Language Selection

மக்களின் எதிர்ப்புகள் எவ்வளவு வந்தபோதும், "தனியார்மயம் தோல்வி' என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட போதும் உலக வங்கி எள்ளளவும் பின்வாங்குவதில்லை. உலகின் நீர்வளம் அனைத்தையும் கைப்பற்றி, குடிநீரை மட்டுமின்றி உலகின் உணவு உற்பத்தி முழுவதையுமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே உலக வங்கியின் நோக்கம்.


எனவேதான், தனியார்மயத்தைத் திணிப்பதற்கான புதிய புதிய வழிமுறைகளை உலக வங்கி அறிமுகப்படுத்துகிறது. தண்ணீர் வளத்தை முழுமையாகத் தனியார்மயமாக்கும் "கொச்சபம்பா மாடல்' முதலாளித்துவத்திற்கே எதிரான வெறுப்பை மக்களிடம் தோற்றுவிப்பதால் "தனியார் மக்கள் கூட்டுக் குடிநீர்த் திட்டம்' என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளை உள்ளே திணிக்கிறது, அல்லது, "சுத்திகரிப்பதற்குப் பன்னாட்டுக் கம்பெனிகள், விநியோகிப்பதற்கு மாநகராட்சி' எனக் கொல்லைப்புறம் வழியே தனியார்மயத்தை நுழைக்கிறது.


"தண்ணீர் என்பது மனிதனின் ஜீவாதார உரிமை. அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்குவது அரசின் கடமை'' என்ற கருத்தையே மக்கள் மனதிலிருந்து ஒழித்து, "எண்ணெய் எரிபொருளைப் போல தண்ணீரும் ஒரு விற்பனைச் சரக்கு; அதை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு'' என்ற கருத்தை நிலைநாட்டுவதுதான் உலக வங்கியின் உடனடி நோக்கம். "தண்ணீருக்கு விலை' என்பதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் காலப் போக்கில் "விலை உயர்வை'ச் சகித்துக் கொள்ளவும் பழகிவிடுவார்கள்; தனியார்மயத்தையும் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்பதே உலகவங்கியின் கணக்கு.


உலக வங்கியின் நோக்கம் என்ன?


உலக வங்கி தன்னுடைய நோக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது. "தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திடமிருந்து பிடுங்கி ஒரு சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகத் தண்ணீரின் விலையை மலிவாக நிர்ணயம் செய்யும் அபாயத்தை அப்போதுதான் தடுக்க முடியும்'' என்று டிசம்பர் 2003இல் ம.பி. மாநில அரசுக்குக் கொடுத்த கடனுக்கான நிபந்தனையாக உலக வங்கி இதைத் தெரிவிக்கிறது.


1998இல் மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசனத் துறை குறித்த அறிக்கை "பாசனநீரின் விலையைப் படிப்படியாக உயர்த்த முடியாது. அதிரடியாக உயர்த்துவதுதான் நல்ல பலனைத் தரும் என்று ஆந்திர அனுபவம் காட்டுகிறது'' எனக் கூறுகிறது.


மைய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மே 1999இல் வெளியிட்டுள்ள ஆவணம் உலக வங்கியின் முடிவுகளை வழி மொழிகிறது. "தண்ணீர்ச் சேவை என்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டு வர்த்தக நோக்குடன் நடத்தப்பட வேண்டும். போட்ட முதலுக்கு போதிய லாபமும் ஈட்ட வேண்டும்'' என்கிறது.


ணி ஓரளவு வாங்கும் சக்தியுள்ள நுகர்வோர் நிறைந்த நகர்ப்புறங்களில் குடிநீர் விற்பனையை கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாற்றி அதனைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல்.


ணி வாங்கும் சக்தியில்லாத ஏழை விவசாயிகள் நிறைந்த கிராமப்புறத்தில் பாசனக் கால்வாய்கள் மற்றும் ஏரி குளங்களை உள்ளூர்ப் பண்ணையார்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் ஒப்படைத்து பாசனக் கட்டணம் வசூலித்தல்; இலவச மின்சாரத்தை ரத்து செய்வதன் மூலம் குழாய்க் கிணற்றுப் பாசனத்தை முடக்குதல்; இதன் மூலம் ஏழை நடுத்தர விவசாயிகளை மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளையும் விவசாயத்தை விட்டே வெளியேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பண்ணையார்களின் கட்டுப்பாட்டிற்குள் விவசாயத்தைக் கொண்டு வருதல்.
— இந்தியாவின் நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் தண்ணீரின் மூலம் அடிமைப்படுத்த உலக வங்கி வகுத்திருக்கும் இரண்டு அம்சத் திட்டம் இதுதான்.


