட பின்னடைவுகளையே பெற்றுள்ளது. காரணம் வரலாறு கற்றுகொடுத்ததை திரும்பிப் பார்க்க மறுத்ததுதான். தேசியமோ, வர்க்கமோ, சாதியோ, பெண்ணியமோ மக்கள் சார்ந்த சமூக அரசியலை புரிந்தவர்கள் முன்கை எடுக்கும்போது மட்டும்தான்  . . வெற்றியடையாமல் போனாலும்கூட இருக்கின்ற அமைப்பினை கேள்விக்குள்ளாக்கி செல்கின்றது.

 

காலனித்துவம் . .நவகாலனித்துவமாகி. . நவகாலனித்துவம் . ஏகாதிபத்தியமாகி. . ஏகாதிபத்தியம் . . நவீனத்துவமாகி. . நவீனத்துவம் . 'பின்நவீனத்துவமாகி" (தத்துவத்தை சொல்லவில்லை பொருளாதார தொழில் நுட்பத்தை, அமைப்பியலை சொல்கிறோம்) அதாவது இல்லாதவற்றை இருப்பதாக கூறி மக்களின் போராட்டங்களை, மானிட ஒருங்கிணைப்பை இல்லாதொழிக்கும் இன்றைய அரசியல் போக்கில் இதுவும் செல்கின்றது.

 

தேவாரம் திருவாசகம் போல தேசியவாதமும் முட்டாள்தனமாக சமூக அக்கறையற்றவர்களால் ஓதப்படுகின்றது.

 

உலக வல்லரசுகளுக்கு எது தேவையோ அதனையே புலிகளின் தேசியமும் செய்கின்றது. எப்படி இந்த வல்லரசுகள் எந்த வலையை விரிக்கிறார்களோ இதில் அப்பாவிகளாக விழாவிட்டாலும் கூட இந்த குறிப்பிட்ட 'தவிர்க்கமுடியாமையால்" செய்கிறார்கள். இதே தவிர்க்கமுடியாமைக்குள் ராஜபக்ஸ அரசும் விழத்தான் செய்கின்றது.

 

இவற்றுக்கு நல்ல உதாரணம் தாக்குதல் வலிமை கொண்ட டோறா படகுகளை எப்படி புலிகளுக்கு விற்று பயிற்சிகளும் கொடுத்த இஸ்ரேல் அதன் தடுப்பாற்றல் கொண்ட கப்பல்களை இலங்கை அரசிற்கும் விற்று பயிற்சியும் கொடுத்தது என்பதாகும்.

 

வான்படை பற்றியும் அதே கேள்விகள் நாளை எழலாம். யார் கண்டது.

 

அடி பிடி போட்டி என்று வந்து விட்டால் விட்டுக்கொடுக்கவா முடியும். . ? எத்தனை சிறுவர்கள் செத்தால் என்ன. . ? எத்தனை மக்கள் பட்டினி கிடந்தால் என்ன. . ? பேயிடம் இல்லாவிட்டால் பிசாசிடம் வாங்கியும் அடிபடுவம்.

 

பழைய கூட்டணிக்காரர் சொல்வதுபோல 'இந்தியா இல்லாமல் எங்கடை பிரச்சனை தீர்க்கமுடியாது" என்பதை தமிழர்கூட்டணியின் வம்சாவழிகளான புலிகளின் வரலாறும் நிருபித்திருக்கிறது. புலிகளையும் இந்தியா தனது ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கான காய் நகர்த்தல்களை மிகவும் அவதானமாக செய்கின்றது.

 

இந்தியா தலைமையில் ஒரு சர்வதேசிய படையை இலங்கையில் நிலைநிறுத்துவது இந்தியாவின் இறுதி நோக்கமாக, வெற்றியாக அமையலாம். இதைவிட மோசமான பாதிப்பு தமிழ்த் தேசியத்திற்கும் இலங்கையின் இறைமைக்கும் ஏற்படுவது கற்பனாவாதமே!

 

சபேசன் - கனடா
01.09.2007


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்