09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நீ அடி, நான் உன் பக்கம்!

 யூலை 12 ஆம் திகதி, இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து 2 இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹிஸ்பொல்லா பிடித்துச் சென்றது.

 

யூலை 13ஆம் திகதி, இந்த இராணுவத்தினரை விடுவிப்பதற்காக என்று இஸ்ரேலினால் பெய்ரூத் விமானநிலையம் தாக்கப்பட்டது.

 

அன்றிலிருந்து இன்றும் 20ஆவது நாளாக இஸ்ரேலின் தாக்குதல் லெபனான் மீதும், பலஸ்தீன காஸா பகுதியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடாத்தப்படுவது ஒன்றும் புதியதல்ல. தனது இராணுவத்தினரைப் பிடித்ததினாலேயே இந்தப் போர் என்று இஸ்ரேல் தனது போர்வெறிக்கு காரணம் கூறுவது வெறும் பம்மாத்து.

 

இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கடத்தியது போர் நெறிமுறைகளை மீறுவது என்றால், இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைகளின்றி, வருடக் கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவரும் பலஸ்தீனர்கள், லெபனியர்களின் நிலமை எதில் சேர்த்தியாகும்?

 

2 இராணுவத்தினரின் கடத்தல் என்பது காரணமாகக் காட்டப்பட்டாலும், லெபனான் மீதான தாக்குதல் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தாக்குதல் என ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த அயோகியத்தனம் என்னவெனில், தான் நடாத்தப்போகும் தாக்குதல் குறித்து இஸ்ரேல் முற்கூட்டியே அமெரிக்கா, பிரிட்டனுக்கு அறிவித்து தாக்குதலுக்கான ஒப்புதலையும், ஆதரவையும் பெற்றிருப்பதாகும். இதனை நிரூபிக்கும் வகையில், இஸ்ரேல் ஹிஸ்பொல்லாவை அழிக்கும் வரை போர்நிறுத்தம் என்பதற்கு இடமேயில்லை என்று அமெரிக்கா அறிவித்ததுடன், ஐ.நா.படைகள் லெபனானுக்கு அனுப்பபடுவதை தடுத்தும்/பிற்போட்டும் வருகிறது.

 

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான மக்கள் படுகொலையை சர்வதேசம் தடுத்து நிறுத்துவதற்கு முன், இஸ்ரேலுக்கு போதுமான நேர அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக, கொண்டலிஸா றைஸ் குரங்கு போல பல் இளித்தபடி அங்குமிங்கும் பறந்தபடி இருக்கிறார்.

 

ஏற்கெனவே அப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்பு யத்தங்களின்போதே தனது "பொது"வான சாயம் இழந்து அமெரிக்க கைப்பொம்மையாக வெளிப்படையாகவே தன்னக் காட்டிக் கொண்ட ஐ.நா. இஸ்ரேலின் லெபனான மீதான தாக்குதலில் மிச்சம் மீதியிருந்த நம்பிக்கையையும் கழட்டிவிட்டு அம்மணமாக நிற்கிறது. தனது சொந்த உறுப்பினர்களை இஸ்ரேல் கொலை செய்ததை கண்டிக்கும் தீர்மானத்தைக் கூட அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தினால் நிறைவேற்ற முடியாமலிருக்கும் ஐ.நா, ஐக்கியநாடுகள் சபை என்ற பெயரை இன்னும் தாங்கியிருப்பதும், நேட்டோ அணியில் இல்லாத நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதும் கயமைத்தனமல்லாமல் வேறென்ன?

 

ஹிட்லரின் யூதர்கள் மீதான படுகொலையினால் உலக அநுதாபத்தைப் பெற்றிருக்கும் இஸ்ரேல் அதேபோன்றவொரு மக்கள் படுகொலையை தானே முன்னின்று நடாத்துவதுதான் அதன் அரசியல் என்று காட்டுகிறது.