உலகின் உணவு உற்பத்தி முதல் தொழில் உற்பத்தி வரையிலான அனைத்தையும், காடுகள், மலைகள், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்ற வேண்டும். அவற்றைத் தாம் விரும்பிய வகையில் சூறையாடவும், கொள்ளை லாபமீட்டவும் உலக முதலாளிகள் உரிமை பெற்றிருக்க வேண்டும். இதற்குத் தடையாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்கள், மக்களின் உரிமைகள், அரசியல் ரீதியான இடையூறுகள் ஆகியவற்றை அகற்றுவதுடன் தொலைநோக்குடன் சிந்தித்து பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குப் பாதையும் அமைத்துத் தரவேண்டும் — இவைதான் உலக வங்கியின் நோக்கங்கள்.


இதனடிப்படையில் அது வகுத்துள்ள தண்ணீர் தனியார்மயத் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்கெனவே பல்வேறு படிநிலைகளில் அமலாகிக் கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு சான்றுகளைப் பார்த்தாலே போதும், வரவிருக்கும் விபரீதத்தை நாம் புரிந்து கொண்டு விட முடியும்.


ஏக்கருக்கு 8000 ரூபாய் பாசனவரி மகாராட்டிரா சட்டம்!


ஆறு குளம் ஏரி போன்ற பொது நீர் நிலைகளிலிருந்து பாரம்பரியமாகப் பாசனம் செய்து வரும் விவசாயிகள் அந்தத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. இந்த ஆணையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் விதத்தில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று மகாராட்டிர அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது.


"மகாராட்டிரா நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்'' என்ற இந்தச் சட்டம், "நீர்வளத்தைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, இயக்குவது ஆகிய அனைத்துச் செலவுகளையும் ஈடு செய்யும் விதத்தில் தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்படும்'' என்கிறது. "இதன்படி ஒரு ஏக்கர் பாசனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8000க்கும் மேல் ஒரு விவசாயி செலுத்த வேண்டியிருக்கும்'' என்கிறார் முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் திரு. தேசர்தா.


இதுமட்டுமின்றி, "பல மாவட்டங்களில் சொட்டு நீர்ப்பாசன முறை மட்டும் தான் அனுமதிக்கப்படுமென்றும், இந்தக் கருவிகளை நிறுவாத விவசாயிகளுக்குப் பாசன நீர் தரப்பட மாட்டாது'' என்றும் கூறுகிறது இச்சட்டம். இக்கருவிகளை நிறுவுவதற்கு மட்டுமே ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவாகும். அதனை இயக்குவது மற்றும் பராமரிப்பதற்கான செலவுகள் தனி. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட விவசாயிகள் ஒன்றரை மடங்கு பாசனவரி கட்டவேண்டுமென்றும் கூறுகிறது இச்சட்டம். அதாவது ஏக்கருக்கு 12,000 ரூபாய்.


"தண்ணீரின் விலையை அரசாங்கம் தீர்மானிக்காது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீர்வளத்துறை வல்லுநர், தனியார்துறை முதலாளி ஆகிய மூவர் கொண்ட "ஒழுங்குமுறை ஆணையம்'தான் ஆண்டுதோறும் பாசன நீரின் விலையை நிர்ணயம் செய்யும்'' என்றும் கூறுகிறது இந்தச் சட்டம்.


இந்தச் சட்டத்தின் விளைவை ஒரே வரியில் சொல்கிறார் அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கத் தலைவர். "இதுவரை பாசன வசதி இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்தான் தற்கொலை செய்து கொண்டார்கள். இனி பாசன வசதி பெறுபவர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!''


ஏப்ரல் மாதம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த கையோடு


மே 10ஆம் தேதியன்று, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது மகாராட்டிர அரசு. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்று விளக்கமும் சொல்லியிருக்கிறது.


பாசன நீரையும், நிலத்தடி நீரையும் விவசாயிகளிடமிருந்து "பாதுகாத்து' பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை கச்சிதமாக முடித்து விட்டது காங்கிரசு அரசு. இப்படியொரு சட்டம் கொண்டு வரப் போவதாக எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் சட்டத்தின் நகலை சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூடப் படிக்கத் தராமல், ஒரே நாளில் 16 சட்டங்களில் ஒன்றாகக் குரல் ஓட்டு மூலம் விவசாயிகள் மீதான இந்த "மரண தண்டனை' நிறைவேற்றப்பட்டு விட்டது.
தமிழகத்திலும் பாசனநீருக்கு வசூல்!


