Language Selection

"விட்டு விடுதலையாகி நிற்பாய்'' என்ற பாரதியின் வரிகளை நெற்றியில் பொறித்துக் கொண்ட இவர்கள் சிட்டுக் குருவிகள் அல்ல; தாம் உண்டு, உறிஞ்சி, வாழும் சமூகத்தை விட்டு விலகி நிற்கும் ஒட்டுண்ணிகள்.


அவர்களும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். பூவுலகின் மனப்பெருவெளியில் மிதந்தவண்ணம் தங்களின் உள்ளொளியைக் காப்பாற்றப் போராடுகிறார்கள் அந்த வீரர்கள். "இதோ இலக்கியம் செய்வதற்கு இங்கொருவன் இருக்கிறேன்' என்பதாக சிலிர்த்துக் கொண்டெழும் அந்த வலிய அவலக் குரலே அவர்களின் வாழ்க்கைப் பணியாகி விடுகிறது. எனில் அது அவர்களின் தொழிலல்ல. தொழிலின்மையை நோக்கிய, தாம் இன்னார் என்று காட்ட வேண்டிய கடுமையான ஒரு இலக்கியப் பயணம். கடுமை என்பது பழைய மொந்தை போக்கி புதிய மொந்தை புனைவதையும் பட்டியலில் இடம் பெறும் வாழ்வா சாவா போரினையும், பொதுவில் இலக்கியச் சந்தையின் போட்டியையும் சுட்டும்.


"ஐயா, எழுதப்படும் எமது வார்த்தைகளில் யாம் உயிர் வாழ்கிறோம் என்று சொல்ல விரும்புகிறோம்'' என்ற ஒரே சங்கதிக்காக ஒரு இலக்கிய ஜாதியார் இங்கே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நேற்றின் மணிக்கொடி தொட்டு இன்றின் காலச்சுவடு வரை காகித வழி வரலாற்றில் கற்றை கற்றையாகப் பதிப்பிக்கப்படும் விசயமும் அதுதான். அப்பேர்ப்பட்ட பதிவொன்றின் பதிவிது.


சுதர்சன் ஜவுளி நிறுவனம்; காலச்சுவடு இலக்கிய நிறுவனம் (பி.லிட்) நாகர்கோவில்; ஆர்.எம்.கே.வி பட்டு நிறுவனம், திருநெல்வேலி; சரிநிகர் பத்திரிக்கை மெர்ஜ் தன்னார்வ நிறுவனம் கொழும்பு; ஸ்ரீராம் சிட் பைனான்ஸ் சென்னை; சென்னை ஆன் லைன் ஆறாம் திணை இணைய நிறுவனம் சென்னை — ஆகிய ஜவுளி இலக்கிய பைனான்ஸ் இன்டர்நெட் தன்னார்வக் கம்பெனிகள் பண வலிமையுடனும் இலக்கியப் பெருமையுடனும் கலந்தளித்த அந்தக் கருத்தரங்கம் — தமிழ் இனி 2000.


பாரதியின் வத்தற்குழம்புச் சுவையும், சுஜாதாவின் உருளை சிப்ஸ் ருசியும் கருத்தரங்கத் தலைப்பிலிருக்கிறது என்றால் நடைபெற்ற இடத்திலோ அமெரிக்காவே இருக்கிறது. சென்ற ஒலிம்பிக் போட்டி நடந்தது அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில். தமிழ் இனி பேசப்பட்டதோ அட்லான்டிக் ஓட்டலில். நட்சத்திர விடுதிகள், விமானக் கம்பெனி அலுவலகங்கள், கன்னிமாரா நூலகம், கட்டப்படும் மேம்பாலம், பிஸ்ஸா கார்னர்கள், பெட்டிக் கடை ஓவன் சாண்ட்விச்சுக்கள், யூஸ் அண்டு த்ரோ குவளைகள், அவ்வப்போது வந்து போகும் 40 லட்சம் பெறுமானமான பென்ஸ் கார்கள், கோட் சூட் நிர்வாகிகள், குட்டைப் பாவாடை அழகிகள் என ஏறக்குறைய அமெரிக்கச் சூழ்நிலைதான். பேர் அண்ட் லவ்லி பூசப்பட்ட இடமென்றால் பெருங்காய டப்பா மணம் வீசாமலில்லை.