 

லெபனான் மீதான இஸ்ரேலின் போர் பற்றிய செய்திகளைத் தரும் மேற்கு ஊடகங்கள் தம் பங்கிற்கு போரின் ஒரு பகுதியாகி அமெரிக்கா, இஸ்ரேலைத் திருப்திப்படுத்தும் செய்திகளை தயாரித்துத் தருகின்றன. ஹிஸ்பொல்லாவுக்கு ஈரான், சிரியா ஆயுத உதவியுட்பட ஆதரவு தருவதாக (ஈரானும், சிரியாவும் தமது ஆதரவை பகிரங்கமாகவே காட்டுகின்றன) தெரிவிக்கும் இந்த ஊடகங்கள் இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கொடுப்பதைத் தெரிவிப்பதில்லை.

 

அடுத்த நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தரை/வான் வழித் தாக்குதல்கள் மூலம் திட்டமிட்டு பொருளாதாரச் சிதைவை ஏற்படுத்துவதுடன், குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலையும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்து றொக்கற் தாக்குதலை நடாத்தும் ஹிஸ்பொல்லாவையும் சமமான எதிரி என்றளவில் கூட சித்தரிக்காத இந்த சார்பு ஊடகங்கள் இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் ஹிஸ்பொல்லாவே என்றும், அதன் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்றும் வஞ்சகப் பிரச்சாரம் செய்கின்றன.

 

லெபனான் மீதான தாக்குதல் நடைபெறும் அதேநேரம் பலஸ்தீன காஸா பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடாத்திவருவதை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்து வருவது இன்னொரு அயோக்கியத்தனமாகும்.

 

ஹிஸ்பொல்லாவை ஆயுதரீதியில் எதிர்கொள்ளக்கூடிய ஐ.நா.படைகளை லெபனானுக்கு அனுப்புவது பற்றியும், இஸ்ரேலுக்கு அப்பட்டமான ஆதரவை வழங்கும் ஜேர்மனி போன்ற நாடுகளை இதில் சேர்த்துக் கொள்வது பற்றியும் அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. அதுவும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய நோக்கத்தை - லெபனானை திட்டமிட்டு அழிப்பதை நிறைவேற்றியபின்னே சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகளைப் பொறுத்தவரை ஹிஸ்பொல்லாவை அழிப்பது/பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, இதன் மூலம் ஈரானையும், சிரியாவையும் எச்சரிப்பது/பயமுறுத்துவது நோக்கமாயிருக்கிறது.

 

இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தான் தோற்றுப்போன ஒரேஒரு எதிரியான ஹிஸ்பொல்லாவை அழிப்பது/பலவீனப்படுத்துவது. தன்னைச் சூழ உள்ள அரபுநாடுகளுக்கு தனக்கு இருக்கும் அமெரிக்க நேசநாடுகளின் ஆதரவை நிரூபித்துக் காட்டுவது.

 

ஈரானுக்கோ தனது அணுத்திட்டத்திற்கு வலுவான காரணங்களைக் காட்டுவது.

 

இந்தப் போர் வியூகங்களுக்குள் பலஸ்தீன, லெபனான் மக்களோ உயிர்தப்பமுடியாமல் சிக்கவைக்கப்படுள்ளார்கள்.

 

இங்கே கேவலமான விடயம் என்னவெனில், சில மாதங்களுக்கு முன்பு நபிகள் கேலிச்சித்திர விடயத்தில் தனது மக்களை மேற்குநாடுகளுக்கு எதிராகத் தூண்டிவிட்ட, எண்ணெய் குழாய்களைப் பூட்டுவோம் என்று பயமுறுத்திய அரபுநாடுகள் இப்போது கைகட்டி, வாய்பொத்தி அடங்கிப் போயிருப்பதுதான். அமெரிக்காவிடம் சோரம் போகும் அரபுநாடுகளின் இந்தத் துரோகத் தலைமைகள்தான் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் பெரிய பலமாகும். இதில் மாற்றம் வராதவரையில், அடுத்து சிரியா மீதோ அல்லது ஈரான் மீதோ அமெரிக்க/இஸ்ரேல் தாக்குதல் நடந்தால் அது எதிர்பாராத செய்தியாக இருக்கப் போவதில்லை.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்