12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

நான் ஓர் வெள்ளாளன். நான் ஓர் பிராமணன். நான் பள்ளிக்கூடம் போற பெடியன். - ஹரிஹரஷர்மா

முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது.

 அப்போதெல்லாம் அம்மா எனக்கு முன்னுதாரணங்களாய்க் கூறியது கோப்பாய் சிவம் என்கிற ஒரு பிராமணரின் புத்தகங்கள், இலங்கை வனொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரஷர்மாவின் குரல் என்பவற்றைத்தான். வேறெந்தக் கனவுகளையும் என்னுள் கிளர அம்மா அனுமதித்ததில்லை. பனங்கொட்டைகளை பொறுக்கி கடகத்திலிட்டபடி, புகையும் அடுப்பை ஊதியபடி, இடியப்பம் புழிந்தபடி இவர்களைப் பற்றிய உயர்வான புனைவுகளை அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள். கயத்ரி மந்திரத்தை சொல்லிமுடித்த மாலைப் போதொன்றில் அவள் கூறினாள்; ‘நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம். ரயில்வேப் பொடியள், நளச்சிணியள் (எங்கேயோ இருந்து இடம்பெயர்ந்த வந்த பஞ்சமர்கள், கைவிடப்பட்ட பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களது பாவனைக்கு கோவில் கிணறு மறுக்கப்பட்ட பின்னர் அசுத்தமான ரயில்வே கிணற்று நீரை அவர்கள் பருகினர்.) எல்லாம் வருவாங்கள். அவங்கள் ஆரோடயேனும் சேந்தாயெண்டு கதை வந்துது… அம்மா உனக்கு இல்லை சரியோ, நீ கோமதி மாமின்ர பொடியனோட மாத்திரம் சேர். சாப்பிடேக்க சாப்பாட்டுப் பெட்டிமூடியால மறைச்சு வைச்சுத் தான் சாப்பிட வேணும்-நீ பிராமணன்! ஏதாவது திருகுதாளம் பண்ணினாய், எனக்கு வந்து சொல்ல ஆக்கள் இருக்கினம் சரியே.’

 

