06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

மனித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.

 

 

பார்ப்பனீயம் பற்றிய அடிப்படை ஆய்வை நாம் நடத்த முனைகிறோம். இதுபற்றி புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், எதிரி பற்றிய குழப்பங்கள் உள்ளடங்கிய வகையில் உள்ள தெளிவின்மையை நாம் எதிர்கொள்கின்றோம். சாதிய ஒழிப்பு அவசியம் என்றதில் உள்ள தெளிவு, அதைப் பற்றிய உள்ளடக்கம் மீதானதில் தெளிவு கிடையாது.

 

சாதியம் பற்றிய அதிதீவிரமான கருத்துநிலைப் போக்கு, உள்ளடகத்தில் அறிவியலுக்கு புறம்பாகவே பல சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது. சாதியம் மனித குலத்துக்கு எதிரானது என்ற வகையில், அதை வேர் அறுப்பது மனிதனின் கடமை. சாதியைக் கடந்த மனிதன் மட்டும் தான், இயற்கையின் மனிதனாக உள்ளான். இதை மறுத்து, இதை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாதவொன்று.

 

எதிரி பற்றி சூக்குமமாகவும், பிறப்பை அடிப்படையாக கொண்டும், வெறும் நம்பிக்கைகளின் பின்னால் நின்றும், கற்பனையான புனைவுகளின் பின்னால் மிதக்கும் கருதுகோள்களில் நின்றும் சாதியை ஒழிக்க முடியாது. உதாரணமாக சாதியை பிறப்பை அடிப்படையாக கொண்டு வரையறுகப்படுகின்றது. இது பார்ப்பனீய கோட்பாட்டு விளக்கத்தில் ஒன்று. அதாவது இந்துமதத்தின் அடிப்படை விளக்கமும் கூட. இந்த நிலையில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, போராடப் போவதாக பாசாங்கு செய்வது நிகழத்தான் செய்கின்றது. அதாவது இந்த சாதியை எதிர்த்து போராட, பிறப்பை அடிப்படையாக கொண்டு, இனப்பிரிவை அடிப்படையாக கொண்டு போராடுவதாக கூறுவது கூட, உள்ளடகத்தில் பார்ப்பனீயம் தான்.

 

பார்ப்பானாக பிறப்பதும், பார்ப்பனீயமும் ஒன்ற அல்ல. பிறப்பு சாதிய வடிவில் இதன் போக்கில் உள்ளது உண்மை. ஆனால் பார்ப்பனீயத்தை மறுக்கும் பார்ப்பான், தன் சாதியை உதறும் பார்ப்பான் அவனை எப்படி வரையறுப்பது. ஒரு மனிதனாக மாறுவதை எப்படி நாம் வேறுபடுத்துவது! அதை எப்படி செய்யக் கோருவது! இதை நாம் எதிர்நிலையில் கீழ் இருந்தும் காணமுடியும். பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதற்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்த நினைப்பது உண்மையில் பார்ப்பனீயத்தை பாதுகாக்கின்றது.

 

இந்த பார்ப்பனீயத் தன்மை எதிர்நிலைப் போராட்டத்தில் பல கற்பனை புனைவுகளின் வெளிப்பாடாக மிதக்கின்றது. எதிரியை தவறாகவும், பகுதியாகவும் வரையறுத்து மனிதகுல எதிரிக்கே உதவுவது தொடருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிய ஒரு தெளிவை, சந்தேகங்களை எழுப்பியும், விடை காணமுடியாத புதிர்களை விடுவிக்கவும் விரும்புகின்றோம். உங்கள் பங்களிப்பை இதற்காக எதிர்பார்க்கின்றோம்.

 

அந்த வகையில்

1. பார்ப்பனீயம் என்பது மனித இனத்துக்கு எதிரானது. ஏன்? ஏப்படி?

2. நாம் பிறப்பை குறித்து பார்ப்பனீயத்தை வரையறுக்கவில்லை. ஏன்?

3. பார்ப்பனீய நடைமுறை உள்ளடகத்தின் வெளிப்பாட்டைத் தான், நாம் எதிராக காண்கின்றோம்.

4. ஆரியர் திராவிடர் என்ற வரையறைக்குள் பாhப்பனீயத்தை பொதுமைப்படுத்துவதை, நாம் எதிர்க்கின்றோம். ஏன்?

5. பார்ப்பானுக்கு எதிர் மற்றைய சாதிகள், என்ற பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதியக் கோட்பாட்டை நாம் எதிர்கின்றோம். ஏன்?

6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.

