05172022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

நேர்மையை, நியாயங்களை, உண்மைகளை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது

லும்புத் துண்டு சூப்புவது என்றால் ஒரு எசமானின் காலை நக்கி, அவர் இட்ட கட்டளைகளை எந்த வித மறுப்பும் இன்றி சிரமேற்கொண்டு ஏற்று பணிபுரிந்து, தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் எசமான் ஏவுகின்றவர்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறி, பின்னர் அவர் தருகின்ற எலும்புத்துண்டை சன்மானமாகப்பெற்று திருப்தியடைந்து, வாலை ஆட்டி, அவர் காலை நக்கி எந்த விதமான சுதந்திரம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் வாழ்வது.

 

தன்னிடம் வந்தால் அந்த எலும்புத்துண்டை தமிழர்கள் எல்லாருக்கும் தரத் தயாராக இருக்கின்றேன் என்றும், தன்னால் தான் அது முடியும் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் சந்திரகுமார். சந்திரகுமார் அது உண்மையா? இல்லை எனது கட்டுரைக்கு பதில் சொல்வதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் சொல்லிய வார்த்தைகளா? உண்மையில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டீர்கள் என்று இதுவரை நம்புகின்றேன்.

 

எது எப்படியாயினும் சந்திரகுமார், ஒரு கருத்துக்கு எதிராக கருத்து கூறுவதற்கு சொந்த முகத்தில் வரவேண்டும். போலி முகமூடி அணிவது தவறு. சிலர் போலிமுகமூடிகளை அணிந்து கொண்டு இணையத்தளங்களில் வலம் வருகின்றார்கள் என்றால், அவர்களுடைய உண்மையான முகத்தை அவர்களால் காட்டமுடியாத காரணத்தால் தான். ஊழல்கள் செய்து, உட்கொலைகள் செய்து, பொது மக்களை, பத்திரிகையாளர்களை கொன்று அந்த இரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு இருக்கின்ற முகங்கள் அவை. எப்படி அந்த உண்மையான முகத்தை அவர்களால் காட்ட முடியும்? அப்படியான ஒரு முகமாக உங்கள் முகம் இருக்காது என்று நம்புகின்றேன் சந்திரகுமார். அப்படி இல்லை என்றால் பிறகு என்ன தயக்கம் உங்களுக்கு. வாருங்கள் உங்கள் முகத்தை காட்டுங்கள். நாம் இலங்கை பிரச்சனை பற்றி ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

 

அது மட்டுமல்ல காலம் காலமாக புலிகளினால் வீடு இழந்து, ஊர் இழந்து, நாடு இழந்து, அரசியல் உரிமைகள் இழந்து இன்றும் அவர்களால் மரணதண்டனை பெற்ற மனிதனாக வெளிநாட்டில் வாழ்கின்ற என்னைப் போன்றவர்களை, நாம் எமது கருத்துகளைக் கூறும் போது, புலிகளின் பினாமிகள் என்று பொய்யான முத்திரைகள் குத்தாதீர்கள்.

 

செழியன் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுங்கள், தெளிவாக எழுதுங்கள் அதில் தவறு கிடையாது. அதே சமயம் உங்கள் முகத்தையும் காட்டுங்கள். அப்போது தான் தெரியும் மற்றவர்களை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா என்று.

 

என்னுடைய பழைய நண்பர்களில் ஒருவரான பத்மநாபா பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். பத்மநாபாவின் சில செயல்பாடுகள் தொடர்பாக உடன்பாடும், பல செயல்பாடுகள் தொடர்பாக முரண்பாடும் எனக்கு இருந்தது, இன்னமும் உள்ளது. அவருடன் நிறைய விடயங்களில் நேரடியாக கருத்து முரண்பட்டிருக்கின்றேன். இது இரகசியமான விடயமில்லை. பலரும் அறிந்த விடயம்.

 

பத்மநாபாவின் தலைமையில் அமைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உளவுத்துறை தொடர்பாகவும், உட்கட்சியில் கருத்துகளுக்காக போராடிய ஈழமக்கள் புரட்சிரகர முன்னணி தோழர்களை (டக்ளஸ் தேவானந்தாவையும் கூட) அந்த உளவுத் துறை கண்காணித்து பின் தொடர்ந்து அவர்கள் மீது அபாண்டமான வீண்பழிகளை இட்டதற்கு எதிராக நான் போராடினேன். இது ஒரு உட்கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும், பாசிசச் செயல்பாடு என்றும் போராடினேன். இந்த உளவுத்துறைக்குப் பின்னால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மறைமுகமான கைகளும் இருந்தன. உயிரா? சாவா? என்ற நிலை கூட இருந்தது.