பாசன நீருக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வசூலிப்பது என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறொரு வழிமுறையையும் உலக வங்கி கையாள்கிறது. இந்த வழிமுறை தமிழ்நாட்டில் தற்போது மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.


"புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், ஏரிகள், கிளைக் கால்வாய்கள் ஆகியவற்றைப் புனரமைத்துப் பயனாளிகளின் பொறுப்பிலேயே அவற்றைப் பராமரிக்க வழிவகை செய்யவும் நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம்2 என்ற திட்டத்தினை 3900 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு தயாரித்து, இதற்கு உலக வங்கியின் நிதி உதவியைப் பெற உள்ளது'' என்று மார்ச் 23ம் தேதியன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.


அதாவது, அணைக்கட்டுகள் முதல் பாசனக் கால்வாய்கள் வரை எதையும் இனி அரசு தன் செலவில் பராமரிக்காது. அதைப் பயன்படுத்துபவர்கள்தான் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது அரசு. அதாவது, பாசனநீருக்குப் பணம் கொடுக்க முடிந்த விவசாயிக்கு மட்டும்தான் தண்ணீர். மற்றவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு பணம் கொடுப்பவர்களுக்குப் பெயர்தான் "பாசன நீர்ப் பயனாளிகள்'.


ஒவ்வொரு பாசனப் பகுதியிலும் "பாசன விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்க வேண்டுமாம். 25 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள "விவசாயி'தான் அதன் தலைவராக முடியுமாம். தண்ணீரின் விலை அங்கே தீர்மானிக்கப்படுமாம். இதுதான் உலக வங்கியின் திட்டம். தமிழக அரசின் பொதுப்பணித்துறையே முன்நின்று பாசன விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பாசன நீரைப் பெறுவதற்கு விவசாயிகள் கொண்டிருந்த பாரம்பரிய உரிமைகளும், நீரைப் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டு விட்டன. "பணம் கொடுப்பவனுக்குப் பாசனநீர்'' என்ற இந்த விதி ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டுத் துரத்தும். அவர்களது நிலங்களைப் பண்ணையார்கள் பறித்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.


இவையெதுவும் வெறும் ஊகமல்ல. ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், "தண்ணீர்ப் பஞ்சாயத்து' என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பாசன நீர் முழுவதையும் பண்ணையார்களிடம் ஒப்படைப்பதில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் "தண்ணீர்ப் பயனாளிகள் சங்கத்தை'த் துவக்கி வைப்பதற்கு வந்த உலக வங்கித் தலைவர் உல்பன்சனையும், "பயனாளி' களையும் விரட்டியடித்தார்கள், தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்ட ஏழை விவசாயிகள்.


விவசாயத்தை அழிப்பதே நோக்கம்!

விவசாயிகள் தற்கொலையில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஆந்திர மாநிலம். உலக வங்கியோ, "பாசனச் சீர்திருத்தத்தில்' ஆந்திர அரசு காட்டிய மன உறுதியை மெச்சுகிறது. எல்லா மாநிலங்களும் இதனைப் பின்பற்றப் பரிந்துரைக்கிறது.


அவ்வாறு பின்பற்றினால் அதன் விளைவு என்ன? கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர விவசாயிகள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்படுவார்கள். சிறு, நடுத்தர விவசாயிகள் அழிந்தால் இந்நாட்டின் உணவு உற்பத்தித் தற்சார்பு அழியும். பெரும் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயத்தைக் கைப்பற்றி அதனை ஏற்றுமதிக்கான தொழிலாக மாற்றியமைப்பார்கள். தண்ணீரை விற்பனைச் சரக்காக்குவதன் மூலம் நாட்டின் உணவுச் சங்கிலியையே பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விட முடியும். உலக வங்கியின் நோக்கமும் அதுதான்.


டில்லியில் தீவட்டிக் கொள்ளை!


நகர்ப்புற நீர் விநியோகத்தைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் 19 பெருநகரங்களில் அதிகாரபூர்வமாகவும், மேலும் 21 நகரங்களில் அதிகாரபூர்வமற்ற முறையிலும் அமலாகி வருகின்றது. முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதன் விளைவாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கெதிரான கோபம் மக்களிடம் உருவாகி விடுவதால், "அரசுத்துறை தனியார் துறைக் கூட்டு' என்ற பெயரில் இது அமல்படுத்தப்படுகிறது.


