"ரிலையன்ஸ் ஃபிரஷ்' முற்றுகை

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
 ""தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு'' என்று வேகாத வெயிலில் கூவிச் செல்லும் கூடைக்காரப் பெண்கள், காய்கறிச் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் கூவி அழைக்கும் வியாபாரிகள், சிறுவயது முதலே நமக்கெல்லாம் அறிமுகமான மளிகைக் கடை அண்ணாச்சிகள், கண்முன்னே இறைச்சியை அறுத்து எடைபோட்டுத் தரும் கறிக்கடை பாய்கள்... இவர்கள் யாருமே இல்லாத நகரத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ""அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டிவிட்டு இவர்களுடைய வருமானம் மொத்தத்தையும் நாமே சுருட்டிக் கொண்டால் என்ன?'' என்று நினைக்கும் ஒரு கொடூரமான முதலாளியைக் கற்பனை செய்து பாருங்கள்!


 அவன்தான் ரிலையன்ஸ் அம்பானி. சென்னை நகரின் காய்கறி வியாபாரம் நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய். இறைச்சி, மளிகை வியாபாரமோ இன்னும் பல கோடி. இந்தச் சில்லறை வணிகத்தை நம்பித்தான் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தத் தொழில் முழுவதையுமே விழுங்குவதற்காகப் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் இந்நாட்டு முதலõளிகள். அமெரிக்க வால்மார்ட்டுடன் ஏர்டெல் கம்பெனி முதலாளி மிட்டல் கூட்டு, ரிலையன்ஸ் அம்பானி ஒரு பிரெஞ்சுக் கம்பெனியுடன் கூட்டு, டாடா ஒரு ஆஸ்திரேலியக் கம்பெனியுடன் கூட்டு. செல்போன் துறையில் ஏகபோகமாகக் கொள்ளையடிப்பதைப் போலவே காய்கனிமளிகை வியாபாரத்திலும் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து இறங்கியிருக்கிறார்கள் இந்த முதலாளிகள்.


 ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் சென்னை நகரில் 14 இடங்களில் திறக்கப்பட்டு விட்டன. சென்னையில் மட்டும் 100 இடங்களில் கடை தொடங்கப் போவதாகவும் தமிழகம் முழுவதும் கடை திறக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது ரிலையன்ஸ். இன்னும் டாடா, வால்மார்ட் போன்ற நிறுவனங்களும் கடை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு விட்டன.


 தமிழகத்தில் காய்கனி விளையும் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து அவற்றை சென்னையில் உள்ள குளிரூட்டப்பட்ட கிடங்கில் இறக்கி, அங்கிருந்து தன் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது ரிலையன்ஸ். "கொள்முதல் விலைக்கு மேல் இவ்வளவு சதவீதம் லாபம்' என்ற அடிப்படையில் காய்கனிகளின் விலையை ரிலையன்ஸ் தீர்மானிப்பதில்லை. சென்னை நகரில் 14 கடைகளிலும் "குறிப்பிட்ட காய்க்கு இன்ன விலை' என்றும் நிர்ணயம் செய்வதுமில்லை. மாறாக, தங்கள் கடைக்கு அருகாமையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காலையிலேயே விலை விசாரித்து, அங்கே சிறு வியாபாரிகள் வைக்கும் விலையை விட 10, 20 காசுகள் குறைத்து விலையைத் தீர்மானிக்கிறது ரிலையன்ஸ். "சிறு வணிகர்களை விரைவாக ஒழித்துக் கட்டுவது' என்ற ஒரே நோக்கத்துடன் புதிது புதிதாக இலவசத் திட்டங்களை அறிவிப்பது, வாடிக்கையாளர்களை நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை உறுப்பினர்களாக்குவது போன்ற பல வழிமுறைகளைக் கையாள்கிறது.
 சென்னையில் ரிலையன்ஸ் கடைகள் தொடங்கப்பட்ட இடங்களிலெல்லாம் மார்க்கெட்டுகளும் காய்கறிக் கடைகளும் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டன. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து, காய்கனிகள் விற்பனையாகாமல் அழுகி நட்டமாகி, கடனைக் கட்ட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு வணிகர்கள். கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையிலோ லாரிகளின் வரத்தே குறைந்து விட்டது. அங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வருவாய் குறைந்து விட்டது. விவசாயிகள் தற்கொலையைப் போல, "சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் தற்கொலை' என்ற கொடுமையும் நம் கண் முன்னே அரங்கேறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.