 

எனினும் நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் நண்பர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் 3 மத்திய கமிட்டி உறுப்பினர்கள் குழு (டக்ளஸ் தேவா, பாஸ்கரன்(சேகர்), ஜயா) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டன. அந்த குழுவில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் உளவுப்படையைச் சேர்ந்த பலர் சாட்சியம் அளித்தனர். அந்த விசாரணையின் முடிவில் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. பின்னர் பத்மநாபா தலைமையிலான மத்திய கமிட்டியும் அதை ஒத்துக் கொண்டது.

 

பின்னர் ஒரு சமயம் (யாழ்ப்பாணத்தில் இருந்து டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாடு சென்ற பின்னர்) அவருடைய காரியாலயத்தில் பணிபுரிந்த முக்கிய உறுப்பினர் ஆன ரமேஸ் அவர்களை ( பின்னர் அவருடைய பெயர் தினமுரசு அற்புதராஜா) ஒரு நாள் இரவு பத்மநாபாவின் உத்தரவின் பேரில் அவரது ஆயுதப்படை கடத்திச் சென்றது. ரமேசுடன் சேர்த்து கோப்பாய் தோழர் ஒருவரும் கடத்தப்பட்டார். உண்மையாக அன்று கடத்தப்பட்டிருக்க வேண்டிய இன்னொருவர் தோழர் டேவிற்சன். தற்செயலாக அந்த இரவில் அவர் அங்கு இருக்கவில்லை. அதனால் அவர் அந்தக் கடத்தலில் இருந்து தப்பிக்கக் கூடியதாக இருந்தது.

 

ரமேசைக் கடத்தியது யார் என்று முதல் நாள் எமக்குத் தெரியாமல் இருந்தது. மறுநாள் ரமேசுடன் கடத்தப்பட்ட கோப்பாய் தோழர் விடுவிக்கப்பட்டார். ரமேசை கடத்திய விசயத்தை வெளியில் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டிய பின்னர் அவரை விடுதலை செய்திருந்தது மக்கள் விடுதலைப்படை.

 

இது தான் புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். க்கும் உள்ள வித்தியாசம். ஒரு கடத்தலை, ஒரு கொலையை, ஒரு உளவு வேலையை எப்படி செய்வது என்பதில் உள்ள வித்தியாசங்கள்.

 

புலிகள் அன்று ரமேசைக் கடத்தி இருந்தால் இந்தக் கோப்பாய் தோழரை விடுதலை செய்திருக்காது. கொன்று போட்டிருக்கும். ஆனால் கொஞ்சம் மிருகத்தன்மையும், கொஞ்சம் மனிதத்தன்மையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இடம் இருந்ததால் கோப்பாய் தோழர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை பெற்றதுமே நான் தங்கியிருந்த ஊருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல் தெரிவித்து விட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். உடன்; நான் அந்த மாலையில் அப்போது யாழப்;பாணத்திற்கு பொறுப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய கமிட்டி உறுப்பினரை (பாஸ்கரன்- (சேகர்)) சந்தித்து கேட்டேன் “ஈ.பி.ஆர்.எல்.எவ். தானா ரமேசைக் கடத்தியது” என்று.

 

“இல்லை நாங்கள் கடத்தவில்லை” என்று அவர் கூறினார். இந்த பதில் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. ரமேஸ் அவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்று நான் உணர்ந்தேன். மறுநாள் காலை நான் இருந்த கிராமத்தில் இருந்து எனது தலைமையில் சுமார் இருநூறு பேர் (நண்பர் கி.பி உட்பட) ‘ரமேசை விடுதலை செய்’ என்ற கோசங்களையும், அட்டைகளையும் தாங்கி பருத்தித்துறை வீதி வழியாக மிக நீண்ட ஊர்வலம் சென்றோம். இதனையடுத்து மானிப்பாயில், பின்னர் சுண்ணாகத்தில், இறுதியாக உரும்பராயில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வரை “ரமேசை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டம் நடந்தது.

 

உரும்பராயில் இருந்து நண்பர் ஜெகநாதன் தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தை சென்றடைந்த அந்த மக்கள் கூட்டம் ரமேசை விடுதலை செய்யும் வரை தாம் பல்கலைக் கழகத்தை விட்டு அகல மாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களது ஆதரவு கிடைத்தது. நிலைமை மோசமானதை அறிந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். யாழ் பொறுப்பாளர் அங்கு சென்று “இன்னமும் 48 மணித்தியாலத்தில் ரமேசை நாங்கள் விடுதலை செய்கின்றோம்” என்று கூறினார். அவர் கூறியதின்படி ரமேஸ் விடுதலை செய்யப்பட்டார். அதே சமயம் மீண்டும் கடத்தப்படலாம் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டபடியால் டேவிற்சன் நாட்டை விட்டு தனது விருப்பத்திற்கு மாறாக வெளியேறினார்.

