Language Selection

சுந்தரராமசாமி  அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத் துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தி யில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி "சிற்றி லக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்' என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.


 லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தில் அதற்கு அடுத்தபடியாக சு.ராவுக்கு அவரது ரசிகர்கள் ஒரு இலக்கிய ரசிகர் மன்றம் ஆரம்பித்து, அவரது இருப்பை அதாவது லவுகீகத்தில் திளைத்து உள்ளொளியில் தத்தளித்து சிந்தனையில் தோய்ந்து வார்த்தைகளைப் பிரசவிக்கும் மின்னொளித் தருணங்களை பல்வேறு கால, இட, வெளிகளில் உறைய வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தினார்கள். என்னடா இது, ஏற்கெனவே சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்கள் தமிழ் அரசியல் வெளியில் தாள்வாள்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது தாள்களையே உச்சிமோந்து புளகாங்கிதம் அடையும் இலக்கியவாதிகளும்  அதுவும் ஓரிரு கதைகளும் கவிதைகளும் நாவல்களும் எழுதியவுடன்  இப்படிக் கிளம்பி விட்டால் தமிழ்மக்களின் கதியும் அரசியலின் தரமும் என்னவாகுமோ என்று தலையிலடித்துக் கொண்டு சு.ராவின் அந்தப் புகைப்படக் கண்காட்சியை இடக்கு பண்ணி புதிய கலாச்சாரத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். மற்றபடி சு.ரா இருந்தபோதும் இறந்த போதும் எங்களைப் பொறுத்தவரை முக்கியமானவர் இல்லை; என்றாலும், எந்தவொரு முக்கியமின்மையிலும் ஒரு சில முக்கியத்துவங்கள் இருக்கத்தானே செய்கின்றன!
 இது நடந்து சுமார் பத்தாண்டுகள் இருக்கும். அப்போது புதிய கலாச்சாரம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை வில்லிவாக்கத்தில் இருந்தது. அங்கே ஒருநாள் அதிகாலையில் தற்செயலாக ஆந்திராவைச் சேர்ந்த தோழர் நிர்மால்யானந்தாவைச் சந்தித்தோம். அவர் ஜனசக்தி என்ற மார்க்சிய லெனினியக் கட்சியினைச் சேர்ந்தவர் என்பதோடு அக்கட்சியின் பிரஜாசாஹிதி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. அவரது தமிழக வருகையின் நோக்கம் குறித்துக் கேட்டபோது, "தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களைச் சந்திப்பது' என்றார். அப்படி ஒரு பட்டியலையும் வைத்திருந்தார். அதில் கோமல் சுவாமிநாதன், கோவை ஞானி, எஸ்.வி. ராஜதுரை, எஸ்.என். நாகராசன் முதலானோர் இருந்ததாக நினைவு. "நினைவின் நதி'யில் சில விடுபடுதல்கள் இருக்கலாம். போகட்டும், இந்தப் பட்டியலிலுள்ளோர் அனைவரும் மார்க்சியத்தை பல்வேறு வகைகளில் கடுமையாக எதிர்ப்பவர்களாயிற்றே என்று அவர்களது எழுத்தையும், நூல்களையும், நிலைப்பாட்டினையும் விளக்கிவிட்டு "இந்தப் பட்டியலை யார் கொடுத்தது?' என்று அந்தத் தோழரிடம் கேட்டோம். அவர் சுந்தர ராமசாமி தந்ததாகச் சொன்னார். அடேங்கப்பா, தமிழகத்து இடதுசாரி எழுத்தாளர்களின் அத்தாரிட்டி சு.ரா.தான் என்று ஆந்திர மா.லெ. குழு ஒன்றுக்கு ஒரு பொய்யான தகவல் உறுதியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதே என்று உண்மையில் விக்கித்து நின்றோம். அப்போதுதான் சு.ரா.வின் "பவர்' என்னவென்று புரிந்தது.


 நடந்தது என்னவென்றால், அந்தத் தோழர் கேரளம் சென்றபோது அங்கிருந்த அவரது கட்சித் தோழர்களிடம் தமிழகத்தின் இடதுசாரிக் கலை இலக்கியப் போக்கு குறித்து விசாரித்திருக்கிறார். கேரளத்துத் தோழர்களும் சு.ரா.தான் முக்கியமான இடதுசாரி எழுத்தாளர், அவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று தோழர் நிர்மால்யானந்தாவை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். நாஞ்சில் மண்ணில் கால் பதித்த அவரும் தமிழகத்தின் இடதுசாரி இலக்கிய வரலாற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடதுசாரி எழுத்தாளரின் மூலமாக அறியப் போகும் உற்சாகத்துடன் சு.ரா.வைச் சந்தித்திருக்கிறார். சு.ரா.வோ தமிழகத்தில் முக்கியமான இடதுசாரி  போக்கு  இலக்கியம்  பத்திரிக்கை என்று பெரிதாக எதுவும் இல்லையென்றும், தனித்தனி எழுத்தாளர்கள்தான் உண்டெனவும் அலட்சியமாகக் கூறிவிட்டு, வேண்டுமானால் அவர்களைப் பார்க்கலாமென மேற்படிப் பட்டியலை முகவரிகளுடன் கொடுத்து அனுப்பிவிட்டார். இதில் எமது முகவரியையும் சு.ரா. கொடுத்திருப்பாரென வாசகர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. அந்தத் தோழர் ஆந்திராவிலிருந்து கிளம்பும் போதே எமது முகவரியும் அவரது முகவரிப் பட்டியலில் இருந்திருக்கிறது.


 அதன்பிறகு அந்தத் தோழரிடம் சு.ரா.வைப் பற்றியும் அவரது இரண்டாவது நாவலைப்பற்றியும் காலச்சுவடு குறித்தும் அவரிடம் நிலவும் கடைந்தெடுத்த மார்க்சிய வெறுப்பையும் விளக்கினோம். அப்போது கருவறை நுழைவுப் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் ஆகியவை நடந்து முடிந்த நேரம். அந்தப் போராட்டங்களின் வரலாற்றையும், அவை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த பாதிப்பையும், தமிழ் மக்கள் இசைவிழா  கலை நிகழ்ச்சிகள்  பாடல் ஒலிப்பேழைகள்  பத்திரிக்கைகள்  அவற்றின் விநியோகம் இவற்றையெல்லாம் விளக்க விளக்க அந்தத் தோழர் விக்கித்து நின்றார். ""உங்களைப் பற்றி சு.ரா. ஒன்றும் சொல்லவில்லையே'' என்றார். சு.ரா ஏன் சொல்லியிருக்க முடியாது என்ற விளக்கத்துடன் அந்த உரையாடல் முடிந்தது. நாங்களும் சு.ரா.வும் ஒருவரையொருவர் முக்கியத்துவமுடையவர்களாகக் கருதவில்லை. இவ்விசயத்தில் மட்டும் எங்களிடையே ஒத்த கருத்து இருந்தது உண்மை. ஆயினும் தமிழகத்தின் யதார்த்தம் குறித்த தவறான புரிதலை ஆந்திரத்துக்கு அளிவித்த கேரளத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டது. இது கேரளத்தின் பலவீனமா, சு.ராவின் பலமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.


 ""சு.ரா.வின் மறைவு மலையாளிகளைப் பொருத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்'' என்று மாத்ருபூமி நாளிதழ் தலையங்கமே எழுதியிருக்கிறது! இதற்கு முன் சு.ரா. கோட்டயத்தில் தான் பிறந்து வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்ததைக் கூட புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தது அந்த நாளிதழ். படிப்பறிவிலும் பத்திரிக்கைகள் விநியோகம்  படிக்கும் பழக்கத்திலும், பொதுவில் முற்போக்கு சாயலிலும் முன்னணி வகிக்கும் அந்த மாநிலம் சு.ரா.வின் மீது கொண்டுள்ள காதலின் காரணமென்ன? அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ள மலையாள சூழலும், மாந்தர்களும், அவரது படைப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டதும், அவரே சில மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்ததும் அந்த நேச உறவைத் தோற்றுவித்திருக்கலாம். ஆனாலும் போலி கம்யூனிசத்தில் முங்கி உருவான முற்போக்கு மாயையும், தமிழகத்தை விட ஆர்.எஸ்.எஸ்.ஐ அபாரமாக வளர வைத்த சனாதனப் பிடிப்பும் கொண்ட கேரளத்திற்கு சு.ரா. போன்ற ஆளுமைகள் பொருந்தி வந்திருக்கலாம். போலி கம்யூனிசத்தை மொண்ணையாக எதிர்க்கும் ஒரு போலியான எழுத்துக் கூட அங்கே சாகா வரம் பெற்றுவிடும். நகரமயமாக்கமும், பெருகிவரும் நடுத்தரவர்க்கமும் கொண்ட கேரளத்தில் சன் டிவியின் சீரியல்கள் சூர்யா டிவியின் வழியாக வெற்றி பெறுவதும், இங்கு வரும் மலையாளப்படங்களை விட அங்கு போகும் தமிழ்ச் சினிமாக்கள் அதிகநாட்கள் ஓடுவதும் சாத்தியமான கேரளத்தில், சு.ரா. மட்டும் செல்லுபடியாகாமல் போய்விடுவாரா என்ன?


 சு.ரா.வை விடுங்கள், தான் முப்பது இட்டலிகள் சாப்பிட்டதையும், மனைவி தோசை சுட்டதையும் கோணல் பக்கங்களாக எழுதித் தள்ளும் சாரு நிவேதிதா எனும் காரியக் கிறுக்கு மூன்று மலையாளப் பத்திரிக்கைகளில் தொடர் எழுதுகிறது என்றால் இந்தக் கொடுமையை எவரிடம் சொல்லி அழ? சா.நி. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அவருடைய நாவல் தொடர்பான வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு கேரளத்தில் ஹிந்து உட்பட ஆறு தினசரிகளில் வெளிவந்ததாம். புட்டு பயிறு பப்படம் ஆப்பம் கடலைக்கறி வாழைக்கப்பம் முதலான அன்றாட உணவு வகைகளில் சலித்திருந்த கேரளத்தில் ஃபாஸ்ட் புட் அயிட்டங்கள்  வயிற்றுக்குக் கேடுதான் என்றாலும்  வரவேற்பைப் பெறலாம் இல்லையா? தமிழ் வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தம்மைத்தாமே சிற்றரசர்களாகப் பாவித்துக் கொள்ளும் சிறு பத்திரிக்கை இலக்கியவாதிகளின் மனோநிலையும், போலி முற்போக்குச்சாயம் வெளுத்து காலியாக இருக்கும் அரியணைகளில் கோமாளிகளை அமரவைத்து அழகு பார்க்கும் கேரளத்தின் மனோநிலையும் ஒன்றையொன்று கவர்ந்திழுக்கின்றன. இந்த இழுப்பில் அடிபணிந்த கேரளம் அந்த ஆந்திரத் தோழருக்கு தவறான வழியைக் காட்டியிருப்பதில் யார் என்ன செய்ய முடியும்? இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் கேரளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராகுமாறு சு.ரா.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அதற்குள் அவர் போய்ச்சேர்ந்து விட்டார். ஒருவேளை அவர் இருந்து உறுப்பினராகியிருந்தால் என்ன நடந்திருக்கும்? கல்வி தனியார்மயமாகும் கேரளத்தில் மாணவர்கள் அதிக இலக்கியம்  அதிலும் காலச்சுவடு வழியான இலக்கியங்கள்  படிக்க வேண்டும் என்பதை விதியாக்கியிருப்பார். ஊர் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் ஒரு கலை இலக்கியவாதியின் மனம் ஊற்றுவதற்குத் தண்ணீரையா தேடும்? மீட்டுவதற்கு ஃபிடிலைத்தானே தேட முடியும்!


 சு.ரா.வின் இறுதிப்பயணம் அவர் மிகவும் நேசித்த அமெரிக்காவில் முடிந்தது என்பது தற்செயலான ஒன்றல்ல. அவர் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்க குடியுரிமை பெற்று, அதன்படி, வருடத்தில் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்க வேண்டிய கடமையைச் செவ்வனே செயல்படுத்த ஆரம்பித்திருந்தார். அங்கே அவரது இரண்டு மகள்கள் சான்டாக்ரூசிலும், கனெக்டிகட்டிலும் செட்டிலாகியிருந்தார்கள். சான்டாக்ரூசில் அவரது மகளின் மிகப்பெரிய வீடு, நீச்சல்குளம், கண்ணாடி அறை, வெளியே நிற்கும் பசிய மரங்கள், சுத்தமான நெடிய சாலைகள், அழகான பேரங்காடிகள், கம்பீரமான கட்டிடங்கள், தாள் மணம் வீசும் புத்தகக் கடைகள், தொண்ணூறு வயதிலும் காரோட்டிக் கொண்டு வரும் சீமாட்டிகள், எண்பது வயதிலும் கட்டிளங்காளை போலத் திருமணம் செய்யும் சீமான்கள்... என்று அவர் அமெரிக்காவை அணு அணுவாக ரசித்ததை அவரது அமெரிக்க வாழ் நண்பர்கள்  எழுத்தாளர்கள் கோகுலக் கண்ணனும், பி.ஏ. கிருஷ்ணனும் பதிவு செய்திருக்கின்றனர். இதுபோக ஒரு கட்டுரையில் அமெரிக்க ஜனநாயகம் தனக்குப் பிடித்திருப்பதாக சு.ரா.வும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். (ஃபுளோரிடாவில் கறுப்பின மக்களைத் துப்பாக்கி முனையில் விரட்டி விட்டு புஷ்ஷை அதிபராக்கிய அதே ஜனநாயகம் தான்.)


 சு.ரா.வின் அமெரிக்க மோகம் என்.ஆர்.ஐ. இந்தியர்களின் அமெரிக்கக் காதலிலிருந்து கடுகளவும் வேறுபட்டதல்ல. சு.ரா.வின் மகள்கள் படித்து ஆளாகி அமெரிக்க வாழ் மாப்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொண்டு அங்கேயே ஒன்றிப்போனது தந்தையின் வர்க்க  வாழ்நிலைக்குப் பொருத்தமானது என்றாலும் சு.ரா. அதை தன் இலட்சிய விருப்பமாகக் கொண்டிருந்தார் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காதான் பூவுலக சொர்க்கம் எனக் கருதும் மேட்டுக்குடி நடுத்தர வர்க்கத்தின் உளப்பாங்கைத்தான், மனிதனின் அக உலகைக் கலைத்துப் பார்த்து நிம்மதியைத் தேடிய இலக்கியவாதியான சு.ரா.வும் பெற்றிருந்தார். அவர் அமெரிக்காவுடன் போக்குவரத்து துவங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில்தான், அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்களின் பச்சை இரத்தம் குடித்து வந்தது. இந்த இரத்தத்தைக் குடித்துத்தான் அமெரிக்கக் கார்கள் ஓடின. இந்த இரத்தத்தைக் கழுவித்தான் அமெரிக்கச் சாலைகள் பளிச்சென்று மின்னின. இந்த இரத்தத்திலான கலவையைக் கொண்டுதான் அமெரிக்கக் கட்டிடங்கள் நெடிதுயர்ந்து நின்றன.


 இவையெல்லாம் சு.ரா.வின் மெல்லிய இலக்கிய அக உலகில் மென்மையாகக் கூட உரசவில்லை. அப்படி உரசியிருந்தால் இரத்தப் பணத்தால் வாழும் அந்த நாட்டில் வாழாமல் நாகர்கோயில் சுந்தரவிலாசத்திலேயே அந்திமக் காலத்தை முடித்திருப்பார். அப்படி உரசல் ஏதும் நடக்கவில்லை என்பதுடன் அமெரிக்க வாழ்க்கை அவரை மென்மையாக வருடிக் கொடுத்தது. ஒருவேளை தான் இதுகாறும் செய்து வந்த இலக்கியத்தவத்தினால் அகத்தில் கண்டு உவகையடைந்த அழகுணர்ச்சியின் பௌதீக வெளிப்பாட்டை அவர் அமெரிக்காவில் கண்டிருப்பாரோ!
 ""நான் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை நீங்கள் என் கண் எதிரே வாழ்ந்தீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் ஆதர்சத்திற்குமுள்ள இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் சிறிதே என்றபொழுதில் விடை பெற்றுக் கொண்டீர்கள்'' என்று கோகுலக்கண்ணன்  சு.ரா.வின் இறுதி நாட்களை தரிசிக்க வாய்ப்பு பெற்றவர்  அவரது அஞ்சலிக் குறிப்பில் எழுதுகிறார். இவரும் என்.ஆர்.ஐ. தான். சு.ரா.வுடனும் இலக்கியத்துடனும் சில ஆண்டு பரிச்சயம் போலும். கூடவே காலச்சுவடின் ஆலோசனைக் குழுவில் அமெரிக்கப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். உறவு, நட்பு, தகுதி, பதவி, ரசனை எல்லாம் ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்தியிருப்பதுதான் இலக்கியவாதிகளின் இயற்கையோ? இருக்கட்டும், கோகுல் வாழ விரும்பிய சு.ரா.வின் வாழ்க்கைதான் என்ன, விடை அதே அஞ்சலிக் குறிப்பிலேயே பொதிந்திருக்கிறது.


 கோகுல் சு.ரா.வை எப்படி அழைப்பது என்று கேட்க தன்னை சு.ரா. என்று அழைக்கலாமென சு.ரா. பதில் சொல்ல இறுதியில் சு.ரா.வை "சார்' என்று அழைக்கிறாராம் கோகுல். கோகுலின் மகள் ""சு.ரா. தாத்தா உனக்கு எப்படி நண்பராக முடியும்'' என்று கேட்கிறாளாம். இது அவளுக்கு கடைசி வரை விளங்காத ஒன்றாய் இருந்ததாம். கோகுல் ஒவ்வொரு முறையும் சு.ரா.வைப் பார்த்து நலம் விசாரிப்பாராம். ""ரொம்ப நல்லாயிருக்கேன் கோகுல்'' என்று சு.ரா. பதிலளிப்பாராம். இருவரும் அமெரிக்காவில் இரு வாரத்திற்கொருமுறை சந்திப்பார்களாம். அதற்கு இரண்டு நாள் முன்பாகவே கோகுலின் மனம் பரபரக்கத் தொடங்கிவிடுமாம். இருவரும் சு.ரா.வின் மகள் வீட்டின் அற்புதமான கண்ணாடி அறையில் அமர்ந்திருப்பார்களாம். கோகுல் கொண்டு வந்த புதிய புத்தகங்கள் மேசையில் இருக்குமாம். அதன் அட்டையை சு.ரா.வின் விரல்கள் சொல்லமுடியாத பிரியத்துடன் நீவிக் கொண்டிருக்குமாம். அதன் பிறகு ஒரு கோப்பை மதுவுடன் கவிதைபற்றிப் பேசுவார்களாம். இதுதான் சு.ரா.வைப் பார்த்து கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை!


 இந்த அக்கப்போர் அரட்டை வாழ்வை விட ரஜினி ரசிகனாக இருப்பது எவ்வளவோ மேல். அரசியல் சமூகப் பார்வையை விடுங்கள். அமெரிக்கா போன்ற பல்தேசிய இனங்கள் குவிந்து வாழும் நாட்டில் பார்ப்பதற்கும், பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது இருவரின் ரசனை மட்டம் எப்படி குண்டு சட்டியில் குடுகுடுக்கிறது பாருங்கள். இது கோகுல் வாழ விரும்பிய வாழ்க்கை என்பதை விட அவரால் வாழ முடிந்த வாழ்க்கை என்பதே சரியாக இருக்கும். அவரைப் போன்ற முதலாம் தலைமுறை என்.ஆர்.ஐ.கள் சொத்து சேர்த்துவிட்டாலும், அமெரிக்க வாழ்க்கையுடன் ஒன்ற முடியாமல் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், பாரதப் பண்பாடு அல்லது இலக்கியம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான். இதனால்தான் புதிய புத்தகத்தை மோந்து பார்க்கும் சுந்தரராமசாமி ஒரு சூப்பர் ஸ்டாராக கோகுலின் கண்களுக்குத் தெரிகிறார். சரக்கடித்துவிட்டு இலக்கியம் பேசுவதுதான் கவர்ச்சிகரமான வாழ்க்கையென்றால் தமிழ்நாட்டிலேயே லட்சம்பேர் தேறுவார்களே. அதிலும் கூடுதலாக சாருநிவேதிதா போன்றவர்கள் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாழ்க்கையின் "இனிமை'யைக் காட்டுவார்கள். ஒருவேளை சாருநிவேதிதா அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கே தங்கியிருந்தால், கிழவர் ராமசாமியைக் கடாசிவிட்டு சாரு பக்கம் தாவியிருப்பார் கோகுல்.


 சு.ரா.வின் இறுதி நாட்களில் அவரைச் சந்தித்துப் பேசிய மற்றொரு எழுத்தாளரான பி.ஏ. கிருஷ்ணனும் கோகுல் ரேஞ்சிற்கு அஞ்சலிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இவர் சான்ஃபிரான்சிஸ்கோவில் கோதுமைத் தோசை போன்ற ஒன்றைச் சாப்பிட்ட கதையை சு.ரா. ஆர்வமுடன் கேட்டாராம். அன்று இரவு சு.ரா. மகள் வீட்டில் மெக்சிகன் டைப் உணவு விருந்தாம். அதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்றார்களாம். சு.ரா.தான் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்தாராம். இரவில் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காத இரண்டு படங்களைப் பார்த்தார்களாம். இடையில் கிருஷ்ணன் ஒரு விசயத்திற்காகக் குற்றஉணர்வு அடைகிறார். அது என்னவென்றால், அவர் சு.ரா.வின் மனைவி கமலா மாமிக்கு ஸுடோகு புதிர் புத்தகம் ஒன்றை வழங்கினாராம். இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் சு.ரா.வின் மகள், மருமகன், பேரன் பேத்திகள் வெளியே சென்று வீடே வெறிச்சோடிவிட, அப்போது கமலா மாமி ஸுடோகு புதிரை மணிக்கணக்கில் போட்டுக் கொண்டிருக்க, சு.ரா. வேறு வழியின்றி மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு பரிதாபமாய் அமர்ந்திருப்பாராம். இப்படி வயோதிகத் தம்பதியினரைப் பேசவிடாமல் செய்துவிட்டோமே என்பதுதான் கிருஷ்ணனின் குற்ற உணர்ச்சி. ஒருவேளை இதனால்தான் பெரிசு நோய் முற்றி மண்டையைப் போட்டதோ, யார் கண்டது? அது எப்படியோ போகட்டும், மறுநாள் காலையில் கிருஷ்ணன் விடை பெறும்போது சு.ரா. நெஞ்சாரத் தழுவி விடை கொடுத்தாராம், கண்கள் கலங்கியிருந்ததாம். வீடு திரும்பும்போதுதான் சு.ரா. கமலா தம்பதிகளிடம் காலில் விழுந்து சேவிக்க  மறந்து போனது அவருக்கு ஞாபகம் வந்ததாம்!


 தமிழ்நாட்டுச் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் உலகம்தான் எவ்வளவு குட்டியாக இருக்கிறது. சாதாரணமாக உண்டு, பேசி, களித்த கதைகள்தான் அவர்களது வாழ்க்கையின் கவித்துவத்தெறிப்புக்களாக இருக்கிறதென்றால் இவர்களது எழுத்தில் வரும் வாழ்க்கை என்கிற தெருவோரக் குட்டையின் ஆழம் கணுக்கால் அளவைக்கூடத் தாண்டாதே. சாதாரணங்களையே அசாதாரணங்களாக ரசித்து, உருகி, அசை போடும் வாழ்க்கை திண்ணையோர வேதாந்திகளது பல நூற்றாண்டு மரபு. அமெரிக்கா போயும் காலில் விழும் வைபவம் யாருடைய பழக்கம்? இதே கிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு வரும் போது ஏதாவது ஒரு வயதான தலித் எழுத்தாளரின் காலில் விழுவாரா? எழுத்தாளன் என்பதால் கோதுமைத்தோசை சாப்பிட்டது, அதைக் காது கொடுத்துக் கேட்டதெல்லாம் இலக்கியமாகுமென்றால் அது என்னய்யா இலக்கியம்? அல்லது இதுதான் பின்நவீனத்துவம் விளிக்கும் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களா? உண்மையில், சு.ரா. இத்தகைய அற்ப விசயங்களைக் கொண்டாடித்தான் வாழ்ந்து முடித்தார். இடையில் சில கதைகளையும் எழுதினார். இதனால்தான் அவர் இலக்கியச் சிகரமென்றால் சாலையோரப் பள்ளங்களை இனி நாம் பள்ளத்தாக்குகள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.