7. வருணத்தை தொழில் பிரிவினையாக காட்டிய அம்பேத்கார் வாதம் உட்பட, இது போன்ற குருட்டு வாதங்கைள நாம் மறுக்கின்றோம்

8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.

9. தொல்காப்பியத்தில் வருணம் இருந்ததா எனின் ஆம் என்று நாம் தெளிவாக பதிலளிக்கின்றோம். அது இடைச்செருகல் என்பதை மறுக்கின்றோம்

10. சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்ற மிகை வாதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றோம்.

11. அன்றைய ஆரியர் அல்லது பார்ப்பானே, இன்றைய பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பான் என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றோம். இன்றைய பார்ப்பான், அன்றைய பார்ப்பான் வேறுவேறானவர்கள்.

12. பார்ப்பான் என்ற ஒரு சாதியில் பிறந்தவர்கள என்பதால், அவர்களை பார்ப்பனீயமாக பொதுமைப்படுத்தி வகைப்படுத்துவதை நாம் மறுக்கின்றோம். பார்ப்பனீயம் பிறப்புக்குள்ளும், வெளியிலும் இயங்குகின்றது.

14. சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நாம் மறுக்கின்றோம். ஏன்?

15. இந்திய சமூக அமைப்பை வருண மற்றும் சாதிய அமைப்பு என்ற எடுகோளில் பின்னால், வர்க்க அமைப்பு எங்கே போனது? இந்திய சமூக அமைப்பு வர்க்க அமைப்பாக இருக்கவில்லையா? இந்த கேள்வி அவசியமற்றதா?

16. புத்தன் பார்ப்பனீயத்தை எதிர்த்தான் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். புத்தன் எதை மறுத்தான், எதை பாதுகாத்தான் என்பதை தெளிவாக முன்வைக்க முனைகின்றோம்.

17. சாதியம் எப்படியான எந்த சந்தர்ப்பத்தில் ஏன் தோன்றியது? என்பதை நாம் ஆராய முனைகிறோம்.

18 .பார்ப்பான் என்ற சாதி, சாதிய தோற்றத்தில் என்ன பங்கு வகித்தது என்பதை தெளிவுபடுத்த முனைகின்றோம்.

19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.

20. ஆபிரிக்காவில் சாதி உள்ளது என்ற வாதங்களை, நாம் மறுதலிக்கின்றோம்.

21. இந்து மதம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பதை அதாவது இதில் சாதி வேறு என்பதை மறுதலிக்கின்றோம்.

22. சாதிய சமூக அமைப்பு விதியை, அதன் சித்தாந்த கோட்பாட்டை பார்ப்பனீயமே உருவாக்கியது. அதாவது பார்ப்பனீயம் எந்த சாதிக்கு முதன்மையாக சேவை செய்கின்றதோ, அந்த சாதியின் கோட்பாடே சாதியம். இது அந்த சாதியை குறிக்கின்றதே ஒழிய, அதில் உள்ள நபர்களையல்ல. யாரெல்லாம் சாதியை வெறுத்து, சாதிக்கு வெளியில் சாதியை துறந்து, தனது அடையாளத்தை இழந்து வாழ முற்படுகின்றனரோ, அவர்களை இது உள்ளடக்காது. யாரெல்லாம் சாதியை கொண்டு அப்பிறப்பைக் கொண்டு சாதியாக வாழ்கின்றனரோ, அவர்களை இது மறுதலிப்பதில்லை. இது ஒடுக்குகின்ற சாதிகளில் பார்ப்பனிய சாதிக்கு மட்டும் குறுக்கிப் பொருந்தாது.

23. நான் பிறந்த சாதியை பார்ப்பனீயமாக வகைப்படுத்துவதை எதிர்க்க வேணடுமென்றால், சாதியை துறந்து ஒரு மனிதனாக வேண்டும்.

24. பார்ப்பனீயம் பார்ப்பான் சாதியைக் கடந்து காணப்படுகின்றது.

இப்படி பலவற்றை நான் எழுதி வரும் நூலினுள் விவாதிக்கின்றேன். இப்படி 50க்கு மேற்பட்ட தலைப்புகள். பெரும்பகுதி முடிந்த நிலையில் உள்ளது. எனது ஆய்வுகள் ஒரு அதிர்வை, அதிர்ச்சியை உண்டாக்கத்தக்கன.