 

புலிகளின் அராஜகத்தை மட்டுமல்ல எந்த இயக்கத்தின் படுகொலையையும், அராஜக நடவடிக்கைகளையும் எதிர்த்தவர்கள் பலர். அவர்களில் ஒருவன் செழியன்.

புலிகளின் செயலை மட்டும் எதிர்த்துக்கொண்டு மற்ற இயக்கங்களின், தன் சொந்தக் கட்சியின் உட்படுகொலைகளை, பத்திரிகையாளர்களின் கொலைகளை, அரசின் மனித படுகொலைகளை ஆதரிக்கின்றவர்;கள் அல்ல நாங்கள்.

 

இப்படி எத்தனையோ முரண்பாடுகள். முரண்பாட்டின் ஒரு கட்டத்தில் மிக கவுரவமாக பத்மநாபாவுடன் இருந்த உறவை நான் துண்டித்துக் கொண்டேன். இது நடந்தது இந்திய இராணுவம் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர். இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர்.

 

அதன் பின்னரும் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பத்மநாபாவுக்கு எதிராகவோ, ஏனைய நண்பர்களுக்கு எதிராகவோ இல்லை புலிகளுக்கு எதிராகவோ, இன்னமும் எவருக்கும் எதிராக செழியன் ஒருபோதும் எந்த வித நயவஞ்சக முயற்சிலும் ஈடுபடவில்லை. மக்களை நேசிக்கும் எவரும் மற்றும் ஜனநாயகத்தை உளப்ப+ர்வமாக ஏற்றுக் கொண்ட எவரும் அப்படி எண்ணுவதோ செயற்படுவதோ கிடையாது. இந்த நயவஞ்சக முயற்சிகள், உட்கட்சி தோழர்களைப் படுகொலை செய்வது எல்லாம் பாசிஸ்டுக்களின் முயற்சிகள். ஆனால்; புலிகள் மட்டும் தான் இதை செய்கின்றார்கள், அதை நாங்கள் எதிர்க்கின்றோம் என்று சும்மா ஒரு போலிக்கு ஒப்பாரி வைக்கின்றார்கள் சிலர்.

 

ஒரு சமயம் தமிழ்நாட்டில் இருந்த எனது சில ஈ.பி.ஆர்.எல்.எவ். நண்பர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். இல் நடந்த சம்பவங்களை எழுதி அதை கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் விநியோகித்தனர். பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் வந்தும் அதை விநியோகித்தனர். அதன் பிரதிகள் பின்னர் புலிகளின் கைகளுக்குள் சென்றது. அதையே ஈ.பி.ஆர்.எல்.எவ். வுக்கு எதிராக புலிகள் பாவித்தனர். அந்த விடயத்தை தான் நயவஞ்சக முயற்சி என்று சந்திரகுமார் தனது எழுத்தின் மூலம் குறிப்பிட்டிருக்கின்றாரா? அது தற்செயலாக நடந்த விடயம். திட்ட மிட்டு அந்த நண்பர்கள் செய்த விடயம் இல்லை என்பதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

 

நண்பர் பத்மநாபா, நண்பர் டக்ளஸ் தேவானந்தா, நண்பர் ஸ்ரீதரன்; ஆனந்தசங்கரி, நண்பர் தினமுரசு ஆசிரியர் அற்புதராஜா இன்னும் எவராக இருந்தாலும் (புலித்தலைவர் பிரபாகரன் உட்பட) அவர்களுக்கு மரணதண்டனை யாராலும் விதிப்பதையும் நான் எதிர்க்கின்றேன். ஆனால் அரசியல் முரண்பாட்டுக்கு தீர்வாக கொலையையே தண்டனையாக வழங்குபவர்கள் புலிகள் மட்டுமல்ல நண்பரே, மற்றும் பலர் உள்ளனர் என்பது உங்களுத் தெரியும்.

 

சந்ததியார், உமா மகேஸ்வரன், ராகவன், பத்மநாபா, சுரேஸ், டேவிற்சன், மித்திரன், அற்புதராஜா, டக்களஸ் தேவானந்தா, பாஸ்கரன் (சேகர்), செழியன். இப்படியே பட்டியல் இடலாம். இவர்கள் எல்லாம் தமது உயிரைப் பணயம் வைத்து, வாழ்க்கையை அர்ப்பணித்து தமிழ் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள். அவர்களுக்கு சாப்பாடும் இடமும் கொடுக்கவேண்டியது அந்தந்த அமைப்பின் கடமை. இதில் என்ன தவறு உள்ளது.