 சு.ரா. இறந்தவுடன் அவருடன் பேசிப் பழகிய அனைவரும், குறிப்பாக, தமிழகத்தின் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் சு.ரா. மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தங்களது இரங்கற்பாக்களை இப்படித்தான் பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் தீட்டியிருக்கின்றனர். அந்தப் பாக்களில் எழுத்தாளர் ஜெயமோகன் வடித்திருக்கும் நினைவின் நதியில் எனும் காவியம் மகத்தானது. ஒரு வகையில் சு.ரா.வைப் பற்றியும், ஏன் ஜெயமோகனைப் பற்றியும் அதீத மனத்தாவல் ஏதுமின்றிப் புரிந்து கொள்வதற்கு அது ஒரு ஆவணம் அல்லது உபநிடதம் போன்றது.


 அதில் சு.ரா. பார்த்துப் பறித்த, கேட்டுக் கலந்த, ரசித்து உருகிய, ஆசைப்பட்டுக் கோட்டைவிட்ட சமாச்சாரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் செதுக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் உண்மைதானென்று சு.ரா. உயிர்த்தெழுந்து வந்து சாட்சியம் சொல்ல முடியாது என்றாலும் ஏனைய எழுத்தாளர்களின் பதிவுகளும் ஏறத்தாழ ஜெயமோகனை வழிமொழியத்தான் செய்கின்றன.


 இவற்றையெல்லாம் பிழிந்து பார்த்தால், சு.ரா. தனது ஆளுமையின் வளர்ச்சிற்கேற்பப் பேரழகனாய் மிளிர்ந்தார், அவரது கருத்து  தோற்றம்  எழுத்து  பேசும் முறையின் மீது மூன்றுதலைமுறை எழுத்தாளர்கள் மோகம் கொண்டனர். சு.ரா. தேள்களைத் தூக்கி நெஞ்சை நிமிர்த்தி நடப்பார், ஆரம்பத்தில் தூய கதர்ச்சட்டையும்  தும்பைப்பூ எட்டு முழ வேட்டியும் கட்டியவர் பின்னர் ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டுக்கு மாறினார். சாக்கடையில் வீசப்பட்ட உபயோகமற்ற பொருட்களை விரும்பி வேடிக்கை பர்ப்பார், சினிமா சுவரொட்டிகளை உறைந்து ரசிப்பார், மலையாள நடிகை பார்வதியும் நடிகர் கோபியும் அவருக்குப் பிடித்த நடிகர்கள், கட்டிலில் படுத்தபடி பேசுவது அவருக்குப் பிடிக்கும் (இந்த முக்கியமான விசயத்தை பலரும் பதிவு செய்திருக்கின்றனர்), பாத்டப்பில் படுத்தபடி குளிப்பது மிகவும் பிடிக்கும் (ஜெயமோகன் அறிந்த இந்திய நண்பர்களிலேயே பாத்டப்பில் குளிப்பது சு.ரா. மட்டும்தானாம். நாம் அறிந்த வரை பாத்டப் இருப்பது பங்களாக்களிலும் 5 ஸ்டார் ஓட்டல்களிலும்தான். என்ன செய்வது, இலக்கிய மனம்தான் வர்க்க பேதம் அறியாததாயிற்றே!) வெளிநாட்டு லோஷன் பூசுவது பிடிக்கும், சில நேரங்களில் "செண்பகமே செண்பகமே' பாடுவது பிடிக்கும், தினசரி ஷேவிங் செய்வது பிடிக்கும், அவரது வீடு  படிக்கும் அறை  வளைந்த நாற்காலி  சாப்பாட்டு மேசை  மொட்டை மாடி நிரம்பப் பிடிக்கும், அளவோடு ஆனால் ருசித்துச் சாப்பிடுவது பிடிக்கும், தோசையும் தொட்டுக்கொள்ள கீரைமசியலும் கெட்டித்தயிரும் தினசரி பிடிக்கும், தோல் சீவிய பழங்களைத் துண்டுகளாக்கிக் குத்திச் சாப்பிடுவது பிடிக்கும், புத்தம் புதிதாக வரும் புத்தகங்களின் புத்தக மணத்தை மோந்து பார்ப்பது சலிக்காமல் பிடிக்கும், கர்நாடக சங்கீதம் செவி குளிரக் கேட்பது பிடிக்கும், ஹிந்து பேப்பரை படித்து முடித்ததும் கச்சிதமாக மடித்து வைப்பது பிடிக்கும், (சு.ரா.வை எழுத்தில் விஞ்சியதாக சுயப் பிரகடனம் செய்யும் ஜெயமோகனுக்கு இந்தக் கலை மட்டும் இன்னும் கை வரவில்லையாம். இது போன்ற கலைத்தவங்களில் மட்டும்தான் இலக்கியவாதிகளுக்குத் தன்னடக்கம் வரும் போலும்  கற்றோரின் பணிவு!), சற்றுப் பூசினால் போன்ற உடல்வாகுடன் உள்ள மலையாளப் பெண்கள் குளித்து விட்டு ஈரத்தலையைக் கோதிவிடுவது பிடிக்கும், பேசிக்கொண்டோ பேசாமலோ இருக்கும் பெண்களின் கழுத்தசைவு பிடிக்கும், எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் காலாற நடப்பது பிடிக்கும், கூடைக்காரக் கிழவிகளின் சண்டை போடும் வீரம் பிடிக்கும், ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எப்போதும் பிடிக்கும், திருவனந்தபுர இரயில்வே நிலைய உணவகத்தின் தோசை பிடிக்கும், திருவனந்தபுர மாடி ஓட்டலின் ஐந்தாவது தள உணவறையின் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பையும் கட்டிடப்பரப்பையும் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது பிடிக்கும், பெண்கள் கண்ணாடி வளையல்கள் போடுவது பிடிக்காது, வளைந்து நெளிந்த தங்க வளையல்கள் போடுவது பிடிக்கும்...


 அப்புறம் நாலணா பாளையங்கோடன் பழத்திற்காகப் பெட்டிக்கடைக்காரரிடம் பேரம் பேசிய சு.ரா., கார் பார்க்கிங் பிரச்சினையில் போலீசுக்காரருடன் சாமர்த்தியமாக வாதம் செய்த சு.ரா., நண்பருக்கு முன் பதிவு செய்த இருக்கையில் வேறு யாரோ அமர சின்ன உரிமையைக் கூட விட்டுத்தர முடியாது என்று சண்டை போட்டு இடம்பிடித்த சு.ரா., ஒரு நண்பர் சு.ரா.வைப் பார்த்தவுடன் உடன் வந்த தன் மருமகளிடம் விடைபெற மறந்த போது "மறதி என்பது எவ்வளவு அருமையான விசயம்' என்று தத்துவம் உதிர்த்த சு.ரா., சாப்பாட்டு மேசையின் அடியில் புகுந்து வெளியே ஓடிய குழந்தையைப் பார்த்து ""குழந்தைகள் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எதிர் கொள்ளுகிறார்கள்'' என்று அதிசயித்த சு.ரா. என்று இந்த "வரலாற்றுப் பதிவுகள்' முடிவில்லாமல் நீளுவதால் நாம் இந்த மட்டும் நிறுத்திக் கொள்வோம்.


 ஜெயமோகன் மற்றும் அவரது சக எழுத்தாளர்களால் இவைமட்டும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்ல. நண்பர்களை வரவேற்று உபசரிக்கும் சு.ரா.வின் விருந்தோம்பல், நண்பர்கள் சிலருக்கு நிதியுதவி அளித்த பெருந்தன்மை, அப்புறம் தத்துவ இலக்கிய ஆராய்ச்சி எல்லாம்தான் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மேற்கண்ட அழகியல் ரசனைகளுக்குப் பொருத்தமான ஒத்திசைவோடு சேர்ந்தேதான் வருகின்றன. சு.ரா. என்ற எழுத்தாளுமை மேற்கண்ட "பிடிக்கும்'களில் இருந்துதான் உருவாகி எழுந்து வர முடியும். அவையன்றி சு.ரா. இல்லை. இத்தகைய அற்ப விசயங்கள் ஒரு எழுத்தாளனுக்கும், அவனைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கும் ஏன் முக்கிய விசயங்களாகப் படுகின்றன?


 பொது வாழ்வில் இருப்பவர்கள் இறந்து போனால் அவர்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதிலும், பதிவு செய்வதிலும் இத்தகைய அற்பமான, பொருளற்ற, நகைப்புக்கிடமான நினைவுகூறும் முறை வேறு எந்தத் துறையிலும் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். காரணம் சரியோ, தவறோ அவர்கள் பொதுவாழ்வில் இயங்குகிறார்கள். எவ்வளவு அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களது ஆளுமை குறித்த மதிப்பீடு முன்னுதாரணமாகவோ அல்லது முன்னுதாரணமற்றதாகவோ இருப்பினும் அவை அநேகமாகப் பொது வாழ்வு குறித்துத்தான் இருக்கும். பொது வாழ்வு குறித்த நீர்த்துப்போன சிந்தனை அல்லது மக்கள் விரோதச் சிந்தனை அல்லது மக்களுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு புகழ்  அதிகாரம் பெற நினைப்பவர்கள் மட்டும்தான் தமது தனிப்பட்ட நடவடிக்கைகளை உன்னதமானவையாகக் கருதிக் கொண்டு முன்வைக்கவும் முடியும்.


 பாசிஸ்டுகள் தங்களது பிம்பத்தைக்கூட பொதுமக்கள் நலனுக்காக என்று பொய்யாகவேனும் கட்டி எழுப்புகிறார்கள். எந்தக் கட்சியையும் மதிக்காத அகங்காரத்தைக் கொண்டுள்ள ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுவதும், கருப்புப் பணத்தையும் காலேஜையும் காப்பாற்ற கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயகாந்த் ""வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்'' என்று மேடைதோறும் முழங்குவதும் இப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் கதை வேறு.


 அவர்கள் பொதுவில் கதை எழுதுகிறார்களேயொழிய பொதுவாழ்வில் அவர்கள் இல்லை. மாறத்துடிக்கும் மனித வாழ்க்கை குறித்த அக்கறையும், மனித குலத்தின் மீதான நேசமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் ஒரு சில கதைகள் எழுதியதும் புகழ், பரிசு, விருது முதலியனவற்றை எதிர்பார்ப்பதிலும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதால் வருகின்ற பிரச்சினைகள், குழுச்சண்டைகள், பொறாமைகள், சாகித்ய அகாடமி  ஞானபீடம் மீதான மனத்தாங்கல்கள், எழுத்தாளனை மதிக்காத அரசு  சமூகத்தின் மீதான வெறுப்பிலும்தான் பொதுவாழ்வு குறித்த "அக்கறை' அவர்களிடம் வெளிப்படுகிறது.


 கடந்த ஐம்பதாண்டுச் சிறு பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர்கள் எழுதியிருப்பது இந்த அற்பமான சமாச்சாரங்கள் குறித்துத்தான். இப்படிப் பச்சையான சுயநலத்தையும், சமூக விரோதத்தையும் இயல்பிலேயே வரித்துக் கொண்டிருக்கும் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் தங்களது இறந்த காலத்தில் தற்செயலாகச் சிக்கித் தவித்த சில தருணங்களை அசை போட்டு அசை போட்டு சில கதைகளை முக்கி முக்கி எழுதி, உடனே எழுத்தாளர்களும் ஆகிவிடுகிறார்கள். செயற்கையாகக் கட்டியமைக்கப்படும் மிகச் சிறுபான்மையான வாசிப்பின் சந்தைக்கேற்பத் தங்களைப் புதுப்பிக்கவும் ஏற்கெனவே தேங்கிவிட்ட எழுத்துத் திறனைச் செயற்கையாக மாற்றிக் கொள்ளவும் முயலுகிறார்கள். அப்புறம் அந்த எழுத்திற்காக அதே சண்டை, சச்சரவுகள்! மிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டு தங்களைத் தாங்களே அசாதாரணமான பிறவிகளாக சிலாகித்துக் கொள்வதாக இவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதிலிருந்து தங்கள் சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை ரசிப்பது என்ற நார்சிச நோய் வலுவாக இவர்களைத் தொற்றிக் கொள்கிறது. அப்புறம் இவர்கள் மண்டையைப் போட்ட பிறகு, இவர்களது எழுத்து  தவம்  மோனம்  கலை குறித்த அக்கப்போர்களையெல்லாம் ஏற்கெனவே எழுதிவிட்ட நிலையில் இவர்களது அஞ்சலிக் குறிப்பாக எதை எழுத முடியும்? வந்தார், போனார், சட்டை போட்டார், பேண்ட் போட்டார், ஜிப் போடவில்லை என்றுதானே எழுத முடியும்?


 தன்னிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கும் சிற்றிலக்கியவாதிகள் குறித்த சித்திரத்தில் சு.ரா. ஒரு எம்.ஜி.ஆர். என்றால் ஜெயமோகனை ரஜினி என்று அழைக்கலாம். ஆக புரட்சித் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் என்ன அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் ஜெயமோகனும் அதிகபட்சமாகச் செய்திருக்கிறார். ரஜினிக்கும், ஜெயமோகனுக்கும் மூப்பனார் பிடிக்கும், பொள்ளாச்சி மகாலிங்கம் பிடிக்கும், பாபா  விசிறி சாமியார்  சைதன்ய நிதி போன்ற சாமியார்கள் பிடிக்கும், இமயமலைக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை போவது பிடிக்கும் போன்ற ஒப்புமைகளும் உண்மைகளும் தற்செயலாக அமைந்தவை அல்ல. இயல்பின் அவசியம் கருதி அவை அப்படித்தான் இருக்க முடியும். என்ன, அதிகபட்சம் பாபா படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியது வேண்டுமானால் ஜெயமோகனுக்கு ஒரு குமைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலென்ன, தற்போது கஸ்தூரிமான் படத்தில் கிரேசி மோகன் லெவலுக்கு வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனுக்கு விரைவிலேயே சூப்பர் ஸ்டாரிடமிருந்தோ, இளைய தளபதியிடமிருந்தோ அழைப்புகள் வரலாம். காத்திருக்கட்டும். நாம் சு.ரா.விடம் திரும்புவோம்.


 சு.ரா. தன் எழுத்திற்காகத் தன்னையே மிகவும் நேசித்த ஒரு எழுத்தாளர். இந்தத் தற்காதல் ஜெயலலிதாவின் கட்அவுட் மோகத்தைவிட அதிகமானது. ஆனால் சற்று சூக்குமமானது. வண்ண ஓவியத்தை விட எழுத்தோவியத்தைப் புரிந்து கொள்வதற்குச் சற்று நேரம் பிடிக்கும் என்பதே காரணம். சு.ரா. தன் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் அதிகம் கவலைப்பட்டு, வருத்தப்பட்டு, எழுதி, பேசி, விவாதித்த ஒரே சமூக விசயம் "சாகித்திய அகாடமி விருது' தான். தனக்குக் கிடைக்காத அந்த விருது தீபம். நா.பார்த்தசாரதிக்கும், அகிலனுக்கும், கோவி. மணிசேகரனுக்கும், தி.க.சி.க்கும், வைரமுத்துவுக்கும், இன்னபிற அனாமதேயங்களுக்கும் கிடைத்தது குறித்து சு.ரா. சொல்öலாணாத் துயரடைந்தார் என்றால் அது மிகையல்ல. கிடைத்திராத இந்த விருது கூட அவரது சுவாசப்பை நலிவடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாம், தெரியவில்லை. வருடாவருடம் சாகித்ய அகாடமி விருது அறிவித்தவுடன் பீரங்கியில் இருந்து குண்டு பாய்வதைப்போல சு.ரா.விடமிருந்து அதை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை அச்சில் பாயும். இருப்பினும் சு.ரா. தனக்கு விருது கொடுக்குமாறு எப்போதும் கேட்பதில்லை. என்னதான் ஜெயலலிதாவை விட தற்காதல் அதிகம் இருந்தாலும் சபை நாகரீகம் என்ற ஒரு விவஸ்தையற்ற வஸ்து இருக்கிறதல்லவா! அதன் பொருட்டு வேறு வழியின்றி பந்தியில் தன் கூட இருந்து சாப்பிடும் அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ஏன் ஜெயமோகனுக்கும் பாயசம் போடுமாறு எப்போதும் பல்லவி பாடுவார்; மற்றவர்களோ, சு.ரா.வுக்குப் போடுமாறு சரணம் பாடுவார்கள். ஆனாலும் பந்தி பரிமாறும் தேர்வுக் கமிட்டியினர் இவர்களை அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பின்னே, இந்தியா முழுவதும் செப்புமொழி பதினெட்டிலும் பல இலட்சம் எழுத்தாளர்களைச் சலித்துப் புடைத்து உமி நீக்கி சிலருக்கு விருது கொடுப்பது என்பது லேசுப்பட்ட விசயமா என்ன? தமிழ்நாட்டில் ஒரே ஒரு புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்கள் பல ஆயிரம் பேர் தேறுவார்களே, இதில் தேர்வுக்குழு என்ன செய்துவிட முடியும்? விருதின் பின்புலத்தில் பலான வேலைகள் பல இருப்பது உண்மையானாலும் நம்மைப் பொறுத்தவரை விருது வாங்கியவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் இலக்கியத் தரத்தில் பெரிய வேறுபாடு இல்லை. இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் கூட அரசியல் இருப்பதாகக் கூறுகிறார்கள், இருந்த போதும் இந்த அணி சில போட்டிகளில் தோற்றாலும் சில போட்டிகளில் வெல்வதில்லையா என்ன?


 ஆனாலும் சு.ரா. விடுபவரில்லை. தேர்வுக் கமிட்டியில் அரசியல் இருக்கிறது என்றார். என்ன அளவுகோலை வைத்து தேர்வுக் கமிட்டிக்கு நடுவர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள் என்று கேள்வி கேட்டார். விருது கிடைப்பதற்கான விதிமுறைகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார். இறுதியில் தமிழ் எழுத்தாளர்கள் டெல்லி சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கூட அறைகூவல் விடுத்துப்பார்த்தார். இப்படி எதிர்மறையாக விமரிசனம் செய்வதில் மட்டுமல்ல, நேர்மறையிலும் தேர்வுக் கமிட்டியினர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை பலபத்து ஆலோசனைகளாகவும் தெரிவித்திருக்கிறார். சரியாகச் சொல்லப்போனால் இந்த விசயத்தில் ஒரு கலை இலக்கிய மந்திரி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படியும் அதற்கு மேலும் செயல்பட்டார். சாகித்ய அகாதமி, ஞானபீடம் குறித்து இதுவரை அவர் எழுதியுள்ள கட்டுரைகளைக் கத்தரித்து ஒட்டினால், அது ஜெயாவின் கட்அவுட்டை விஞ்சுவது உறுதி. இருப்பினும் இறுதி வரை விருது கிடைக்காதபடியால் ""அரசு கலாச்சார நிறுவனங்களின் தடித்தனத்தை மாற்ற முடியாது'' என்று ஒரு கட்டுரையில் சலித்துக் கொண்டார். இதே தடித்தனம் என்ற வார்த்தைதான் அவரது புகழ் பெற்ற கவிதையான ""என் நினைவுச் சின்னத்''தில் நம் கலாச்சாரத் தூண்களின் / தடித்தனங்களை எண்ணி / மனச்சோவில் ஆழ்ந்து கலங்காதே...'' என்று வருகிறது. இந்தக் கவிதையின் அருஞ்சொற்பொருளே விருது கிடைக்காததனால் வரும் சுய பச்சாத்தாபமும் அதனால் நான் ஒன்றும் குறைந்து விடவில்லை என்று போலிப்பகட்டும்தான். வஞ்சப் புகழ்ச்சி அணி போல இது பச்சாத்தாபத்தின் பாவனையில் ஒளிந்து கொள்ளும் தற்புகழ்ச்சி அணி. ஆனால் காலச்சுவடு அரவிந்தன் இதற்குத் தரும் வியாக்கியானம், ""ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் ஒன்றுமில்லை  எனத் தன் மரணம் பற்றி அறிவிக்கிறது அவரது கவிதை வரி ஒன்று. சுயபடிமம் சார்ந்த உரிமைக்கோரல்களை முற்றாகத் துறந்த ஓர் ஆளுமையால்தான் இப்படிச் சொல்ல முடியும்'' என்று சிலாகிக்கிறார். சுய உரிமைக் கோரல்களை முற்றாகத் துறந்த இன்னொரு ஆளுமை தமிழ்நாட்டில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறது. அதையும் சிலாகிக்க வேண்டியதுதான்.


 சு.ரா.வுக்கு கேரளத்து ஆசான், அமெரிக்க விளக்கு, கனடா இயல் போன்ற குட்டிக் குட்டி விருதுகள் கிடைத்த நேரத்திலும் கூட இவ்விருதுகளைப் பாராட்டும் சாக்கில் சாகித்ய அகாடமி, ஞானபீடத்தைக் கரித்துக் கொட்ட அவர் தவறியதே இல்லை. ஜெயமோகனின் நினைவுகூறல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சு.ரா. தன் வாழ்நாளில் சக தமிழ் எழுத்தாளர்கள் எவரையும் தனக்கு நிகராகவோ, மேலாகவோ கருதியதில்லை என்றாகிறது. அவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், பாராட்டுக்கள் போன்றவற்றைப் படித்தால் அது உண்மை என்றே படுகிறது. தன் எழுத்தின் மேலாண்மையை நிறுவிக் கொள்ளும் முகாந்தரத்திலேயே அவர் மற்றவர்களைப் பார்த்தார், எழுதினார். தன்னுடைய படைப்பில் தான் கண்டுபிடித்திருந்த இலக்கியத் தரிசனங்களை நினைவு கூறும் பொருட்டே மற்றவர்களை மேலோட்டமாகவேனும் பாராட்டினார். தன்னைத்தாண்டி எவரும் செல்லவில்லை என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.


 இதில், தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிச் செயல்பட்டதில்தான் அவருக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாடு அடங்கியிருக்கிறது. சிறு பத்திரிக்கை உலகம் குறுகியதாக இருந்தாலும் தன்னைத் தேடி வந்த வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள், புதியவர்கள் அனைவரோடும் அவர் திட்டமிட்ட உறவைப் பேணினார். அவரது ஐம்பதாண்டு கால இலக்கிய வாழ்க்கையில் வெளிவந்த அநேக சிறுபத்திரிக்கைகளுடனும் இடையறாத தொடர்பைக் கொண்டிருந்தார். அவரே எழுதியிருப்பது போல நண்பர்களுக்கு தினசரி ஐந்து கடிதங்கள் வீதம் ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறார். அவரது மாலைப் பொழுது ஏதேனும் ஒரு இலக்கிய நண்பருடன் அரட்டையடிக்காமல் கழிந்ததில்லை. பெரும்பான்மையான இலக்கியவாதிகள் அவரது வீட்டில் தங்கியிருக்கின்றனர். சுதர்சன் ஜவுளிக் கடையில் இருந்த அவரது சிறிய அறை, ரிலீசாகும் சினிமாக் கம்பெனி ஆபீசு போல விறுவிறுப்பான இலக்கிய ஆபீசாகச் செயல்பட்டது. அவருக்கு போலி கம்யூனிசத் தலைவர்கள் சிலரிடம் இருந்த நெருக்கம், மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கினால் உருவாகியிருந்த அகில இந்திய, உலக ஈழத்தமிழ் இலக்கிய உறவுகள் மூலமாக தன் நாவல்களை சில மொழிகளில் மொழிபெயர்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். அவருக்கு மலையாளம் தெரியும் என்பதால் தனது நூல்களின் மலையாள மொழிபெயர்ப்பை வரிக்குவரி சரிபார்த்து மலையாள மொழிபெயர்ப்பாளர்களைத் திண்டாட வைத்திருக்கிறார். எல்லாம் தன் எழுத்து  மனிதகுலத்துக்கு மிகச்சரியாகப் போய்ச் சேரவேண்டுமே என்ற நல்லெண்ணம்தான்.


 அவரது நாவல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான போது அவரது அடிமனதில் ஒரு பெருங்கனவு மாபெரும் புயல்மூட்டமாய் மூண்டிருக்க வேண்டும். அது என்னவென்று யூகிக்க முடிந்திருக்குமே, அதுதான்... அதேதான்...! நோபல் பரிசு! அவரது ""குழந்தைகள் பெண்கள் ஆண்கள்'' நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று இலக்கியவாதி சிவதாணு (ஆட்டோ ஓட்டுனர்) சு.ரா.வுக்கு கடிதம் எழுதியிருந்தாராம். ""அப்படிக் கிடைத்தால் நாமிருவர் மட்டும் பரிசு வாங்க ஸ்டாக்ஹோம் செல்லலாம்'' என்று சு.ரா.வும் வேடிக்கையாகப் பதில் கடிதம் எழுதியிருந்தாராம். இருப்பினும் அந்தப் பெருங்கனவு தனது வாசகனிடமும் மூண்டிருப்பது குறித்து அவர் ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியில் தூங்காமல் புரண்டிருக்கக் கூடும்.