சொல்பொருள் நிகழ்வுகளைக் கேட்க வந்த பருப்பொருள் பார்வையாளர்கள் ஈழ, இந்திய இன்னபிற தமிழ் மனிதர்களைப் பார்க்கும் போது, இலக்கியம் செழுமையாக இருப்பது புரிந்தது. வேளைக்கொரு உடை, பட்டு, பொன், பொட்டு, விலை உயர் கேமராக்ககள், மினரல் வாட்டர் கேன்கள், கசக்கப்படும் பிளாஸ்டிக் குவளைகள், மொத்தத்தில் தோல்களில் சராசரி நிறம் வெள்ளைதான்; கருப்போ, மாநிறமோ அல்ல. பாரதி, புதுமைப்பித்தனை விட இன்றைய இலக்கிய வாழ்க்கை பல மடங்கு கலர் ஃபுல்லாக, ரிச்சாகத்தான் இருக்கிறது. கூட்டினால் வரும் 400 தலைகளுக்கான இந்நிகழ்ச்சியின் பட்ஜெட் 40 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள். சரியான கணக்கு வேண்டுவோர் அவர்களின் இணையத் தளத்தைப் பார்க்கலாம். கருத்தரங்கங்களின் பளபளப்பைப் பணக்காரக் கட்சியான காங்கிரசின் கூட்டத்தில் கூடப் பார்க்க முடியாது.


எழுதி வைத்த கருத்தாடல்களைச் சொல்லாடல்களாக மாற்றும் சொல்வித்தகர்கள் வந்தார்கள்; வகைக்கொன்றாய் வென்றார்களா என்ற கேள்வி ஈண்டு பொருத்தமன்று. ஈழத்துப் பிரபலத்துக்காக சேரன், சிவத்தம்பி, நுஃமான்; இந்தியப் பிரபலத்துக்காக அடூர் கோபாலகிருஷ்ணன், மாலன், சுஜாதா, சிவசங்கரி; மார்க்சியப் புலம்பலுக்காக எஸ்.வி. இராஜதுரை, இராசேந்திர சோழன், செயப்பிரகாசம், த.மு.எ.ச. கதிரேசன்; இலக்கியப் பிரபலத்துக்காக சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோக மித்திரன்; தலித் கவரேஜூக்காக ராஜ் கௌதமன், உஞ்சை ராசன், பாமா; பெண்ணிய கணக்குக் காட்ட அம்பை, மங்கை, வ.கீதா, ஒளவை; நவீனத்துவ பின் நவீனத்துவ மிரட்டலுக்காக, பூரணச் சந்திரன், ஜீ.எஸ்.ஆர். கிருஷ்ணன், பிரேம், தருமராஜ் போன்றோரும், இன்னும் சிறு பத்திரிக்கைக் குழாமைச் சேர்ந்த பல்வேறு பிரம்மாக்கள் நாடகம், கவிதை, விமர்சனம், சிறுகதை, நாவல் என ஒன்றுவிடாமல் பரிபூர்ண இலக்கியக் கச்சேரியை வாசித்துத் தள்ளினர். மொத்தத்தில் கச்சேரி அபஸ்வரமாகக் கேட்டாலும் இலக்கிய நியாயப்படி அது ஒரு குற்றமல்ல.


"இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த தமிழ்க் கூட்டுக் குடும்ப மனிதர்கள் தம் வாழ்நாளில் 100 வார்த்தைகளைத் தாண்டிப் பேசியதில்லை'' என தனது கட்டுரையில் பிரபஞ்சன் சொன்னதைப் போல இங்கேயும் ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட, விமரிசிக்கப்பட்ட ஒரு 100 வார்த்தைகள் பல்வேறு ராகங்களில் உரு, இடம், வெளி மாறி சற்றே அலுப்புடன் ஓதப்பட்டன.