 

அதே சமயம் சாப்பாடு போட்ட இயக்கத்தின் தவறுகளை இவர்கள் எல்லாம் கண்டிக்க கூடாது, அப்படி கண்டித்தது தவறு, அந்த இயக்கத்தின் உள் இயக்க தவறுகளுக்கு எதிராக போராடுவது தவறு என்ற சாரப்பட சந்திரகுமார் எழுதியுள்ளார். அப்படி என்றால் ஈரோஸ் இயக்கத்தில் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மற்றும் இவர் குறிப்பிடும் பத்மநாபா ஆகியோர் வெளியேறி புதிய இயக்கம் தொடங்கியது தவறு என்று சொல்லுகின்றாரா சந்திரகுமார்? பாஸ்கரன் (சேகர்), டேவிற்சன், மித்திரன் போன்றவர்கள் பத்மநாபாவை விட்டு, பின்னர் தேவாவை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது என்று சொல்லவருகின்றாரா?

 

இதுதான் புலிக்குணம் என்று சொல்வது. புலிகளின் தவறுகளை கண்டிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு இருக்கும் பலரிடமும் ஒட்டி இருப்பது இந்த புலிக்குணம் தான். அதாவது உட்கட்சிப் போராட்டம் தவறு என்பது இந்த சந்திரகுமாரின் ஒரு கருத்து. இந்த சந்திரகுமாரின் விருப்பம் எல்லாம் தனக்கு எதிராக தனது இயக்கத்தில் எவருமே விமர்சனங்களை, உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தக் கூடாது என்பதே. சந்திரகுமாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடைய ஆசை புலிகளிடம் இருந்து ஆட்சியை பிடுங்கி அதே புலியாட்சியை தான் தொடர்வதே.

 

நான் எனது வீட்டில் இருந்தே அரசியல் வேலைகள் செய்தேன். பின்னர் இலங்கை இராணுவம் என்னைத்தேடி எனது வீட்டுக்குள் புகுந்த பின்னர், எனது வாழ்விடமே கிராமிய தொழிலாள மக்களின் வாழ்விடம் ஆன ஒரு கிராமமே. இது தெரிந்தும் தெரியாத மாதிரி சந்திரகுமார் புலம்பியுள்ளார்.

 

தமிழ் மக்களின் குடிசை வீட்டில் வாழ்ந்தேன், சந்திரகுமார் போல மோசாக் தரைபோட்ட வீட்டில் வாழவில்லை. மக்கள் பணத்தில் உணவை அருந்தினேன். அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்காக வாழ்ந்தேன். அந்த தமிழ் மக்களின் மீது அராஜகம் செய்ய முயன்றவர்களையும், அவர்களது உரிமைகளை விற்ற முயன்றவர்களை, உட்கட்சிப் போராட்டத்தை நசுக்க முயற்சித்தவர்களை, சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட எல்லாரையும் நான் கண்டித்தேன். அவர்களுக்கு எதிராக என்னால் செய்ய முடிந்ததை செய்தேன்.

 

புலிகள் தொடர்பாக நான் இதுவரை எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்றும் அதற்கு எனக்கு திராணியில்லை என்றும் மீண்டும் பொய் கூறியுள்ளார் சந்திரகுமார். புலிகளின் மீதும் சரி மற்ற இயக்கங்களின் எந்தவித அராஜக நடவடிக்கை தொடர்பாகவும் இது வரை என்ன செய்திருக்கின்றார் இந்த சந்திரகுமார் என்று கூறமுடியுமா?

 

எனது கவிதைத் தொகுப்புகளான “மரணம்”, “இல்லாமல் போன தோழனுக்கு”, “அதிகாலையைத்தேடி”, “குழந்தைகளிடம் பொய் கூறாதீர்கள்”, இன்னும் கடைசியாக கடந்த வருடம் வெளியாகிய “கடலைவிட்டுப் போன மீன் குஞ்சுகள்” கவிதை தொகுப்பு உட்பட எல்லாவற்றிலும் புலிகள், மற்றும் ஏனைய இயக்கங்கள், இலங்கை இனவாத அரசு தொடர்பான எதிர்ப்புக் குரல் மேலோங்கியே உள்ளது.

