பிசாசுகளுடன் மட்டுமல்ல, பேய்களுடனும் சேர்ந்தும் புலியை ஒழிக்கும் துரோகிகள்

கிழக்கை பேரினவாதம் கைப்பற்றியது பற்றிய, புலி எதிர்ப்பு (ஓழிப்புக்) கும்பலின் அரசியல் நிலைப்பாடு இதுவாகவேயுள்ளது. குடும்பிமலை யத்தமும் பேரினவாதக் கூச்சலும் ஒன்றாகி, அதுவே கிழக்கு மக்களின் வெற்றிப் பிரகடனமாக, பேரினவாத பாசிசப் பேய்கள் அறிவிக்க, புலியெதிர்ப்புக் கும்பலோ புலிப் பாசிசத்தை ஒழித்ததாக கூறிக் கொண்டாடுகின்றது.

 

 

இப்படியாக பேரினவாதம் கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக ஒருபுறம். ஜனநாயகத்தை மீட்டதாகக் கூறி அதைக் கொண்டாடும் தமிழ் புல்லுருவிகள் மறுபுறம். புலிகளோ தாம் பின்வாங்கி இருப்பதாகவும், கொரில்லாப் போராட்டம் நடத்தப் போவதாகவும், பதிலடி உண்டு என்றும், ஒரு அரசியல் வித்தையைக் காட்டமுனைகின்றனர்.

 

மக்களோ இந்தக் கும்பலிடம் தோற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் அனாதைகளாக்கப்பட்டு, விதவைக்கோலம் திணிக்கப்பட்ட நிலையில், வாழ்வு மறுக்கப்பட்டுள்ளனர். இப்படியாக மக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், வெற்றி பற்றியும் தோல்வி பற்றியுமான கொண்டாட்டங்களும் புறக்கணிப்புகளும். எதுவும் அந்த மக்களுக்காகவல்ல.

 

உண்மையில் இப்படியாக யார் வென்றனர்? யார் தோற்றனர்? மக்களிடமிருந்து அரசியல் ரீதியாக அன்னியமான கும்பல்களுக்கு இpடையிலான சண்டையும், அதன் வெற்றி தோல்வியும் அரசியலாக்கப்படுகின்றது. கிழக்கு வாழ் மக்கள் அனாதைகளாக, நடைப்பிணமாகி விட்டனர். மக்களோ அரசியலில் இருந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட நிலையில், அரசியலற்ற மந்தைகளாக உருத்தெரியாததாகப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய கொலைகாரக் கும்பல்கள், அந்த மக்களின் வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நசுக்கிவிட்டனர். அந்த மக்கள் வாழ்விழந்து கிடப்பதையே, அரசியல் வெற்றியாக கருதி இந்த கும்பல் தனக்குள் தவளைகள் போல் சலசலக்கின்றது.

 

தவறான அரசியல் தவறான போராட்டமாகிவிடுகின்றது. இந்த தவறான போரட்டத்துக்கு எந்தக் கதி நடக்குமோ, அந்த கதியை கிழக்கு மறுபடியும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மக்கள் மட்டும் தான், தமக்கான எந்த சொந்த வரலாற்றையும் உருவாக்க முடியும் என்பதை, புலிக்கு மட்டுமல்ல புலியல்லாத தரப்புக்கும், அதன் அரசியலுக்கும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.

 

மக்களின் அனைத்து உரிமையும் அரசியல் ரீதியாக நலமடிக்கப்பட்ட நிலையில், மக்களால் எதையும் கோரவோ எவையையும் தக்கவைக்கவோ முடியாது. மக்கள் மேல் இதையே வெற்றியாக கருதி பேரினவாதம் கொக்கரிக்கின்றது. மக்களின் சொந்த மீட்சிக்கான வாழ்வுக்கான அனைத்து வழிகளும் இல்லாதாக்கப்பட்டுவிட்டது. அந்த மக்களின் விடுதலை பல பத்தாண்டுகளும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் நலமடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனித அவலத்தை கொண்டாடும் அரசியல் கூத்துகள், அதில் சில முரண்பாடுகளுடன் புறக்கணிப்புகள் என பேரினவாத சக்திகளின் அரசியல் வக்கிரகங்கள். தமிழ் புல்லுருவிக் கூட்டம் இதற்குள் நீந்தி மீன் பிடிக்க முனைகின்றது. இப்படியாக மக்களின் மீட்சி பற்றியும், புலிகளின் பாசிசம் பற்றியும் அரசியல் பாடம் நடத்த முனைகின்றனர். சொந்தத் துரோகத்தையும், பேரினவாதத்தின் கால்களை கட்டிப் பிடித்த கிடக்கும் அரசியல் கோமளித்தனங்களையும் விளக்க முனைகின்றனர். பிசாசுகளுடன் மட்டுமல்ல, பேய்களுடன் கூடித்தான், புலி எதிர்ப்பை (புலி ஒழிப்பை) செய்யமுடியும் என்று கும்மியடிக்கும் அரசியல் விபச்சாரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது. பேரினவாத கூச்சலையும் ஒடுக்குமுறையையும் தான், இந்தக் கும்பல், ஜனநாயகத்தின் வெற்றி என்கின்றது. அதாவது பேரினவாதம் புலியொழிப்பில் வென்றதாக கூற, புலியெதிர்ப்புக் கும்பல் ஜனநாயகத்தை தாம் வென்றதாக கூறுகின்றது. மக்களின் துரோகிகளின் வெற்றி பற்றிய சாரம் இது தான். மக்கள் புலிகளிடம் தோற்றது போல், இந்த துரோகிகளிடமும் தோற்று அனாதைகளாகி, தமது உரிமைகள் இழந்து நாதியற்றுக் கிடக்கின்றனர்.

பி.இரயாகரன்
21.07.2007