 இந்தச் சிறுவணிகர்கள் என்பவர்கள் யார்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்... பரிதாபத்துக்குரிய இந்த மக்களுடைய வயிற்றில் அடித்து சொத்து சேர்ப்பதற்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசாங்கம்.


 அம்பானி காய்கறிக்கடை வைக்கவில்லை என்று எந்தத் தமிழன் அழுதான்? அரசாங்க ஆஸ்பத்திரியில் நாய்க் கடிக்கு மருந்தில்லை, அம்மைக்குத் தடுப்பூசி இல்லை, அரசாங்கப் பள்ளிக்கூடத்துக்கு கூரையே இல்லை, மீறிப் படித்து வந்தாலும் வேலையில்லை. காசில்லாதவனுக்கு கக்கூஸ் கூட இல்லை. இதற்கெல்லாம் வழி செய்யத் துப்பில்லாத அரசாங்கம், கையை ஊன்றிக் கரணம் போட்டு சொந்தமாக ஒரு தொழில் நடத்தி மானத்தோடு கஞ்சி குடித்தால், அதில் மண் அள்ளிப் போட அம்பானியை அழைத்துக் கொண்டு வருகிறது.


 ""அம்பானியைப் போன்ற முதலாளிகள் கையில் சில்லறை வணிகத்தை ஒப்படைத்தால்தான் அமெரிக்காவைப் போல இந்தியாவும் வல்லரசாக முடியும்'' என்கிறார் ப.சிதம்பரம். ""மண்டிக்காரர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்கும்'' என்கிறது அரசு. மண்டிக்காரர்கள் ஒழிந்தபின் என்ன நடக்கும்? நாடு முழுவதும் காய்கனிகளின் விலைகளை நான்கைந்து பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கும். நவீன முறையில் காய்கனி உற்பத்தி செய்வதற்காக டாடாவும் ரிலையன்சும் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பதால் சந்தையில் தங்கள் காய்கனிகளை இறக்கி விலையைப் படுபாதாளத்துக்குத் தள்ளவும் அவர்களால் முடியும்.


 சில்லறை வணிகர்களை ஒழித்துவிட்டால் வாடிக்கையாளர்களும் அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும். "உற்பத்தி  விற்பனை' என்ற இரண்டு முனைகளும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டால் அதன்பின் வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றாலும் அவனிடம்தான் வாங்கியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.


 இப்படி சில்லறை வணிகம், விவசாயம் முதல் விமான நிலையம் துறைமுகம் வரை எல்லாத் தொழில்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விடும் கொள்கைக்குப் பெயர்தான் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்'. அன்று வணிகம் செய்ய வந்து நாட்டையே அடிமையாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனியைப் போல இன்று பன்னாட்டுக் கம்பெனிகள் வந்திருக்கின்றன. உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளின்படி அவர்களைப் பாக்கு வைத்து அழைத்து எல்லாத் துறைகளையும் ஏகபோக முதலாளிகளிடம் ஒப்படைக்கின்றன மத்திய மாநில அரசுகள். நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக எல்லா ஓட்டுக் கட்சிகளும் பின்பற்றி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பது போல நடித்து மக்களை ஏமாற்றுகின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கையை அமல்படுத்துகின்றனர்.


 ""ஒரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்கு இலட்சக்கணக்கான ஏழை மக்களைக் காவு கொடுக்கிறார்களே, இவர்கள் ஒரு நியாய அநியாயத்துக்குக் கூட அஞ்ச மாட்டார்களா?'' என்று சிலர் அங்கலாய்க்கலாம். இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வங்கி, இன்சூரன்சு, தொலைபேசி ஆகிய அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறார்களே, அதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நர்சரி பள்ளியா பத்தாயிரம், பொறியியல் பத்து இலட்சம், மருத்துவம் இருபது இலட்சம் என்று கல்வி வியாபாரத்தை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? தொழிலாளர்களை 12 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்க முதலாளிகளை அனுமதித்திருக்கிறார்களே அதில் நியாயமிருக்கிறதா? சிறப்புப் பொருளõதார மண்டலம் என்ற பெயரில் இந்தியச் சட்டங்கள் எதற்கும் கட்டுப்படாத தனிப் பிராந்தியங்களை இந்திய நாட்டுக்குள்ளேயே உருவாக்கி அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் சுயாட்சி நடத்த அனுமதித்து இருக்கிறார்களே அதில்தான் நியாயமிருக்கிறதா? எதிலும் நியாயமில்லை.