 

கனடாவில் மேடை ஏற்றப்பட்ட நாடகங்களிலும், நான் தொகுத்து வழங்கிய கவிதா நிகழ்வுகளிலும் , பேச்சு மேடைகளிலும் புலிகளினதும், இலங்கை அரசாங்கத்தினதும் அராஜகங்களுக்கு எதிரான குரல் ஒலித்துள்ளது. அதற்கு எல்லாம் ஆவணங்கள் உள்ளன. “மனிதனின் நாட்குறிப்புகள்” என்ற எனது புத்தகம் மிக முக்கியமானது. இவற்றை விட எனது கட்டுரைகள், பேட்டிகளில் நேரடியாகவும் நான் புலிகளையும், இலங்கை அரசையும் விமர்சித்துள்ளேன். இதையெல்லாம் சந்திரகுமார் வாசித்தாரா? இல்லை வாசித்து விட்டு வாசிக்காதது போல் நடிக்கின்றாரா? Fighting for Freedom with A Pen என்ற தலைப்பிட்டு கனடாவில் எனது ஒரு பேட்டி ஆங்கிலத்தில் வந்ததும் சந்திரகுமாருக்கு மிக நன்றாகத் தெரியும். அதில் உள்ளதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்குமாறும் அதில் என்ன உள்ளது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும் இந்த முகமூடியை கேட்டுக் கொள்ளுகின்றேன்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலான தொடர்;சியான அரசியல் செயல்பாடு எனக்கு உள்ளது. புலிகளின் ஆதிக்கம் அதி உச்சக் கட்டத்தில் இருந்த சமயம் சில கனடா நண்பர்களால் உருவாக்கப்பட இருந்த ‘தேடகம்’ அமைப்பின் உருவாக்கத்திலும் நானும் பங்கு கொண்டு தொடர்ந்து செயற்பட்டோம். அதே சமயம் மனித உரிமைகளுக்கான இலங்கையர்கள், பின்னர் இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு என்பனவற்றிலும் இருந்து இலங்கையில் நிகழும் சகல அராஜக நடவடிக்கைகளையும் கண்டித்து செயற்பட்டோம். பலவருடங்களின் பின்னர் இவற்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பலர் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். நானும் வெளியேறினேன்.

 

எனது வாழ்க்கையில் கறைபடிந்த இருண்ட வாழ் நாட்கள் அப்போது தான் ஆரம்பமானது. தேடகத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் மிகவும் மனச்சோர்வுக்கு உட்பட்டு எதிலும் கலந்து கொள்ளாமல் சுமார் நான்கு வருடங்கள் கழிந்தன. அந்த சமயத்தில் தான் ‘அம்பே” என்ற கம்பனியுடன் இணைந்து செயலாற்றினேன். அது எனது வாழ்வின் கறைபடிந்த நாட்கள். அந்த விபத்தில் இருந்து என்னை மீட்டு எடுக்க பல இலக்கிய அரசியல் நண்பர்கள் துணையாக இருந்தனர். அவர்களின் உதவியுடன் நான் அதில் இருந்து மீண்டு வந்தேன்.

 

தற்போது எனது அரசியல் கருத்துகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன்.
என்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு மணிநேரம் என்னுடன் அரசியல் உரையாடல் செய்தால் போதும். அந்த சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் தேனீயில் நான் அண்மையில் எழுதிய கட்டுரைகளை படித்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படியும் யாருக்கும் புரியாவிட்டால் இதோ நானே கூறுகின்றேன்.

 

“இலங்கையில் உள்ள எல்லா சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் உள்ள உரிமை கிடைத்தாக வேண்டும். அவர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து வழங்கப்படவேண்டும். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையில் உள்ள எல்லா இயக்கங்கள், மற்றும் கட்சிகளின் அராஜக செயல்பாடுகளை, அவர்களது உட்கட்சி ஜனநாய விரோத போக்குகளை, உட்கொலைகளை நான் கண்டிக்கின்றேன். வெறுக்கின்றேன். எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன். இவற்றோடு அரச பயங்கரவாதத்தையும் எதிர்க்கின்றேன்”.

 

புலிகளுக்கு எதிராக, அல்லது ஏதாவது இயக்கத்தின் அராஜகத்திற்கு எதிராக, இல்லை இலங்கை அரசின் கொடுமைக்கு எதிராக சந்திரகுமாரால் ஏதாவது சின்னக் காரியமாவது நடந்ததற்கு ஆதாரம் காட்ட முடியுமா?

