10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

யுத்தமும் பிரச்சாரமும்

பேச்சுவார்த்தை காலத்தில் நிழலாக நடாத்தப்பட்டு வந்த யுத்தம், இபோது பகிரங்கமாக நடாத்தப்படுகிறது. சனாதிபதிகள், பிரதம மந்திரிகள் மாறினாலும் மாற்றமடையாத இலங்கையரசின் இனவாத அரசியல் அதன் நீட்சியான யுத்தத்தை மறுபடி மக்களின் மீது தொடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை காலத்தில் நிழல் வடிவில் தொடர்ந்த பயங்கரவாதத்தை முகம் கொடுத்த மக்கள் இப்போது ஆக்கிரமிப்பு அரச படைகளின் தாக்குதல்களுக்கு நேரடியாகப் பலியாகிறார்கள்[1].

 

ஆயுதப் போராட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரும், பின்னரும் இலங்கையரசின் இனவாத அரசியலுக்கு வாழ்வைப் பறிகொடுத்தது மட்டுமல்ல, இந்த இனவாத அரசியலை எதிர்த்துப் போராடுகின்ற அரசியலின் தவறுகள்/பலவீனங்களுக்கான விலையையும் மக்களே கொடுக்க வேண்டியிருக்கிறது.

வெற்றிகள் ஆயுதம் வைத்திருப்பவர்களினதும், தோல்விகள் மக்களினதும் என்பதே இதுவரையான வரலாறாக இருக்கிறது.

பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கை அரசை அம்பலப்படுத்தி, அரசியல் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில் களையெடுப்பதிலும்”, ஏக பிரதிநிதித்துவத்திலும் முழுக் கவனம் செலுத்திய புலிகள் இப்போது இலங்கையரசின் யுத்தத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும்படி வெளிநாட்டுத் தமிழர்களைக் கோருகிறார்கள்[2]. புலிகளின் கோரிக்கை என்பதற்கு அப்பால் அப்பாவி மக்களின் மீது தொடுக்கப்படுள்ள யுத்தங்களை எதிர்க்க வேண்டியது சக மனிதரை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்புத்தான்.

83இலிருந்து வெளிநாட்டுத் தமிழர்களால் இலங்கைப் பிரச்சின அவரவர் வாழ்ந்துவரும் நாடுகளில் பெரியளவில் பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஆர்பாட்ட ஊர்வலங்கள், பிரசுரங்கள், கூட்டங்கள், கண்காட்சிகள் என்று பரந்தளவில் இவை எடுத்துச்செல்லப்பட்டன. எவரினதும் கோரிக்கைகளோ / வேண்டுகோள்களோ இல்லாமல் மக்கள் உணர்வுபூர்வமாக இவற்றில் பங்கெடுத்துக் கொண்டனர். புலிகளுடன் அன்றைய காலகட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்வ், ஈரோஸ் என்ற இயக்கங்களும் இப் பிரச்சாரப் போராட்டத்தை மக்களை ஒன்றிணைத்து முன்னெடுத்துச் சென்றனர்.

சர்வதேசத்தில் நடத்தப்பட்ட இந்தப் பிரச்சார எழுச்சியின் வெற்றிக்கான பிரதான காரணம் அன்றைய எதிரி பற்றிய தெளிவே. இயக்கங்களுக்கிடையே / ஆதரவாளர்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்தபோதும் பிரதான எதிரி இலங்கை அரசு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவில்லை. பிரச்சாரங்களும் இலங்கையரசின் இனவாதத்தை அம்பலப்படுத்துவதையும், இலங்கை அரசை தனிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருந்தன.

இந்த நிலமை இன்றில்லை. அன்றிருந்த பொது எதிரி பற்றிய தெளிவான படம் மாறிவிட்டது. இலங்கை அரசு மட்டும் இருந்த இடத்தில் இன்று புலிகளுக்கும் இடம் கிடைத்துள்ளது. விருப்பு/வெறுப்புகளுக்கு அப்பால் புலிகளின் இருப்பு தவிர்க்க முடியாதது என்பதும், புலிகளைத் தவிர்த்து இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாதது என்பதும் எப்படி உண்மையோ அப்படியே புலிகளுக்கும் தமிழ்மக்களுக்குமான இன்றைய உறவு மாற்றங்கண்டிருப்பதும் ஆகும். புலிகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் இந்த உண்மையைத் தவிர்த்து அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியாது.

ரெலோ இயக்க அழிப்புடன் புதிய பரிமாணத்தை எட்டிய புலிகளின் அரசியல்தொடர்ந்து ஏனைய இயக்கங்களையும் தடைசெய்தது/அழித்ததுடன் நிற்கவில்லை. மாணவர் தலைவர்கள், இடதுசாரிகள், தொழிற்சங்கத்தினர், புத்திசீவிகள், சுயாதீனமான தனிநபர்கள் அழிப்பு என்று விரிவடைந்தது. நுணுக்கமான உளவுப்படை, பலமான இராணுவ பலத்தைக் கொண்டிருந்தும், அரசியல் ரீதியான தமது இருப்பு குறித்த அச்சத்தினால் புலிகள் அனைவரையும் சந்தேகித்தனர். விளைவு தமது ஏகப் பிரநிதித்துவத்தை நிலைநிறுத்துவதையே குறிக்கோளாக்கி, இதற்கு குறுக்கே வருபவர்கள் என்று தாம் கருதும் அனைவரையும் எதிரிகளாகக் கணித்து, அவர்களைத் தயவு தாட்சணியமின்றி அழித்தொழித்தனர். எதிரிகள், நட்புச்சக்திகள் பற்றிய புலிகளின் பார்வையே புலிகளுக்கும், தமிழ்மக்களுக்குமான உறவிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.[3].