 இரண்டு மலையாள நாவல்களையும் ஒரு சில உலகக் கவிதைகளையும் மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.ரா. அதை வைத்தே தன்னை ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பாளராக மற்றவர்களைச் சித்தரிக்க வைத்தார். இதுபோக, தமிழக, கேரள இலக்கியக் கூட்டங்களிலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அகில இந்திய அளவிலான கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கவிதை படிக்க பாரீசுக்கும், விருது வாங்க கனடாவுக்கும் சென்றார். இதன்மூலம் தன் பெயர் எப்போதும் இலக்கியச் செய்திகளில் அடிபடுமாறு பார்த்துக் கொண்டார். தனது தூய கலை இலக்கிய சிந்தனையுலகின் ஆதாரவிதிகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பல இளைஞர்களை எழுத வைத்து எழுத்தாளராக்கியிருக்கிறார். இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சு.ரா. குருகுலத்தில் பயின்றவர்கள்தான். அதில் யாரெல்லாம் சு.ராவின் "தன்னெழுத்து  தற்காதல்' என்ற ஆளுமையைப் பெற்றார்களோ அவர்கள் அதனைப் பெற்ற மாத்திரத்தில் சு.ரா.விடமிருந்து உடன் விலகியும் இருக்கிறார்கள்.


 ""அவர் நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்; அவருடன் சண்டை போட்டவர்கள் பின்நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று இந்த பாரதப் போருக்கு கீதைப் பேருரை எழுதுகிறார்கள் ஜெயமோகனும் இன்ன பிறரும். இது ஈகோ சண்டைக்கு கொள்கை முலாம் பூசும் மேட்டிமைத்தனமேயன்றி வேறல்ல. வாழ்வின் புரியாமையை, போதாமையை, நிலையாமையை மற்றும் இன்ன பிற ஆமைகளைத் தர்க்கபூர்வமாக அடைய வேண்டும் என்று சு.ரா. கருதினாராம்; அந்த "ஆமை'களை அடைய தர்க்கம் உதவாது, அதீத மனத்தாவல் மூலம் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்று ஜெயமோகன் வகையறாக்கள் கருதுகிறார்களாம். இதில் கொள்கை வெங்காய வேறுபாடு எங்கே வருகிறது? முடிவு சூனிய "ஆமை' என்றாகும் போது வழிகளில் நடுவழி, குறுக்கு வழி, நேர்வழி, சுற்றுவழி என்றிருப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?


 சு.ரா. தன் எழுத்தையும், எழுத்தாளர் என்ற தனது பிம்பத்தையும் ஸ்தாபிக்க நாசூக்கான இலக்கியச் சாமர்த்தியங்களை, தேர்ந்த விளம்பர நிறுவனங்களை விஞ்சும் வகையிலான வேலைகளை, தனிநபராகவே நின்று செய்து முடித்தார். இவரைப் போன்று ஒரு சில புனைகதைகள் மட்டும் எழுதிய எழுத்தாளர் எவரும் இவர் அடைந்த இடத்தை கற்பனையில் கூட தரிசனம் செய்ய முடியாது. சு.ரா. என்ற நிறுவனம் மாபெரும் பள்ளம் தோண்டி நிரப்பிய அஸ்திவாரத்தின் மீதுதான் தமிழிலக்கியத்திற்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. முத்திரை தரும் காலச்சுவடு நிறுவனம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இன்று எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான மூடு வாய்க்கப் பெறுகிறதா இல்லையா என்பதை விட காலச்சுவடின் பெருங்கருணை வாய்க்கப் பெறுமா என்ற தவிப்பே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதனாலேயே பின்நவீனத்துவவாதிகள், தலித்தியவாதிகள், பெண்ணியவாதிகள், கதைசொல்லிகள், கவிஞர்கள், விமரிசகர்கள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை எழுத்தால் பெயர் பெற்றவர்களும் பெறவிரும்புகிறவர்களுமாகிய அனைவரும் சு.ராவின் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் எழுதுகோலை எடுத்து அஞ்சலிக் குறிப்பைத் தீட்டி பதிவு செய்ய போட்டி போட்டார்கள். அமெரிக்கா ஈராக்கிலும், இந்து மதவெறியர்கள் குஜராத்திலும் மக்களை வெட்டிச் சாய்த்தபோதெல்லாம் இலேசாகக் கூட இதயத்தை வாடவிடாதவர்கள், சு.ரா.வுக்காக தங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து அழுதார்கள். இலக்கியவாதிகளை பொதுச் சோகத்திற்காகவெல்லாம் இப்படி அழவைத்து விட முடியுமா? பொது நீரோட்டத்தில் இருந்து தங்களை வெட்டிப் பிரித்துக் கொண்ட மிக உயர்வான தனித்துவமிக்க அபூர்வப் பிறவிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்கிற இந்தக் காரியவாதிகளின் அற்பத்தனத்தைத் தனது மரணத்தின் மூலம் அம்பலமாக்கிய பெருமையை நாம் சு.ரா.விற்கு வழங்கத்தான் வேண்டும். போகட்டும், மறைந்துபோன ஒரு தமிழ் எழுத்தாளனுக்காக இரங்கற் கல்வெட்டில் இத்தனைப்பேர் செதுக்கியிருப்பது இதுவே முதல்முறை. இலக்கிய வெளியை இப்படி மாற்றிய அப்பாவின் ஆளுமையை மட்டும் முதலீடாக வைத்து காலச்சுவடை ஆல் போல் தழைக்கச்செய்த பெருமை மகன் கண்ணனையே சாரும். அப்பா நிலப்பிரபுத்துவ மகானைப் போல சிற்றிலக்கிய உலகத்தை ஆதிக்கம் செய்து ஆசி வழங்கினாரென்றால், மகன் முதலாளித்துவ நிர்வாகத்திறனால் சிற்றிலக்கியச் சந்தையை சற்றே உப்ப வைத்திருப்பதோடு கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறார். திரையுலகில் எம்.ஜி.ஆரின் சாதனை ஆதிக்கத்திற்கு நிகரானது, சு.ரா.வின் சிறு பத்திரிக்கை ஆதிக்கம்.


 எழுபதுகளின் இறுதியில் புரட்சித்தலைவரின் ஃபார்முலா அதன் தர்க்கபூர்வமான நீட்சியில் புளித்துப்போய் கசந்த நேரத்தில் அவர் புதுப்புது இளம் நாயகிகளுடன் கலர்ஃபுல்லாகக் கட்டிப்புரண்டு காமரசத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார். ஒருவேளை அவர் அரசியலுக்கு மாறியிருக்காவிட்டால் அவரது பொற்காலச் சினிமா வாழ்க்கை காமெடியாய் முடிந்திருக்கும். இருபத்தியோராம் நூற்றாண்டில் கண்ணன் காலச்சுவடை நிலைநிறுத்தியிராவிட்டால் சு.ரா.வின் கதியும் அதோகதியாய் முடிந்திருக்கும். வெகுகாலம் முன்னரே சு.ரா.வின் படைப்புச் சிந்தனை கெட்டிதட்டித் தேங்கிப் போயிருந்தது. சிந்திப்பதற்கோ, எழுதுவதற்கோ, எழுதுவதுபோல் பாவனை செய்வதற்கோ, அவரிடம் ஏதுமில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. மகன் தந்தைக்காற்றும் உதவியாய் கண்ணன் வந்தார், காலச்சுவடைக் கட்டி எழுப்பினார். அப்புறமென்ன, சு.ரா.வின் பழைய படைப்புகள் புற்றீசல் போல வடிவில் புதிது புதிதாகப் படையெடுத்தன. அவரது மூன்று நாவல்களும் முப்பது விதமான அட்டைகளில் செம்பதிப்பாக வெளிவந்து குவிந்தன. அவரது சிறுகதைகளும், கவிதைகளும், தனித்தும், பிரிந்தும், கூட்டணி வைத்துக் கொண்டும் அழகழகாய்ப் பாய்ந்தன. மற்றவர்களைப் பற்றிய அவரது நினைவுக் குறிப்புகள் அகராதியின் துணை கொண்டு நினைவோடை நூல்களாகக் உப்பின. அவரது கட்டுரைகள், நேர்காணல்கள், கேள்விபதில்கள், மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள், விமரிசனங்கள், பயண அனுபவங்கள், கோட்டயத்தில் அவர் பிறந்து வளர்ந்த வீட்டைக் கண்டுபிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம், இலக்கியக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள், நேரம் போகாமல் அவர் மொழிபெயர்த்த கவிதைகள், நானும் அரசியல் சமூகப் பிரச்சினைகளைப் பார்க்காமலில்லை என்பதான அபூர்வமான எழுத்துக்கள், கவிதைகளை அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதிய படைப்பின் அவஸ்தைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகள், அப்புறம் "மனதை எப்படிக் கட்டவிழ்த்து விடுவது' என்பது குறித்து அவர் எழுதிய தமாசான டயரிக் குறிப்புகள்... (காலச்சுவடு அறிவாளிகள் இதையெல்லாம் கவித்துவத் தெறிப்புகள் என்று அடைமொழியிட்டுப் பிரசுரித்திருக்கிறார்கள். அதற்காக இப்படியா?) அத்தனையும் அச்சிலேற்றப்பட்ட அம்புகளாய்ச் சீறிப் பாய்ந்தன. இப்படி சு.ரா. எழுதிய, எழுத நினைத்த அனைத்தும் அவரது மூளை உட்பட எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்து, தேடி எடுத்து வழித்துத் துடைத்து ஒரு துளி மிச்சம் விடாமல் தாள்களில் அச்சிடப்பட்டு விட்டன. அதோடு விட்டார்களா, சிந்திக்கும் திறனை இழந்திருந்த சு.ரா.வை நாகர்கோவில் பகுதிகளில் பத்து நாட்கள் சுற்ற விட்டு மகத்தான ஞானியாக செட்டப் செய்து புதுவை இளவேனில் உருவாக்கிய புகைப்படங்களைக் கொண்டு நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, நாடகங்களாக மாற்றப்பட்ட சிறுகதைகள், அவரது கவிதைகள் வாசிக்கப்பட்ட கவிதா நிகழ்வுகள், இன்னும் புதிய மொழிகளில் பெயர்க்கப்பட்ட அவரது நாவல்கள், இப்படி மிகப் பழைய சு.ரா.வை, சிந்தனையில் திகட்டியிருந்த சு.ரா.வை, படத்துக்குப் படம் கெட்அப்பை மாற்றும் கமல்ஹாசனைப் போல அவர் சாகும் வரை மாற்றி மாற்றி ரிலீஸ் செய்து வந்தார்கள். மொத்தத்தில் சிவப்பு வண்ண கோல்கேட் டூத் பேஸ்ட்டைப் போல சு.ரா.வின் பிம்பமும் இலக்கிய உலகில் வம்படியாய்ப் பதிக்கப்பட்டிருக்கிறது.


 இந்த பிம்பத்தின் வீச்சு காரணமாக சு.ரா.வின் பிற்கால ஆண்டுகளில் பெரிய அல்லது வணிகப் பத்திரிக்கைகளில் எழுதுமாறு அழைப்பு வந்தது. சு.ரா.வும் ஏனைய சகல சிறு பத்திரிக்கையாளர்களும் வணிகப் பத்திரிக்கைகளை இலக்கியக் கற்பூரத்தின் வாசனை தெரியாத தடித்த மூக்கைக் கொண்ட கழுதைகள் என்றே எப்போதும் வசை பாடி வந்தனர். ஆனால், உண்மையில், அனைத்துச் சிறுபத்திரிக்கையாளர்களும் பெரிய பத்திரிக்கைகளில் எழுத வாய்ப்பு வராதா அதன் மூலம் சினிமாவுக்கு எழுத அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை இதயத்திலும், அதற்கேற்ற தந்திரங்கள் மற்றும் காரியவாதக் கண்ணோட்டத்தை மூளையிலும் கொண்டு செயல்படுபவர்கள்தான். பெரிய பத்திரிக்கைகளுக்கோ இவர்களைப் பற்றி பெரிய மதிப்பு எதுவும் அப்போதுமில்லை, இப்போதுமில்லை. தமிழ் மக்களின் வாசிப்பு நேரத்தை தொலைக்காட்சிகள் மொத்தமாக அள்ளிக் கொண்டுவிட, மிச்சமிருக்கும் சிறுபான்மை வாசகர்களின் வெரைட்டியான தாகத்தைத் தீர்க்கவேண்டும் என்ற அளவில் சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தேவைப்பட்டார்கள். சிறியவர்களின் குழுச்சண்டைகள், கிசுகிசுக்கள், போன்றவை சினிமாத் துணுக்குகளுக்கு இணையான நொறுக்குத் தீனியாகப் பயன்பட்டன என்பது ஒரு துணை விசயம். மற்றபடி இவர்களுடைய வரலாறு என்பது புதுமைப்பித்தன் தொடங்கி பாலகுமாரன் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன்  ஜெயமோகன் வரை பெரியவர்களிடம் சிறியவர்கள் சரணாகதியடைந்ததைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது. இதில் சு.ரா.வுக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது அவரே ஒத்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய ஏமாற்றமாகும். இருந்தாலும் காதல்கோட்டை திரைப்படத்தில் அவரது காலச்சுவடு இதழின் அட்டை ஒரே ஒரு சீனில் நடித்திருப்பது சற்றே ஆறுதலளிக்கும் விசயமாகும்.


 இதைத்தவிர சு.ரா. என்ற தனிநபர் நிறுவனமும், அவரது வாரிசால் வெற்றிகரமாக நடத்தப்படும் காலச்சுவடு என்ற வணிக நிறுவனமும், சு.ரா. என்ற பிம்பத்தை விசுவரூபமாய்க் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும், சவால்களும் பகீரதப் பிரயத்தனங்களும் யாரையும் மலைக்க வைப்பவைதான், சந்தேகமில்லை. சிறுபத்திரிக்கை உலகைப் பொறுத்தவரை சு.ரா. ஒரு வரலாறு மட்டுமல்ல, ஒரே ஒரு வரலாறுங்கூட. வாழ்வின் போதாமை குறித்துச் சிந்தித்ததாகப் பாவனை செய்த ஒருவரது இலக்கிய வாழ்க்கை இப்படிச் சகல சௌபாக்கியங்களுடன் பூர்த்தியடைந்திருப்பது ஒரு முரணாகத் தோன்றலாம். ஆனால், உண்மை முரணில் இல்லை, அதன் ஒத்திசைவில்தான் மறைந்திருக்கிறது. வாழ்வின் நிலையாமை மற்றும் போதாமை குறித்துச் சிந்தித்து எழுதுவதையே தன் வாழ்வின் மையமான நோக்கமாகக் கற்பித்துக் கொண்ட ஒருவரது சொந்த வாழ்க்கையும் இலக்கிய வாழ்க்கையும் சகலவிதமான திருப்திகளையும் வழங்க முடியும் என்றால், வாழ்வின் போதாமை குறித்து அவர் என்ன உணர்ந்திருக்க முடியும். அவருக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? எதுவும் தெரியாது என்பதோடு அப்படித் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்தான், வாழ்க்கை குறித்த பெரும் திருப்தியே அவரிடம் நிலவியிருந்திருக்கிறது. இதுதான் சு.ரா.வின் இலக்கிய வாழ்க்கையை உந்தித்தள்ளிய உணர்ச்சி. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த ஒரு எழுத்தாளர். அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


 சு.ரா.வின் கருத்தியல் உலகில் நுழைந்து சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை சட்டெனப் புரிந்துவிடும். சு.ரா.வின் சிந்தனை உலகம் இலக்கியவாதிகளின் மொழியில் சொன்னால் மிகவும் தட்டையானது. அவரது படைப்புகள், எழுத்துக்கள் அனைத்தையும் கசக்கிப் பிழிந்து பார்த்தால் உலகைப் பற்றியும், மனித சமூகத்தைப் பற்றியும், மனித மனத்தைப் பற்றியும் அவர் வெளியிட்டிருக்கும் முழுக் கருத்துக்களையும் மொத்தம் ஒரு பத்து எண்களுக்குள் அடக்கிவிடலாம். ""தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழல் கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது; மந்தைகளைப் போன்ற மக்களுக்கு தனது சிந்தனைத் திறத்தால் திசைகாட்டும் எழுத்தாளனுக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை; ஒரு எழுத்தாளனுக்கு இந்தச் சூழல் மூச்சுத் திணற வைக்கிறது; எல்லா இயக்கங்களும் எல்லா நம்பிக்கைகளும் தோற்று வாழ்வே நிலையாமை என்றாகி விட்டது; இந்த நிலையாமையைப் புரிந்து கொள்வதில் அல்லது புரியமுடியாததன் தவிப்பிலேயே ஒரு எழுத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது....'' என்பன போன்ற சின்னச் சின்ன வேறுபாடுகள் அடங்கிய பொத்தாம் பொதுவான கருத்துக்கள்தாம் அவை. சு.ரா. தன் எழுத்தை நிறுவும் பொருட்டுத்தான் இந்தப் பத்துக் கருத்துக்களைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தாரேயொழிய அவை மனித வாழ்வை நேசிப்பதால் ஏற்படும் சிந்தனையின் அவஸ்தையில் பிரசவிக்கப்பட்டவை அல்ல; மேலும் இந்தப் பத்துக் கருத்துக்களும் மேற்குலகின் இலக்கியங்கள் மற்றும் சில சிந்தனையாளர்களை வாசித்து அரைகுறையாக ஜீரணித்து வெளிவந்தவைதான். இவற்றை சு.ரா.வின் சொந்தச் சரக்கு என்றும் சொல்லிவிட முடியாது. இவை வாழ்வின் கேள்விகளுக்கு விடையளிப்பவையும் அல்ல, புதிய சிக்கல்களை இனம் காட்டுபவையும் அல்ல. இந்த கருத்துக்களை வைத்துத்தான் சு.ரா. தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்பேற்றியிருக்கிறார். இந்த ஒப்பேற்றலைச் சுற்றி வளைத்து மூக்கைத்தொடும் சொல்லாடல்கள் மூலமும், இலக்கிய வகை பேதங்களை வைத்தும், காலச்சுவடின் அச்சு பலத்தை வைத்தும் அவர் நெடுந்தூரம் இழுத்து வந்திருக்கிறார். எனினும், ஒரு வரலாற்றுப் பார்வையின் மதிப்பீட்டில் இவையனைத்தும் புளித்துப் புரையோடிப் போனவையே. சு.ரா. இந்தப் பத்தைத் தாண்டி பதினொன்றாவதாக எதையும் சொல்லவில்லை.


 எந்த ஒரு புனைகதை எழுத்தாளனுக்கும் எழுதுவதற்கான ஊற்று வாழ்வை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதனால் வந்துவிடுவதில்லை. புலனறிவு, யதார்த்தத்தில் ஒரு பத்து சதவீதத்தை மட்டும்தான் காட்டும். மீதியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மனித வாழ்வு குறித்த மாறாத நேசமோ அதனூடாக இடையறாமல் புதுப்பிக்கப்படும் தத்துவ நோக்கோ வேண்டும். அத்தகைய நேசமும், தத்துவக் கண்ணோட்டமும் கொண்டவர்களாலேயே உலகின் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க முடிந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் கிஞ்சித்தும் இல்லாதவர்கள் குண்டுச் சட்டிக்குள் மட்டுமே ஓட்ட முடியும். தொடர்ந்து ஓட்ட நினைத்தால் கால்களோ சட்டியின் பகுதிகளோ உடைந்து விடும். அப்படி ஓட்டி உடைந்து போனவர்கள்தான் ஜெயகாந்தனும், சுந்தரராமசாமியும். சு.ரா. வாழ்வை வெறுமனே விதவிதமாக வேடிக்கை மட்டும் பார்த்தார். அந்த வேடிக்கையையும் தான்  தன் வாழ்வு  தன் சூழல் இவற்றை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தார்; அவற்றையே படைத்தார். அதனால் அவை வெறும் கண்காட்சிப் படைப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சிற்றிலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற சு.ரா.வின் இல்லமான சுந்தர விலாசம்தான் அவருடைய முழு உலகம். அந்த இல்லத்தின் மகிழ்ச்சி, அழுகை, துக்கம், சிரிப்பு, ஏக்கம், இரக்கம், கருணை, பச்சாத்தாபம் முதலியவைதான் அவருடைய தத்துவநோக்கைத் தீர்மானித்தன. அதைக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எடுப்பாக விளக்கும்.


 சு.ரா.வின் அப்பா, வீடு சுத்தபத்தமாக நேர்த்தியாக இருப்பதில் கறாராக இருப்பாராம். அதனால் வீடு உண்மையில் ஒழுங்காக இருந்தாலும் அப்பாவின் பார்வையில் ஒழுங்கற்று இருப்பதாக மற்றவர்களை நம்ப வைத்து விடுவாராம். இதுதான் சு.ரா.வுடைய தந்தையின் பலமாம். இந்த பலம் அவர் வேண்டுமென்றே செய்வதிலிருந்து தோன்றுவதில்லையாம், அது ஒரு கோணல் பார்வையிலிருந்து வருகிறதாம். இந்தக் கோணல் பார்வையோடு அதிகாரம் சேர்ந்து கொண்டால் சர்வாதிகாரிகள் தோன்றி விடுவார்களாம். ஹிட்லர், இந்திராகாந்தி எல்லாம் அப்படி உருவானவர்கள்தானாம். இதை சு.ரா. ஒரு உரையாடலில் கூறியதாகவும், இப்பேற்பட்ட தத்துவ முத்துக்களை அவர் பேசும்போது, அதை உள்வாங்கிக் கொண்டு பின்தொடர்வதற்கு பெரிய பயிற்சி வேண்டும் என்றும் ஜெயமோகன் தன் நினைவின் நதியில் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார். சர்வாதிகாரிகள் குறித்த சு.ரா.வின் இந்த அரிய கண்டுபிடிப்பைப் புரிந்து கொள்ளாத ஒரே காரணத்திற்காகத்தான் பல லட்சம் உலகமக்கள் ஹிட்லரால் கொலை செய்யப்பட்டார்கள் போலும்.


