06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆனந்தசங்கரிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்

ஜயா, நான் நலமாயுள்ளேன். நீங்களும் புலிகளின் வெடி குண்டுகளுக்கு இடையில் அகப்படாமல் இருக்க, ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்.

 

இலண்டனுக்கு புலி எதிர்ப்பு சாதி மாநாட்டுற்கு சேர்த்து வந்திருக்கிறியள் போல இருக்கு. சென்றமுறை அதை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடி அனுப்பினார்கள். எனக்குத் தெரியும் நீங்கள் இப்பிடியான சம்பவங்கள் என்றால் விடமாட்டியள், முன்னுக்கு நிற்பியள். தப்பித் தவறி மாநாட்டுற்கு போய் பேச வெளிக்கிட்டால், கவனமாகப் பேசுங்கோ.

 

இது இலக்கியச் சந்திப்பில்லை. கண்டபடி பேசுறத்துக்கு. நான் சொல்லுற மாதிரி பேசுங்கோ. இலங்கையின் தற்போதைய பிரதான பிரச்சினை தலித்-வெள்ளாளர் பிரச்சினையே. தலித்துக்களின் பிரதான எதிரி உயர்-இந்து மேட்டுக்குடி வேளாளர் என்ற கருத்தியல் தன்மை கொண்டதாக பேசாமல், யாழ்ப்பாணத்தில் என்ன இலங்கையில் இருக்கின்ற முழு வெள்ளாளச் சாதியள் மட்டும்தான், தலித்துக்களின் பிரதான எதிரி என்று சொல்லுங்கோ. கையோடு பெரியார் சொன்னார் பார்ப்பனனைக் கண்டால் பாம்படிப்பது போல் அடியுங்கள் என்றார். நான் சொல்கின்றேன் வெள்ளாளனைக் கண்டால் முயல் அடிப்பது போல் அடியுங்கள் என்று சொல்லுங்கோ.

 

இப்படிப் பேசினால், உங்களுக்கு இம்மாநாட்டில் ஏதாவது பட்டம் தந்தாலும் தருவார்கள். டானியலுக்கு ஈழத்தின் தந்தை பெரியார் என பட்டம் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஈழத்து அம்பேத்கார் என்ற பட்டம் தந்தாலும் தருவார்கள். லண்டனில் தானே உங்கள் தனிப்பெரும் தலைவர் அடங்காத் தமிழன் ஈழத்துக்காந்தி எலலோரும் பட்டம் பெற்றவர்கள். அந்த வகையில் உங்களுக்கும் ஒரு பட்டம் தந்தால், எங்களுக்கும் பெருமைதானே.

 

உங்களுக்கு ஏதோ எழுத வந்து ஏதோ எழுதி விட்டேன் போல இருக்கு, பரவாயில்லை.

 

ஐயா இலண்டணுக்கு வந்தவுடனேயே உங்கள் பிரதான வேலையான புலியெதிர்ப்பு அறிக்கையையே வெளியிட்டு விட்டீர்கள். அதில் இந்தியா சென்ற சமயம் உங்கள் இந்திய எசமானர்களுக்கு என்னென்ன சொன்னீர்கள் என்றெல்லாம் வரிசையாக சொல்லியுள்ளீர்கள். புலிகள் விடுதலை இயக்கமல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களை விட்டுவைத்தால் இந்தியாவில் ஒரு யாழ்ப்பாணமே உருவாகிவிடும் என்று, கே.எல்.நாராயணனுக்கும் அடிச்சு சொல்லிப்போட்டியள். இதோடை இன்னொன்றையும் சொல்லிறியள்.

