Language Selection

கோக் தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு, சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து, தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரையும் குழாய் மூலம் கொண்டு வந்து தரவிருக்கிறது தமிழக அரசு. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒண்ணேகால் பைசா.

 இதுவன்றி அங்கே ஆழ்துளைக் கிணறுகளை இறக்கி விருப்பம் போல நிலத்தடி நீரைச் சூறையாடவுமிருக்கிறது கொக்கோ கோலா நிறுவனம். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் குடிநீரும் பாசனநீரும் இல்லாமல் தவிக்கும்போது, அந்த மண்ணுக்குரிய தாமிரவருணித் தண்ணீரை லிட்டர் ஒண்ணே கால் பைசாவுக்கு வாங்கி 12 ரூபாய்க்கு விற்று மக்களைக் கொள்ளையிடப் போகிறது கொக்கோ கோலா. கட்டபொம்மனும், பூலித்தேவனும், சுந்தரலிங்கமும், வ.உ.சி.யும் பிறந்த மண் மறுகாலனியாதிக்கத்தால் உறிஞ்சப்படவிருக்கிறது.


கோக் என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம். "உலகமே தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள நம் பானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்'' என்பது அந்த நிறுவனத்தின் இலட்சிய வாசகம். 200 நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் கோக், தனது லாபத்தில் 70 சதவீதத்தை அமெரிக்காவுக்கு வெளியிலிருந்துதான் கொள்ளையிடுகிறது. ஒவ்வொரு நொடியும் கோக் நிறுவனத்தின் ஏதாவதொரு பானம், உலகெங்கிலும் 13,000 தொண்டைகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது. "கோக்கினால் நனைக்கப்பட்ட தொண்டையிலிருந்து அமெரிக்க எதிர்ப்புக் குரல் எழும்பாது' என்பது அவர்களின் நம்பிக்கை. ஏனென்றால், கோக் அடிமைகளின் பானம்!


கோக் ஆக்கிரமிப்பின் சின்னம். கேரளத்தின் நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தை அது இரண்டே ஆண்டுகளில் சுடுகாடாக்கியது; அம்மக்களைக் குடிநீருக்காக அன்றாடம் 5 கி.மீ. அலையச் செய்தது. உள்ளூர் மக்கள் தாகத்தால் தவித்தாலும், விவசாயம் அழிந்தாலும், "அந்தக் கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சும் உரிமை அமெரிக்கக் கம்பெனிக்கு உண்டு'' என்று நீதிமன்றத்தைச் சொல்ல வைத்ததன் மூலம், தான் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்பதை நிரூபித்திருக்கிறது கோக்.


கோக் ஒரு கொலைகாரன். தனக்குத் தண்ணீர் தந்த பிளாச்சிமடா மக்களின் மண்ணில் நஞ்சை வைத்திருக்கிறது கோக். நச்சுக் கழிவுநீரால் விளைநிலத்தை மாசுபடுத்தியது மட்டுமல்ல, கொடிய இராசயனக் கழிவுகளை "இயற்கை உரம்' என்று விவசாயிகளிடம் விநியோகித்து அவர்களுடைய மண்ணையே கொன்றிருக்கிறது. கொலம்பியாவில் தன் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்களை, கூலிப் படை வைத்துக் கொன்று குவித்திருக்கிறது.


கோக் ஒரு உயிர்க் கொல்லி. லின்டேன், டி.டி.டி., மாலதியான் போன்ற பூச்சி மருந்துகள் மேலைநாடுகளைக் காட்டிலும் 36 மடங்கு அதிகமாக இந்திய கோக்கில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா, சட்டிஸ்கார் விவசாயிகள் பருத்திச் செடியின் பூச்சியைக் கொல்ல கோக் தெளிக்கிறார்கள். நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கி மடியாத மனிதனின் பற்களையே கோக் அரித்துக் கரைக்கிறது. கக்கூசின் கறைகளையும் அகற்றுகிறது கோக்.


கோக் ஒரு மானம் கொல்லி. நஞ்சென்றும், பூச்சி மருந்தென்றும், கக்கூசு கழுவும் திரவமென்றும் தெரிந்த பின்னரும் அதைக் காசு கொடுத்து வாங்கிச் சுவைக்கச் செய்து "தனது அடிமைகளுக்கு அறிவு மட்டுமல்ல, மானமும் கிடையாது' என்பதை அது உலகுக்கே அறிவிக்கிறது. ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் அளிக்கும் இளநீரையும் மோரையும் எலுமிச்சைச் சாறையும் புறந்தள்ளி, "இந்தக் கக்கூசு பானத்தை அருந்துங்கள்!'' என்று விளம்பரம் செய்ய வெட்கங்கெட்ட தேசத்துரோகிகளை அது கூலிக்கு அமர்த்திக் கொள்கிறது.


கோக்கின் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் பெப்சிக்கும் பொருந்தும். கோக்கும் பெப்சியும் அமெரிக்க மூத்திரம். தண்ணீரை மூத்திரமாக்கும் "தொழிலுக்கு', தாகத்தைக் காசாக்கும் "தொழிலுக்கு', நம் தாமிரவருணியைத் தாரைவார்க்க முடியாது. கோக், பெப்சியைப் புறக்கணியுங்கள்! மறுகாலனியாக்கத்திற்கெதிரான போராட்டத்தில், தண்ணீர் தனியார்மயத்திற்கெதிரான போராட்டத்தில் அணிதிரளுங்கள்!