 சு.ரா. தன் தந்தையின் வாழ்வை வைத்தே உலக சர்வாதிகாரிகளை எடை போட்டார் என்றால் முழு உலக மக்களின் வாழ்வை எப்படிப் பார்த்திருப்பார்? அநேகமாக அந்த முழு உலகமும் ஏன் பிரபஞ்சமும் கூட அவரது சட்டைப் பையிலோ அல்லது ஜட்டியின் இடுக்கிலோதான் சிக்கியிருந்திருக்க வேண்டும். சு.ரா. ஒரு குண்டுச்சட்டி எழுத்தாளர் என்பதற்கு இந்த ஒரு சோற்றின் பதம் போதும். சு.ரா. மட்டுமல்ல சிறு பத்திரிக்கை உலகமே பொதுவில் இப்படித்தான் இருந்தது. இருந்து வருகிறது. இலக்கிய உலகின் ஆதார இயங்கியல் விதி இதுதானென்றால் சு.ரா.வின் தலைமைச் சீடரான ஜெயமோகனின் கதி என்ன? இவரும் வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். ஆனால் அதீத மனத்தாவலுடன். ஆகவே சட்டியும் சற்றே பெரியதுதான். ஜெயமோகனது தத்துவ நோக்கின்படி அவர் எழுத வேண்டியவற்றில் முக்கியமானவற்றை எழுதி முடித்து விட்டார். இனி புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையில் ஏற்கெனவே எழுதியவற்றை இலக்கிய வகை பேதங்களின் உதவியால் இன்னும் கொஞ்ச காலம் இழுக்கலாம். சு.ரா.வைப் போன்று தன்னெழுத்தை வியந்தோதும் திருப்பணியை ஒரு நிறுவனம் போல உயிர்மை மற்றும் தமிழினி போன்ற காலச்சுவடின் போட்டி பதிப்பகங்களின் உதவியுடன் செய்யலாம். பாலகுமாரன், சுஜாதா போல பெரியவர்களின் பெருவெளியில் கரைந்து பெருங்காய டப்பாவாக மணம் வீசலாம். சு.ரா.விடம் பிரபஞ்ச இரகசியம் அவர் உடலில் இரண்டு இடங்களில் மட்டும் இருந்தது. அதே இரகசியம் ஜெயமோகனிடம் உடல் முழுவதும் இருக்கிறது. சீடருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு அவ்வளவுதான்.
 சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன தரத்தில் எழுதியிருக்கிறார்களோ அதேதரத்தில்தான் அவரும் மற்றவர்களைப் பற்றிப் பேசியும் எழுதியுமிருக்கிறார். அதில் சு.ரா.வின் அந்த பத்துக் கருத்துக்களை உருவிவிட்டுப் பார்த்தால்... தீபம் நா. பார்த்தசாரதி தினமும் எட்டு வேளை குளிப்பார், குதிகாலில் என்னன்னமோ லோஷன் போட்டுப் பளபளப்பாக வைத்திருப்பார், ஈ.எம்.எஸ். வேட்டியை இறுக்கிக் கட்டினால் அவிழாது, செருப்புக்களை வாழைப்பழத்தோலால் தேய்த்து பளபளப்பாக மாற்றுவார், நாகர்கோவில் ஆனியன் ரவா தோசை க.நா.சு.வுக்குப் பிடிக்கவில்லை... இப்படித்தான் மிஞ்சுகின்றன. ஜீவாவின் மறைவையொட்டி சு.ரா. எழுதிய "காற்றில் கலந்த பேரோசை' என்ற கட்டுரை இதை எடுப்பாகப் புரிய வைக்கும். நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் சுப்பையா பிள்ளை என்ற அப்பாவி ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். அங்கே ஒரு நொண்டிக்குதிரை நிற்கிறது. சிறுவனாக இருந்த சு.ரா. "இந்தக் குதிரை ஏன் நொண்டுகிறது' என்று ஜீவாவிடம் கேட்கிறார். உடனே ஜீவா சுப்பையாவை அழைத்து பதில் சொல்லுமாறு கட்டளையிடுகிறார். அந்த அப்பாவியோ ""போங்க அண்ணாச்சி சும்மா ஆளுகளப் போட்டு பயித்தியக்காரனாக்குதீகளே'' என்று மிக்க பணிவுடன் மறுக்கிறார். உடனே ஜீவா ஆவேசம் வந்தவராய் அந்த அப்பாவியைப் பார்த்து, ""உலக வரலாறு, அறிவியல் தெரியுமா, சூரியன் கிழக்கே உதிப்பது ஏனென்று தெரியுமா, ஸ்விட்சைப் போட்டால் லைட் எரிவது ஏன் தெரியுமா, கடைசியில் இப்படி ஒண்ணுமே தெரியாத மண்ணாந்தைகளாகப் போய்விட்டோமே'' என்று சுப்பையாவை உண்டு இல்லையெனப் பிச்சு உதறுகிறார். ஒரு அப்பாவியின் மீதான ஜீவாவின் இந்த மேட்டிமைத்தனமான உளறலை ஏதோ மாபெரும் அறிவொளியுக நடவடிக்கை போலப் பதிவு செய்த சு.ரா. அடுத்த வரியில் ""ஜீவா நீங்கள்தான் எத்தனை அற்புதமான மனிதர்'' என்று உருகுகிறார். நமக்கோ குமட்டுகிறது. இதையே அற்புதமான அஞ்சலி இலக்கியக் கட்டுரை என்று தாமரை பத்திரிக்கையில் போலி கம்யூனிஸ்டுகள் உருகுகிறார்கள். கலையிலும் சரி, கம்யூனிசத்திலும் சரி போலிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை! உண்மையில் ஜீவாவின் மறைவையொட்டி அப்போதைய தினத்தந்தியில் இதைவிட மேலான கட்டுரை நிச்சயம் வெளிவந்திருக்கும். காரணம், தினத்தந்தியின் உதவி ஆசிரியர்கள் சு.ரா.வை விட அறிவும் அனுபவமும் உள்ளவர்கள்.


 சு.ரா.வின் படைப்பில் அவரது மூன்று நாவல்கள் உன்னதமாகக் கருதப்படுகின்றன. அவரது பிம்பத்திற்கு இந்த மூன்றும் முக்கியமானவை என்பதால் அவை பற்றி இங்கே ஏதோ நம்மால் முடிந்த மட்டும் பார்க்கலாம்.


 சு.ரா.வின் முதல் நாவலான ""ஒரு புளிய மரத்தின் கதை'' வெகு சாதாரண தரத்தில் அமைந்திருந்தாலும், அவரது பின்னாளைய இமேஜ் காரணமாக மறுவாசிப்பு செய்யப்பட்டு வியந்தோதப்படுகிறது. சமூக மாற்றத்தைச் சித்தரிக்கும் இலக்கியமாகப் போற்றப்படும் இந்த நாவலின் நாயகனான அந்த மரமும், கதைக்களமான வேப்பமூடு ஜங்சனும் கூட, சு.ரா.வின் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் தான் உள்ளன என்ற உண்மையை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். நாவலின் முதல் பாதியில் கதை குறைவாகவும், சு.ரா. ஏதோ அபூர்வமாகச் சொல்லப்போவதான பீடிகையும், மற்றும் அவரது நீதி உபதேசங்களும் சலிப்பூட்டும் விதத்தில் வருகின்றன. நாவலின் மறுபாதியில் இரண்டு வியாபாரிகள்  அதில் ஒருவர் இந்து, மற்றொருவர் முசுலீம்  வளர்ந்த கதையும், வளர்ந்த பின் இருவரும் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும், ஒரு மலிவான துப்பறியும் மர்ம நாவல் பாணியில் சொல்லப்படுகிறது. இந்த நாவலின் விறுவிறுப்பே அடுத்து என்ன நடக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று தொடருகின்ற மேலோட்டமான ஆவலில்தான் அடங்கியிருக்கிறது. இங்கும் அந்தப் பத்து புகழ் பெற்ற கருத்துக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேடம் போடுகிறார்கள், முனிசுபாலிட்டியில் ஊழல், பத்திரிக்கையாளர்களிடம் பிழைப்புவாதம், அரசியல்வாதிகள் வெற்று முழக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள், வியாபாரிகளிடம் தருமம் இல்லை என்று நாவல் முழுக்க நம்மைத் துன்புறுத்துகிறார் சு.ரா. இலக்கியவாதிகள் கூறுவது போல இந்தக் கதை ஒரு சமூகமாற்றத்தின் குறியீடு, அடையாளம், பதிவு என்பதெல்லாம் தாங்க முடியாத கருத்துச் சித்திரவதைகளே. குமரி மாவட்ட சமூக வாழ்க்கையும் அதன் மாற்றமும், ஒரு காய்ந்த இலைச் சருகாய் பறப்பது போன்ற பாவனை கூட இந்த நாவலில் இல்லை. குறைந்தபட்சம் நாகர்கோவிலின் சுக்குக்காபி, மட்டிப்பழம், ரசவடை, தாராமுட்டை ஆம்லெட் கூடப் பதிவாகவில்லை.


 இந்தக் கதை எழுதும்போது ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாய் இருந்த சு.ரா.வின் சுதர்சன் ஜவுளிக்கடை இன்று ஆண்களுக்கான ஆடையகமாய் மாறியிருக்கிறது. சு.ரா.வுக்குத் தெரிந்திருக்கக்கூடிய குமரி மாவட்டத்தின் ஒரே சமூகமாற்றம் இதுவாகத்தான் இருந்திருக்க முடியும். அதையும் அவர் ஒரு வியாபாரி என்ற அளவில்தான் புரிந்திருக்கக் கூடுமென்பதால் அந்த மாற்றம் ஒரு கதையாகக் கருத்தரிக்கவில்லை போலும். சுந்தரவிலாசம் சு.ரா.வின் அக உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது என்றால் சுதர்சன் ஜவுளிக்கடை அவரது புற உலகப் பார்வையைப் பொருத்தமான விதத்தில் இணைத்தது. போத்தீஸ், ஆர்.எம்.கேவி முதலான ஜவுளிக்கடை வியாபாரிகளின் வணிக அனுபவத்தில் தோய்ந்த உலகக் கண்ணோட்டம்தான் மற்றொரு வணிகரான சு.ரா.விடமும் உருவாயிருந்தது. இத்தகைய பெரிய வியாபாரிகள் எல்லா வகை அதிகார நிறுவனங்களுடனும் பணிந்து இசைந்து, குழைந்து, சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். தன் கீழே வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிந்து இரக்கமின்றி நடத்துவார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்ற செலவினங்களில் கஞ்சத்தனமாக இருக்கும் அதேவேளையில் விளம்பரம் கோவில் கொடை போன்றவற்றுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். நுகர்வோரான மக்களை மந்தைகளைப் போலப் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பசி, ருசி, பணப்புழக்கம், சாதிவர்க்கப் பின்னணி, இப்படி அனைத்தையும் வியாபார நிமித்தம் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். கல்லா கட்டக் கட்ட உலகமே தன் கல்லாப் பெட்டிக்குள் அடங்கி விடுவதாகக் கற்பித்துக் கொள்வார்கள்.


 சுந்தரவிலாசத்திலிருந்து சென்டிமெண்ட் எனப்படும் அகமும், சுதர்சன் கடையிலிருந்து மேட்டிமைத்தனம் கலந்த சமூகப்பார்வை என்ற புறமும் கைவரப் பெற்று இலக்கியம் படைக்க வந்த சு.ரா. ஒரு புளியமரத்தின் கதையில் திருவிதாங்கூர் மன்னர் வந்து போகும் வருணனைகளையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். எனவே அவர் குமரிமாவட்டத்தின் உக்கிரமான சமூக நிகழ்வுகளையெல்லாம் நிச்சயம் செவி வழியிலோ பாட்டி வழியிலோ கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவையும் அவர் காலத்தில் நடந்த முக்கியமான சமூக நிகழ்வுகள் எவையும் அவர் படைப்பில் இடம் பெற்றதில்லை. அவரது வீடு இருக்கும் இராமவர்மபுரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் கோட்டாறு சவேரியார் சர்ச் உள்ளது. போர்ச்சுக்கீசியப் பாதிரியõரான சவேரியார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல லட்சம் மக்களை மதம் மாற்றியவர். இவ்வளவு பெரிய மதமாற்றம் ஏன் நடந்தது? பார்பனக் கொடுங்கோன்மை கொடிகட்டிப் பறந்த சமஸ்தானம் அது. பார்ப்பனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே அய்யா வைகுண்டநாதர் அய்யா வழி என்ற தனி வழிபாட்டுப் பிரிவையே உருவாக்கினார். அவரும் குமரிமாவட்டம்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கெதிராக நாடார் இனப் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டமும் அப்பகுதியில்தான் நடந்தது. 198182இல் சு.ரா. தனது இரண்டாவது நாவலை வெளியிட்ட போதுதான் மண்டைக்காடு கலவரம் மூலம் இந்துமதவெறியர்கள் குமரிமாவட்டத்தில் வேர்விட ஆரம்பித்தார்கள். அதன்மூலம் தமிழகத்திற்கு இந்துமதவெறியை அறிமுகப்படுத்தினார்கள். சாதியால் ஒன்றுபட்டிருந்த நாடார்கள்கூட மதத்தால் பிரிக்கப்பட்டார்கள். வணிகவர்க்கமாக மாறியிருந்த நாடார்களில் சிலர் சங்கபரிவாரங்களின் தளபதிகளாகத் தலையெடுத்தனர். அப்புறம் தாராளமயத்தால் நலிவடைந்த வடசேரி, கிருஷ்ணன் கோவிலின் கைத்தறி, பாமாயில் இறக்குமதியால் பாதிப்படைந்த குமரிமாவட்ட தென்னை விவசாயிகள், ரப்பர் இறக்குமதியால் வாழ்விழந்த பால் வெட்டும் தொழிலாளிகள், கடைசியாக சுனாமி... இவ்வளவு உக்கிரமான சமூக இயக்கங்கள் எவையுமே சு.ரா.வின் படைப்பிலோ, கட்டுரையிலோ இலை மறைவு காய் மறைவாகக் கூட இறங்கவில்லையே, ஏன்? இந்தப் பிரச்சினைகள் சு.ரா. என்ற இலக்கிய பீடத்தின் முன் மண்டியிட்டுத் தங்களைத் தாங்களே போதுமான அளவு விளக்கிக் கொள்ளவில்லை என்பதாலா?


 கேட்டால் "படைப்புச் சுதந்திரம், எந்த ஒரு படைப்பாளியையும் இன்னதுதான் எழுத வேண்டும் என்று கட்டளையிட முடியாது' என்பார்கள். அப்படியே இருக்கட்டும். ஆனால் சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி வாழ்ந்து கொண்டே, வாழ்வை ரசனையுடன் அனுபவித்துக் கொண்டே, தன்னைச் சுற்றிய வாழ்வின் இயக்கத்தையும், வலியையும், போராட்டத்தையும், கண் கொண்டு பார்க்காமல், வேதனையுடன் உணராமல், இதயத்தைத் தடிப்பாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை என்னவென்று அழைப்பது? இதை உணராத ஒரு படைப்பு மனம் எப்படித் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு உக்கிரமாக வெளிவர முடியும்? இதே சு.ரா. அமெரிக்காவிலிருந்து கவிஞர் பௌத்த அய்யனாருக்கு எழுதிய கடிதமொன்றில், ""ஹிந்து சர்வதேசப் பதிப்பு இங்கே வருகிறது. அதன் மூலம் இந்தியச் செய்திகளின் சாராம்சம் கிடைக்கிறது. சிலுக்கு காலமான செய்தி மனதைப் பாதித்தது. 15 வருடங்களில் 600 படங்கள். எவ்வளவு கடுமையான உழைப்பு'' என்று துக்கம் விசாரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியச் செய்திகளின் சாராம்சம் சு.ரா.வினுள் இந்த அளவுதான் இறங்கியிருந்தது. திருவிதாங்கோடு முசுலீம் மக்கள், பழமைவாதத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக அனுபவித்த வலி நிறைந்த வாழ்வை உணர்த்தும் தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையை வேண்டுமானால், ஒரு சமூக மாற்றத்தைப் புரியவைத்த நாவல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு புளிய மரத்தின் கதையை அப்படி எவரும் கூற முடியாது.


 "ஜே.ஜே. சில குறிப்புகள்' எனும் சு.ரா.வின் இரண்டாவது நாவல் அவரது எழுத்து வாழ்வில் மிகவும் ஹிட்டான ஒரு படைப்பு. சு.ரா. எனும் இலக்கிய விக்கிரகத்தை சிற்றிலக்கியக் கோவிலில் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் குடமுழுக்கு நடத்துமளவுக்கு மிகவும் பேசப்பட்ட படைப்பு இந்த நாவல். கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுப்பதே ஒரு இலக்கியவாதியின் முதலும் முக்கியமுமான தகுதி என்பதைச் சிறுபத்திரிக்கையுலகில் அழுத்தமாக நிலைநாட்டிய நாவலும் கூட. தான் ஒரு மாபெரும் உலக எழுத்தாளர் என்பதையும், மானுடப் பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொறுப்பினை காலம் தன்மீதுதான் சுமத்தியிருக்கிறது என்ற மாயையும் சு.ரா.வுக்கே கூட இந்த நாவல் கற்பித்திருக்கக்கூடும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கெதிரான உலக மக்கள் மனநிலையில் இந்த நாவலை வாசிக்கும் போது மிகச் சாதாரணத் தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், இந்த நாவல் வெளிவந்த நேரத்தில் சிற்றிலக்கியவாதிகளின் இதயத்தைக் கவ்விக் கவர்ந்திழுத்தது என்கிறார்கள்.


 இந்த நாவலை ஒரு வாக்கியத்தில் சுருக்குவதென்றால் — போலி கம்யூனிஸ்டுகளை, அதிலும் குறிப்பாக போலி கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியவாதிகளை வெறுக்கும் ஒரு போலியான இலக்கியவாதியின் போலியான ஆன்மீகப் பிரச்சினைகளை, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட வார்த்தைகளின் உதவி கொண்டு பேசக்கூடிய ஒரு போலியான நாவல் என்று சொல்லலாம். ஒரு நாவலுக்குள் இத்தனைப் போலிகள் இருப்பதால் அதை இலேசாக எடுத்துக் கொண்டுவிடலாம் என்பதல்ல. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும்போது போலிகள் அசலைப்போலத் தோற்றம் கொண்டு விடுகின்றன. உண்மைகள் சமாதியாக்கப்பட்ட மயானத்தில் பொய்கள் மட்டும் ஆனந்தக்கூத்தாடுவதால், நிழல் நிஜமாகிவிடுகிறது. நாவலின் நாயகன் ஜே.ஜே., சு.ரா.வின் இலட்சிய நாயகன். சு.ரா. என்ற உன்னதத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே சலித்துப் புடைத்துப் பிழிந்து உருவாக்கப்பட்ட கதாநாயகன். அவன், உலகின் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தன் மூலமே அறியப்படவேண்டும் என்பதால், தன்னைத்தானே அறிவாளியாகவும், உலகின் அசிங்கங்கள் அருவெறுப்புக்கள் தன் கண்ணில் தென்படக்கூடாது என்பதால், தன்னை ஒரு தூய்மையான அழகியல்வாதியாகவும், சிறுநீர் கழிக்கும் நேரத்தில்கூட அவன் வாய் இலக்கியத்தின் உன்னதத்தைப் பேசும் என்பதால் தன்னை ஒரு இலக்கியவாதியாகவும், அச்சிலேற்றப்படும் தாள்கள் அவனது எழுத்தைத் தரிசனம் செய்வதற்காகவே காலந்தோறும் காத்திருந்து ஏங்கித் தவித்துத் தவம் செய்து வருகின்றன என்பதால், தன்னை ஒரு எழுத்தாளனாகவும், எழுதவரும் இளைஞர்கள் அவனது உரையாடலை மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், தான்மட்டுமே ஒரு ஆசிரியனாகவும் மனிதவாழ்வு குறித்த பெரும் புதிரை அவன் மட்டுமே தீர்க்கவேண்டும் என்று தத்துவ உலகம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருப்பதால், தன்னை ஒரு தத்துவவாதியாகவும், பன்றிகளின் மந்தைகளாய் வாழும் மக்கள் மத்தியில் அவன் உடல் மட்டும் எப்போதும் அணையாத விளக்காய் ஒளி வீசிக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு மாமனிதனாகவும் கருதிக் கொள்கிறான், வெளிப்படுத்துகிறான், அறைகூவுகிறான். இதை சு.ரா.வின் உதவியுடன் நவரசங்களிலும் பதிவு செய்கிறான்.


 இதுவரை யாரும் கண்டு கேட்டிராத ஒரு மகத்தான மனிதனைப் படைத்ததாக சு.ரா.வும் அவரது அபிமானிகளும் புல்லரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வரலாறு அவர்களைப் பார்த்துச் சிரித்தவாறு, ""இவன்தானா இவனை நான் நீண்டகாலமாக பார்த்து வருகிறேனே'' என்று ஒரு வரியில் முடித்துக் கொள்கிறது. ஆம். இந்தப் பண்புகளைக் கொண்டவர்கள் கேரள வரலாற்றில் நம்பூதிரிகள் என்றும் இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தின் தலைமைச் சித்தாந்தவாதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே ஜே.ஜே. சில குறிப்புகளை கம்யூனிச வெறுப்பு நாவல் என்பதைவிட காலந்தோறும் அவதரிக்கும் பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தனம் கொண்ட நாவல் என்று சொல்லலாம்.


 சு.ரா.வின் மொழியில் சொன்னால், ஜே.ஜே என்பவன் யார்? அவன், ""உலகமே குரங்குகளின் வாத்திய இசை போல் இருக்கிறது. அவை எழுப்பும் கர்ண கடூரமான அபசுரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்திக் கொண்டிருந்தான்.'' பார்ப்பனியத்தின் மேலாண்மையை நெஞ்சிலேந்தி முனகிக் கொண்டிருந்தவர்கள், உபநிடதக் காலம் தொட்டு "உன்னால் முடியும் தம்பி' ஜெமினி கணேசன் வரையிலும் இப்படித்தான் கத்திக் கொண்டிருந்தார்கள். குரங்குகளின் கர்ண கடூர அபஸ்வரத்தில் உழைக்கும் மக்கள் வாழ்வின் அவலக்குரலும், அந்த அவலத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கும்போது போராட்டத்திற்கான உயிர்ப்புக் குரலும், பல சமயங்களில் அந்த உயிர்ப்பு நசுக்கப்படும் போது கேட்கக் கிடைக்கும் மயானக்குரலும், இத்தகைய குரல்கள் கேட்காத தூரத்தில் அரியாசனங்களில் வசதியாக அமர்ந்து கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்பவர்களின் அதிகாரக்குரலும், அதிகார நேரம் போக அவர்கள் சுருதி சுத்தமாகப் பாடும் கேளிக்கைக் குரலும் கலந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இவை குரல்களின் பிரச்சினையல்ல, வாழ்வை உள்ளது உள்ளபடி உணரமறுத்து, கீழே வாழ்ந்து கொண்டு மேலே பளிச்சிடும் வாழ்வை இதயத்தில் பொதிந்து கனவு காணும் நடுத்தர வர்க்கக் காதுகளின் பிரச்சினை. ஜோசப் ஜேம்ஸ் எனப்படும் ஜே.ஜே. தனது நாவலில் வெற்று இலக்கிய நயத்துடன் கூறும் இந்தப் படிமத்தின் அன்றாட மொழிபெயர்ப்பினை ஹிந்து பேப்பரில் வரும் வாசகர் கடிதங்களில் — தொழிலாளர்களின் ஊர்வலம் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது, கூவம் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மழை நிவாரணத்திற்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று — விதவிதமாகப் பார்க்கலாம். அவ்வகையில் இந்த நாவல் ஹிந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் இதயங்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.


 நாவலின் கதைதான் என்ன? சு.ரா. தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். தமிழ் இலக்கியச் சூழலை வெறுக்கும் பாலு என்ற தமிழ் எழுத்தாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது மற்றொரு பாதியான ஜே.ஜே. எனும் இலட்சிய கேரள எழுத்தாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளாவிற்குப் பயணம் செய்து அவனுடன் பழகியவர்களைச் சந்தித்து ஜே.ஜே.வைப் பற்றிய குறிப்புக்களைச் சேகரிக்கிறார். பாலு சந்தித்தவர்களில் சூப்பர்மென் குவாலிட்டி கொண்டவர்களும் சு.ரா.வின் மறு பிறவிகள்தான். அவ்வகையில் சிவாஜி கணேசனின் நவராத்திரியைப் போன்று சு.ரா. பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நாவலென்றும் சொல்லலாம்.


 நாவலில் சு.ரா.வின் புகழ் பெற்ற கருத்துக்கள் சுற்றிச் சுற்றி வரும் சொற்றொடர்களின் மூலமும், உப்ப வைக்கப்பட்ட படிமங்களின் வழியாகவும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை வழக்கம் போல வருகின்றன. தனது உலகை வடிவாக உருவாக்க விரும்பும் ஜே.ஜே.வின் அழகுணர்ச்சிக்கு அளவே இல்லை. அவன்வசிக்கும் நகரில் இருக்கும் மைதானம் ஒன்றை தான் அரசனானால் எப்படி மாபெரும் பூங்காவாக, வெட்டுவதற்கு மனம் வராத மரங்களையும், குழந்தைகள் சுற்றுச்சூழலை அறியும் வண்ணமும் அமைக்கப் போவதாக வரைபட விளக்கத்துடன் தன் டயரியில் குறித்து வைத்திருக்கிறான். (இந்த வேலைகளைச் செய்ய கவுன்சிலர் ஆனால் போதும் என்ற விசயம் அந்த மாபெரும் அறிவாளிக்குத் தெரியவில்லை.) அவன் நகரில் ஏழைகளும், குடிசைகளும் நிச்சயம் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு ஏதோ மழை ஒழுகாத கூரையாவது மாற்றித் தரலாம் என்பதற்கெல்லாம் அவன் அழகுணர்ச்சியில் இடம் இல்லை போலும். ஒருவேளை இவன் இந்தியாவின் அரசனாகியிருந்தால் நகர்ப்புறச்சேரிகள் அனைத்தும் அழகின்மை காரணமாக ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டிருக்கக் கூடும்.


 அவன் காதலி ஓமனக்குட்டி எழுதிய வாரமலர் தரத்திலான கவிதைகளை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இலக்கியத்தில் அவனால் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் அந்தக் கவிதை நோட்டுக்களை அவள் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிகிறான். அத்துடன் காதலியை விட்டுப் பிரியவும் செய்கிறான். இது ஜே.ஜேயின் திமிரான இலக்கிய மேட்டிமைத்தனம்.