 

புலிகளை ஒழிக்க இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவவேண்டுமென்று. யூனஸ்கோ அகிம்சைக்கும் சகிப்புத் தன்மைக்குமாக பணப் பரிசு உங்களுக்கு கொடுத்தே உறுத்தியது. சரி நீங்கள் பரவாயில்லை. இங்கே புலம்பெயர் நாடுகளில் உங்களைப் போல ஜனநாயகம் பேசும், புலி ஒழிப்பு ஆக்களும் இருக்கினம். அவையளுக்கு என்று இலண்டனிலை ஒரு றேடியோவும் இருக்கு. ஒவ்வொரு வியாழக்கிழமையும் புலிகளை எப்படி ஒழிப்பது என்ற தொனியில், ஒரு தலைப்பெடுத்து ஒரே வாதாட்டம். இதற்கு ஒரு அரசியல் ஆய்வாளராம். அவர் தலைமையில் புடுங்குப்பாடு நடைபெறும். கடைசியில் ஒரு முடிவுக்கு வருவினம். சுடலையிக்கை நிக்கிற பேய் பிசாசுகளுடன் சேர்ந்தாவது புலிகளை ஒழிப்போம் என்று.

 

மறந்து போச்சு, இப்பதான் ஞபாகம் வருது. நீங்களும் இந்த வானொலியில் இதைபற்றி கதைத்தது.

 

ஐயா நான் தெரியாமல்தான் கேட்கிறன், உங்கடை ஆட்கள் பேய் பிசாசுகளுடன் சேர்ந்து புலிகளை ஒழித்தால், நாடு சுடுகாடாகி பேயாட்சிதானே நடக்கும். இப்பவே உங்கடை எசமான் மகிந்தா பேயாட்சிதானே செய்கின்றார். அதோட நீங்கள் சொல்லுற இந்தியப் பேய் அல்லது உங்களுடைய ஐரோப்பிய புலியெதிர்ப்புக் கூட்டாளிகள் சொல்லுற அமெரிக்கப் பிசாசு அல்லது வேறு எந்தப் பிசாசு வந்து புலிகளை ஒழித்தாலும், பிறகு எங்கள் நாடு பேய்களின் சுடுகாடாகத்தானே இருக்கும்.

 

இது எப்படி இருக்கென்றால், ஐயா உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லுறன் கேளுங்கோ. ஈராக்கிலை சதாம் குசைன் என்ற ஒருத்தன் இருந்தான். புலிகள் எப்படி யாழ்ப்பாணத்திலை முஸ்லீம் மக்களை அடித்துக் கலைத்தார்களோ, கிழக்குமாகாணத்திலை எப்படி கொலை கொள்ளை போன்ற மக்கள் விரோத சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து துன்புறுத்தினார்களோ, அதே பாணியில் அப்படியே அவனும் குர்திஸ் இன மக்களுக்கும் செய்தான். அங்கேயும் அந்த நேரம் உங்களைப்போல ஆட்கள் இருந்தவை. அவையளும் சதாம் குசைன் பயங்கரவாதி என்று சொல்லி, அமெரிக்கப் பிசாசைக் கொண்டு வந்தார்கள். இப்ப ஈராக்கிலை என்ன நடக்குது, உங்கள் விரும்பம் போல் பேயாட்சிதானே நடக்குது.

 

இதோட உங்களிட்டை இன்னொன்று கேட்க விரும்புகின்றேன். புலிகள் மக்கள் விரோத ஐனநாயக விரோத பயங்கரவாத இயக்கமாக மாறியதற்கு, உங்களுக்கும் உங்கடை த.வி.கூட்டணிக்கு கொஞ்சமும் பங்கு இல்லையோ! உங்களை புலிசார்பு கூட்டணியை விட்டு வெளியேற்றாது விட்டிருந்தால், உங்களோடை புலியளைப் பற்றி எதிராக கதைச்சு தப்பேலாது. எதிராய் கதைக்கிற ஆக்கள் எல்லாரையும், துரோகிகள் ஆக்கிப்போடுவியள். இப்படி தானே கொஞ்சக் காலத்துக்கு முன்னம் செய்தனியள்.

 

திடீரென்று இப்ப புலிகள் உங்களுக்கு பயங்கரவாதிகள். புலிகளுக்கு நீங்கள் துரோகி. நீங்களோ புலிகளை அழிக்க சர்வதேச ஏகாதிபத்தியப் பிசாசுகளை தேடித் திரிகின்றீர்கள். அடிப்படையில் நீங்களும் பயங்கரவாதிதான், ஏன் ஏகாதிபத்திய கைக்கூலிதான்.