பாடசாலையில் முதல்நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது-நான் பயப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்ல ஆசிரியர்களும் நான் அப்பாவைப் போலவே இருப்பதாய் அம்மாவிடம் கூற அவள் ‘கைப் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோ’ எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவும் மூன்று நான்கு வெள்ளாளப் பெண்மணிகளும் நின்றுகொண்டிருந்தனர், பென்ச் அழுக்கானது என என்னையோ அல்லது அவர்களது பிள்ளைகளையோ அப்பக்கம் அண்டவிடாது பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. பெத்தா அதில் தான் உட்கார்ந்திருந்தாள். அவள் வீ.சீயில் துப்பரவு வேலை செய்பவள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்; ‘பெத்தான்ர பிள்ளையும் பள்ளிக்கூடத்தில சேருதே….! கடவுளே கலிகாலம்’. பெத்தாவை நான் பார்த்தேன் - கறுப்பு. ‘எவனுக்கோ ஈணப்போறாள், வயித்தப் பார்..’ சிரித்தார்கள். ஊத்தை பென்ச்சில் அமர்த்திருந்த பெத்தா ஒருமுறைதானும் இப்பக்கம் திரும்பிப் பார்த்தாளில்லை.. அளவுக்கதிகமாக நீலம் போடப்பட்டு ஊத்தைகள் வடிவாக எடுபடாமல் இருத்த சீருடையை பெத்தாவின் மகன் அணித்த்ருத்தான். அவன் என்னைபோல சப்பாத்து அணித்திருக்கவில்லை. கால்களை அடிக்கடி சொறிந்த படி மூக்கில் புல்லாக்குப் போல தொங்கும் சளியை தாயின் சீலைத்தலைப்பில் துடைத்தபடி நின்றிருந்தான். அர்வருப்பாய் இருந்தது. அம்மா எல்லா படிவ நிரப்பல்களும் முடித்து என்னைக்கொண்டு போய் வகுப்பில் விடும் போது நான்கு பளபளப்பான மணவர்களைக் அறிமுகப் படுத்தினாள். என்னைப் போல மிகு வெண்ணிறச் சேட்டையும் மடிப்புக் குலையாத காற்சட்டையையும் அவர்கள் அணிந்திருத்தனர். வெளிநாட்டில் இருவருடைய அப்பாக்கள் இருந்தனர். அவர்கள் அழகான புத்தகப் பைகளை வடிவான பொம்மைக்குட்டி தண்ணீர்ப் போத்தல்களை வைத்திருந்தனர். நான் வட்ட வடிவிலான சாப்பாட்டுப் பெட்டி ஒன்றை வைத்திருந்தேன். எனது பளபளப்பான வெள்ளாள நண்பர்களும் விதவிதமான வடிவ சாப்பாட்டுப் பெட்டிகளை வைத்திருந்தனர். பஞ்சமர்கள் பெரும்பாலும் சாப்பாடு கொண்டுவருவதில்லை. அப்படியே ஓரிருவர் கொண்டுவந்தாலும் வனிதாமணி ரீச்சரிடம் வாழையிலைக்கும் பூவரசம் இலைக்கும் பேச்சு வங்குவார்கள். (அவர்கள் பூவரசம் இலைகளை வெகுநுட்பமாக உதயன் பேப்பரில் விரித்து அதன் மேல் புட்டையோ பாணையோ வைத்துப் பார்சல் கட்டிக் கொண்டுவருவார்கள். வனிதாமணி மிஸ் வகுப்பறைச் சுத்தம் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தவராதலால் அவருக்கு வாழையிலைகள் பூவரசம் இலைகள் வீசப்பட்டு அவற்றுக்கு காக்கைகள் வட்டமிடுவது குறித்து பெரும் அதிருப்தி இருந்தது.)

 

நாங்கள் (வெள்ளாள மாணவர்களையும் என்னையும்) முன்வாங்கில் இருந்தோம். பெண்பிள்ளைகளுக்காக ஒதுக்கப் பட்ட மறுபிரிவின் முன்வாங்கில் சுஹாசினி, யசோதரா, நிர்மலா போன்றோர் அமர்ந்திருக்க பின்வாங்குகளில் றபீக்கா, சொர்ணா, மேரி போன்றோர் அமர்ந்திருந்தனர். முன்வாங்கு பின்வாங்கு ஒழுங்கு ஆசிரியர்களால் மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவம் படிப்பவர்கள் மாமர நிழலுக்குப் போய்விட வேண்டும். கிறிஸ்தவ ஆசிரியையின் தலையில் காகம் எச்சமிட்ட சம்பவம் பாடசாலை முழுதும் தெரியவந்த பின்னரும் கூட.

 

பவளம் ரீச்சரை கோயில்லில் சந்திக்கும் நேரமெல்லாம் அம்மா என்னைப் பற்றி விசாரிப்பாள். ‘ என்ன பவளம், பின்வாங்குப் பெடி பெட்டையளோட ஆள் கொண்டாட்டமே?’

 

பின்வாங்குப் பெடியள் கதைத்துக் கொண்டிருப்பதற்காக, குழப்படிகளுக்காக ரீச்சர்களிடம் அடிவாங்கியபடியே இருந்தார்கள். எங்களுக்கு அடியே விழுவதில்லை. ஏனெனில் நாங்கள் குழப்படி விடுவதில்லை. ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். அவர்கள் பிழைவாங்கியபடியே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பின்வாங்கில் இருந்தார்கள். நாங்கள் சரிகளையே அதிகம் வாங்கவும் விரும்பவும் செய்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இந்து உயர்வேளாள குலத்தினராகவும் பிராமணர்களாகவும் இருந்தோம்.