 

“மனித உரிமைகளுக்கான இலங்கையர்கள்” அமைப்பினர் நடாத்திய Exhibition of Art & Photographs on Political Violence in Sri Lanka ( March 30, 1991) நிகழ்ச்சியில் இந்த சந்திரகுமாரை காணமுடியவில்லை. இவற்றை விட முஸ்லீம் மக்களை புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியதற்கு எதிராக நாம் நடாத்திய போராட்டத்திற்கு இந்த சந்திரகுமார் கலந்து கொள்ளவில்லை அவருக்கு எந்தவித அக்கறையும், பிரக்ஞையும் கூட இருக்கவில்லை. அதே போல அப்பாவித் தமிழ் மக்களிற்கு எதிராக பிரேமதாசா அரசின் குண்டுத்தாக்குதலுக்கு எதிராகவும் நாம் நடாத்திய போராட்டத்திலும் இந்த சந்திரகுமார் கலந்து கொள்ளவில்லை. “தொலைந்து போன நாட்களும், தொடர்வுகளும்” என்ற நிகழ்ச்சி அதில் இரண்டு ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி- புலிகள், மற்றும் இலங்கை அரசின் அராஜகங்களுக்கு எதிராக நடந்த கருத்தரங்கும், ஓவியக் கண்காட்சியும் அதிலும் இவரை காணக்கிடைக்கவில்லை. ஆனால் நாம் இருந்தோம். இப்படி இன்னமும் பலவிடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

 

என்னைக் கொல்லுவதற்காக புலிகள் என்னை 1986 டிசம்பர் மாதம் தேடினார்கள். என்னை கைது செய்ய நான் இருந்த கிராமத்திற்கு வந்தார்கள். அங்கிருந்து தப்பி ஓடினேன். எனது மனைவியை கைது செய்தார்கள் புலிகள். பின்னர் நான் பாதுகாப்பு தேடிச் சென்ற ஒரு வீட்டுக்கு தேடி வந்தார்கள். அந்த இரவு அங்கு நான் இருக்கவில்லை. அதனால் அதில் இருந்;து தப்பினேன். பின்னர் ஒரு இரவு நான் சைக்கிளில் தப்பி செல்லும் போது உரும்பராய்- கோப்பாய் வீதியில் இடைமறித்து துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார்கள். எல்லா முயற்சியிலும் இருந்து தப்பி கொழும்பு சென்று அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேறினேன். என்னுடன் கொழும்புக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் வந்தார் என்று பொய்யான தகவலை எழுதியுள்ளார் இந்த முகமுடி சந்திரகுமார். அப்படி வந்தால் கூட அதில் தவறு ஒன்றும் இல்லை புலிகளால் பாதிக்கப்பட்ட இருவர் ஒன்றாக தப்பிப் போவது என்ன பிழையா? ஆனால் அப்படி நடக்கவில்லை. சந்திரகுமாரின் மற்றோர் இட்டுக்கட்டல் இது.

 

புலிகள் எதிர்த்தபடியால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை செழியன் எதிர்த்தார் என்றும், சந்திரிகாவின் தீர்வு திட்டத்தை எதிர்த்தார் என்றும் மற்றுமொரு இட்டுக்கட்டல் செய்து எழுதியுள்ளார் சந்திரகுமார். இந்த தீர்வு திட்டங்களில் என்ன இருந்தது என்பதே மக்களுக்குத் தெரியாது. எங்காவது இந்த தீர்வுத்திட்டம் பற்றிய விளக்கம் பிரசுரிக்கப்பட்டதா? எனவே எனக்கும் அதில் உள்ளது என்ன என்று தெரியாது. அதனால் அவை பற்றி நான் எதிராகவோ, ஆதரவாகவோ கருத்துகள் எதுவும் கூறவில்லை, இதுவே உண்மை. ஆனால் எதிராக நான் கருத்துக் கூறினேன் என்பது சந்திரகுமாரின் இட்டுக்கட்டல். ஆனால் இந்திய இராணுவம் நமது மக்களை கொன்று குவித்து, பலாத்காரங்கள் செய்ததை நான் எதிர்த்தேன். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டது இன்னோர் செய்தி

 

என்னைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு எனது கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது என்று சந்திரகுமார் எழுதியுள்ளார். அது உண்மைதான் என்னைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு எனது கருத்துகளைப் பற்றிய எந்த ஆச்சரியமும் கிடையாது. அவை எப்போதும் வெளிப்படையானவை. போலி முகமூடி போட்டுக் கொண்டு தேனீயில் ஒரு அபிப்பிராயமும் ரொறன்டோ நண்பர்களுடன் ஒரு அபிப்பிராயமும், கொழும்பில் ஒரு அபிப்பிராயமும் பேசுவது செழியனின் பண்பு கிடையாது.