சூழல், அழகியல், நெருக்கடி, மயக்கம், படைப்பாளி சுதந்திரம், இலக்கியக்களம், இலக்கியச் சாதனை, அரசியல், உரைநடை, செய்யுள் நயம், அறிவுலகத் தரம், பண்டித நடை, அங்கதம், மீறல், பதட்டம், குதூகலம், பரீட்சார்த்தப் பார்வை, பார்க்கத் தவறிய தருணங்கள், வாழ்க்கை, தத்துவம், பாலியல், ஆச்சாரம், சீர்திருத்தம், கருவி, அக்கறை, பிரபலம், தரம், ஆழம், சிகரம், புனைகதை, வருமானம், வணிக எழுத்து, உழைப்பு, ரசனை, முனைவு, வடிவம், உள்ளடக்கம், அடையாளம், பீடம், அறிவொளி மரபு, ஆரோக்கிய விவாதம், வரையறுப்பு, மார்க்சியம், சோசலிச எதார்த்தவாதம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், அமைப்பியல், பின் அமைப்பியல், யதார்த்தம், யதார்த்தவியல், புனைவு, பிரதி, பனுவல், ஆசிரியன் இறந்து விட்டான், குறியீடு, மொழியாக்கம், படிமம், உத்தி, தலித் இலக்கியம், தலித் உணர்வு, பெண்ணியம், தலித் பெண்ணியம் என்பதான வார்த்தைகள் குடுவையில் குலுக்கப்பட்டு வெவ்வேறு கணச் சேர்க்கைகளுடன் கோர்க்கப்பட்டு ரசாயன மாற்றம் பெற்று இலக்கியச் சங்கதி என்ற தத்துவ முத்துக்களாகக் கொட்டப்பட்டன. எடுக்கவா, கோர்க்கவா என்ற மகாபாரத மயக்கம் நமக்கும்.


கருத்தரங்கில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற வரலாற்று விளக்கத்தைச் சிறு பிரசுரமொன்றில் வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள், நிறப்பிரிகை கோஷ்டியார். கும்பமேளாவின் முதல் மரியாதையில் எங்களுக்குப் பங்கில்லையா என்ற ஆதங்கமே எதிர்ப்பின் செய்தி. தமிழின் சிறுபத்திரிக்கை பீடத்தின் தாதா யார் என்ற பந்தயத்தில் நிறப்பிரிகை தோற்று காலச்சுவடு வெற்றி பெற்று வருவது செய்தியின் பின்னணிச் செய்தி. மற்றபடி இருவரும் புரவலர்களினால் இயக்கப்பட்டும், கருத்தளவில் ஏகாதிபத்தியத் தொண்டூழியமும் செய்து வருபவர்கள்தான். ஒன்றுபட்ட கருத்துடையவர்கள் நாற்காலிக்காகச் சண்டை போடுவது இலக்கிய அழகல்ல; தர்மமும் அல்ல. வேண்டுமானால் பா.ம.க. ராமதாஸின் யோசனைப்படி 6 மாதத்துக்கொரு தடவை சுழல் முறையில் பீடம் ஏற்கலாம்.


முதல் கூட்டத்தில் 400 பேர்களாக இருந்த தலைகள் பின்னர் 100, 50 ஆகச் சிறுத்துப் போனது. மேடையில் "விட்டு விடுதலையாகி நிற்பாய்' என்ற பாரதியின் வரிகள் வெளியேறிய தலைகளுக்குப் பொருத்தமாய்ப் பளீரென மின்னியது. உள்ளே இருந்தவர்களும் மேடைப் பேச்சிலிருந்து விட்டு விடுதலையாகி தங்களுக்குள்ளேயே கதைத்துக் கொண்டார்கள். கணிசமான காசு ஈழத் தமிழர்களிடமிருந்து வந்திருந்தபடியால் இலக்கியத்தை ஈழம், தமிழகம் என இரண்டாகப் பிளந்து இரு அரங்குகளில் நடத்தினார்கள். பொதுவில் ஈழத்து இலக்கியத்தை தமிழக இலக்கியம் அங்கீகரிப்பதில்லை என்று பேசியவர்களின் குற்றச்சாட்டு இங்கேயும் மெய்ப்பிக்கப்பட்டது. பேசியவர்களும் புலம் பெயர் இலக்கியம் உருவாக்கப்பட்ட அவஸ்தைகளைப் பேசினார்களே ஒழிய புலம் பெயர வழியேதுமில்லாதவர்களைப் பற்றி மறந்தும் கதைக்கவில்லை. தீவிரமான நாட்டுப் போராட்டத்திற்கும், தீவிரமான இலக்கியத்திற்கும் ஒட்டுறவு வேண்டியதில்லை போலும்.