 

என்னைக் கள்ளப் பிராமணி என அழைக்கும் பழக்கத்தை பின்வாங்கு மாணவர்கள் கொண்டிருந்தனர். காரணம் இல்லாமலில்லை. அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. அவர்கள் அடி வாங்கும் போதெல்லாம் நானும் என் வெள்ளாள நண்பர்களும் மிக மோசமாகப் பகிடி (பகிடியை விட வேறு ஏதாவது மோசமான வார்த்தைகளிருப்பின் அதை இவ்விடத்தில் ஒட்டி வாசிக்கவும்) செய்வோம். அய்ந்தாம் ஆறாம் ஆண்டுகளில் படிக்கும் போது இக்கிண்டல்கள் அதிகமும் பாலியல் சார்ந்தவையாக இருந்தன. ‘பனைமரத்தில ஏறியிருந்த உன்ர கொப்பன்ர கு censored / ‘உன்ர கொம்மா ஆமை றைச்சி திண்டிட்டு ஆமிக்காரனோட படுக்கிற வேcensored’ என்ற வகையான கிண்டல்கள். அவர்களால் எங்களை -முக்கியமாக நோஞ்சானான என்னை- அடித்து நொறுக்கி விட முடியும். ஆனால் தவறுதலாய்க் கூட அவர்கள் என்மீது தொட்டதில்லை. வெள்ளாளச் சிறுவன் ஒருவனது பொன்மூக்கை இடைவேளையின் போது அவர்கள் உடைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. இராணுவத்தினருடன் பஞ்சமர்களின் தாய்மாரை இணைத்துப் பேசியதாலேயே அது நடந்தது. ஆசிரியரிடம் அப் பனையேறிச் சிறுவனின் நியாயங்கள் எடுபடவேயில்லை. ‘திருப்பிக் கதையாத’ ஆசிரியர் திருப்பித் திருப்பி அவனுக்கு கூறிக்கொண்டிருந்தார். முதலில் அவனது விரல் மொளியைப் பதம் பாத்த வாத்தி பின்னர் மேசைக்குக் கீழாய் அவனைக் குனியச் செய்து பின்புறமாய் விளாசினான் - அவனிடமிருந்து எந்த அழுகையொலியும் வராதது வாத்த்யின் கோபத்தை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. பெண்பிள்ளைகள் பேசாமல் இருந்தார்கள். ஆனால் நானும் எனது முன்வாங்கு நண்பர்களும் வாத்தியின் கிண்டல்கள் ஒவ்வொன்றுக்கும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய பாடம் முழுதும் குறித்த மாணவனை முட்டுக்காலில் நிற்கும் படி வாத்தி கூறினான். நான் அவ்ன்பக்கம் ஒருமுறை பார்த்து நைக்காட்டினேன். அந்தக் கண்களை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமுடியாது. நீர் தளும்பி அழுகையை அடக்கும் கண்ணும் துடித்துக் கொண்டிருக்கும் சொண்டும்….

 

மறுநாள் இடைவேளையின் போது அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருப்பதாய் ஆசிரியரொருவர் அழைத்துச் சென்றார். அவனது தாயார் அவனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டதாய் பள்ளிக் கூடத்தில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருபோதும் நான் அவனைக் கண்டதில்லை. ***

 

2001 இடப்பெயர்வு என்னை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சேரும்படி செய்தது. அம்மாவுக்கு வேதக்காரப் பள்ளிக்கூடம் என்பதில் பல அதிருப்திகள் இருந்தன தான் என்றாலும் வேறுவழியிருக்கவில்லை. ஆங்கிலம் கற்க மிக ஏதுவான இடம் எனவும் பஞ்சமர்கள் அதிகம் படிப்பது வட்டு சென்றல் போன்ற பள்ளிக்கூடங்களில் தான் எனவும் இங்கு அதிகம் கல்வி கற்பது கிறிஸ்தவ வெள்ளாளர்கள் தான் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னரே அரைகுறை மனதுடன் அம்மா அங்கு படிக்க அனுப்பினாள். “What was your school?” “Palai Central College, Sir”
“Temporary Admission, No?”
“yes sir”
” What is your name?”
” My name is Hariharasharma sir”