 

ஜம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைக்கு ஒரு இரவுக்குள் தீர்வு காணவேண்டும் என்று செழியன் கனவு காண்கின்றார் என்று புலம்பியுள்ளார் சந்திரகுமார். தேனீயில் எழுதிய எனது கடந்த கட்டுரையிலேயே “ ஓரிரவுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்று ஒரு காலத்திலும் யாராலும் கனவு காணப்படக்கூடிய விடயங்கள் எதுவுமே உலகத்தில் இல்லை” என்று நான் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்”. ஆனால் இது ஐஜம்பது வருடப்பிரச்சனை. 18250 இரவுகள் போய்விட்டன. இன்னமும் ஏன் தீர்க்கப்படமுடியவில்லை. அதற்கு காரணம் தீர்வு இலங்கை அரசுக்குத் தெரியாது என்பது அல்ல. சிறுபான்மை இனங்களுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மை இன இனவாத அரசும், கட்சிகளும் தயாராக இல்லை என்பது தான்.

 

“சிங்களப் பேரினவாதத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்புக்கு சென்று சிங்கள பேரினவாத அரசின் கால்களை சூப்புவரின் காலை, செழியன் சூப்பினார் என்றும் “நல்லாச் செய்யுறீங்கள் சனத்துக்கு” என்று செழியன் அந்த எசமானுக்கு சொன்னதாகவும் இந்த சந்திரகுமார் மறுபடியும் ஒரு பொய்யை எழுதியுள்ளார்.

 

நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் 1997ல் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக கனடா வரும் வழியில் கொழும்;பு கட்டுநாயாக்காவில் எனது விமானத்தை தவறவிட்டேன். அடுத்த விமானம் எடுப்பதற்கு ஒரு மாதம் செல்லும் என்று அச்சமயம் கூறப்பட்டது. எனக்கு இரண்டு வழி இருந்தது ஒன்று மறுபடியும் சென்னை செல்வது. மற்றது கொழும்பு நகரத்திற்குள் செல்வது. கொழும்பு நகரத்திற்கு நான் சென்றேன்.

 

ஒரு வாரம் தங்கியிருந்தேன். அச்சமயம் நான்கு நண்பர்களை மட்டுமே சந்தித்தேன். நண்பர் சுகு (இன்றைய ஈ.பி.ஆர். எல்.எவ் பத்மநாபா அணி செயலாளர், டக்ளஸ் தேவானந்தா, தினமுரசு அற்புதராஜா, தினமுரசு நிர்வாகியும் எனது நண்பருமான கமல். இந்த நான்கு பேரில் எவரிடமும் நான் பாதுகாப்பும், கோரவில்லை, வியாபாரமும் பேசவில்லை, அரசியலும் பேசவில்லை. எனது இன்னொரு நண்பரான பாஸ்கரன் (சேகர்) அவர் அப்போது தினகரன் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரையும் நட்பு ரீதியாக சந்திக்க ஆசைப்பட்டேன்.

 

டக்ளஸ் தேவானந்தாவின் இடத்திற்கு என்னை சுகுவே அழைத்துச் சென்றார். அங்கு எனது விமான டிக்கட்டை ஒரு வாரத்திற்குள் செல்லக் கூடியதாக மாற்றித் தர தன்னால் ஒழுங்கு செய்து தரமுடியும் என தேவா கூறி அதற்கான ஒழுங்குகளை எயர்லங்கா மூலம் செய்து தந்தார். அதற்கு பிரதி உபகாரமாக தனது அரசியலை ஏற்றுக் கொள்ளுமாறு எந்த நேரத்திலும் தேவா என்னிடம் கேட்கவில்லை. அப்படி ஒரு தன்மை உடையவர் அல்ல அவர் என்று நான் நம்புகின்றேன். அதே போல அவருடைய அரசியல் செயற்பாடுகள் குறித்து எந்த விமர்சனத்தையுமோ, பாராட்டையுமோ நான் வழங்கவில்லை. அதற்கு சாட்சி ஆரம்பம் முதல் இறுதி வரை அங்கு இருந்த நண்பர் சுகு.