குமுதமும் ரஜினியும் இலங்கையில் இறக்குமதியாவது ஒரு பிரச்சினையல்ல. மட்டக்களப்பிலும் திரிகோண மலையிலும் காலச்சுவடு வாசகர்வட்டமும் பாரீசில் நிறப்பிரிகை வாசகர் வட்டமும் நடப்பது குறித்த செய்திகளே கவலைப்படத்தக்கவை. ஈழப் போராட்டத்தை உறவாடிக் கெடுத்தது இந்திய அரசு; ஈழத்து இலக்கியவாதிகளைக் கருத்தாடிக் கெடுத்துவிட்டன தமிழ்ச் சிறுபத்திரிக்கை கோஷ்டிகள். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டம், அதன் இலக்கியத் தரத்தை வைத்து முன்னேறுவதில்லை என்ற வகையில் ஈழத்து மக்கள் ஆறுதலடையலாம். நிகழ்ச்சியின் கவர்ச்சிப் பிரபலமாய் மூன்று நாட்களும் தம்பதி சகிதமாய் வந்து போன கலைஞர் மகள் கனிமொழியையும் இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. பந்தா ஏதுமின்றி சாதாரணராய் வந்தமர்ந்த அம்மையாரின் அருகில் அமரவும், அறிமுகம் பெறவும், படைப்புகளைக் கொடுக்கவும், கையெழுத்து வாங்கவும் ஒரு கூட்டம் சப்தமின்றி அலைந்து கொண்டிருந்தது. அடேய் உடன்பிறப்பே, கழக மாநாட்டிற்கு 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்து, பல பத்தடி தூரத்தில் நின்று தலைவரின் குடும்பத்தினரைப் பார்த்து அதோ அவங்கதான் கனிமொழியம்மா என்று பூரிப்பாயே, அந்த அம்மா இங்கே இலக்கியக் கூட்டத்தினரோடு பாச நேசத்தோடு பழகியதைப் பார்த்திருக்க வேண்டும் — இதுதாண்டா வர்க்க பாசம்!


கருத்தரங்கிற்காகத் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளை இணையத்தில் படித்ததாகவும், எதுவும் ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்தது எனவும், இதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர் ஞாநி, இருப்பினும் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் இத்திருவிழாவில் சந்திக்கவாவது முடியுமே என நண்பர்கள் கூறியதையடுத்துச் சமாதானமடைந்தாராம். ஆயினும் "÷க்ஷமமாய் இருக்கேளா' என்று நலமறியும் வைபவத்திற்கு 40 லட்சம் செலவென்றால், வளர்ப்பு மகனுக்குத் திருமணம் நடத்திய போயஸ் ராணிகள் இவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.