 கதையும், கவிதையும் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் சாதாரணமாகத்தான் எழுத முடியும். ஏன் சு.ரா.வும், ஜே.ஜேயும் அப்படித்தானே ஆரம்பித்திருக்க முடியும். ஒருவேளை அவன் ஆசிரியராகியிருந்தால் தப்பும் தவறுமாக எழுதும் முதல் தலைமுறை ஏழைக் குழந்தைகளின் கைகளை ஒடித்திருப்பானோ? சிற்றிலக்கியவாதிகள் பொழுதுபோக்காய் இலக்கியம் பக்கம் திரும்பியது ஒருவகையில் நல்லதுதான். இவர்கள் சற்றே அரசியல் பக்கம் வந்திருந்தால் மக்களின் கதி என்ன? நம்மைப் பொறுத்தவரை ஓமனக்குட்டியின் கவிதைகள் சு.ரா.வின் கவிதைகளை விடப் பரவாயில்லை என்றே கருதுகிறோம். அவரது நினைவுச்சின்ன கவிதையின் சின்னத்தனத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அவரது மற்ற கவிதைகள் என்ன சொல்கின்றன? சு.ரா. தனது அசட்டுத்தனத்தையே ஆழமான சமாதிநிலையாக உணர்வது, அவர் சிந்திக்கும் போது லாரியின் இரைச்சல் வந்து கெடுத்த பிரச்சினைகள், அப்புறம் ஜன்னல் எப்போதும் வானத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றதாகவும், மின் விசிறிக்கு அந்தப் பேறு இல்லை என்பதான துயரமான தருணங்கள்... இந்த பினாத்தல்களை செம்பதிப்பாக வெளியிட்டதற்காக காலச்சுவடு ஆபீசை குண்டு வைத்தா தகர்க்க முடியும்? இதுதான் அவருடைய கவிதை உலகம். இது அவருடைய உலகம் மட்டுமல்ல, இன்றைய சிறு பத்திரிக்கைகளின் அனைத்துக் கவிஞர்களின் உலகமும் கூட. நீர்த்துப்போன தங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கி நோக்கி புதிதாக எதையும் காண இயலாத நிலையில், "வாட் இஸ் நியூ?' (புதிதாய் என்ன) என்ற கேள்விக்கு விடையாக சொற்களிலும், மோஸ்தர்களிலும் சரணடைபவைதான் அவர்களது கவிதைகள்.


 நாவலின் ஓர் இடத்தில் மாட்டின் முதுகில் ஒருவன் வெற்றிலை எச்சிலைக் குறி பார்த்துத் துப்புவதை ஜே.ஜே. பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது. இதை ஸ்கேன் செய்த ஜே.ஜேயின் அழகுணர்ச்சி உடனே மனிதனின் கீழ்மை அல்லது விலங்குணர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஆரம்பிக்கிறது. அவன் காலத்தில் பெண் குழந்தைகள் கற்பழிக்கப்படுவது குறித்தோ, தலித்துக்கள் எரிக்கப்படுவது குறித்தோ, வரதட்சணைக்காகப் பெண்கள் எரிக்கப்படுவது குறித்தோ அவன் கேள்விப்பட்டதே இல்லை போலும்! அவனுடைய அழகுணர்ச்சிதான் கொடூரமான எதையும் பார்க்காதே. மனிதனின் விலங்குணர்ச்சியை ஆய்வு செய்யுமாறு அவனை எது தூண்டுகிறது பாருங்கள்!


 இந்த எச்சில் பிரச்சினையை வைத்து மனிதன் விலங்காக வாழ்வதற்கே பணிக்கப்பட்டவன், மரபும் பண்பாடும் அவனைத் தடை செய்கின்றன என்று அவன் ஆய்வு பயங்கரமாக எங்கோ போகிறது. இறுதியில் மனிதன் விலங்குணர்ச்சிக்கும், மனித உணர்ச்சிக்கும் இடையில் தத்தளிப்பதாக ஒரு புதிய விசயத்தை ஜே.ஜே. கண்டுபிக்கிறானாம். உண்மையில் இந்த எச்சில் பிரச்சினையில் தத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு வெங்காயமும் இல்லை. மனிதனின் விலங்குணர்ச்சி எனப்படுவது, ஏற்றத்தாழ்வாய்ப் பிரிந்திருக்கும் இந்தச் சமூகத்தின் வர்க்க முரண்பாட்டின் வழியாக வெளிப்படுகிறதேயன்றி மாட்டின் முதுகில் எச்சில் துப்பும் அற்ப விசயத்தில் அல்ல. இதே எச்சிலை பன்றியின் மீது துப்புவதாக சு.ரா. எழுதவில்லை. எச்சில் துப்பும் எல்லாவகைகளையும் அவர் பார்த்திருந்தாலும், மாடு புனிதம் என்ற கருத்து, மரபில் இருப்பதால் வாசகருக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்து தன் தத்துவப் பாடத்தை விளக்க அவர் நினைத்திருக்கலாம். இந்த நாவலின் போலியான ஆன்மீக அவஸ்தைக்கு வேறு சான்று தேவையில்லை.


 மற்றொரு இடத்தில் ஒரு தொழுநோயாளியைப் பார்த்த ஜே.ஜே., அவனுக்கு காசு போடலாமா வேண்டாமா என்று ஒரு ஓட்டலில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் யோசிக்கிறான். இதுவரையிலான மனிதகுல வரலாற்றின் வள்ளல் குணம், தானம், அறம், மனிதாபிமானம் மற்றும் இன்னபிற "ம்...'களைக் குறித்து ஆய்வு செய்கிறான். இறுதியில் ஒரு ஐம்பது காசைப் போடலாம் என்று முடிவெடுத்து வெளியே வருகிறான். தொழுநோயாளியைக் காணவில்லை. சில மணிநேரம் அலைந்து திரிந்து அவனைக் கண்டுபிடித்துக் காசைக் கீழே வீசுகிறான். காசைப் போடும் போதுதான் கை மழுங்கிய தொழுநோயாளி அதை எப்படி எடுக்க முடியும் என்பது அவனுக்கு உறைக்கிறது. உடனே அவனது மனிதாபிமான அழகுணர்ச்சி ஒரு புதிய விசயத்தைக் கண்டுபிடிக்கிறது. அதன்படி மனிதன் இதுவரை உருவாக்கிய தானம் தர்மம் தத்துவம் அனைத்தும் தன்னை மட்டும் மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டதே ஒழிய, எதிரிலிருக்கும் மனிதனது பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு அறியப்பட்டவையல்லவாம். அப்படிக் கணக்கில் கொண்டிருந்தால் ஜே.ஜே. அந்தக் காசை தொழுநோயாளியின் கையில் கொடுத்திருப்பானாம்.


 இப்படி தன் மனிதாபிமானத்தைத் தள்ளாட வைத்த மனித குலத்தின் மீது கோபம் கொண்டு ஜே,ஜே. தனக்குள்ளேயே துன்புறுகிறான். வரலாற்றையும், தத்துவத்தையும் அடிமுதல் நுனி வரை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்து விட்டு நம்மையும் அதற்கு விளக்கம் எழுதுமாறு துன்புறுத்துகிறார் சு.ரா. விசயம் மிகவும் எளிமையானது. சு.ரா. எங்கேயோ ஒரு தொழுநோயாளிக்கு காசை விட்டெறிந்திருக்கிறார். காசைக் கையில் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் மழுங்கிய கைகளைத் தொட்டால் வரும் அருவெறுப்புதான். அதற்கு ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பார் போலும். அதனால் தான் பெற்ற குற்றவுணர்வைப் பெறுக இவ்வயைகம் என்று முழு உலகத்தையும் தன் நாவலில் தண்டித்துவிட்டார். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கும் போது இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது சு.ரா. நமக்கு அளித்திருக்கும் தண்டனை போலும்!


 நாவலில் ஜே.ஜேவை சினிமாக் கதாநாயகன் போலச் சித்தரிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நம்பியார் போன்ற வில்லன் பாத்திரம் முல்லைக்கல் மாதவன் நாயர். இந்த முல்லைக்கல்லை ஜெயகாந்தன் என்றும் சொல்லுகிறார்கள். இருக்கலாம். நாவலில் சித்தரிப்பு அப்படித்தான் வருகிறது. முல்லைக்கல் நம்மூர் த.மு.எ.ச. போன்ற கேரளத்தில் இருக்கும் போலி கம்யூனிச கலை இலக்கிய அமைப்பில் இருப்பவன். இந்த வில்லன் பசி, பட்டினி, வேலையின்மை, வறுமை இன்னபிற சமூகப் பிரச்சினைகளை அந்த மக்கள் வாழ்க்கை மற்றும் மொழியில் எழுதிப் பெயரெடுத்து, புகழ், பணம் சம்பாதித்து செட்டிலாகிறான். இதற்குத் தோதாக கம்யூனிசக் கட்சியும் முதலாளிகளைப் போல வாழ்ந்து கொண்டே தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடுவதாக நடிக்கும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிடுகிறது. ஆனால் ஜே.ஜே.யின் விமர்சனம் கட்சியின் அரசியல், திட்டம், நடைமுறையின் மீதெல்லாம் இல்லை. கட்சியின் கலைஞர்கள் மீதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபமும் உலகில் சோசலிசமும், சமதர்மமும் வரவேண்டும் என்ற குறைந்தபட்ச அற உணர்விலிருந்து வரவில்லை. "தன்னைப்போன்ற அறிவாளிகளுக்கு இந்த உலகில் மதிப்பு இல்லையே' என்ற பச்சையான சுயநலத்திலிருந்தே ஆவேசமாக வருகிறது.


 போலிகளின் சாயம் வெளுத்துவிட்ட சாதகமான நிலையில் ""நான்தான் உன்னதமானவன்'' என்று காட்டிக் கொள்ளும் நோக்கத்திற்காகவே அவனுக்கு கம்யூனிசத்தின் மீதான விமரிசனம் தேவைப்படுகிறது. அந்த உன்னதமும் பொதுவில் சமூகத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும் கேலி செய்யும் திண்ணைப்பேச்சு வேதாந்திகளின் தனிமனித அரட்டைதான். நாவலில் நோயால் இளம் வயதில் இறந்து போன ஜே.ஜேவின் நினைவுகளைத் தேடித்தான் எழுத்தாளர் பாலு கேரளம் செல்கிறான். நாயகன் ஜே.ஜே., எம்.ஜி.ஆரைப் போன்று சித்தரிக்கப்பட்டாலும் முடிவில் சிவாஜி படங்களைப் போல செத்துப்போவதற்கு வாசகர்களின் சென்டிமெண்டைப் போட்டுத்தாக்கும் நோக்கம்தான் காரணம். மற்றபடி நாவலை வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி விளக்குவதற்கு அல்வா போல ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தாலும் இத்துடன் முடித்துக் கொள்வோம். சு.ரா.விற்கும் கம்யூனிசத்திற்கும் பொதுவில் உள்ள உறவு என்ன? இதனைப் புரிந்து கொள்ள ஜெயமோகனது ஆவணத்தில் உள்ள தகவல்கள் உதவுகின்றன.


 ஜெயகாந்தன் 60,70களின் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி மூலமும் பின்னர் தனது சொந்தத் திறமை மூலமும் எழுதிப் பிரபலமாகியது சு.ரா.வுக்குப் பெரிய மனக்குறையைத் தந்திருக்கலாம். தன்னைத் தவிர எந்த எழுத்தாளரையும் ஏற்காத அவரது சொந்த மனநிலையை இது சீண்டி விட்டிருக்கலாம். சு.ரா.வுக்கு ஜெயகாந்தன் அளவுக்கு நேரடி வாழ்க்கை அனுபவம் இல்லை என்பதால் போட்டி போட முடியவில்லை. ஒருவேளை ஜெயகாந்தனைப் போன்ற பின்னணி சு.ரா.வுக்கு இருந்திருந்தால் அவரும் கட்சிக்கு ஜே போட்டுவிட்டு அப்போதே பிரபலமான எழுத்தாளராக செட்டிலாகியிருப்பார். அது முடியவில்லை என்பதால்தான் 80களில் ஜெயகாந்தன் வீழ்ந்த நேரத்தில் அவரை முல்லைக் கல்லாக்கி பழிதீர்த்துக் கொண்டார். சு.ரா.வின் கம்யூனிச எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியதில் இந்தப் பார்வைக்கு முக்கியப் பங்குண்டு.


 ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குருசேவ் முதன்முதலாக ஸ்டாலின் கால மனிதப் படுகொலைகளை வெளிப்படையாக அறிவித்ததும் உலகமே அதிர்ச்சியடைந்தது போல சு.ரா.வும் பேரதிர்ச்சியடைந்தாராம். அப்புறம் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் எழுதிய தோல்வியுற்ற கடவுள், நடுப்பகலில் இருள் எனும் நூல்களைப் படித்ததும் சோவியத் கால பயங்கரங்களை மேலும் தெரிந்து கொண்டு மேலும் அதிர்ச்சியடைந்து கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து முற்றிலும் விலகிக் கொண்டாராம். அக்கால இரவுத்தூக்கங்களில் ஸ்டாலின் கனவில் வந்து பூட்சுக்காலால் சு.ரா.வைக் குத்துவாராம். ஏற்கெனவே சுந்தர விலாசத்தில் தந்தையின் கோணல் பார்வையின் மூலம் சர்வாதிகாரத்தின் இலக்கணத்தைத் தெரிந்தும் அனுபவித்தும் வந்த சு.ரா.வுக்கு ஸ்டாலினது சர்வாதிகாரம் அதிகம் விளக்கமின்றியே சட்டென்று புரிந்து விட்டதாம். இதிலிருந்து சு.ரா. கம்யூனிசத்தைக் கட்டோடு வெறுத்தார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் புரியாத உண்மை ஒன்று உள்ளது. அது சு.ரா. போலி கம்யூனிசத்தை ஆதரித்தார் என்பதே. இதையே ஜெயமோகன் ""சு.ரா. தனது கட்சித் தோழர்களிடமிருந்து ஆழமான மார்க்சிய மன அமைப்பைப் பெற்றார்'' என்று கூறுகிறார். இதை ஒரு சின்னத்திருத்தத்துடன் ஏற்றுக் கொள்வோம். அதாவது சு.ரா. தனதுக் கட்சித் தோழர்களிடமிருந்து போலி மார்க்சிய மனஅமைப்பைப் பெற்றார். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.


 முதல்விசயம் குருசேவுக்கு முன்பேயே, ஸ்டாலின் காலத்திலேயே அவரைப் பற்றிய அவதூறுகள் ஏகாதிபத்திய அறிவாளிகளால் திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டன. இயற்கைச் சீற்றம், தொற்று நோய் மற்றும் சோவியத் யூனியனின் சராசரி இறப்பு விகிதத்தையே பல ஆண்டுகளில் கூட்டி மாபெரும் படுகொலை போன்று புள்ளிவிவர மோசடி செய்தார்கள். இதை அமெரிக்காவின் அப்போதைய ஏகபோக பேப்பர் முதலாளி ஹெர்ஸ்ட் என்பவன் பெரும் முதலீட்டுடன் உற்பத்தி செய்து விநியோகம் செய்தான். இதையே இலக்கியமாக மாற்றி எழுத்தாளர்கள் வெளியிட்டனர். இத்தகைய நாவல்களுக்கு பெரும் பணமும், நோபல் பரிசு முதலான விருதுகளும் கிடைத்து வந்த படியால் கம்யூனிச எதிர்ப்பு இலக்கியம் எழுதுவது அப்போது இலாபம் தரும் தொழிலாக நடைமுறையில் இருந்து வந்தது.
 ஜெயமோகனும், சு.ரா.வும் வியந்தோதும் ஆர்தர் கீஸ்லர் என்ற எழுத்தாளர் மட்டுமல்ல, அறிஞர் ரஸ்ஸல் போன்றவர்களும் தமது கம்யூனிச எதிர்ப்பு எழுத்துக்காக பிரிட்டிஷ் உளவுத்துறையான எம்.15இலிருந்து பெருந்தொகையை ஊதியமாக அல்லது கைக்கூலியாகப் பெற்று வந்தனர். இவையெல்லாம் 90களில் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்து நாறிய செய்திகள். அடுத்து, சோவியத் யூனியனிலேயே இத்தகைய கைக்கூலிகள் உருவாகிச் செயல்பட்டு வந்தனர். புகாரின் போன்றவர்கள் கட்சித் தலைமையிலேயே அந்தச் சதியை செய்து வந்தனர் என்பதை நிரூபித்த மாஸ்கோ சதி வழக்கு உலகப் பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாகத்தான் நடந்தது. இறுதியில் போலி கம்யூனிசத்தின் முகமூடியை முழுவதும் கலைத்துப் போடவந்த கோர்பச்சேவின் காலத்தில் சோவியத் யூனியனின் ஆவணக்கருவூலம் திறக்கப்பட்டபோது, "ஸ்டாலின் காலப் படுகொலைகளுக்கான இறுதி ஆதாரம் அதில் கிடைக்கும்' என்று ஏகாதிபத்தியவாதிகள் ஆரூடம் கூறினர். ஆனால் அத்தகைய சான்று ஒன்று கூட அதில் இல்லை. இதனால் ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத நிலையில் ஏகாதிபத்தியவாதிகள் வேறுவழியின்றி இலக்கியவாதிகளின் புனைகதைகளை மட்டும் வைத்து அந்தப் பிரச்சாரத்தைத் தொடருகின்றனர்.


 "பனித்துளியில் இருக்குதடா உலகம்' என்ற வரிக்குள் முடங்கிக் கொண்டு உண்மையான உலகைப் புரிந்து கொள்ள மறுக்கும் மூடுண்ட அகத்தை வரித்திருக்கும் ஜெயமோகன் போன்றோர் மேற்கண்ட கைக்கூலிகளின் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தைத்தான் தமது உடலில் ஓடும் ரத்தமாகக் கொண்டிருக்கின்றனர். இவை குறித்த விரிவான கட்டுரைகளை ஆதாரத்துடன் புதிய கலாச்சாரத்தில் பலமுறை வெளியிட்டிருக்கிறோம். இந்நூலில் உள்ள அந்தக் கட்டுரைகள்  ஜெயமோகன், சு.ரா. போன்றோரின் கம்யூனிச எதிர்ப்புத் தத்துவத்தின் ஊற்று மூலத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இப்படி ஸ்டாலின் மீதான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏற்கெனவே கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில்தான் குருசேவ் என்ற மார்க்சியத் திரிபுவாதிகளின் தலைவர் தலைமைக்கு வந்து அவற்றை வழிமொழிந்தார். வெறுமனே ஸ்டாலினைச் சிறுமைப்படுத்தி தன்னை உயர்த்திக் கொள்வது மட்டும் குருச்சேவின் நோக்கமல்ல. மார்க்சியத்தின் ஆதாரமான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் மொத்தத்தில் சோவியத் யூனியனை அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடாக மாற்றுவதுதான் குருசேவின் நோக்கமாக இருந்தது. அதன்படி ""சமாதான சகவாழ்வு  ஏகாதிபத்தியங்களுடன் சமாதானமாக வாழலாம், அமைதி வழியில் சோசலிச மாற்றம்  ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் புரட்சியின் மூலம் சோசலிசம் அடையத் தேவையில்லை; பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் சோசலிசத்தை அடையலாம்; அனைத்து மக்களுக்கான அரசு  இதன்படி சோவியத் யூனியனில் இனி பாட்டாளி வர்க்க அரசு தேவையில்லை'' என்ற குருசேவின் இந்த திரிபுவாதக் கருத்துக்களின் அடிப்படையில் உலகக் கம்யூனிசக் கட்சிகள் இரண்டாகப் பிரிந்தன. இவை மார்க்சியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி என்றவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள் எனவும், ஆதரித்தவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் வலது கம்யூனிசக் கட்சியும், ஆரம்பத்தில் குருசேவை மேலோட்டமாக எதிர்ப்பது போல பாவனை செய்த இடது கம்யூனிசக் கட்சியும் குருசேவின் திரிபுவாதத்தை ஆதரித்து பாராளுமன்ற கட்சிகளாகச் சீரழிந்து போயின. அப்போதைய சீனக்கம்யூனிசக் கட்சி, அல்பேனியக் கட்சி, இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சி போன்றவர்கள் குருசேவை கடுமையாக எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்தினர். இந்த வரலாற்றுக்கும் சு.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்?


 ஸ்டாலின் மீது குருசேவ் பொழிந்த அவதூறுகள் குறித்து மட்டும்தான் சு.ரா. அதிர்ச்சியடைந்தார். மார்க்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்த திரிபுவாதம் குறித்து எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. குருசேவின் திரிபுவாதத்தினால் கம்யூனிசக் கட்சிகள் எப்படி இரண்டு முகாம்களாகப் பிரிந்ததோ அதைப்போல மார்க்சியத்தை ஆதரித்த கலைஞர்களும் இரண்டு பிரிவுகளாய்ப் பிரிந்தனர். இந்த இரண்டாவது திரிபுவாத முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவாளிகள் அனைவரும் அல்லது பெரும்பான்மையினர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை ஏற்றுக் கொண்ட அதேசமயம் திரிபுவாதம் குறித்து வாய் திறக்காமல், அந்தத் திரிபுவாதத்தை எதிர்த்த உண்மையான கம்யூனிஸ்டுகளை மட்டும் தீவிரமாக எதிர்த்தனர். ""முன்னாள் கம்யூனிஸ்டுகள் சோசலிசத்தை ஆதரிப்பவர்கள், முற்போக்கான இடதுசாரிகள்'' என்ற பட்டங்களுடன்தான் இவர்கள் உண்மையான கம்யூனிசத்தை எதிர்த்தனர் என்பது முக்கியமானது. அவ்வகையில் இவர்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத போதும் இவர்களின் சேவையை ஏகாதிபத்தியவாதிகளும், போலி கம்யூனிஸ்டுகளும் ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படித்தான் சு.ரா. போலி மார்க்சிய மன அமைப்பைப் பெற்றுக் கொண்டார்.

 

 சு.ரா.வுடன் 1952 முதல் நட்பு கொண்டவரும், வலது கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டவருமான மி.ராஜூ என்பவரின் பதிவின்படி சு.ரா.வுக்குக் கட்சி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும் அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணியவில்லையாம். அப்புறம் அவரது சிறுகதைத் தொகுப்பு செக் மொழியில் வந்தபோது அதில் அவரைப்பற்றிய அறிமுகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்று எழுதி அவரிடம் ஒப்புதலைக் கேட்டபோது அந்த வரியை அடித்து விட்டாராம். அதேசமயம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் ஓரளவு நம்பிக்கை தருவதாக உள்ளவை (போலி) கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்று சு.ரா. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜூவிடம் சொன்னாராம்.