“ஓ! அய்யராக்களா?’
‘ஓம் சேர்’
‘அய்யா, அப்ப சொல்லுங்கோ, பூணூல் போட்டாச்சே,’


வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர் டஸ்டரை கமில்ரனை நோக்கி வீசினார். ‘ டேய் கமில்ரன், நாயே.. எந்த நேரம் பார் கதை. கொப்பரும் கொம்மாவும் என்ன கத்திக் கொண்டே ஓcensored. வகுப்பறை சிரித்தது. எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. எனது முகக்குறியிலிருந்து அதைப் புரிந்து கொண்ட வாத்தி ‘அய்யாவுக்கு விளங்காதுதான்’ என்றான். பிறகும் ‘அய்யா’ எண்டான். எழுந்து நின்றேன். ‘இருங்கோய்யா, இருந்து பதில் சொல்லுங்கோ’ ‘பூணூல் போட்டாச்சே’


‘ம்ஹூம்.’
‘ஏனய்யா? ஏழு வயசில போடவேணுமெண்டு சொல்லுவினம்?..”


‘பதினேழு வயசிலயும் போடலாம் சேர். இனித்தான் போடோணும்’ (பொய் சொன்னேன். உண்மையிலேயே ‘அய்யா’ அங்கீகாரம் எனக்குப் பிடித்திருந்தது. அதைக் குலைக்க நான் விரும்பவில்லை. உண்மையில் அப்பா-அம்மா கலப்பு மணம் குறித்த இரு சமூகங்களின் அங்கீகாரத்தினின்றும் என்னை புறந்தள்ளியிருந்தது. வெள்ளாளர்களும் ஒருவித வேற்றுமை உணர்வோடேயே என்னை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்னை அங்கீகரிக்கவேயில்லை. அப்பா அம்மாவைக்கைவிட்ட போது அவரைப் பிரமச்சாரி என்று அக்கினிசாட்சி கூறிக் மறு கல்யாணம் பண்ணிவைக்கத் தயாராயிருந்த பிராமணிகள் எனக்குப் பூணூல் போட்டுவிடத் தயாராயிருக்கவில்லை - மனுநீதி என்னை பிராமணி என்று ஏற்றுக் கொண்டும்)

 

***

 

அம்மா யாழ்ப்பாணக் கல்லூரியில் எனது இருப்புக் குறித்து மிகவும் அதிருப்தியடைந்திருந்தாள். அவளது அதிருப்தி என்னை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மாற்றியது. கொகுவில் இந்துக் கல்லூரி அம்மாவை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. மஞ்சவனப்பதி கோயில் - இரண்டு கட்டடத் தொகுதிகளுக்கு நடுவில் இன்னொரு முருகன் கோயில் - நல்ல சாதி பெடியள் படிக்கிற இடம் என அப் பாடசாலை குறித்து அலட்டிக் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. எனது ஆங்கிலம், நடை, உடை பாவனைகள் கொக்குவில் இந்துவில் என்னைச் சுற்றி ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. திருநீறு பூசிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் இருந்தது. தினம் தினம் பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவாரம் பாடிக் கொண்டிருந்தேன். பிரேயரில் கிறிஸ்தவ மாணவர்கள் எங்களது ஒன்றுகூடல் மண்டபத்தின் மூலையில் வந்து நிற்கும்படி விதிக்கப் பட்டிருந்தார்கள். சமயப் பாடத்தின் போது அவர்கள் லைபிறறிக்கு அனுப்பப் படுவார்கள்.