 இத்தகைய எல்லா அநீதிகளுக்கும் காரணமான எதிரிகள் ஓரணியாய் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளும் அவர்களுடைய கொள்ளை இலாபவெறிக்காக மக்களுடைய வாழ்க்கையைக் காவு கொடுக்கும் ஓட்டுக் கட்சிகளும்தான் நம்முடைய பொது எதிரிகள். சிறு வணிகர்களின் வாழ்க்கையைச் சூறையாடும் இவர்கள்தான் அரசாங்கத்தின் தானியக் கொள்முதலை நிறுத்தியவர்கள். விளைபொருள்களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்யவிடாமல் தடுத்து இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியவர்கள் இவர்கள்தான். கல்வியையும் மருத்துவத்தையும் கடைச்சரக்காக்கி ஏழைகளுக்கு அவற்றை எட்டாக்கனியாக்கியதும், பொதுத்துறையைத் தனியார்மயமாக்கி அரசுத்துறைக்கு ஆளெடுப்பை நிறுத்தியதும் இவர்கள்தான்.


 எனவே இன்று சிறுவணிகத்தை விழுங்க வந்திருக்கும் ரிலையன்ஸ் அம்பானி என்பவன் அவர்களுக்கு மட்டும் எதிரி அல்ல. நம் அனைவருக்கும் அவன் பொது எதிரி. ஆகவே, சிறு வணிகர்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது நம் கடமை என்பதை உணர வேண்டும். ரிலையன்ஸ் கடையில் காய்கனி வாங்குவதென்பது எதிரியின் கரத்தை வலுப்படுத்தும் செயல் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கவேண்டும்.


 ""என்ன விலை கொடுத்தாலும் ரிலையன்சுக்கு விற்கமாட்டோம்'' என்று விவசாயிகள் அவன் காய்கனிக் கொள்முதலையே நிறுத்த வேண்டும். ""எத்தனை இலவசம் கொடுத்தாலும் ரிலையன்சில் வாங்க மாட்டோம்'' என்று மக்கள் அனைவரும் அவன் விற்பனையை முடக்க வேண்டும். ரிலையன்சின் செல்போன், பெட்ரோல் பங்க், இன்சூரன்சு ஆகிய அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்.


 ஒவ்வொரு தொழிலாக, ஒவ்வொரு துறையாக நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டே வருகிறார்கள் எதிரிகள். பல்வேறு தொழில்களில் நட்டமடைந்தவர்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் முதியவர்களுக்கும் சோறு போடும் வடிகாலாக இருந்து வருகிறது சில்லறை வணிகம். இதையும் பறி கொடுத்து விட்டால் இனி மாறிக் கொள்வதற்கு வேறு எந்தத் தொழிலும் மிச்சமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் நசிந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதைவிட அவனா நாமா என்று பார்த்துவிடுவதுதான் தீர்வு.


 இந்த அரசாங்கமோ அல்லது பிற எதிர்க்கட்சிகளோ அம்பானியையும், டாடாவையும் விரட்டப் போவதில்லை. ஓட்டுக் கட்சிகளிடம் முறையிடுவதும், ""அவர்களே செய்யாத போது நாம் என்ன செய்து விட முடியும்'' என்று புலம்பிக் கொண்டு முடங்கி விடுவதும்தான் நாம் தொடர்ந்து தோல்வியடையக் காரணம். பதவியும் அதிகாரமும் கோடி கோடியாய் சொத்தும்தான் ஓட்டுக் கட்சிகளின் குறிக்கோள். அவர்கள் நம்மை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் எதிரிகள்.


 ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டிப் போராடுவதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி. வேறு வழி எதுவும் இல்லை. சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டுவோம்! கோடீசுவரக் கொள்ளையன் அம்பானியை விரட்டுவோம்! ரிலையன்சுக்கு எதிரான போராட்டத் தீ தமிழகமெங்கும் பற்றிப் படரட்டும்!