 சு.ரா. ஒரு தீவிர கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்து, பயங்கரமாகக் களப்பணியாற்றி, ஸ்டாலின் குறித்த பிரச்சினையால் கட்சியிலிருந்து விலகிவிட்டது போல இலக்கிய உலகில் ஒரு வதந்தி உலவி வருகிறது. முதலில் இது உண்மையல்ல. கட்சி அவரது கதையை செக் மொழியில் வெளியிட முன்வந்த போதும் அவர் தன்னை ஒரு உறுப்பினராகக் கூட காட்டிக் கொள்ள முன்வரவில்லை. மேலும் ஒரு கம்யூனிசக் கட்சியைப் பொறுத்தவரை உறுப்பினராவது என்பது பயிற்சிக் காலத்தை முடித்த பின்னரே நடக்க முடியும். இங்கே அந்த உரிமை சு.ரா.வின் பேனா மையில் இருக்கிறது. அவர் நினைத்தால் ஆமாம் என்றோ அல்லது இல்லையென்றோ உறுப்பினர் தகுதியை "டிக்' செய்ய முடியும். இன்றைக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தமக்கு ஆதரவான இலக்கியவாதிகளிடம் இப்படித்தான் உறவு கொண்டுள்ளன. இது போலி மார்க்சிய இலக்கியவாதிகளின் முதல் மனநிலை. அடுத்து அநேக இலக்கியவாதிகள் மேலோட்டமாக மார்க்சியத்தை ஒரு பாவனை போல் ஆதரித்தாலும் கட்சி என்று வரும் போது தம்மை ஒப்படைத்துக் கொள்ள மறுத்து விடுவார்கள். அதாவது கட்சியின் கடமைகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வேப்பங்காயைப் போன்று கசப்பிற்குரியது. இலக்கியவாதிகளின் கம்யூனிச வெறுப்பே இந்த அடிப்படையிலிருந்துதான் கிளம்புகிறது. நிலவும் எல்லாவகையான அதிகார நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொண்டோ, கட்டுப்பட்டோ வாழப்பழகியிருக்கும் இலக்கியமனம் கம்யூனிஸ்டு கட்சி கோரும் சுயக் கட்டுப்பாட்டையும், சுய அர்ப்பணிப்பையும் மட்டும் ஏற்றுக் கொள்ளாது. இது இரண்டாம் மனநிலை. அடுத்து மார்க்சிய சித்தாந்தம் குறித்து அ,ஆ கூடத் தெரியாத போதே கம்யூனிசத்தைக் கற்றுத் தேர்ந்து, கரைத்துக்குடித்த பண்டிதராகக் காட்டிக் கொள்வது மூன்றாம் மனநிலை. நான்காவது, ஒருபுறம் கம்யூனிசம், கட்சியெல்லாம் டூபாக்கூர் என்று கேலி செய்து விட்டு இன்னொருபுறம் போலி கம்யூனிசக் கட்சித் தலைவர்களிடம் நெருங்கிப் பழகுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வை மாபெரும் தியாகமாகச் சித்தரிப்பதும், அந்தத் தலைவர்களும் இத்தகைய இலக்கியவாதிகளை "என்ன இருந்தாலும் இவன் நம்மாளுயா' என்று பரஸ்பரம் முதுகு சொறிவதுமாகும். இறுதியாக, கம்யூனிசம், புரட்சி என்பதையெல்லாம் ஃபேன்டசி, ரொமான்டிக் விசயங்களாக, ஒரு நேர்த்தியான மாலை நேர விருந்து போல எந்தப் பிரச்சினையோ, துன்பமோ, ரத்தமோ, போரோ இல்லாமல் வந்துவிடுவதாகக் கருதுவது ஐந்தாம் மனநிலை. இதன்படி "கம்யூனிசம் என்ற அமுதப்பழம் தானாகவே வந்தால் புசித்து இன்புறுவோம், இல்லையா, புறங்கையால் ஒதுக்கிவிட்டு இருக்கின்ற வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்' என்பதாகும். சு.ரா. மேற்படி "பஞ்சபூதங்களால்' ஆன மனநிலையைக் கொண்டவர். இதன் பொருள் அவர் ஒரு தீவிர மார்க்சிய எதிர்ப்பாளர் என்பதே.


 எனவே சித்தாந்தத்தைத் தவிர்த்து விட்டு போலிகளின் சில்லறை நடைமுறைப் பிரச்சினைகளை விமரிசனம் செய்துவிட்டு ஈ.எம்.எஸ். போன்ற முக்கியமான இடது மற்றும் வலது தலைவர்களிடம் சு.ரா. நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். நல்லக்கண்ணு போன்ற தமிழகத் தலைவர்களும் நாகர்கோவில் வந்தால் சுந்தர விலாசத்திற்குத் தவறாமல் வந்து தங்கிப் போவார்களாம். திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வலது கம்யூனிசத் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர் ஒரு தேர்தலில் நீலலோகிததாஸ நாடாரிடம் தோல்வியுற்றது குறித்து ""இது சாதியின் வெற்றி, இந்திய அரசியலில் ஐடியலிசம் சாகுதுன்னு அர்த்தம்'' என்று சு.ரா. துக்கப்பட்டு சில நாட்கள் தூங்காமல் அவதிப்பட்டாராம். ஐடியலிசம் குறித்த அறிவும் வருத்தமும் எவ்வளவு அற்பமாக இருக்கிறது பாருங்கள்!


 வலது கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றச் சகதியில் மூழ்கி நேருவின் போலி சோசலிசத்திற்குப் பக்கமேளம் வாசித்து, இந்திராவின் எமர்ஜென்சிக்கு பஜனை பாடி, தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மற்றும் தலைவிக்கும், கலைஞருக்கும் காவடி தூக்கி, இப்போது முதலாளிகளுக்கும், காங்கிரசுக்கும் பல்லவி பாடி கட்டெறும்பாகத் தேய்ந்து விட்டது. இவையெதுவும் சு.ரா.வுக்கு கோபத்தையோ துக்கத்தையோ தரவில்லை. அக்கட்சியின் ஒரு தலைவர் தோற்றுப் போனது மட்டும் சு.ரா.வுக்கு துக்கத்தை தருகிறது என்றால் அவரது "ஐடியலிச'த்தை மட்டுமல்ல, "ஐடியாலஜி'யையும் அதன் முத்திரை பதிந்த "லிட்ரேச்சரி'ன் ஆழத்தையும் தெரிந்து கொள்ளலாம்.


 சு.ரா. அவரது இளமைப்பருவத்தில் தன்னை இந்தியாவில் புரட்சி நடத்தப்போகும் ஸ்டாலினைப் போன்ற தலைவராகக் கற்பனை செய்து கனவு கண்டாராம். இதை ஜெயமோகன் ஒருமுறை சு.ரா.விடம் அந்தரங்கமாகக் கேட்டபோது அவர் ஒத்துக் கொண்டாராம். இருக்கலாம். தன்னெழுத்தை மட்டும் வியந்தோதக்கூடிய ஒரு நபர் புரட்சி என்பது கூட தன்னால் வழங்கப்பட இருக்கின்ற கோவில் சுண்டல் என்று ஏன் நினைக்க முடியாது? இப்படி ஒரு தனிநபர், புரட்சியை பிச்சை போன்று மக்களிடம் தூக்கி எறிவதாக எத்தனை தெலுங்குப் படங்களும் ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் ஒரே ஃபார்முலா அதுதானே. ஆனால், புரட்சி என்பது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் நடத்தும் போர். இதைச் சாதிக்கும் தலைமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகத்தான் முகிழ்த்து வரும். கம்யூனிஸ்டு கட்சியில் சேரும் எவரும் தலைமை குறித்துக் கனவுகாண மாட்டார்கள். தலைமை என்பது என்ன, அது எவற்றைக் கோருகிறது, அது என்னவிதமான பொறுப்புக்களையும், பிரச்சினைகளையும் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். மறுபுறம் கம்யூனிஸ்டு கட்சியின் எல்லா உறுப்பினர்களும் தலைமைப் பண்பைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். புரட்சிகர நடைமுறையில் இல்லாத நடுத்தரவர்க்கத்தினருக்கு மட்டும்தான் கம்யூனிசம் என்ற பெருஞ்சொர்க்கத்தில் தான் முடிசூடவிருக்கும் மகுடம் குறித்த அற்பக் கனவு இருக்க முடியும்.  அவ்வகையில் போலி மார்க்சியக் கலைஞரும், சிற்றிலக்கியத்தின் எம்.ஜி.ஆருமான சு.ரா., இந்தியாவின் புரட்சித்தலைவராக மட்டுமல்ல, சிறு பத்திரிக்கைகளின் பிதாமகராவும் தன்னைக் கனவு கண்டார். பின்னதில் மட்டும் ஓரளவு வெற்றியும் பெற்றார். பின்னாளில் அந்தப் பதவியும் பல்வேறு இலக்கிய கோஷ்டிகளுடன் நடத்திய சண்டையால் ஆட்டங்கண்ட போதுதான் சு.ரா. சொல்லொண்ணாத்துயரம் அடைந்து தன்னைப் புகைப்படங்களாகவும், குறிப்புக்களாயிருந்த நினைவுகளை வார்த்தைகளின் உதவியால் புத்தகங்களõகவும் பதிவு செய்து சமாதானம் அடைய முயன்றார்.


 கோர்பச்சேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரோய்க்காவும் கிளாஸ்நோஸ்தும் சு.ரா.வை பெரும் உற்சாகத்தில் தள்ளியதாம். இதே உற்சாகத்தைத்தான் அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தனது "ரஷ்யப்புரட்சி ஒரு இலக்கிய சாட்சியம்' என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் விஜய் பட ரீலிசுக்கு இணையாகக் கொண்டாடியிருப்பார். இவர்களது மார்க்சிய அறிவை நாம் விளங்கிக் கொள்ள இந்தக் கொண்டாட்டமே போதும். குருசேவ் காலத்தில் தொடங்கிய திரிபுவாதம் சமூக ஏகாதிபத்தியமாய்  அதாவது சொல்லில் சோசலிசமும் செயலில் ஏகாதிபத்தியமுமாய்  சீரழிந்த காலத்தில்தான் அதன் நீட்சியாய் கோர்பச்சேவ் பதவிக்கு வந்தார். ஏற்கெனவே சோவியத் யூனியனின் பொருளாதாரம் ஏகாதிபத்தியக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு முக்கால் நிர்வாணமாகியிருந்த நிலையில், "ஒரு கட்சி ஆட்சிமுறை' என்ற கோவணம் மட்டும் எதற்கு என்று ஏகாதிபத்திய நாடுகள், அதைத் தூக்கியெறியுமாறு நிர்ப்பந்தம் செய்து வந்தனர். அதன் பொருட்டு கோர்பச்சேவ் கோவணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறியலாம் என்று கொண்டு வந்தவைதான் மேற்கண்ட சீர்திருத்த நடவடிக்கைகள். இதை அப்போதைய உண்மையான மார்க்சிய லெனினிய வாதிகள் தெளிவாக அம்பலப்படுத்திய போது அதை எதிர்த்த போலிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கோர்பச்சேவின் அரை நிர்வாண சீர்திருத்தங்களை மாபெரும் புரட்சி நடவடிக்கைகள் என்று வரவேற்றனர். இக்காலகட்டத்திற்குச் சற்று முன்பாக காலச்சுவடை ஆரம்பித்திருந்த சு.ரா., எம்.என்.ராய், எரிக் ஃபிராம், எம்.கே. கோவிந்தன் முதலான விதவிதமான கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளுமைகளை வெளியிட்டார். எல்லாம் கோர்பச்சேவின் கோவணக் கிழிசலுக்கு உதவியாய் இருக்கும் என அவர் நினைத்திருக்கக் கூடும். மேலும் கம்யூனிசத்தை திருத்துவதற்கு குமரிமுனையில் ஒருவன் இருக்கிறான் என்பதை உலகத்திற்கு அடையாளம் காட்டவும் அவர் நினைத்திருக்கலாம். கடைசியில் என்ன நடந்தது? சோசலிச மாயைக்காகப் பராமரிக்கப்பட்ட "ஒரு கட்சி ஆட்சி' என்ற கோவணம் பறந்த உடன் மாலெ கட்சிகள் மதிப்பிட்டது போல ரசியா வெளிப்படையான முதலாளித்துவ  ஏகாதிபத்திய நாடாக மாறியது. இதை எதிர்பார்க்காத போலிகள், சோவியத் யூனியனை வைத்து அணிகளுக்கு பிலிம் காட்டியவர்கள் கதிகலங்கிக் கதறினார்கள். அதன் பிறகு ரசியாவில் செங்கொடி கீழிறக்கப்பட்டு கம்யூனிச ஆசான்களின் சிலைகளும் இடிக்கப்பட்டன. இதைக்கண்டு பதறிய சு.ரா. பல நாட்கள் தூங்கமல் கண்ணீர் விட்டாராம். ""ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் மனுஷாளை நம்பியிருக்கலாம்'' என்று அப்போது ஜெயமோகனிடம் சொன்னாராம். அப்பக்கூட மனுஷன் கம்யூனிஸ்டுகளை அதுவும் ஸ்டாலினைத் திருத்துவதற்கான தன் கடமையில் இருந்து பின்வாங்கவில்லை. சு.ரா. ஏன் கண்ணீர் விட்டார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகிறோம்.


 செங்கொடிகளும், சிலைகளும் சரிந்து சோவியத் யூனியனின் முகமூடி கிழிந்ததை வைத்து கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது என ஏகாதிபத்திய முகாம் காத்திருந்து ஆர்த்தெழுந்த காலமது. அதன் எதிரொலிகள் தமிழ்நாட்டின் சிற்றிலக்கிய உலகிலும் அலற ஆரம்பித்தன. ""வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது, வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது, எல்லா தத்துவங்களும் இயக்கங்களும் தோற்றுப் போய் விட்டன, அவையெல்லாம் பெருங்கதையாடல்கள், விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள் என்ற சின்னக் கதையாடல்கள்தான் சரியானது, தலித்தியம்  பெண்ணியம்  சுற்றுச் சூழலியம் போன்ற மறைக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இனி பேசப்படவேண்டும்...'' போன்ற கொள்கை முழக்கங்களை நிறப்பிரிகை முன்வைத்தது. கம்யூனிசத்திற்கு இனி எதிர்காலமில்லை என்பதாகப் புரிந்து கொண்ட சு.ரா. தன்னை எதிர் மார்க்சியவாதியாக நிரூபிக்க மேற்கண்ட விசயங்களில் அந்த அளவுக்கு அறிவில்லையென்றாலும் பேசி, எழுத முயன்றார். கம்யூனிச எதிர்ப்புக்கு புது மவுசு இருப்பதைப் புரிந்து கொண்ட சு.ரா.வின் தலைமைச் சீடர் ஜெயமோகன் முந்திக் கொண்டார். உடனே ஜெயமோகனுடைய கனவில் ஸ்டாலின் வந்திறங்கி பூட்ஸ் காலால் உதைக்கத் தொடங்க, ராணுவ பூட்ஸை விடக் கனமான பின் தொடரும் நிழலின் குரலை ஜெயமோகன் பிரசவித்தார்.


 தனது குருநாதரின் ஜே.ஜே. நாவல் போன்று இந்த நாவலும் பெரும் வரவேற்பைப் பெறும், ஒருவேளை நாவலில் புகாரின் கதையெல்லாம் விரிவாக வருவதால் நோபல் பரிசு கூடக் கிடைக்கலாம் என்று ஜெயமோகன் மனப்பால் குடித்திருக்கலாம். நாவல் கடைசியில் கழுதைப்பாலாக வீணாகிவிட்டது. ஜே.ஜேயில் கம்யூனிச எதிர்ப்பு சற்றே இலைமறைவு காய் மறைவாக வந்ததென்றால், பின்தொடரும் குரலில் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி, படிமத்திற்கு படிமம் அப்பட்டமாய் எழுந்து அம்மணமாக ஆட்டம் போட்டதனாலோ என்னவோ வாசகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. எந்தக்கதை 50 நாட்களாவது ஓடும் என்ற சூட்சுமம் தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களுக்கே தெரியவில்லை. எந்த நாவல் காலத்தை விஞ்சி நிற்கும் என்ற சூட்சுமம் அதீத மனத்தாவல் கொண்டு யோசித்தாலும் ஜெயமோகனுக்குப் பிடிபடவில்லை போலும்! ஆனால் இந்த நாவல் குருவுக்குப் பிடித்திருந்ததாம். ஒருவேளை நாவல் தோல்வியடையலாம் என்ற கணிப்பு காரணமாகக்கூட சு.ரா. அதைப் பாராட்டியிருக்கலாம். ஏனெனில் குருநாதர் சிஷ்யனின் கிளாசிக் நாவலான விஷ்ணுபுரத்தை படிக்கவே இல்லை என்று புளுகிவிட்டாராம். துணிக்கடை முதலாளி படிக்காவிட்டாலென்ன, சாய ஆலை முதலாளியும், சர்க்கரை, லாரி, நிதி இன்னபிற தொழில்களின் அதிபரும் கொக்கோ கோலா முகவருமான அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் விஷ்ணுபுரத்தை இரண்டு தடவை படித்து தன் ரசிகராகி விட்டதை ஜெயமோகன் தன் வாசகர் ஒருவருக்கு போகிற போக்கில் பெருமை பொங்க அவிழ்த்து விட்டிருக்கிறார். அருட்செல்வர் முதலாளி மட்டுமல்ல, அறிவாளியும் கூட. "மின்சாரத்தில் நேர்எதிர் மின்சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டவுடனே மார்க்சியம் காலாவதியாகி விட்டதாக' சுபமங்களாவுக்கு பேட்டி கொடுத்தவர். அவர் பின் தொடரும் நிழலின் குரலை நான்கு முறையாவது படித்திருக்க வேண்டும்.


 ஜெயமோகன் தனது வாழ்க்கை மற்றும் எழுத்துக்கு அடிப்படையான புரிதல் என்று சு.ரா. பற்றிய நினைவின் நதியில்  நூலில் குறிப்பிடுகிறார்: ""மனித வாழ்க்கையும் சரி, வரலாறும் சரி, அப்படிப்பட்ட உக்கிர  கணங்களால் ஆனவை அல்ல. அவை மிக மெல்ல மாறுவது தெரியாமல் மாறியபடி விரிந்து கிடக்கின்றன. சலிப்பூட்டும்படி மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தத் தளத்தில் மனித மனத்தை இயக்கும் விசைகள் பெரும்பாலும் மிக மிகச் சாதாரணமானவை. பல தீவிரச் செயல்பாடுகளுக்கு உள்ளே இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை.'' உண்மையில், ஜெயமோகனது அடிப்படையான ஆன்மீகம் இதுதான். இதன்படி ஜெயமோகன் வேலை செய்யும் தொலைபேசித் துறையில் தனியார்மயத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யும் நடவடிக்கைக்குள்ளேயும், எம்.ஜி.ஆர். நகரில் 43 பேர் இறந்துபோன படுகொலைச் சம்பவத்திற்கு உள்ளேயும், அமெரிக்கா ஈராக்கின் மீது குண்டுவீசித் தாக்கி நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு உள்ளேயும், அதை எதிர்த்துத் தன்னுடலையே வெடிகுண்டாக்கி தற்கொலையின் மூலம் தியாகம் செய்யும் போராளியின் சிந்தனைக்கு உள்ளேயும் இருக்கும் உளவியல் காரணங்கள் எளியவை, அபத்தமானவை என்றாகிறது. இவற்றுக்கு அடிப்படையாக அமையும் பொருளியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்வதோ இலக்கியத்திற்கெதிரான அபச்சாரம்!


 ஜெயமோகனது தத்துவ விசாரங்களைக் கண்டு அஞ்சிச் சரணடைந்த வாசகர்களுக்குப் புரியும்படி சொல்கிறோம். "உயிரே' திரைப்படத்தில் வடகிழக்கிந்திய மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தை மனிஷா கொய்ராலாவின் முலைகள் வழியாக மணிரத்தினம் நிறுவுகிறாரல்லவா, அது துல்லியமான ஆன்மீகச் சித்தரிப்பு; ஒரு மனித வெடிகுண்டின் நியாயம் எந்த அளவுக்கு அபத்தமானது என்கிறார் ஜெயமோகன். எந்த ஒரு வரலாற்றையும் சம்பவத்தையும் நிகழ்ச்சியையும் என்ன காரணம் என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுப் பரிசோதித்தால் அதன் விடை அபத்தமாக வரும் என்பதுதான் அவரது ஆன்மீகத்தின் உட்கிடை. தன்னை டன் கணக்கில் எழுதிக் குவிக்கத் தூண்டும் ஆன்மீக உந்துதல் சாகித்ய அகாதமி, ஞானபீடம் போன்ற சாதாரணமான விசயங்களில்தான் உறைந்திருக்கிறது என்ற உண்மையை அவர் பார்க்கிறார். சு.ரா. இறந்தவுடன் 3 நாட்கள் சிறுநீர் பிரிந்தது கூடத் தெரியாமல் தீவிரமாகத் தன்னைச் செயல்பட வைத்த ஆன்மீக விசை எது? புகழ்வது போலக் கேவலப்படுத்தவும், வியப்பது போலக் காறித்துப்பவும், வருத்தப்படுவது போல நடிக்கவும் தன்னுடைய மனத்தை இயக்கிய அந்த உளவியல் காரணம் அற்பமானதே என்பதை அவர் உணர்ந்திருப்பதால் "உலகமே அற்பத்தனமானது' என்று பிரகடனம் செய்கிறார்.


 ஆனால், ஜெயமோகன் தன் நாவலை அப்படி எழுதவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் நாயகன் ஒரு போலி கம்யூனிசத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து படிப்படியாகத் தலைவராகிறான். பின்பு கட்சியின் காரியவாத பிழைப்புவாதங்களைக் கண்டு, மனஞ்சோர்ந்து, விலகி மனைவியின் முலைகளில் தஞ்சமடைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறுகிறான். இந்த நாவலை ஜெயமோகன் தனது எழுத்தின் தத்துவ அடிப்படையை வைத்து எழுதவில்லை என்பதோடு அதற்கெதிராகவும் எழுதியிருக்கிறார். நாவலில் அதீத நாடகத்தன்மையும், வாழ்க்கையை செயற்கையாக உக்கிரப்படுத்துவதும், விரிவான எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பும், வாழ்வின் அநீதியை எதிர்த்து வரலாறு முழுவதும் போராடும் மனித சமூகத்தை எதிர்த்து ஆபாசமாக வசைபாடும் ஜெயமோகனது நீண்ட பிரசங்கங்களும் முடிவில், எல்லாம் சேர்ந்து நாவலை மிகச் செயற்கையாகத் தூக்கி நிறுத்துகின்றன. அதனாலேயே வாசிப்பில் சரிந்து விழுகின்றன. சு.ரா.வின் ஜே.ஜேவைக் கிணற்றுத் தவளை என்று மதிப்பிட்டால், ஜெயமோகனை சற்றே எம்பிக் குதிக்கும் கிணற்றுத் தவளை என்று சொல்லலாம். குருவை விஞ்சிய சீடன்தான்! எவ்வளவு துள்ளினாலும் இந்தத் தவளையும் மீண்டும் கிணற்றுக்குத்தான் போகிறது என்பதே முக்கியம்.


 ஜே.ஜே. எழுதிய சு.ரா. போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது நன்மதிப்பு கொண்டிருந்ததை சீடரும் "கவனத்தில்' கொண்டிருக்கிறார். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு குமரிமாவட்ட தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் கிளை கிளையாக வந்தனராம். சு.ரா.வுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அருகதை உள்ள கட்சிகள் இவைகள் மட்டும்தான் என்று தனது "நினைவின் நதியில்' ஜெயமோகன் எழுதுகிறார். போலிகளும் இவருடனான தமது பழைய கசப்பை மறந்துவிட்டுக் கைகோர்க்கக் கூடும். நல்லகண்ணுவைப் பாராட்ட இல.கணேசன் போகவில்லையா? அரசியலைப் போல "இலக்கியத்திலும் இதெல்லாம் சகஜமப்பா' என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


 ஜே.ஜே. சில குறிப்புகளையும் மார்க்சியத்திற்கும் சு.ரா மற்றும் அவர் சீடப் பிள்ளைக்குமுள்ள உறவுகளைப் பார்த்துவிட்டோம். இங்கே ஜே.ஜே. நாவலால் பாதிக்கப்பட்ட ஒரு ஆளுமையைப் பார்ப்போம். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பொருத்தமானவர். ""சு.ரா.வை ஜே.ஜே. சில குறிப்புகள் வழியாகத் தேடிச் சென்றவர்களில் நானும் ஒருவன். எனது இடதுசாரி நம்பிக்கைகள் பெரும் மனமுறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். ரஷ்யப் புரட்சி: ஒரு இலக்கிய சாட்சியம் எனது நம்பிக்கைகளைக் குரூரமாகச் சிதைத்தது.