 

இறுதியில் நண்பர் டக்ளஸ் தேவா கேட்டார் “தோழர் செழியன் இன்றைய உங்களுடைய அரசியல் அபிப்பிராயங்கள் என்ன? அது பற்றி நாங்கள் பேசலாமா?” என்று. “இன்று இரவு வந்து பேசலாம்” என்று கூறினேன். ஆனால் அந்த இடத்திற்கு இரவு போய் திரும்புவது பாதுகாப்பில்லை என்று பின்னர் என்னிடம் சுகு கூறியதால் அந்த சந்திப்பு நிகழவில்லை. சந்திப்பு நடந்திருந்தாலும் தேவாவும் சரி நானும் சரி நமது கருத்துகளை மாற்றிக் கொண்டிருக்கமாட்டோம். இரவோடு இரவாக பேசி யாருமே யாரின் கருத்துகளையும் மாற்ற முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. புலிகளின் மாற்று இயக்கத்தினரை அழித்தொழிக்கும் செயற்பாடே டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை கொழும்புக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதற்கான தார்மீக பொறுப்பு புலிகளையே சாரும். இது போலத் தான் மட்டுநகர் கருணாவையும் புலிகள் இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். இது பற்றி விவாதிக்க வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம்.

 

இதே போல எனது இன்னோர் நண்பர் தினமுரசு அற்புதராஜாவை அவருடைய அலுவலகத்தில் நட்புக்காக சந்தித்தேன். அப்போதும் ஆரம்பம் முதல் கடைசி வரை கூட இருந்தது நண்பர் கமல். நான் எந்த அரசியலும் பேசவில்லை. ஆனால் அற்புதராஜா கூறினார் “ நாங்கள் இங்கு நிறைய சமூக விரோத செயல்கள் எல்லாம் செய்திட்டம். இப்ப நல்லாத் தெரியுது இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு ஒன்றும் தராது எண்டு.” இன்னும் பல விடயங்களை கூறினார். தற்சமயம் அவை தேவையில்லை. நான் ஒன்றும் பதில் கூறவில்லை. இது தான் நடந்தது. இவற்றுக்கு சாட்சி இன்னும் உயிரோடு இருக்கும் சுகுவும், கமலும்.

 

இதை வைத்துக்கொண்டு யாரோ ஒரு சிங்கள பேரினவாத அரசின் காலை நக்கிய ஒருவரின் காலில் செழியன் விழுந்ததாக எழுதியுள்ளார் சந்திரகுமார். இன்னம் கொஞ்சம் தெளிவாக எழுதுங்களேன் சந்திரகுமார். யார் சிங்கள பேரினவாத அரசின் காலை நக்கியது? அவரின் எந்தக் காலை சூப்பி என்ன எலும்புத் துண்டை செழியன் பெற்றுக் கொண்டார்.?

 

இறுதியாக மறுபடியும் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும், மலையக மக்களுக்கும் இன்னமும் சிங்கள மக்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால், நீதி அரசியல், கல்வி, நிலம், சுகாதாரம், பொலீஸ் துறை, கடல், நதிகள், காடுகள் இவை தொடர்பாக எந்த வித அதிகாரமும் இல்லாத ஒரு தீர்வு திட்டம் தான் இந்த பதின் மூன்றாவது அரசியல் சாசனம் வழங்கும் தீர்வு திட்டம். சர்வதேசத்தின் நிர்ப்பந்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மகிந்தா தேடிய ஒரு குறுக்குவழி. இது சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மாறாக சிறுபான்மை இனங்களின் உரிமைகளை படுகுழியில் தள்ளுகின்ற முயற்சியாகும். இதை சந்திரகுமாரினால் இனம் காண இப்போது முடியாவிட்டாலும் காலக்கிரமத்தில் அவர் இனம் கண்டு கொள்வார் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

 

இந்த மகிந்த தீர்வு திட்டம் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை தீர்க்கவில்லை என்பதை நான் மறுபடியும் சொல்கின்றேன். எமக்குத் தேவை இதைவிட மிக அதிகமான அரசியல் உரிமைகள். அதற்காக பேச, எழுத, செயற்பட எனக்கு உரிமை இருக்கின்றது. அதற்காக நாம் செயற்;பட்டால் தான் அந்த உரிமைகள் நமக்கு கிடைக்கும். அதை செய்ய வேண்டிய கடமை நம் முன்னால் உள்ளது. அதை தடுக்கவோ, அதற்காக என்மீது சேறு பூசவோ யாருக்கும் உரிமை கிடையாது.

 

(குறிப்பு: இந்தக் கட்டுரை என் மீதான சந்திரகுமாரின் அவதூறுகளுக்கான பதில் மட்டுமே. தீர்வு திட்டம் தொடர்பாக எனது கட்டுரைகள் தனியாக வரும். அது தொடர்பாக சந்திரகுமார் தனது ஆரோக்கியமான கருத்துகளை முன்வைக்க வேண்டும். அது தான் இன்றைய தேவை.)

 

செழியன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்