டில்லி குடிநீர் வாரியத்தின் குடிநீர்ச் சுத்திகரிப்புப் பணியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் "சோனியா விகார்' என்ற திட்டத்தின் விவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. இவற்றைப் படித்த பின்னர் இதனைத் "தனியார்மயம்' என்று அழைக்கக்கூடாது; "தீவட்டிக் கொள்ளை' என்று அழைப்பதே பொருத்தமானது என்ற முடிவுக்குத்தான் வாசகர்கள் வரமுடியும்.


நாளொன்றுக்கு 270 கோடி லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து விநியோகம் செய்து வரும் டெல்லி குடிநீர் வாரியத்தால், கூடுதலாக 63 கோடி லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியவில்லையாம். சூயஸ் என்ற உலகின் இரண்டாவது பெரிய தண்ணீர்க் கம்பெனியின் கிளை நிறுவனமான ஒன்டியோ டெக்ரிமாண்ட் நிறுவனத்திடம் இந்தச் சுத்திகரிப்புப் பணியை ஒப்படைத்துள்ளது.


உ.பி. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அவர்களது பாசன நீரைப் பறித்து, கங்கையிலிருந்து குழாய் போட்டு தண்ணீரை டெல்லிக்குக் கொண்டு வருகிறது அரசு. விவசாயிகள் குழாயை உடைக்காமல் பாதுகாக்க ஆயுதப் போலீசு வழிநெடுகிலும் காவல் காக்கிறது.


சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான செலவு 200 கோடி ரூபாயை டெல்லி குடிநீர் வாரியமே ஏற்கிறது. ஆலை கட்டுவதற்கான நிலமும், இயங்குவதற்கான மின்சாரமும் இலவசம். சுத்திகரிக்கும் குடிநீரை மக்களுக்கு விநியோகிக்கும் பணியையும் சூயஸ் நிறுவனம் செய்யாது. மழைக் காலத்திலோ, குளிர் காலத்திலோ மக்களின் தண்ணீர்த் தேவை குறைவாக இருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட 63 கோடி லிட்டரையும் டெல்லி குடிநீர் வாரியம் வாங்கியே தீர வேண்டும். ஏதாவது காரணத்தினால் கங்கையிலிருந்து தண்ணீர் குறைவாக வந்தாலும் வரவே இல்லையென்றாலும் 63 கோடி லிட்டர் தண்ணீருக்கான சுத்திகரிப்புக் கட்டணத்தை குடிநீர் வாரியம் தந்துவிட வேண்டும். ஒப்பந்தக் காலமான 10 ஆண்டுகளிலும் சூயஸ் நிறுவனம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் பெறுவதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். சிறப்பான சேவைக்கு ஊக்கத் தொகை தனியே வழங்க வேண்டும்.


மேற்கூறியவை அனைத்தும் ஒப்பந்தத்தின் ஷரத்துகள். இவையனைத்தைக் காட்டிலும் வக்கிரமான ஒரு உண்மை பாக்கியிருக்கிறது. அதாவது, 100 லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கான கட்டணமாக சூயஸ் நிறுவனத்துக்கு, டெல்லி குடிநீர் வாரியம் கொடுக்கவிருக்கும் தொகை, 100 லிட்டர் தண்ணீருக்கு மக்களிடம் வசூலித்து வரும் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாம்!


அதாவது இந்தப் பன்னாட்டு நிறுவனத்தை அழைத்ததால் ஆகும் கூடுதல் செலவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அல்லது, குடிநீர்க் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சூயஸ் நிறுவனத்தின் கொள்ளைக்கு மக்கள் காணிக்கை செலுத்த வேண்டும். தனியார்மயத்தின் "திறமை' இதுதான்.


வெறும் 100 கோடி ரூபாயில் டில்லி குடிநீர் வாரியமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்துவிட முடியும் என்றும், யமுனை நதியிலிருந்தே நீரை எடுத்துச் சுத்திகரிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள் நீர்வள வல்லுநர்கள். ஒப்பந்த விவரங்களை வெளியிடக் கோரி பலமுறை போராடியும் ரகசியம் காக்கிறது குடிநீர் வாரியம். சூயஸ் நிறுவனம் நடத்தும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில், போதிய பாதுகாப்பு இல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் கடந்த ஆறே மாதத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


சோனியா விகார் திட்டத்தில் சூயஸ் நிறுவனத்தைக் கொண்டுவந்து அரசு சாதித்ததென்ன? பெண்ணைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிச் சம்பாதிக்கவும் வைத்து அதன்பின் வரதட்சிணையும், நகையும், வண்டியும் வாங்கிக் கொடுத்து எவனாவது ஒரு குரங்கிடம் ஒப்படைப்பதற்கும் இந்தத் "தனியார்மயத்திற்கும்' என்ன வேறுபாடு?