 

 அந்த காலகட்டத்தில்தான் ஜே.ஜேயையும் படித்தேன். அனைத்தின் மீதும் ஜே.ஜே. வெளிப்படுத்திய எதிர்நிலையும் விழிப்புணர்வும் சட்டென ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. ஜே.ஜேயில் வெளிப்பட்ட மொழியும் புத்துணர்ச்சியும் மூர்க்கமும் பித்தேற்றுவதாக இருந்தன....'' என்கிறார் கவிஞர். முதலில், கவிஞரின் இடதுசாரி நம்பிக்கை என்னவாக இருந்தது? புதிய கலாச்சாரத்தில் ஓரிரு கவிதைகள் எழுதியிருக்கிறார். ஷாபானு குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக நினைவு. அப்புறம் மன ஓசையில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். இதைத் தவிர கவிஞர் அவர்கள் இடதுசாரி இயக்கத்திற்காகக் கருத்துப் பணியோ, களப்பணியோ ஆற்றவில்லை. பெரிய அளவில் காரியம் ஆற்றாமலேயே நம்பிக்கை மட்டும் பெரிய அளவில் மனமுறிவைச் சந்தித்தது எப்படி என்று தெரியவில்லை. தொலையட்டும். அப்படி மனமுறிவைப் பெற்றதாகவே வைத்துக் கொள்வோம். அதன் பிறகு கவிஞர் என்ன செய்தார்? இடதுசாரி நம்பிக்கை என்ற சிறிய குன்றை விட்டுக் கீழிறங்கி அதைவிட உன்னதமான சிகரத்தை நோக்கிப் போனாரா? இல்லை. கவிதைத் தொகுப்புக்களைக் கொண்டு வந்தார். பிறகு காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனுடன் ஏதோ தகராறு. அந்தத் தகராறில் "சு.ரா. மகனை ஆதரித்தார்' என்று குற்றம் சாட்டிவிட்டு வெளியேறினார். அப்புறம் எழுத்து வியாபாரி சுஜாதாவின் நல்லாசியுடன் அவரது புத்தகங்களை வெளியிடும் உயிர்மைப் பதிப்பகத்தை நடத்துகிறார். சுஜாதாவைப் பற்றி எவரும் விமரிசனம் செய்யக்கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையுடன் உயிர்மை பத்திரிக்கையை நடத்தி வருகின்றார். இப்படியொரு பெரும் பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழுந்த போதிலும் அவருக்கு மனமுறிவோ எலும்பு முறிவோ கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமானது. பிழைப்புவாதமும் காரியவாதமும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என இன்று அவர் தெளிந்திருக்கலாம். இந்தக் குறிக்கோளுக்கிடையில் அவரால் கவிதை எழுதுவதையும் நிறுத்த முடியவில்லை. கவிதை என்றவுடன் அவர் காலச்சுவடில் எழுதிய "அரசி' என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதாவைப் பற்றி பூடகமாக "அரசி வந்தாள், சிலிர்த்தாள், நகரம் பணிந்தது' என்று உப்புச்சப்பற்ற நீர்த்துப்போன படிமங்களால் தயாரிக்கப்பட்ட இந்தக் கவிதையை "தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் கவிதை' என்று தங்களைத் தாங்களே இலக்கிய உன்னதங்களாக அழைத்துக் கொள்ளும் ஜெயமோகன் மற்றும் பிரேம்  ரமேஷ் போன்றோர் பாராட்டியதும் நினைவுக்கு வருகிறது. அரசியல் வெளி இருண்டு போன இலக்கியப் பாலைவனத்தில் இதுபோன்ற அசட்டுக் கவிதைகள் மகத்தான அரசியல் கவிதைகளாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் பற்றி "அண்ணன் வர்றாரு' என்ற பாடல் ஒலிப்பேழையை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அரசி கவிதையைப் படித்துவிட்டு எமது பாடல் ஒலிப்பேழையைக் கேட்டுப் பாருங்கள். எதில் கவித்துவமும், கூர்மையும், எள்ளலும், உற்சாகமும் இருக்கிறது என்பது தெரியவரும். அதனால்தான் எமது பாடலை சாதாரண தி.மு.க. தொண்டர்கள் பாராட்டி தங்களுடைய வெளிப்படுத்த முடியாத குரலாகப் பயன்படுத்தியும் வந்தனர். அரசி கவிதை யாருக்குப் பயன்படும்? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்தால் எழுதிய மனுஷ்யபுத்திரனுக்கும் வெளியிட்ட கண்ணனுக்கும் பலவகையில் பயன்படும்.


 எனில், சு.ராவின் ஜே.ஜே. நாவல், கவிஞரைப் போன்ற இலக்கியவாதிகளிடம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு இதுதான். அந்த நாவல் தெரிந்தே ஓம்பப்படும் அறியாமையை எல்லாம் தெரிந்த ஞானமாக காட்டிக் கொள்பவர்களுக்கும், சமூகத்திற்கு விரோதமான தன்னிலையை சமூகத்திற்கு மேலான உயர்நிலையாகக் கற்பித்துக் கொள்பவர்களுக்கும், சோம்பிக் கிடக்கும் சொந்த வாழ்வில் விறுவிறுப்பைக் கற்பிதம் செய்து கொள்பவர்களுக்கும் அக உலகில் கட்டியமைக்கப்படும் கற்பனையான வாழ்வின் இல்லாத புதிரை நிஜ உலகில் தேடுவதைப் போன்று பாவனை செய்பவர்களுக்கும் எல்லா தத்துவங்களும் தோற்று விட்டதென்னும் புனைவு தரும், பொய்க்களைப்பை வாழ்வின் அற்ப விசயங்களில் ஊறித்திளைப்பதற்கான நியாயமாக முன்வைப்பவர்களுக்கும் சு.ரா.வின் ஜே.ஜே. ஒரு ஆதர்ச நாயகன்.


 "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' சு.ரா.வின் மூன்றாவது நாவல். அவர் இறந்துவிட்டதால் இறுதி நாவலுங்கூட. முதலாவது, ஜவுளிக் கடையில் அமர்ந்து கொண்டு வேப்பமரத்தையும் அதைச் சுற்றியிருக்கும் வியாபாரிகளையும் வேடிக்கை பார்த்து எழுதப்பட்ட நாவல். இரண்டாவது, போலி மார்க்சியர்கள், சிற்றிலக்கியவாதிகளிடம் உரையாடிக் கேட்டும், ஐரோப்பாவின் மார்க்சிய எதிர்ப்புக் குப்பைகளைக் கிளறியெடுத்தும் எழுதப்பட்ட நாவல். மூன்றாவது, சு.ரா. தனது சொந்த வாழ்க்கையைப் பல ஆண்டுகளாக அசை போட்டுப் பதப்படுத்தி எழுதிய நாவல். எல்லா இயக்கங்களும், சித்தாந்தங்களும் தோற்று விட்டதான பாவனையில், எழுதுவதற்கான விசயங்கள் இல்லாத நிலையில் எல்லா இலக்கியவாதிகளும் தஞ்சமடைவது அவர்களது இளமைப்பருவம் பற்றிய இனிய நினைவுகளில். சு.ரா.வும் அப்படித்தான் தனது நாவலுக்கான கருவை தனது இளமைப் பருவத்தில் கண்டெடுத்தார். இது அவரது பிரச்சினை. நமது பிரச்சினை வேறுமாதிரி. வாழ்நாளிலேயே படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு நொந்து நூலான நாவல் உறுதியாக இதுதான். இந்தக் கட்டுரைக்காக சு.ரா.வின் படைப்புகளைப் படிக்கவேண்டியிருந்தது ஒரு தண்டனை என்றால், அதில் கொடிய தண்டனை இந்த நாவல்தான். இது சு.ரா.வின் குடும்ப நாவல். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ""இது நம்ம மாமி, இது நம்ம அத்திம்பேர், இது நம்ம தோப்பனார், இவதான் நம்ம மன்னி, இவாதான் நம்ம ஓரகத்தி'' என்று அடையாளம் காட்டி, கலந்துரையாடி மகிழ்ச்சியடைய வேண்டிய நாவல். மற்றவர்கள் எவருக்கும் தனது பிரதியாகப் படிப்பதற்கோ, படித்ததை அனுபவமாக உணர்வதற்கோ, உணர்ந்ததை மற்றவரிடம் பகிர்வதற்கோ இதில் துளியும் இடமில்லை.


 சு.ரா. கோட்டயத்தில் சிறுவன் பாலுவாகக் கழித்த ஐந்து வருடங்களைப் பற்றிய விரிவான, விலாவாரியான தினசரி டயரிக் குறிப்புதான் இந்த நாவல். கோட்டயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது வீடு, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்ட வாழைத்தோட்டம், வீட்டுக்குள் இருக்கும் தேக்குமரத்தினாலான ஓவல் வடிவமேசை, சக்கை உப்பேரி தின்ன ஆசைப்படும் சித்தப்பா, ஜே.ஜேயைப் போல வாழ்வின் நிலையாமை குறித்து குடும்ப அளவில் பதட்டமடையும் சு.ரா.வின் அப்பா, சு.ரா.வைவிட சாமர்த்தியமாக வளரும் அக்கா ரமணி... இப்படி உயர்திணைகளும் அஃறிணைகளும் மாறி மாறிக் கலந்து கசிந்துருகி அற்ப உணர்வின் பிரவாகமாய் சுமார் 640 பக்கங்கள் எவரும் தடுக்கமுடியாதபடி பெருக்கெடுதது ஓடுகிறது. இதை ஒரு நாவலென்று சு.ரா. ஏன் எழுதினார், இதை எதற்காக அச்சிட்டு வெளியிட்டார்கள், இதை பல அப்பாவிகள் பணம் கொடுத்து ஏன் வாங்குகிறார்கள்... ஒன்றும் புரியவில்லை. இந்த விசயத்தில் மட்டும்தான் வாழ்வின் புரியாமை பற்றிய பிரச்சினை நம்மை அச்சுறுத்துகிறது. ஒரு பார்ப்பன மேட்டுக்குடியின் ஐந்தாண்டு வாழ்க்கையை, உண்டு களித்து அசைபோட்டுச் செத்த கதைகளை சு.ரா.வின் புகழ் பெற்ற அந்த பத்துக்கருத்துக்களின் நமத்துப்போன வகைபேதங்களோடு நுணுக்கி, மினுக்கி எழுதப்பட்ட இந்தக் "காப்பியம்' சு.ரா. யார் என்பதை நிச்சயம் அடையாளம் காட்டும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் போன்றோர் இந்த நாவலை கலையமைதி கொண்ட நாவல் என்றும் சு.ரா.வின் படைப்பிலேயே இதுதான் சிறந்தது என்றும் பாராட்டுகிறார்கள். செஞ்சோற்றுக்கடனா, பாம்பின்கால் பாம்பறியுமா, இனம் இனத்தோடு சேருமா  இதற்கு எந்தப் பழமொழி பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவில்லை. நான்கு சுவர்கள் மற்றும் ஒரு பெரிய இரும்புக்கதவால் திறக்க முடியாதபடி மூடப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை, உரையாடலை, மனவோட்டத்தை, நெகிழ்ச்சியை, தத்தளிப்பை யார் ரசிக்க முடியும்? யாரெல்லாம் தெருவையும், ஊரையும் மறந்து, மறுத்து குடும்பத்திற்குள் மட்டும் வளைய வருகிறார்களோ, அவர்கள் மட்டும்தான் கதைப்பதற்கு வேறு விசயங்கள் இன்றி, குடும்பத்தின் அற்ப விசயங்களை மெய்மறந்து பேசவோ, நினைக்கவோ, ரசிக்கவோ முடியும். ""இந்த நாவலில் நகரும் காலமில்லை; வரலாற்றுப் பின்புலம் இல்லை'' என்பது சீடர் ஜெயமோகனின் "விமர்சனம்.' சக்கை உப்பேரிக்கும் அடைப்பிரதமனுக்கும் இடையில் காலம் நகர்ந்தாலென்ன, நகராவிட்டாலென்ன? சு.ரா.வின் சித்தப்பா பலாப்பழம் பறித்த கதை வைக்கம் போராட்டம் நடந்த காலத்தில் தான் நடக்கிறது. இந்த வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதன் மூலம் சு.ரா. வீட்டுப் பலாப்பழம் பற்றியோ, சு.ரா. பற்றியோ என்ன புதிய "தரிசனம்' கிடைத்துவிடும்? சமூக உணர்வற்ற அற்பவாதக் குட்டைதான் உலகம் என்றான பிறகு அதில் கிழக்கென்ன, மேற்கென்ன? இப்படிப்பட்ட நாவல் எழுதியவருக்கு என்ன தரத்தில் அஞ்சலி செலுத்த முடியுமோ அதைத்தான் அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளும் எடுத்தியம்புகின்றன. நிகழ்கால சு.ரா. இளமைப்பருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு இந்த நாவலும், இந்த நாவலில் வரும் சிறுவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான் என்ற ஊகத்தைச் சரிபார்ப்பதற்கு நிகழ்கால சு.ராவும் உதவி செய்வதால் இந்த நாவல் தன் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆதலால் இந்த நாவல் குறித்த நமது விமரிசனத்தை இதற்கு மேல் இழுப்பது என்பது அந்த வரலாற்றுக்குச் செய்யப்படும் அநீதி என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம்.


 சு.ரா.வின் படைப்பிலக்கியங்கள் இத்துடன் முடிவதால் படைப்புக்கு வெளியே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பார்க்கலாம். தமிழகப் படைப்பாளிகளில் பலர் சாதி, மத, மூடநம்பிக்கையுடன் வாழ்ந்தாலும் அவர்கள் விமரிசிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த அடையாளங்களைத் தவிர்த்தும், துறந்தும் வாழ்ந்த சு.ரா.வை மட்டும் சனாதனி, பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர் என்று பல விமரிசகர்கள் சு.ரா.வின் வாழ்நாள் முழுவதும் அவதூறு செய்து வந்ததாக அவரது அபிமானிகள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் கூறுகின்றனர். இதன்படி பார்த்தால் சு.ரா. சாதி மத மூடநம்பிக்கைகளை முற்றிலும் துறந்த ஒரு புரட்சிக்காரர் என்றாகிறது. இது உண்மைதானா?


 சு.ரா. சாதி மறுப்புத் திருமணம் செய்தாரா? இல்லை, சரி தொலையட்டும், திருமணமாவது சீர்திருத்த முறையில் சடங்கின்றி நடந்ததா? இல்லை, அதை விடுங்கள். சு.ரா. தனது குழந்தைகளுக்காவது சாதி மறுப்பு சுய மரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தாரா? அதுவும் இல்லை என்பதோடு தினமலர் என்ற பார்ப்பன பிரச்சார பீரங்கிக் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டார். சு.ரா.வின் இல்லமான சுந்தரவிலாசத்தில் பூஜை அறை உண்டா? நிச்சயமாக உண்டு, சுந்தரவிலாசத்தில் தீபாவளி, ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவார்களா? அதெப்படிக் கொண்டாடாமல் இருக்க முடியும்? சு.ரா.வின் சொந்த ஊரில் இருக்கும் "தழுவிய மாகாதேவர் கோவிலுக்கு' அவர் நன்கொடை ஏதும் கொடுப்பாரா? இவரே மறந்து போனாலும் அந்த ஊர் பார்ப்பனர்கள் விடாமல் ஆண்டுதோறும் வாங்கிக் கொண்டு போவார்கள். இருக்கட்டும், சு.ரா. பேசுகின்ற தமிழ் எந்த வகை? அதுவும் சுத்தமான அக்கிரகாரத்துத் தமிழ்தான். இப்படி சாதிமத மூடநம்பிக்கைகளின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து கொண்டே தன்னைப் பொருத்தவரை சு.ரா. அவற்றைத் துறந்துவிட்டு வாழ்ந்தார் என்றால் என்ன பொருள்? தாமரை இலைத் தண்ணீர் போல இந்த அடையாளங்களோடு வாழ்ந்து கொண்டே மனதளவில் மட்டும் துண்டித்துக் கொண்டு வாழ்ந்தார் என்பதா? அவரை அவரது பௌதீக இருப்பில் வைத்து அல்ல, சிந்தனையின் இருப்பில் வைத்து மட்டும்தான் பார்க்க வேண்டுமா? ""வரதட்சிணை வாங்கக் கூடாது என்பது என் கொள்கை, ஆனால் என் பெற்றோர் வாங்கினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று மாப்பிள்ளை இளைஞர்கள் கூறுவார்களே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?


 மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான எமது புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் சாதிதீண்டாமை மறுப்புத் திருமணங்களை தாலி முதலான சடங்குகள் எதுவுமின்றி எளிமையாகச் செய்து கொள்கிறார்கள். திருமணத்தில் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் முதலியவற்றைத் துறந்தும் குடும்பப் பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படி தீர்த்துக் கொள்வதாகவும், தமது குடும்ப வாழ்வை பொது நலனுக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாலைகளை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி மாதம் ஒரு திருமணமாவது நடக்கத்தான் செய்கிறது. அதேசமயம் இந்தத் திருமணங்கள் ஒரு புனைகதை எழுதுவது போலச் சுலபமாக நடைபெறுவதில்லை. பலசுற்றுப் போராட்டங்களைத் தாண்டி நடக்கும் இந்தத் திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர் பலர் வருவதில்லை. திருமணம் முடிந்தாலும் உற்றார் உறவினர், மேல்சாதி ஆதிக்கம் முதலானவற்றை எதிர்கொண்டு போராடியபடிதான் வாழவேண்டியிருக்கிறது. மேலும் எமது தோழர்கள் பார்ப்பனப் பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் முதலான உலகமக்கள் இதயத்தில் நிறுத்த வேண்டிய நாட்களைத்தான் திருவிழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். இப்படி சொல்லிலும் செயலிலும் அரசியலிலும் வாழ்விலும் சாதி மத அடையாளங்களையும் மூடநம்பிக்கைகளையும் துறந்து வாழும் எமது தோழர்கள் உன்னதமான உலக உள்ளூர் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை. எங்களுக்கும் இத்தகைய போராட்ட வாழ்வை இலக்கியமாக்குவதற்கான நேரம் இருப்பதில்லை. கவிதையும், கவித்துவமும், இலக்கியத்தின் உன்னதமும் எங்கள் தோழர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது. அவற்றை வெறும் தாள்களில் மட்டும் பார்க்கும் இலக்கியவாதிகளின் வாழ்வோ சராசரிக்கும் கீழே சாதாரணமாகச் சோம்பிக் கிடக்கிறது. அதையே முற்போக்கு என்றும் அசாதாரணம் என்றும் காட்டிக் கொள்வதுதான் அற்பத்தனம் என்கிறோம். ஜெயமோகனது ஆன்மீகத்தின் படி எமது தோழர்களின் புதிய பண்பாட்டிற்கான இந்த போராட்டத்தின் காரணங்கள் எளிமையானவை. அபத்தமானவை. அதே ஆன்மீகம், மேட்டுக்குடிப் பார்ப்பனராக வாழ்ந்து மரித்த சு.ராவை மட்டும் பார்ப்பன வாழ்க்கையைத் துறந்தவராக செயற்கையாக, உக்கிரப்படுத்திச் சித்தரிக்கிறது. சாரமாகக் கூறுவதென்றால், பிழைப்புவாதத்தையும், காரியவாதத்தையும் உன்னதப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் ஜெயமோகனது ஆன்மீகம்.


 நம்மைப் பொருத்தவரை சு.ரா. மட்டுமல்ல அநேகச் சிறு பத்திரிகை எழுத்தாளர்களும் சாதிமத வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள்தான். அதனால்தான் சாதி மத அடையாளங்களைத் துறப்பது குறித்து ""உண்மையில் அது ஓர் எழுத்தாளன் என்ற அளவில் உகந்ததுதானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்று முன்னெச்சரிக்கையாகத் தப்பித்துக் கொள்கிறார் ஜெயமோகன்.
 அடித்தட்டுச் சாதிப்பெண் ஒருத்தி சுதர்சன் ஜவுளிக்கடையில் வளைகாப்பிற்காக 7000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவை எடுத்ததை பெரும் தலித் எழுச்சிபோல சு.ரா. கொண்டாடியதை ஜெயமோகன் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சு.ரா. கல்லாப்பெட்டியிலிருந்துதான் உலகத்தை பார்த்தார் அளவெடுத்தார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த விசயம் மகிழ்வுக்குரியதல்ல; வருத்தத்திற்குரியது. வளைகாப்பை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுவதெல்லாம் உழைக்கும் சாதிகளிடம் பொதுவில் இல்லை. இப்போது அப்படிக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது பார்ப்பனமயமாக்கம் மற்றும் நுகர்வியத்தின் மோசமான வெளிப்பாடு. அரசு வேலையில் இருக்கும் வசதியான தலித் நடுத்தரவர்க்கத்தினர் பிறந்தநாள், சஷ்டியப்த பூர்த்தி, நவமி, அஷ்டமி முதலானவற்றைக் கொண்டாடுகின்றார்கள் என்பது சு.ரா.வுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அதன் பொருள் என்ன? யார் பார்ப்பனியத்தைச் சிக்கென இதயத்தில் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இப்படிப் பார்ப்பனமயமாக்கத்தைப் பாராட்ட முடியும். தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் இப்படித்தான் மாற வேண்டும் என்று இந்து முன்னணியும் கூறுகிறது. எனில் சு.ரா.வுக்கும் இராம கோபாலனுக்கும் என்ன வேறுபாடு?


 வாச்சாத்தி சம்பவத்திற்குப் பிறகு சு.ரா.வின் மனதைப் பாதித்த தமிழக அளவிலான சம்பவம் கொடியங்குளம் கலவரமாம். ""அதை பேச்சிலும் எழுத்திலும் பதிவு செய்து நானும் இது பற்றிக் கருத்துக் கூறியிருக்கிறேன்'' என்று மிகையாகக் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லையாம். அப்படியெனில், சு.ரா.வின் மனதை அது பாதித்தது என்பதன் நிரூபணம் என்ன? அவரது அன்றாடப் பணிகளான ஜவுளி வியாபாரம், படைப்பு எழுதுவது, மாலை உலா, இரவில் இலக்கிய அரட்டை, எல்லாம் செவ்வனே நடக்கும், ஆனால் மனது மட்டும் தென்மாவட்டச் சாதிக் கலவரங்களுக்காக வருத்தப்படுமாம். மொத்தத்தில் தினசரி செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்து விட்டு பாவம் என்று "உச்' கொட்டிவிட்டுத் தனது வேலைகளைப் பார்க்கப் போகும் நடுத்தரவர்க்கத்தின் உதட்டளவிலான மனிதாபிமானம்தான் இது. சு.ரா. தனது மூத்த மகள் சௌந்தரா நோயுற்று இறந்ததைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் தன் மகளுக்கு வந்த அபூர்வமான நோய் குறித்தும், அதற்கான மருத்துவத்தின் போதாமைகள் குறித்தும், மகளைப் பிழைக்க வைக்க பிரார்த்தனை மூலம் முயற்சி செய்யும் தனது நண்பர் குறித்தும், அந்தப் பிரார்த்தனையில் அறிöயாணாவாதியான தான் பங்குபெற இயலாததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி குறித்தும் விளக்கி எழுதியிருக்கிறார். துள்ளலும், உற்சாகமுமாய் இருந்த சு.ரா. தனது மகள் இறந்த பிறகு அடிக்கடி தனிமையிலும், துயரத்திலும் மூழ்கி விடுவதாக ஜெயமோகனும் எழுதியிருக்கிறார்.


 இங்கும் ஜெயமோகனது ஆன்மீகம் சமூகத்துயரத்தை அற்பமானதாகவும், சொந்த வாழ்க்கைத் துயரத்தை மகத்தானதாகவும் எப்படிச் சித்தரிக்கிறது பாருங்கள்! அவ்வகையில் இந்த ஆன்மீகத்தை அற்பவாதத்தின் தத்துவம் என்றும் அழைக்கலாம். கொடியங்குளம் என்ற சமூகத் துயரத்தை பேசினாலும் எழுதினாலும் "மிகை' என்று ஒதுக்கி விட்ட சு.ரா.வின் இதயம், தனது சொந்த வாழ்க்கைத் துயரத்தை மட்டும் இந்திய அளவிலான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்றால் அதன் இதயத்துடிப்பின் இலக்கணம் என்ன? ஒரு குடிமகனுக்கு இருக்கவேண்டிய கடமையுணர்வும், பொறுப்புணர்வும் கூட சு.ரா. என்ற இலக்கியவாதியிடம் இல்லாமல் போனதன் மர்மம் என்ன? இலக்கிய உன்னதங்களுடைய சமூகப் பொறுப்புணர்ச்சியின் இலக்கணம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்!


 பிறகு ஏன் சு.ரா.வை சாதி மதங்களைத் துறந்தவரென்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள்? ஒரே விடை சு.ரா. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இலக்கியவாதிகளை காரில் வரவேற்று, மேசையில் உணவிட்டு, வீட்டில் தங்கவைத்து, உபசரித்து விருந்தோம்பியிருக்கிறார் என்பதே. சு.ரா.வின் சாப்பாட்டு மேசையில் சங்கோசத்துடன் சாப்பிட்டதையும், சு.ரா. அதற்கு நேரெதிராக இயல்பாக உபசரித்துப் பழகியதையெல்லாம் அறிஞர் ராஜ் கௌதமன் போன்றோர் தமது அஞ்சலிக் குறிப்பில் பதிவு செய்திருக்கின்றனர்.


 தமிழக வரலாற்றில் புலவர்களுக்கும் புரவலர்களுக்குமான உறவு வாசகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. புரவலர்களைத் தேடி வரும் புலவர்கள், புரவலர்களின் இல்லாத நல்லதுகளை இட்டுக்கட்டிப் பாடிப் புகழ்ந்து பரிசுகளை வாங்கிச் செல்வார்கள். பரிசுகள் தர மறுக்கும் புரவலர்களை புலவர்கள் மறைமுகமாக வசைபாடுவார்கள். மற்ற புலவர்களை ""நீயெல்லாம் புலவனா'' என்று எகத்தாளமாக கேலி செய்வார்கள். சிறு பத்திரிகைகளின் உலகமும் குழுச் சண்டைகளும் இந்த மரபின் தொடர்ச்சிதான்.