உலகமயமாக்கத்தின் யுகத்தில் இலக்கியமும் இங்கே வணிக நேர்த்தியுடன் விற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் காலச்சுவடு நிறுவனம் தனது 8 நூல்களை அறிமுகப்படுத்தி, தள்ளுபடி போக 800 ரூபாய்க்கு விற்றது. அன்று ஒரு லட்சமும், பின்பு ஓரிரு லட்சமும் விற்றிருக்கக் கூடும். இனி வரும் நாட்களில் கருத்தரங்கக் கட்டுரைகளைப் பல பத்து நூல்களாக விற்பார்கள். சிறு பத்திரிக்கைக் கும்பலின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காலச்சுவடு, தனது இலக்கியச் சரக்கிற்கு ஒரு உலகத் தமிழ்ச் சந்தையை ஏற்படுத்திக் கொண்டது இந்நிகழ்ச்சியின் முக்கியப் பொருளாதார ஆதாயமாகும். ஒலிம்பிக்கில் வெல்வது முக்கியமல்ல, கலந்து கொள்வதே பெருமையாகும் என்பதற்கேற்ப, நிகழ்ச்சிக் கட்டுரையாளர்கள் பெருமிதத்தோடு உலவினார்கள். பல பக்கக் கட்டுரைகளை 15 நிமிடத்தில் தரவேண்டிய அவஸ்தை இருந்தாலும், அவர்கள் சொல்ல வந்த கட்டுரைச் செய்திக்கு இந்நேரம் அதிகமே. கல்யாண விருந்தின் வெற்றிலை அரட்டைகள் ஆக்கிரமித்திருந்த அரங்கத்தில் கட்டுரை தொடர்பான கவனமோ, விவாதமோ துளியுமில்லை. சிறு பத்திரிக்கைகளின் எழுத்தில் உக்கிரப்படும் வீறாப்புக் குழாயடிச் சண்டைகளின் அறிகுறியைக் கூட இங்கே காணமுடியவில்லை. வீட்டில் புலியும், வெளியில் எலியுமாக இருப்பார்கள் போலும்.
"என் காரக்டரைப் புரிஞ்சுக்கவே மாட்டீங்களா' என்ற அந்த புகழ் பெற்ற ஒற்றை வாக்கியமே ஒரு எழுபதாண்டு காலம் தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைகளில் வெளிப்படும் திமிரான அற்பமான வாழ்க்கைத் தேடலாகும். ஈழத்துடன் முற்றிலும், விருப்பத்துடனும் துண்டித்துக் கொண்டு ஐரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்த ஈழ இலக்கியவாதிகளும், தமிழ் வாழ்க்கையிலிருந்து சிந்தனை ரீதியாகத் துண்டித்துக் கொண்டு அற்பவாத மனவெளிக்குப் புலம் பெயர்ந்த தமிழ்நாட்டுச் சிறுபத்திரிக்கைக்காரர்களும், எதன் பொருட்டு இலக்கியத்தினால் உயிர் வாழ்கிறார்கள்?


எங்கேயும் புலம் பெயர முடியாத ஒரு சராசரித் தமிழனின் வாழ்க்கையும் இருப்பும், மாற்றமும், போராட்டமும் இவை ஒன்றோடொன்று சேர்ந்தும் பிரிந்தும் வளர்ந்தும் வருகின்ற அந்தச் சமூகப் பெருவெளியைக் கடுகளவு கூட அறியாத, அறிய முடியாத இந்த ஒட்டுண்ணிக் கும்பலிடமிருந்து பிறப்பதெல்லாம் இலக்கியம் என்ற பெயரில் உரிக்கப்படும் வெங்காயங்களே.


வங்கிப் பணியோ, ஆசிரிய உத்தியோகமா, ஃபோர்டு பவுண்டேசனின் பிச்சை ஆய்வோ, வியாபாரமோ எதுவாக இருந்தாலும் நிறைவாகச் செய்து கொண்டு, தன்னிடமும், தனது குடும்ப வாழ்க்கையிலும், தனது சூழ்நிலையிலும் ஆயிரம் பிற்போக்குத் தனங்களையும் இயல்பாகவே வைத்திருக்கும் இந்தச் சமூக விரோதக் கூட்டம், வாழ்க்கை குறித்துத் தேடுகிறேன் என்று பன்றியைப் போலச் சிலிர்த்துக் கொண்டு உறுமுவது ஆபாசத்தின் உச்சம். சென்னைக் கடற்கரையில் அண்ணாதுரை நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் 4 கக்கூஸ்களாவது கிடைத்தது என்றான் கவிஞன் நீலமணி. சிறுபத்திரிக்கைக் கும்பல்கள் நடத்திய இந்தக் கூட்டத்தில் வீசப்பட்ட சில ஆயிரம் பிளாஸ்டிக் குவளைகளால் சுற்றுப்புறச் சூழல் கெட்டுப் போனதுதான் மிச்சம்.
·
சாத்தன்
அக்டோபர், 2000