 

தமிழ்த்தினப் போட்டிகள் என்றால் எனக்கும் ஏனைய இந்து மாணவர்களுக்கும் சரியான வாசிதான். தலைப்புகள் எல்லாம் சமய இலக்கியங்கள் சார்ந்தே கொடுக்கப் பட்டிருக்கும் . விவாதமென்றால் அது மணிமேகலையா கண்ணகியா, சீதையா கண்ணகியா என்ற வட்டத்துள்ளேயே சுழலும். எப்பவாவது, தொழில்னுட்ப முன்னேற்றம் நம் சமூகத்துக்கு நல்லதைப் பண்ணுகிறதா இல்லையா தொனியில் ஏஎதாவது தருவார்கள். அதற்குக் கூட திருக்குறளில் இருந்தும் அங்கிருந்தும் இங்கிருதுமாய் மேற்கோள் காட்டி வென்றுவிட முடியும். தமிழ்த்தினப் போட்டியென்றால் இந்துக் கல்லூரிகளின் கும்மாளம் சொல்லிமாளாது. ஆங்கில தினப் போட்டிகளின் போது கூட யாழ் இந்துவும் வேம்படியும் கொக்குவில் இந்துவும் எப்படியோ பல முதலாமிடங்களை சுவீகரித்து விடுகின்றன. ஏனெனில் ஆங்கில தினப் போட்டிகளில் விவிலியம் சார்ந்த எந்தக் கட்டுரைகளும் கோரப் படுவதில்லை.

 

மிகக் கஷ்டமான உடல்செயற்பாடுகளைக் கோரிநிற்கும் ஒப்படைகளுக்காக நான் கோகுலனை வைத்திருந்தேன். சரியான விதத்தில் சேர்கிட்டுகளைப் பொருத்தி மின்னோட்டத் தொகுதி தயாரிப்பது. மோட்டாரில் இயங்கும் விளையாட்டு சுழலி செய்வது போன்ற விஞ்ஞானப்பாட ஒப்படைகளுக்கும் அவனை நம்பியிருக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் அவனை வீட்டு வரவேற்பறையினுள் அனுமதிக்க வேண்டிய அவலம் அம்மாவுக்கு வந்தது. மஞ்சள்த் தண்ணி கரைத்து ரெடியாய் இருக்கும் மாலைப்போதுகளில் அவன் வருவான். அவன் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாக இருந்தது. அம்மா ஏதோ பெருமையில் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாள். அதுவே ஒவ்வொருநாளும் அவனது வருகைக்கு வித்திட்டது. அம்மா மூக்குப்பேணிகள் இல்லாது போய்விட்டமைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். கோகுலனுக்கான ரம்ளர் சமயலறையின் மூலையில் கிடக்கும். பளையில் இருந்தபோது அம்மா இரண்டு மூக்குப்பேணிகளை வைத்திருந்தாள். அவற்றிலொன்று வேலிப்பூவரசம் கெட்டில் கவிழ்க்கப்பட்டிருக்கும். அது பன்ம்பாத்தி கிண்டவரும் பனையேறிக்குடியைச் சேர்ந்த முதியவளுக்கானது. மற்றையது மாதத்தில் மூன்று நாட்கள் தான் பாவிப்பதற்கு.

 

***

 

உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு (ஆங்கில இலக்கியம்) சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் ‘காவாலிப் பள்ளிக்கூடம்’), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்து விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் டொனேஷன் தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை.

 

நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்தது. மிகுந்த கண்டிப்புடைய வன்முறையாளரான அவர் என்னை ஒருபோதும் ‘நீ’ போட்டுக் கதைத்ததில்லை. (அவரால் கதைக்க முடிந்ததில்லை எனப்து மேலும் பொருத்தமானது) என்னை அவர் ஆங்கில யூனியனுக்கு தலைவராகப் பிரேரித்த போது ‘அய்யாவோட ஸ்கில்ஸ் வந்து மார்வெலஸ். ஹி டிஸர்வ்ஸ் திஸ்’ என்றார். எனது ஆங்கிலமும் சாதியும் அவரது அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம் என்பது எனது ஊகம்.