தற்போது சோனியா விகார் மட்டுமின்றி மொத்த டில்லி நகரின் குடிநீர் விநியோகத்தையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. (பார்க்க: அவுட்லுக், 11.7.2005) இது சோனியா விகார் திட்டத்தையே தூக்கியடிக்கும் மோசடியாக இருக்கிறது. இதன்படி சுத்திகரிப்புப் பணியையும் குடிநீர் வாரியமேதான் செய்யுமாம். தண்ணீரை விநியோகித்துக் கட்டணம் வசூலிக்கும் வேலையையும் வாரியம்தான் செய்யுமாம். நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் நடப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் மேற்பார்வையிடுமாம். குடிநீர் வாரிய ஊழியர்கள் இவர்களிடம் கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டுமாம்!


"நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். ஊதி ஊதித் தின்னலாம்'' என்ற பழமொழி கூறும் மோசடியைக் காட்டிலும் மகா மோசடியான இந்தத் திட்டத்திற்குப் பெயர் அரசுத்துறை தனியார்துறை கூட்டாம்! எனவே, இனிமேல் குடிநீருக்கான கட்டணத்தை அரசு தீர்மானிக்க முடியாதாம். அதற்கென ஒரு சுயேச்சையான "ஒழுங்குமுறை ஆணையம்' உருவாக்கப்படுமாம். அவர்கள் கட்டணத்தைத் தீர்மானிப்பார்களாம்!


"2011ஆம் ஆண்டிற்குள் குடிநீருக்காகத் தரப்படும் மானியங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்'' என்பது உலக வங்கியின் உத்தரவு. இது அமல்படுத்தப்பட்டால் டில்லியில் தற்போது 192 ரூபாயாக இருக்கும் மாதக் குடிநீர்க் கட்டணம் 1750 ரூபாயாக உயரும்'' என்று ஆதாரங்களுடன் எச்சரிக்கை செய்திருக்கிறார் பரிவர்த்தன் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் அர்விந்த் கேஜ்ரிவால்.


வாங்காத மின்சாரத்துக்கு மாதம் 90 கோடி ரூபாய் என்ரான் நிறுவனத்துக்குத் தண்டம் கட்டியது மராத்திய அரசு. அதன்பின் என்ரான் நிறுவனமே திவாலாகிவிட்டதால், என்ரான் முதலாளிகள் சுருட்டிய 10,000 கோடி கடனை இப்போது மத்திய அரசு அடைக்கவிருக்கிறது. "டெல்லி குடிநீர் தனியார்மயம்' இன்னொரு என்ரானாக மாறப் போகிறது என்று எச்சரிக்கிறார் அவுட்லுக் பத்திரிகையாளர்.


திருப்பூரில் அமெரிக்கக் கம்பெனி


யார் எச்சரித்தாலும் யார் எதிர்த்தாலும் தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் இந்தத் தீவட்டிக் கொள்ளையை அரசு நிறுத்துவதாக இல்லை. தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்கப் போவதாக ஜம்பமடிக்கும் ஜெ. அரசு, தண்ணீர் தனியார்மயத்தில் ஆசியாவிலேயே முதல் திட்டத்தை திருப்பூரில் அமல்படுத்துகிறது.


"திருப்பூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர்ச் சுத்திகரிப்புத் திட்டம்'' என்ற பெயரில் 1023 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் கழகம், திருப்பூர் நகராட்சி, தமிழக அரசின் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பெக்டெல் என்ற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமும், அமெரிக்க நிதி உதவி நிறுவனமும், மகிந்திரா கன்சார்ட்டியம் என்ற இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனமும் அங்கம் வகிக்கின்றன.


பவானி ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 18.5 கோடி லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கொண்டு வரப்படவுள்ளது. திருப்பூரிலுள்ள சாயப்பட்டறைகளுக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் தண்ணீர் வழங்குவதே இதன் முதல் நோக்கம். நகர குடிநீர் விநியோகத்துடன் குழாய் வரும் பாதையிலுள்ள சுமார் 20 கிராமங்கள், சிற்×ர்களுக்கும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. தண்ணீருக்கான கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் மேற்கூறிய நிறுவனங்கள் அடங்கிய குழுமத்தினுடையது. விநியோகம் மற்றும் வசூலிக்கும் பணி வழக்கம் போல நகராட்சியினுடையது.