 

ஒரு தலைவர், ஒரு இயக்கம் என்ற கோட்பாட்டின் கீழ் ஈழத்துடன் தொடர்பான அனைத்தும் மூர்க்கத்தனமான முறையில் புலி மயமாக்கப்பட்டன. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தமிழர்களின்/தேசியத்தின்/ஈழத்தின் துரோகிகளாகக் காட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்/வேட்டையாடப்பட்டனர். இது ஈழத்திலிருந்து வெளிநாடுகள் வரை விரிவடைந்தது. தனிநபர்களின்/குழுக்களின் சுய முயற்சிகள் தடுக்கப்பட்டு ஒரு கொடியின் கீழ் எல்லாம் கொண்டுவரப்பட்டன. விளைவு, பலர் பொது முயற்சிகளிலிருந்து ஒதுங்கினர். மறுபக்கத்தில் புலியாக அடையாளம் காணப்பட்டவை புலிகள் மீதான தடையின் கீழ் செயலிழக்க வைக்கப்பட்டன.

வெளிநாட்டுத் தமிழர்களிடையே காணப்படும் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த தேக்கநிலையை மேற்படி பின்னணிகளுடன் புரிந்து கொள்ளமல், உங்களை உலுக்கவில்லையா என்று கோரிக்கை விடுவதாலோ, படங்கள் காட்டுவதாலோ மாற்றங்கள் வந்துவிடப் போவதில்லை. நில் என்றால் நிற்பதற்கும், இரு என்றால் இருப்பதற்கும் இது ஒன்றும் வெறும் உடற்பயிற்சி இல்லை. மக்களின் வாழ்வுக்கான போராட்டம். எத்தனையோ இழப்புகளைத் தந்து, எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள போராட்டம்.

சர்வதேசத்திடம் பிரச்சினையைக் கொண்டு செல்லுதல் என்பது வல்லாதிக்கநாடுகளிடம் வேண்டுகோள் விடுவதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது[4]. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்திழைக்கப்படும் தவறுகளில் இதுவுமொன்று. யுத்தவெறியனும், அதிகாரத் திமிர்பிடித்தவனுமான புஷ்ஷுக்கு எதிராக ஈராக் யுத்தத்தில் மகனை இழந்த ஒரு தாயால் போராட முடிந்ததோடு மட்டுமல்லாமல், பலரையும் இதில் இணைத்துக்கொள்ளவும் முடிகிறது. புஷ்ஷையும், பிளேயரையும் அந்தந்த நாட்டு ஊடகங்கள் திணறடிக்கின்றன. சர்வதேசம் என்பது இந்த மக்களின் பலம்தான். இந்தப் பலம்தான் விடுதலைப் போராட்டதிற்குத் தேவையானது. இந்தப் பலம்தான் யுத்ததிற்கு எதிராகத் தேவைப்படுவது.

உதாரணத்திற்கு அண்டையநாடான இந்தியாவில்கூட எம்.ஜி.ஆர்/கருணாநிதி/நெடுமாறன்/வை.கோ/திருமாவளவன் என்று பாராளுமன்ற அரசியல்வாதிகளைச் சிரமேற் வைத்திருந்ததைவிட அந்நாட்டின் மக்களை அணுகியிருக்கின்றோமா? அங்குள்ள நேசசக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்தினோமா? விடுதலைப் போராட்டத்தின் நட்புச்சக்திகள் யார் என்ற அரசியல் பார்வையைக் கொண்டுதான் பிரசாரத்தை அந்த சக்திகளிடம் கொண்டு செல்ல முடியும்.

முடிவாக,
ஈழப்போராட்டத்தின் இன்றைய தேக்கநிலை, புலிகள் மீதான சர்வதேசநாடுகளின் நடவடிக்கைகள், புலிகளின் போக்கு போன்றவற்றைக் காரணம் காட்டி, இலங்கையரசின் மக்கள் மீதான யுத்ததை கண்டுகொள்ளமல்விடுவது, திசை திருப்புவது, நியாயப்படுத்துவது மனிதவிரோத செயற்பாடாகும். யுத்தத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

 

மக்களின் விடுதலை என்பதை தொடக்கப் புள்ளியாகக் கொள்ளமல், புலிகளிலிருந்தே ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கணிப்பிடுவதை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட புலி ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள் கைவிடாதவரை, இதுவரையான போராட்டம் குறித்த முழுமையான விமர்சனங்களுக்குத் தயாரில்லாதவரை, இன்றைய தேக்கநிலை குறித்து கேள்விகள் கேட்கப்படாதவரை, கொலைகளையும், செத்துப்போனவர்களையும் பட்டியல் போடுவதைத் தவிர, வேறென்ன செய்துவிடப் போகிறோம்?

http://porukki.weblogs.us/archives/10#comments

பொறுக்கி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்