 

‘சர்மா, முந்தி எந்தப்பள்ளிக்கூடம்? ஏன் இஞ்ச வந்தனீங்கள்? இங்கிலிஷ்க்கு என்ன றிசல்ஸ். தமிழ் வாசிக்கிறது போல உங்களுக்கு இங்கிலிஷ் விளங்கும் என்ன?’ இது தான் மாணவர்கள் என்னை எதிர்கொண்ட விதம். ஒ.எல் இல் கணிதத்துக்கு விசேடசித்தி வைத்துக் கொண்டு கலைப்பிரிவிற்கு வந்தது வேறு அவர்களிடம் விநோதமான மதிப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ‘மச்சான் அந்தச் சரக்கு செம கட்டையடா… கோழி..’ அது இதென்று கதைத்துக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கண்டதும் நிறுத்திக் கொள்வார்கள். நானே என்னைச் சுற்றிக் கட்டமைத்துக் கொண்ட இந்த ஒளிவளையம் மீது குற்ற உணர்வுடன் கூடிய அதீத பிரியம் இருந்ததைக் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தன. புறனிலையாளனாய் நின்று என்னையும் மாணவர்களையும் விளையாட்டாய் அவதானித்துப் பதிந்து கொண்டிருந்தேன் டயரியில். ‘இரவில எத்தினை மணிகாணப் படிக்கிறநீர்’ போன்ற கேள்விகளே அவர்கள் என்னிடம் கேட்க முடிந்த கேள்விகள். எனது உள்புதைந்த ஆளுமை காரணமாயும் குறைந்தளவிலான பாடசாலைப் பிரசன்னம் காரணமாயும் அவர்களுடன் நெருங்கித் தொடர்புற முடிந்ததில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களிலும் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். நான் ட்ரிப்பிள் எக்ஸ் பார்க்கிற ஆளா இல்லையா, வயதுக்கு வந்தவனா வராதவனா என்பதெல்லாம் அவர்களது முக்கியமான இடைவேளை அலசல்கள். சாடைமாடையாக மாத்திரமே அவர்கள் என்னைக் கிளறியதுண்டு. ஒருதடவை செல்போனில் பதிவுசெய்யப்பட்ட நீலப்படத் துண்டுகளைப் பின்வாங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் ‘என்ன ஐயா, எப்ப ஆம்பிளையாகிறது’ என்று கத்தினான். நான் மையமாகச் சிரித்து விட்டு வாசிப்பது போன்ற பாவனையைத் தொடர்ந்தேன். அன்று விட்டுவிட்டார்கள். முன்திட்டமிடப்பட்ட அணுகல்களை அவர்கள் என்னிடம் நிகழ்த்தியதுண்டு. எனக்கு இவையெல்லாம் ஆர்வமிக்க விளையாட்டொன்றின் அங்கங்களாகத் தோன்றியபடியால் புதிர்மிக்க ஒருவனாய் என்னைக் கட்டமைத்த படியிருந்தேன். எனது உள்வாங்கல்களின் படி அம்மாணவர்கள் என்னை அணுகமுடிந்ததில்லை என்பதே முடிவாய் இருக்கிறது.