 

நீங்கள் ஊட்டி வளர்த்த இளைஞர் இயக்கங்கள் எப்படி பயங்கரவாத இயக்கங்களாகின? நீங்கள் பாராளுமன்ற நாற்காலிகளை பிடிப்பதற்கு தமிழீழக் கோhரிக்கையை முன்வைத்தீர்கள். இளைஞர்களை உசுப்பி உணர்ச்சிவசப்படுத்தினீர்கள். ஏன் அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் தான் என்றீர்கள். எமக்கு எதிரானவர்கள், தமிழ் ஈழத்திற்கு எதிரானவர்கள் என்றீர்கள். இதனால் அவர்களை துரோகிகள் என்றீர்கள்.

 

உங்கள் சொல் கேட்டு எதிரி யார் நண்பன் யார் என்று தெரியாமல், தம்பி துரையப்பாவில் துவங்கினார். அவரின் தம்பிமார் நிண்டவன் போனவன் எல்லோரையும் எதிரியாக்கி சுட்டுத்தள்ளினார்கள். இதுதான் தமிழீழத்துக்கான சரியான பாதை என உற்சாகப்படுத்தினீர்கள். ஏன் சந்தோசப்பட்டீர்கள், மட்டில்லா மகிழ்ச்சியில் மூழ்கினீர்கள்.

 

இதனால் தம்பிமார் மேலும் உற்சாகப்பட்டார்கள். உங்களைப் போல் அடுத்த கட்டத்துக்கு இறங்கினார்கள். இதற்கு ஆள் திரட்டும் புதுக்கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இராணுவத்தை தாக்கினால் இராணுவம் மக்களைத் தாக்கும், மக்கள் ஆத்திரமடைந்து போராட புறப்படுவார்கள் என்றொரு குருட்டு நம்பிக்கையுடன் தாக்கினர். விளைவு இனக் கலவரங்களாக மாறியது. இனக்கலவரங்களால் மக்கள் அல்லல்பட, துன்ப துயரங்களை அனுபவிக்க, மக்களைத் தவிக்கவிட்டு நாட்டைவிட்டே ஓடினீர்கள். தளபதி அமிர்தலிங்கம் மாறுவேடத்தில் நாட்டை விட்டே ஓடினார்.

 

உங்களில் ஆத்திரமடைந்த விரக்தியுற்ற இளைஞர்கள் தமிழீழம் காண தனிவழி சென்றார்கள். விடுதலைப் பாதை எங்கோ இருக்க, பாதை மாறி எங்கேயோ போனார்கள். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது என்பார்கள். இதுவே தமிழ்ஈழத்திற்கு நடந்தது.

 

தொடங்கிய போர் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கிலெடுக்காது தேசிய சர்வதேசிய நிலைமைகளைக் கணக்கிலெடுக்காது, மூல உபாயம் தந்திரோபாயம் தெரியாது மக்களை - மக்களின் புரட்சிகரப்போராட்டங்கள் பற்றி தெரியாது, சுத்த இராணுவ போதையில் மூழ்கியது. மொத்தில் கொலை வெறிப்பித்தில் மிதந்ததன் விளைவு - அதன் அதி உச்சக்கட்டமே மக்கள் விரோத பயங்கரவாதமாகியது.

 

ஜயா, புலிகளுக்கு உள்ளது போல் உங்களுக்கும் புலிகளை பழிவாங்கும் வெறியுணர்வு மேலோங்கியுள்ளது. அதற்கு ஏனய்யா நாடு நாடாய் அலைகின்றீர்கள். ஏகாதிபத்தியங்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றீர்கள். இதன் விளைவு சட்டிக்குள் இருந்து, நெருப்புக்குள் விழுந்த வினையாகிவிடும்.

 

வரலாற்றையும், தலைவர்களையும் உருவாக்குபவர்கள் மக்களே. தமிழ்மக்கள் தமது சொந்த வரலாற்றில் உங்களைப் போன்ற - புலிகளைப் போன்ற பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டுவர்.

அகிலன்
18.02.2008


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்