 

உண்மையில் கடந்தகால நம்பிக்கைகள், ஆய்வுமுறைகள், சமூகத்தின் பிளவு மீதான ப+டகமான எடுகோள்கள், போராட்ட வழிமுறைகள், என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். சாதிய அமைப்பை புதிய முறையில், முன்னைய ஆய்வுக்கு மாறாக முன்வைக்கும் எனது ஆய்வு முறைக்கு, உங்கள் விவாதத்தினூடான பங்களிப்பை கோரி நிற்கின்றேன். உங்கள் கேள்விகள் மற்றும் பதில்கள், உங்கள் விவாதங்கள் மற்றும் மறுப்புகள், சந்தேகங்கள் மற்றும் தெளிவாக்கல் மூலம் நீங்களும் பங்களிக்க முடியும். நான் எனது முயற்சியை விவாதத்துக்காக உங்கள் முன் முன்வைப்பதன் மூலம், இந்த நூலுக்கு உதவும் வகையில் குறிப்புகள், தரவுகள், வாதங்களையும் முன்வைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அவற்றை விவாதிக்க அழைக்கின்றோம்.

 

தனி நூலுக்கான எனது இந்த முயற்சியில் 150 பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. 50 மேற்பட்ட தலைப்பை உள்ளடக்கிய இந்த நூல், இந்தியாவில் வெளியிடப்படும். நூலின் உள்ளடக்கம் விவாதம் மூலம் வளம்பெறும் என்ற வகையில், உங்கள் முன் பல பகுதிகளாக இம் மாத இறுதிக்குள் முன்வைக்க உள்ளேன்.

 

எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாகும். அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிhபார்க்pன்றேன்.

 

இந்த நூலை எழுதத் தூண்டியது இலங்கை சாதியப் போராட்டம் தொடர்பான எனது மற்றொரு நூல் தான். சண்முகதாசன் தலைமையிலான கட்சி நடத்திய சாதிய போராட்டத்தின் தோல்விகள் வெற்றிகளை பற்றி எனது நூல் முழுமைபடுத்த முடியாத வகையில் சாதியம் பற்றிய வரலாற்றுப் பார்வை குறுக்கிட்டது.

 

1. சண் தலைமையிலான கட்சியின் மார்க்சிய பார்வை தவறுகள்

2. சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு

 

அம்பேத்கரின் தவறு இலங்கை சாதிய போராட்டத்திலும் தவறாக வழிநடாத்தியுள்ளது. இலங்கை சாதிய நூலின் வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்திய சாதியம் பற்றிய ஆய்வுகள் மீதான இந்த நூலை ப+ர்த்தி செய்ய உள்ளேன்.

 

நான் பார்ப்பனீயத்தின் எதிரி என்றவகையில் இந்த விவாதத்தை எழுதும் போது, பிறப்பை அடிப்படையாக கொண்டு எதிரியை வகைப்படுத்தவில்லை. பிறப்பு தற்செயலானது என்ற வகையிலும், பார்ப்பான் சாதியில் பிறப்பவர் பார்ப்பனீயத்தை பிரதிநிநித்துவம் செய்வர் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதையும் நான் அங்கீகரிக்கவில்லை. பார்ப்பனீய சிந்தாந்தம், அதன் நடைமுறை அம்சம், அதைக் கொண்டு நியாயப்படுத்தி வாழும் பிரிவுகளே, இந்த மனித குலத்தின் எதிரிகள்.

 

சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம்.

 

இந்த வாதத்தில் பார்ப்பனீயம் சரி என்பதை யாராவது முன்வைப்பார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்குமாறு கோருகின்றோம் ஏன்?, எதனால்? எப்படி?

 

1. பொருளாதார காரணமா!

2. சாதிய சமூக அந்தஸ்தா!

3. சாதிய பிறப்பா!

4. அல்லது எது?

இதை எந்த வகையில் மனித குலத்துக்கு முரணாக அல்லது சார்பாக நீங்கள் முன்வைத்து எப்படி சரியானது என்கின்றீர்கள்?

இந்தவகையில் இந்த விவாதத்தளம் மூலம் அல்லது எனது ஈமெயில் மூலம்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். நீங்கள் பற்பல வழிகளில் உதவமுடியும்.

 

எமது தளத்தில் இடப்படும் கருத்துகள் நேரடியாக வரமுடியாத வகையில் உள்ளதால், அதை அனுமதிக்கும் வரை நீங்கள் காத்திருக்கவும். கருத்து அல்லாத தனிமனித தாக்குதல் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கருத்துகள் என்ற வகையில் உள்ள அனைத்தும் அனுமதிக்கப்படும். அடிப்படையான தர்க்கவாதங்களை, உங்கள் நியாயங்களை விளக்கும் வகையில், உங்கள் கருத்துக்களையே நாம் விரும்புவது இயல்பு அல்லவா! ஆமாப் போடுவது விவாதத்தக்குரிய நடைமுறையல்ல.

பி. இரயாகரன்.
01.01.2007


பி.இரயாகரன் - சமர்