"நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்'' என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. "நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.'' அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. "நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.'' "நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.'' "புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.'' "சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்'' என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!
போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், "உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.'' உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? "அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது'' என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.
குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானது தான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.
ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்த போது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.
கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.
தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. "பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி'' என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. "சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கை யில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு'' என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், "அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து'' என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் "எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ'' என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.
ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில் தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு "தோழர்கள்' இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். "இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்'' என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.
இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். "நான் காசு வாங்கியது உண்மை. ஆனால் அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை'' என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் "தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்'' என்று கவிதை சொல்கிறார்.
ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால் அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.
தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். "ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு... எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?'' என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். "தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்'' என்று கேட்டால், "நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்'' என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.
தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும் மாபூமி என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, "நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்'' என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.
காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் "அதுவும் இதுவும்தான்' என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.
உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.
உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். "அதுவும் இதுவும் தான்' என்று குரோ னியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.
·
சூரியன்
ஜூலை, 2000