 பாடிப் பரிசு பெறுவதும், தூற்றிக் கேலி செய்வதுமான தமிழ் மரபை வரித்திருக்கும் சிறு பத்திரிக்கை உலகில் சு.ரா. யார்? அவர் புலவராக மட்டுமல்ல, புரவலராகவும் இருந்திருக்கிறார் என்பதே சரியான விடை. எழுதியதால் அவர் புலவர். தன் எழுத்தை நிலைநாட்டுவதற்காகப் பலரை வரவேற்று உபசரித்திருப்பதால் அவர் புரவலர். எழுத்தின் உணர்ச்சியை அவருக்களித்த அதே சுந்தரவிலாசம்தான், அவரது எழுத்தை மற்றவர்கள் சிலாகிப்பதற்கான விருந்தோம்பலையும் ஒரு சத்திரம் போலச் செய்திருக்கிறது. இதை சலிக்காமல் செய்து வந்ததற்கு சு.ரா.வின் மனைவி கமலா மாமி போக, கார், பங்களா, சமையல்காரர் முதலான சகல வசதிகளும் அவருக்கு கைகூடி இருந்தன. ஒரு நிறுவனம் போல தன் எழுத்தை மற்றவர்கள் வியந்தோதுவதற்கு இத்தகைய மக்கள் தொடர்புத்துறை வேலைகள் சு.ரா.வுக்குத் தேவைப்பட்டாலும், அதை சலிக்காமல் செய்வதற்கான உபசரிப்பு மனநிலையை அவர் கொண்டிருந்தார். இந்த மனநிலையை அவர் போலி கம்யூனிசக் கட்சியுடனான ஆரம்ப காலத் தொடர்பில் பெற்றிருக்கலாம். விருந்தோம்பும் "அதிதி தேவோ பவ' உணர்வில் அவர் மற்றவர்களை விட முன்னணியில் இருந்திருக்கலாம்.


 சு.ரா. தனது வீட்டிற்கு இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், போலி கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சண்முகநாதன் போன்றோரையும் வரவேற்று உபசரித்திருக்கிறார். மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் இந்து மதவெறியர்கள் குமரி மாவட்டத்தில் வேர்விட்ட காலத்தில்தான் சண்முகநாதன் அங்கே அடிக்கடி விஜயம் செய்வார். வரும்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போது சுந்தரவிலாசத்திற்கும் செல்வார். சு.ரா.வின் மகன் கண்ணனும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பில் இருந்ததாகக் கூறுகிறார்கள். காலச்சுவடின் அரவிந்தனும் முன்னாளில் ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ்காரர்தான். குஜராத் கலவரத்தின்போது, காலச்சுவடு பத்திரிக்கை, இந்துமதவெறி என்று குறிப்பிடாமலே அதைக் கண்டித்தும், காசு வசூலித்தும் தனது மதச்சார்பற்ற கடமையை ஆற்றியது. இன்னும் ஜெயேந்திரன் பிரச்சினையில் கூட சங்கரமடம் எப்படி நல்ல மடமாக மாறவேண்டும் என்றுதான் காலச்சுவடு அருள் வாக்கு அளித்தது. மேலும், பார்ப்பனியத்தின் அடியாளான தினமலர்தானே காலச்சுவடின் நிரந்தர விளம்பரப் புரவலர்!


 சிறுவனாக இருக்கும்போது கடற்கரைக்குச் சென்ற சம்பவம், அப்போது என்ன சட்டை போட்டிருந்தார், பார்த்த சிப்பி ஓட்டின் டிசைன் முதலியனவற்றையெல்லாம் சு.ரா. நினைவு கூர்ந்தார் என்பதைக் கூரிய அவதானிப்புடன் பதிவு செய்திருக்கும் ஜெயமோகன் மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். கனைக்சனை மட்டும் விட்டுவிட்டார். இது செலக்டிவ் அம்னீஷியாவா, இல்லை தெரிந்தே அழிக்கப்பட்ட வரலாறா? முக்கியமாக, இந்த வரலாற்றில் சு.ரா.வைவிட ஜெயமோகனுக்குத்தான் முதன்மைப்பங்கு உள்ளது. ஜெயமோகனது இலக்கிய வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ்.உடனும், சு.ரா.வுடனும் சேர்ந்தேதான் ஆரம்பித்தது. சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் தனது மனைவி, மகன், வீட்டுநாய் ஹீரோ போன்றவர்களையெல்லாம் இடம் பெறச் செய்த ஜெயமோகன் தனது ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை மட்டும் திட்டமிட்டு மறைத்திருக்கிறார். அப்புறம் சு.ரா.வின் வழிகாட்டலில் அவர் நவீன இலக்கியம் கற்று எழுத ஆரம்பித்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்திலும் சில ஆண்டுகள் எழுதியிருக்கிறார். அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்பு குறித்தும் அதன் பத்திரிக்கையில் எழுதுவது குறித்தும் சு.ரா. என்ன கருத்து தெரிவித்தார் என்பதையெல்லாம் அவர் தந்திரமாக சுய தணிக்கை செய்து விட்டார். சு.ரா. இல்லத்திற்கு நல்லகண்ணு வந்தபோது சு.ரா. ஜெயமோகனை வீட்டிற்கு அழைத்தாராம். அதேபோல சண்முகநாதன் வந்தபோது அழைத்தாரா, சண்முகநாதனுடன் பேசியதை ஜெயமோகனிடம் சு.ரா. பகிர்ந்து கொண்டாரா என்பதெல்லாம் "நினைவின் நதி'யில் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.


 ஜெயமோகனின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும் கடைந்தெடுத்த கம்யூனிச வெறுப்பும், சநாதனச் சார்பும் அவரது சங்கபரிவார் தொடர்பில்தான் உருவாகியிருக்க வேண்டும். காசர்கோடில் போலி கம்யூனிச தொழிற்சங்கத்தின் கம்யூனில் தங்கியதை வைத்து, (நாலு பேர் சேர்ந்து ரூம் எடுத்துத் தங்குவதெல்லாம் கம்யூன் என்றால் திருவல்லிக்கேணி முருகேசநாயக்கர் மான்சனில் தங்கியவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளே) கம்யூனிசம், கட்சி நடைமுறை, தோழர்களின் உளப்பாங்கு ஆகியவற்றைக் கரைத்துக் குடித்ததாக மனப்பாங்கு கொண்டு அதையே கற்பனையில் ஊதிப் பெருக்கி பின்தொடரும் நிழலின் குரல் என்று ஒரு கம்யூனிச வெறுப்பு நாவலையே எழுதிவிட்டார். இதற்கு அதிகமாகவோ நிகராகவோ ஆர்.எஸ்.எஸ். அனுபவமும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். மேலும் விஜயபாரதத்திற்கு அவர் எழுதியதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சங்கபரிவாரின் தமிழகத் தலைமையுடனும் நெருக்கம் இருந்திருக்க வேண்டும். இந்த அனுபவத்தை வைத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையை இணைத்து, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு நாவல் மேலோட்டமாகவேனும் எழுதியிருக்கலாம் அல்லவா? பல ஆண்டுகளுக்கு முந்தைய புகாரின் கதையையெல்லாம் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ரசியாவிலிருந்து பொய்யுடனும், புனைவுடனும் இழுத்து வந்து எழுதியவருக்கு, அருகிலிருக்கும் குஜராத்தில் இந்தியாவே வெட்கித் தலைகுனியும் வண்ணம் நடந்த ஒரு படுகொலையை அறிந்து கொண்டு எழுத மனம் வரவில்லையே, ஏன்? ஒருவேளை விஷ்ணுபுரம் நாவலை வெளியிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் உதவிய ஸ்வயம் சேவகர்களுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்ற நன்றியுணர்வு காரணமாக இருக்கலாம். அல்லது ஆர்.எஸ்.எஸ்.இன் தமிழ்நாட்டுப் புரவலர்களில் ஒருவராக இருக்கும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற தரமான ரசிகர்களை இழக்க நேரிடும் என்ற பயம் கூடக் காரணமாக இருக்கலாம். அத்துடன் உலக முதலாளித்துவச் சந்தையில் தண்டியான கம்யூனிச எதிர்ப்பு நாவல்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்ற காரியவாதக் காரணமும் சேர்ந்திருக்கலாம்.


 இன்றைக்கு இந்து மதவெறியர்கள் மிகவும் அம்பலப்பட்டுள்ள நிலையில் ஜெயமோகன் தனது இமேஜை தோற்றத்தில் மாற்றியிருக்கலாம். ""இந்திய அரசியலில் கம்யூனிசக் கட்சிகள்தான் சற்றே நம்பிக்கை தரும் வகையில் செயல்படுகின்றன'' என்ற சு.ரா.வின் வாக்குமூலத்தை வழிமொழியலாம்; அல்லது ""நான் சி.பி.எம்.முக்குத்தான் ஓட்டுப் போடுகிறேன்'' என்றும் ஜெயமோகன் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இலக்கியமல்லவே. ஒரு இலக்கியவாதியை அவரது படைப்பை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பதுதானே இலக்கியவாதிகளின் கொள்கை. எங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு இலக்கியவாதி எதைப்படைத்தான் என்பதை வைத்து மட்டுமல்ல, எதைப் படைக்கவில்லை என்பதை வைத்தும் மதிப்பிட முடியும் என்கிறோம். தனது இளமைப்பருவத்தையும், ஆதர்சநாயகன் மற்றும் போலி இலக்கியவாதி ஜே.ஜேவையும் தேடி கேரளாவுக்குப் போன சு.ரா தான் வாழ்ந்த குமரிமாவட்டத்தின் இந்து மதவெறியர்களை எதிர்த்து தனது படைப்பில் ஒரு சொல்லைக்கூடச் சேர்க்கவில்லை எனும் போது சீடப்பிள்ளை மட்டும் என்ன செய்யமுடியும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் சு.ராவும் சரி, அவரது தலைமைச் சீடரும் சரி போலி மார்க்சிய ஆதரவு என்ற பெயரில் கம்யூனிச வெறுப்பும், இன்னொருபுறம் தீவிரமான பார்ப்பனிய ஆதரவும் கொண்ட மேட்டிமைத்தனமான இலக்கியவாதிகள் என்றுதான் அறுதியிட முடியும். எழுதியவற்றுக்கும், எழுதாதவற்றுக்கும் இடையில் உள்ள இடைவெளியிலிருந்தும் ஒரு படைப்பாளி யாரென்பதை நாம் கண்டுபிடிக்க முடியும்.


 மதுரை இறையியல் கல்லூரியில் ஒருநாள் தங்கியிருந்த அனுபவத்தை சு.ரா. பின்வருமாறு சொன்னாராம். ""காலம்பற கதவைத் திறக்கிறேன், கொழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓ...ன்னு கத்தி பாடறதுகள். "எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயே'ன்னு... கண்ணீர் வந்துடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும்? என்ன படிச்சிருக்கும்ங்க? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா? ஏதோ சாப்பாடு, எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உட்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்தி மேல மட்டுமில்ல, காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு... அதனால் யாருக்கு என்ன இலாபம்? அன்னியப்பட்டுப் போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன நடக்கும்? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை...''


 இதை பிளான் போட்டுச் செய்தது வேறு யாருமல்ல, நாங்கள்தான். இந்தப் பாடல் நாங்கள் வெளியிட்டிருக்கும் "அசுரகானம்' என்ற பாடல் ஒலிப்பேழையில் உள்ள பாடலின் சரியான வரி... ""ஆயிரங்காலம் அடிமை என்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே..'' என்று வரும். இந்தப் பாடல் ஒலிப்பேழை பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய மாதங்களில் இந்து மதவெறியை எதிர்த்து வெளியிடப்பட்டது. இந்தப் பேழை உழைக்கும் மக்களையெல்லாம் இந்துக்கள் என்று சித்தாந்த ரீதியாக அணிதிரட்டிய ஆர்.எஸ்.எஸ்இன் வருணதர்ம மோசடியைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது. அக்கிரகாரம், சேரி என்று பிரித்து வைத்து இழிவாக நடத்தியது, அப்துல்காதரா, அனந்தராமய்யரா என்று உண்மையை எள்ளலுடன் கேள்வி கேட்டது. நந்தன், ஏகலைவன், சம்பூகன் போன்ற பார்ப்பனியத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று மாந்தர்களின் கதைகளை உழைக்கும் மக்களுக்கு நினைவுபடுத்தியது. முசுலீம்களைத் தோற்றத்திலும், சாரத்திலும் துரோகிகளாகச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் சதியை எடுத்துக் காட்டியது. சு.ரா. குறிப்பிட்டதாக ஜெயமோகன் பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல் பல நூற்றாண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமரென்று இழிவுபடுத்தி விட்டு இப்போது அரிஜன் என்று அழைக்கும் காந்தி, காங்கிரஸ், பா.ஜ.க.வின் பார்ப்பனமயமாக்கத்தை நூறாண்டுக் கோபத்துடன் கேள்வி கேட்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தப் பாடல். எல்லா தலித் இயக்கங்களும் இந்தப் பாடலையே தமது தேசிய கீதம் போல அங்கீகரித்து மேடைகள் தோறும் பாடினர். தங்கள் வரலாற்றுத் துயரத்தை போர்க்குணத்துடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடலை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றினர். இந்தப் பாடல் ஒலிப்பேழைகளின் விற்பனை பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கும். இதன் தொடர்ச்சியாக திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ்மக்கள் இசைவிழா போன்ற நிகழ்வுகள் இந்து மதவெறியர்களை உழைக்கும் மக்களிடமிருந்து கருத்து ரீதியாகத் தனிமைப்படுத்தின. பார்ப்பன இந்து மதவெறியர்களை எதிர்த்த எமது போராட்ட வரலாறு அவர்களை எப்படி வெல்ல முடியும் என்ற பாடத்தை, புரிதலை இந்திய அரசியல் அரங்கில் முதன்முதலாகச் செய்து காண்பித்தது. பார்ப்பனியத்தை நெஞ்சில் ஏற்றிப் போற்றி வைத்திருக்கும் சு.ரா. ஜெயமோகன் போன்றோருக்குத்தான் இந்தப் பாடல் கடுங்கசப்பை ஏற்படுத்த முடியும். இந்த உண்மையை ஆய்வுகள் ஏதுமின்றியே எமது பாடல் ஒன்று போகிற போக்கில் நிரூபித்திருப்பது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைகிறோம்.


 சு.ரா.வின் அரசியல் சமூகப் பார்வை என்பது துக்ளக் சோ ராமஸ்வாமியிடம் கற்றுக் கொண்டதுதான். சோவை அவர் முக்கியமான அரசியல் விமர்சகராகக் கருதியதைப் பதிவு செய்திருக்கிறார். காந்தி நல்லவர், காமராஜ் ஆட்சி பொற்காலம், தமிழகத்தை திராவிட இயக்கம்தான் சீரழித்தது... போன்ற சோவின் கருத்துக்களை சு.ராவும் பல இடங்களில் பிரயோகித்திருக்கிறார். எனினும், சோவை ஒரு பாசிஸ்ட் என்று அழைப்பது போல சு.ராவை நாம் அழைக்க முடியாது. ஏனென்றால் சு.ரா.வின் அரசியல் சிந்தனையில் கோமாளித்தனமும் பாசிசமும் பிரியுமிடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ""திராவிட இயக்கத்துக்கும் இலக்கித்துக்கும் சம்பந்தமே கிடையாது, கம்யூனிஸ்டுகள் இலக்கிய விரோதிகள்'' என்பவை சு.ராவின் புகழ் பெற்ற பத்து கருத்துகளில் முக்கியமானவை. அரசியல்வாதிகள் இலக்கியத்தில் நுழைந்தால் பூசையறையில் நுழைந்த பன்றிகளாக அவர்களைக் கருதி உறுமுவது, சு.ரா. குருகுலத்தின் மரபு. ஆனால் அரசியல் சமூக விவகாரங்களில் தெக்கு வடக்கு தெரியாத இந்தக் கோமாளிகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிப்பார்கள். "பெரியார் எதிர்மறை அரசியல், காந்தியிசம் நேர்மறை அரசியல்' என்று உளறுவார்கள். இப்படி உலக விவகாரங்கள் அனைத்திற்கும் தம்மைத்தாமே அத்தாரிட்டிகளாக நியமித்துக் கொள்வது பற்றி இவர்கள் எள்ளளவும் கூச்சப்பட்டதுமில்லை.


 சு.ரா.விடம் நட்பு கொண்டிருந்த அனைவரும் அவரது பெரியமனிதத் தோரணை காரணமாக, தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி மனச்சமாதானம் அடைந்திருக்கின்றனர். சொந்தப் பிரச்சினைகள் பற்றி யாரிடமாவது வாய் திறந்தால், அதையும் அச்சிலேற்றி அசிங்கப்படுத்தி விடுவார்களோ என இலக்கியவாதிகள் ஒருவரையொருவர் ஐயுறும் ஆவிகள் நிறைந்த சிற்றிலக்கியச் சூழலில், சு.ரா. மட்டும் பாவ மன்னிப்புக் கூண்டில் காதை வைத்திருக்கும் பாதிரியாரைப் போல பலருக்கும் ஆறுதலளித்து வந்தார். அவருடைய இலக்கிய அந்தஸ்தைத் தீர்மானித்த காரணிகளில் புரவலர் பாத்திரத்துக்கு இணையானது இந்தப் பாத்திரம். கவிஞர் சல்மா, சு.ராவுக்கான தனது அஞ்சலிக் குறிப்பில், ""ஒருமுறை என் கணவர் என்னை அடித்து விட்டதாக நான் எழுதிய கடிதத்தைக் கண்டு தொலைபேசியில் அழைத்து, ""ஏம்மா, உங்கள அடிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது'' என்று கேட்டவரின் குரலில் உணர்ந்த துயரம் எனக்கு வாழ்நாள் முழுக்கத் தேவையான குற்றவுணர்வை இன்றும் தந்து கொண்டிருக்கிறது'' என்று எழுதியிருக்கிறார். இதையே சல்மா ஒரு இலக்கிய அறிவற்ற பெரியவர் யாரிடமாவது கூறியிருந்தால், அவர் சல்மாவின் புருசனைக் கூப்பிட்டு எச்சரித்திருப்பார். விவகாரம் பஞ்சாயத்து செய்யப்பட்டிருக்கும். அல்லது போலீசுக்காவது போயிருக்கும். சு.ரா.விடம் சொன்னதில் பயனென்ன? வாங்கிய அடி போதாதென்று போனசாக குற்றவுணர்வு! உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம் விடை சொல்லும் சு.ரா.விடம் சல்மாவின் பிரச்சினைக்கு ஏன் தீர்வில்லை? ஏனென்றால் சு.ரா.வின் அந்த புகழ் பெற்ற பத்து கருத்துக்களில் இந்த சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வில்லை.


 ஒரு மென்மையுள்ளம் கொண்ட முதியவரை, இப்படி ஏளனம் செய்வதா என அவரது அபிமானிகள் வருந்தலாம். இந்த குரு சிஷ்ய கோழைகள், கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேலி செய்து சிரித்ததை ஜெயமோகன் தனது நூலில் குறிப்பிடுகிறார். அச்சுத மேனனும் இ.எம்.எஸ்ஸும் கையில் துப்பாக்கியுடன் தடுப்பரணின் பின்னே அமர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனை செய்து இவர்கள் கண்ணீர் வருமளவு சிரிப்பார்களாம். கொத்தி எடுக்கவேண்டிய அளவுக்கு உடல் முழுவதும் பார்ப்பனக் கொழுப்பு நிறைந்த இந்த அற்பர்கள் விசயத்தில் இரக்கம் காட்டுவது அபாயகரமானது.


 கட்டுரையின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டபடியால் ஜெயமோகனது "நினைவின் நதி' என்று பெயரிடப்பட்ட அற்பவாதக் குட்டையை கடைசியாக ஒருமுறை மூக்கைப் பொத்திக் கொண்டு பார்த்து விடலாம். இந்த நூலில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று இரண்டு பார்வைகள் உள்ளன. கிட்டப்பார்வையில் சு.ராவின் அற்பமான வாழ்க்கை ரசனை விசயங்களும், தூரப்பார்வையில் சு.ராவைவிட ஜெயமோகன் எப்படி ஒரு பெரிய எழுத்தாளர் ஆனார் என்பதும் பதிவாகியிருக்கின்றன. இடையில் குட்டையின் நாற்றத்தை அடக்குவதற்கு சு.ராவின் சாதாரண மனிதாபிமான நடவடிக்கைகள், பதிவுகள் அசாதாரணமாக்கப்பட்டு ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன. ""சிற்றிலக்கியவாதிகளின் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்'' என்று பறைசாற்றுவதற்காகவே சு.ராவின் இறப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அவரது தன்னெழுத்துத் தற்காதலியத்தை இலக்கிய வாசிப்பு மனங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கென்றே இந்த நூல் வெகு அவசரமாக எழுதப்பட்டிருக்கிறது. இருவருக்கும் நடந்த உறவு, பிரிவு, போராட்டம் அனைத்தும் தங்கப்பதக்கம், கௌரவம் ரேஞ்சுக்குச் செதுக்கப்பட்டுள்ளது. சென்டிமென்டுக்கு வீழப் பழகியிருக்கும் வாசிப்பு மனம் இதை மாபெரும் பாசப் போராட்டமாய்க் கற்பிதம் செய்து கொள்ளும். உண்மையில் இருவருக்கும் நடந்த பிரச்சினை என்ன? சு.ரா.வைத் தேடி ஜெயமோகன் வந்தார். அவர் உதவியால் இவர் எழுத்தாளரானார். நாவல்கள் எழுதினார். சீடன் தன்னை விஞ்சுவதாக எண்ணியபோதெல்லாம் குரு அஞ்சினார். அவர் அஞ்சும் தருணங்களுக்காகவே காத்திருந்து இவர் குரூரமாக ரசித்தார். "தான் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்' என்பதை குருவின் வாயிலிருந்தே வரவழைக்க ஜெயமோகன் அவரது தொண்டை வரை விரலை விட்டு நோண்டினார். ரத்தம் கக்கிய குரு சத்தம் போடாமல் அமெரிக்காவுக்குத் தப்பினார். இந்த வரலாறு எதுவும் எங்கள் சொந்தச் சரக்கு அல்ல, ஜெயமோகன் தந்த சரக்குகள்தான்.


 இந்தக் குட்டை முழுவதும் எஸ்ரா பவுண்டு, கீஸ்லர், டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கி முதலான உலக இலக்கியவாதிகள், நல்லகண்ணு, இ.எம்.எஸ்., காந்தி முதலான அரசியல்வாதிகள், க.நா.சு., லா.ச.ரா போன்ற உள்ளூர் இலக்கியவாதிகள், பட்டுப்புடவை, சினிமா போஸ்டர் முதலான ஜடப் பொருட்கள் போன்ற அனைத்தையும் தமது தத்துவ வாளால் கலக்குகிறார்கள் குருவும் சீடரும். ஆனால் தத்தம் சொந்தப் படைப்புகள் பற்றிய விவாதமோ, கருத்துப் பரிமாற்றமோ வரும்போது மட்டும் ஒரு மகாமவுனம் இருவர் மீதும் கவிந்து விடுகிறது. அந்த மவுனத்தின் ஊடாகவே ஒரு எழுதப்படாத உடன்பாடு அவர்களுக்கிடையில் கையெழுத்தாகி விடுகிறது. ""என்னைப் பற்றி நீ பேசாதே, உன்னைப் பற்றி நான் பேசவில்லை. உலகத்தைப் பற்றி நாம் பேசுவோம்'' என்பதே அந்த உடன்படிக்கையின் சாரம். அதுவும் வெகு நாள் நீடிக்க முடியவில்லை. நாச்சார் மட விவகாரமாக வெளியே வந்து புழுத்து நாறியது.


 வாழ்க்கையில் தமது குறை நிறைகளை மனம் திறந்து பரிசீலிக்கும் சாதாரண உழைக்கும் மக்களிடம் நிலவும் நாகரிகம் கூட இல்லாத இரண்டு அற்பங்கள், தமிழிலக்கிய உலகில் முடி சூட்டிக் கொள்வதற்காக இலக்கியப் போர் புரிந்ததும், இந்த ஆபாசத்தை ஷகீலா பட ரசிகனின் கிளுகிளுப்புணர்ச்சியோடு பார்த்து ரசித்துப் பரிமாறிக் கொள்ளும் கும்பல் தன்னை "சிற்றிலக்கிய உலகம்' என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ள முடிவதும்தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் அவமானங்கள்.


· இளநம்பி