09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

போரின் முகங்கள்

போர்க்குதிரையை என்னிடம் தாருங்கள்
சமாதானத்தை நோக்கிச் செலுத்துகிறேன்
என்றவரைக்
குதிரை முதுகில் அமர்த்தினோம்.
குதிரை போரை நோக்கிப் பயணமாகியது.
குதிரை முதுகில் அமர்ந்தபின்
குதிரை எங்கே போகிறது என்பதை விடக்
குதிரை முதுகிற் குந்தியிருப்பது முக்கியமானது

 

("போரின் முகங்கள்"- சி.சிவசேகரம், தேசிய கலை இலக்கியப் பேரவை)

1.
நான்காவது ஈழப்போர், மனிதாபிமானப் போர், தற்காப்புப் போர், வலிந்த போர்…. என்று பலவகையான அடையாளங்களுடன் இலங்கையில் போர் மூண்டுள்ளது. தங்கள் தரப்பு வெற்றிகளையும், எதிர்த்தரப்பு தோல்விகளையும் போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரைச் சார்ந்த ஊடகங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களோ போரின் பணயக்கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

2.
இலங்கை அரசு தனக்கு வாய்த்திருக்கும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, தனது இனவாத ஒடுக்குமுறையை சிறுபான்மையினங்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச சூழலில், அனைத்துப் போராட்டங்களுக்கும் எதிரான "பயங்கரவாத எதிர்ப்பு" அணியின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு தனது ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கு போதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. புலிகள் மீதான அமெரிக்கா, ஐரோப்பாவினது தடை, இதன் தொடர்ச்சியான புலிகளுக்கான நிதி, ஆயுத முடக்கங்கள் ஒருபுறம். புலிகளின் பலம்/பலவீனங்கள் பற்றிய தகவல்களுடன் வந்து சேர்ந்திருக்கும் கருணாகுழு இன்னொருபுறம் என்று அரசுக்கான ஆதரவுப்பலம் அதிகரித்திருக்கிறது. இதனைவிட, முந்திய அரசுக் காலங்களில் போலல்லாது தற்போது தமிழ்மக்களுக்கும், புலிகளுக்குமான இடைவெளி/முரண்பாடு அதிகரித்திருப்பதே அரசின் பிரதான பலமாக இருக்கிறது.

இத்தனைக்கும் சமாதானகாலத்தில்தான் பெருமளவு தமிழர்கள் கொழும்பிலும், ஆக்கிரமிப்பு பிரதேசங்களிலும் காணாமற் போயிருக்கிறார்கள். தலை துண்டிக்கப்பட்டு முண்டங்களாக தெருவில் வீசப்பட்டார்கள்.

 

சுனாமி அனர்த்தங்களுக்கான நிவாரணமாக் வெளிநாடுகளால் வழங்கப்பட்ட உதவிகள் கூட இலங்கையரசால் சிறுபான்மையினங்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்டது.

 

இன்றுவரை எந்த இலங்கையரசும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியலில் அக்கறை காட்டவில்லை. மாறாக, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் யுத்தத்தையே தீர்வாகக் காட்டி அதிலேயே வாழ்ந்து வருகின்றது. அவ்வப்போது சமாதானம் என்ற பெயரில் தான் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இராணுவத்தை முகாமிற்குள் வைத்திருப்பதையும், தன்னால் கொண்டுவரப்பட்ட உணவு/மருந்துத் தடைகளை நீக்குவதையும் மட்டுமே தூக்கிப் பிடிப்பதைத் தவிர, இனப்பிரச்சினக்கான அரசியல் தீர்வை சாதுரியமாககத் தவிர்த்து வருகிறது.

 

4.
புலி எதிர்ப்பை மட்டுமே ஒரேயொரு செயல் திட்டமாகக் கொண்ட புலியெதிர்ப்பு அணிகளுக்கும் இலங்கையின் பிரச்சினைகள் அத்தனைக்கும் புலிகளே காரணம். இனப்பிரச்சினயின் விளைபொருளே புலிகள் என்ற வரலாற்றை மறுத்து புலியிலிருந்தே பிரச்சினை ஆரம்பம் என்று இவர்கள் கட்டமைத்து வருகிறார்கள். இலங்கையின் சிறுபான்மை இனங்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையே இலங்கையரசு ஒடுக்கி வருவதையும், வெளிநாடுகளுக்கு முழு இலங்கையயும் தாரைவார்த்துக் கொடுக்கத் தயாராயிருப்பதையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் உலகின் அனைத்துப் போராட்டங்களையும் அடக்குவதற்கு போர் செய்கின்ற சர்வதேச பயங்கரவாத நாடுகளையும் புலிகளை அழிப்பதற்காக வாவென்று வருந்தியழைக்கின்றார்கள். மக்கள் மீதான இவர்கள் அக்கறையை இவர்களது பிரச்சாரங்களே காட்டிக் கொடுத்து விடுகின்றன.

 

புலிகளின் சனனாய மீறல்கள், அரசியற் படுகொலைகளை எதிர்ப்பதாகக் கூறும் இவர்கள் ஆதரிக்கின்ற அணிகளும் புலிகள் பாணியில் செயற்படுவது முரண்நகைதான்!

 

5.
அரசியல் இல்லாமல் இராணுவபலத்தை மட்டும் நம்பியதன் விளைவை புலிகள் இப்போது நேரடியாக முகம் கொடுத்துவருகிறார்கள். இவர்கள் தம்மைச் சுற்றியமைத்த பிம்பங்களினாலான அரண்கள் இப்போது உடைந்து வருகின்றன.

 

இலங்கை அரசை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்குரிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் புலிகள் கோட்டைவிட்டனர். தமிழர்களை அரசியல் நீக்கம் செய்து வருகின்ற புலிகளினது அரசியலினது பலவீனமே அவர்களது அரசியல் தோல்வியுமாகும். தம்மை ஏகபிரதிநிதியாக்குவதற்காகவும் தமது இருப்பு பற்றிய சந்தேகத்தினாலும் புலிச் சிந்தனை அல்லாத எந்த அரசியல் முனைப்பையும் அழித்து விடுவதே புலிகளின் செயற்பாடாக இருக்கிறது.

 

கடந்த பேச்சுவார்த்தைக் காலங்களில், சுனாமி நிதியைப் பங்கிடுதல், தங்களின் போக்குவரத்திற்கு இலங்கயரசின் விமானங்கள் வேண்டும் என்பவற்றிற்கு அப்பால் தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து புலிகள் வைத்த அரசியற் கோரிக்கைகள் என்ன என்பது கேள்விக்குறி. இலங்கை அரச படைகளால் அப்பாவித் தமிழ்மக்கள் கொலை செய்யப்படும்போது மட்டுமே பிரச்சாரங்களுக்காக, படங்களுடன் மக்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

 

6.
இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படாதவரை இலங்கையரசாலோ, வேறெந்த சக்தியாலோ புலிகளை வெற்றிகொள்ள முடியாது.

 

மக்களின் ஆதரவின்றி, விடுதலைப் போருக்கான அடிப்படைத் தார்மீகங்கள் எதுவுமின்றி, புரட்சிகர அரசியலின்றி புலிகளால் இலங்கையரசை வெற்றிகொள்ள முடியாது.

 

எந்தத் தரப்பும் வெல்ல முடியாத சிங்கள-தமிழ் இராணுவங்களிக்கிடையிலான இந்த நீடித்த போரில், இழப்பென்னவோ மக்களுக்கும், தேசத்திற்கும்தான்.

 

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்