"கழிவு நீர்ச் சுத்திகரிப்பு' என்பது இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்தபோதிலும், சாயப்பட்டறைக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் பணியை இத்திட்டம் மேற்கொள்ளவில்லை. அதாவது, இனி தாராளமாகத் தண்ணீர் கிடைக்குமென்பதால் இன்னொரு ஒரத்துப்பாளையம் அணை நிரம்புமளவுக்கு திருப்பூர் முதலாளிகள் கழிவுநீரை வெளியேற்றுவார்கள். காவிரி, கழிவு நீர் ஆறாகவே மாறும். திருப்பூர் "குடிநீர்'த் திட்டம், 8 மாவட்டத்து மக்களின் குடிநீரையும், சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்க்கையையும் மேலும் நாசமாக்கும். வேறு விதமாகச் சொல்வதானால், கோடிக்கணக்கான மக்களின் குடியைக் கெடுத்த முதலாளிகளுக்குத் தண்டனை எதுவும் இல்லை; மாறாக, சுத்தமான பவானிநீர் பரிசாக வழங்கப்படுகிறது.


சென்னைக்கும் நெருங்குகிறது அபாயம்!


உலக வங்கியின் ஆசியுடன் திருப்பூரின் வக்கிரம் சென்னையிலும் அரங்கேறுகிறது. 600 முதலாளிகள் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சென்னை நகரின் சுற்று வட்டாரங்களிலிருந்து உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பொதுப் பணித்துறையின் கணக்கின்படியே அவர்களது ஆண்டு வியாபாரம் 600 கோடி ரூபாய்.


ஒருபுறம் இந்தக் கொள்ளையை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு, மறுபுறம் சென்னை நகரின் நீர் விநியோகத்தை மேம்படுத்த உலகவங்கியிடம் 1350 கோடி ரூபாய் கடன் வாங்குகிறது. விவசாயிகளின் பாசனநீருக்குப் பணம் பிடுங்கச் சொல்லும் உலகவங்கி "இந்த நிலத்தடி நீர்க் கொள்ளையை தண்ணீர் முதலாளிகள் நிறுத்தினால்தான் கடன் தருவேன்'' என்று நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. மாறாக, கொக்கோ கோலா உறிஞ்சும் கொசஸ்தலை ஆற்றிலும், பெப்சி உறிஞ்சும் பாலாற்றிலும் நீர்வளத்தை உத்திரவாதப்படுத்த அரசுக்கு திட்டம் வகுத்துத் தருகிறது.


நீர்வளத்தை மேம்படுத்தித் தண்ணீர்க் கொள்ளையர்களிடம் வழங்குவதற்காக உலகவங்கிக் கடன்! கட்டண உயர்வு மூலம் இந்தக் கடனை அடைக்க வேண்டியவர்கள் சென்னை நகர மக்கள். கட்டணத்தை உயர்த்துவதெப்படி, குடிநீர் விநியோகத்தை லாபகரமாக நடத்துவது எப்படி என்று சென்னை நகரக் குடிநீர் வாரியத்துக்குப் "புத்திமதி' சொல்வதற்கென்றே ஒரு ஆலோசகரையும் நியமித்திருக்கிறது தமிழக அரசு. தென் ஆப்பிரிக்காவில் குடிநீர்க் குழாய்க்கு ப்ரீபெய்டு மீட்டர் போட்ட விவென்டி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிதான் அந்த ஆலோசகர்!


மத்திய அமைச்சகத்தில் தொடங்கி ஊராட்சி மன்றம் வரையில் தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை உத்திரவாதம் செய்கிறார்கள் உலகவங்கியின் பிரதிநிதிகள்; ஆலோசனை கூறுகிறார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள்; தண்ணீரின் சந்தை விலையை நிர்ணயம் செய்யப்போவ÷தா, முதலாளிகளைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத "சுயேச்சையான' ஒழுங்குமுறை ஆணையம்!


எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான். எல்லாப் புறங்களிலும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது தண்ணீர். உலகின் நீர்வளம் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தான் சொந்தம் என்பதை ஒப்புக் கொள்வதில் இன்னமும் யாருக்கேனும் தயக்கமோ, தடுமாற்றமோ, ஐயமோ இருக்குமானால் அவற்றை அகற்றும் பொருட்டு இது சட்டமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது — அதன் பெயர் காட்ஸ் ஒப்பந்தம்!