 

நான் கடந்துவந்த எல்லா ஆசிரியர்களுக்குமே எனது கதைக்கும் தொனி மீதான மோகம் இருந்து வந்திருப்பதை நான் உள்ளுணர்ந்திருக்கிறேன், இவற்றுள் ஸ, ஹ, ஷ, ஜ உச்சரிப்புகள் அளித்த பங்கு முக்கியமானது. (எல்லோராலும் தினேஸ் என்று அழைக்கப்படும் ஒருவனை நான் தினேஷ் என்பேன்)

 

பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டுவரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களிலும் மாமிச உணவு கொண்டுவர்வோர் யாரும் கிடையாது. பொரித்த முட்டை போன்ற காலை உப உணவுகள் எப்போதாவது வருவது வழக்கம். எனக்கு மூன்று கதிரைகள் தள்ளி முட்டைப்பொரியல் பார்சலை விரித்து வைத்திருந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் பின் வரிசையில் சென்று சாப்பிடும் படி விரட்டப்பட்டான். என்னுடன் வேறு சில விடயங்களை அலசியபடியிருந்த ஆசிரியை விடயம் மாறி, தான் சுனாமியின் பின்னர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டதாயும் இறைச்சி சாப்பிடுபவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லையென்றும் பிள்ளைகளுக்காக முட்டை சமைப்பதாகவும் அதுவும் பாம் முட்டையே கொடுப்பதாகவும் கூறத் தொடங்கினார். இதையெல்லாம் கூறும் போது ஒருவிதமான சங்கடம் அவருக்கிருந்தது. மீண்டும் வெள்ளைக்காரர்கள் இப்போதெல்லாம் மரக்கறிகளை அதிகம் விரும்பும் போக்கு அதிகரித்து வருவதாக கூறி மரக்கறி உணவுப்பழக்கத்தின் நன்மைகளை வகுப்பிலிருந்த பிறருக்கு கூறத் தொடங்கினார். எனக்கு இதெல்லாம் மூன்று கதிரைகள் தள்ளி இருந்த முட்டைப் பொரியலுக்கான பிராயச்சித்தமாகவே தோன்றிற்று.

 

நாடக வகுப்புகள் மிக சுவாரசியமானவை. 1947க்குப் பிற்பட்ட தமிழ் நாட்டு அரங்க செயற்பாடுகளை என்முன்னிலையில் கற்பிக்கும் போதெல்லாம் ஆசிரியரிடம் ஒருவித அசௌகரியம் தொற்றிக் கொள்ளும். ஆரிய பார்ப்பனீயத்துக் கெதிராக திராவிட உணர்வுகள் வெடித்துக் கிளர்ந்த வரலாறு என்ன்முன்னிலையில் கற்பிப்பதற்கு அவருக்கு பல மனத்தடைகள் இருந்தன. சிறிதாய் சிரித்தபடி ஆரம்பிப்பார் ‘சர்மா.. குறைநினைக்கக் கூடாது’ .

 

அர்சியல் கற்கும் போதுகூட ஆசிரியர்களிடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். பாரதிய ஜனதாவை, ஆர்.எஸ்.எஸ்-இனை விமர்சிக்க நேரும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்து சமாளிப்புப் புன்னகை சிந்தத் தவறுவதில்லை. என்னை நோக்கி அவர்கள் கூறும் ச்மாதானப் பிற்குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்: ‘எவ்வளவுதான் பார்ப்பனீயம் கொடூரமானதாய் இருந்தாலும் அது இந்தியாவின் சமூகக்கட்டுமானங்களை முன்னேற்றியிருக்கிறது.’ புரிந்து கொண்டதாய்ப் புன்னகைப்பேன். அவர்கள் தொடர்வார்கள் ‘ அதேபோல முற்போக்குச் சிந்தனை கொண்ட நம்பூதிரிபாடு ஒரு பிராமணர் தானே’. இந்த சமாதானங்களை எனக்கு வழங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஓர் மனதில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய அரசியலை வடிவமைத்தது எதுவாய் இருக்கக் கூடும்?

***


ஷோபா சக்தியின் ‘விலங்குப்பண்ணை’ சிறுகதையிலிருந்து சில பகுதிகள்


· // ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார். //

 

· // அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். //

 

· // கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார். //

 

· // வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். //

 

· // நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. /   நன்றி மதி கந்தசாமி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்