Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இன்று ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு காய்கனி வாங்கச் செல்பவர்கள் யார்? எல்லோரும் அம்பானியின் மாமன் மச்சான்களா அல்லது டாடா பிர்லாவின் சொந்தக்காரர்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி இன்சூரன்ஸ் ஊழியர்கள் கம்ப்யூட்டர் கம்பெனிகளின் படித்த கொத்தடிமைகள் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் ரிலையன்ஸ் கடையை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


அங்கே போய் காய்கறி வாங்குவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கைக்கே குழி பறித்துக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். "மலிவு, சுத்தம், இலவசம்'' போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் மயங்கி, உலகப் பணக்காரன் அம்பானியை மேலும் பணக்காரனாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேடில் உண்ணாவிரதம் இருந்தால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும். "இத்தனைக் காலமும் உங்கள் வீடு தேடி வந்து வியாபாரம் செய்த எங்களுடைய வாழ்க்கையில் மண் அள்ளிப் போடுவது நியாயமா?'' என்று அங்கே காய்கனி வாங்கச் செல்பவர்களை மடக்கி நியாயம் கேட்கவேண்டும்.


"ஏ.சி. கடையையும், வண்ண விளக்கையும், பாலித்தின் பாக்கெட்டையும் பார்த்தவுடன் இத்தனைக் காலமும் மளிகை சாமான் வாங்கிய அண்ணாச்சி கடையை மறந்துவிடுவீர்கள் என்றால், நாளைக்கு அம்பானி கடையில் அழகான பிள்ளை விற்றால், பெத்த பிள்ளையைக் கூட குப்பைத் தொட்டியில் வீசி விடுவீர்களா?'' என்று சுருக்கென்று தைப்பது போல அவர்களிடம் கேட்கவேண்டும்.


"ஒரு ரூபாய் மலிவாகக் கொடுக்கிறான் என்பதற்காக 20,30 வருடமாக உங்களுக்குப் பொருள் விற்ற எங்களை ஒரே நாளில் தூக்கி எறிகிறீர்களே, உங்களை விடக் குறைவான சம்பளத்துக்கு நீங்கள் செய்யும் வேலையைச் செய்ய பல பேர் தயாராக இருப்பதால், 10,20 வருசம் சர்வீஸ் ஆன உங்களை வேலைநீக்கம் செய்வதாக உங்கள் நிர்வாகம் கூறினால் அதையும் ஒப்புக் கொள்வீர்களா?'' என்று மண்டையில் அடித்தாற்போலக் கேட்க வேண்டும்.


"கேவலம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாகக் கொடுக்கிறான் என்பதற்காக இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களையும், மக்களுடைய வரிப்பணத்தையும், நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தையில் போட்ட பணத்தையும் திருடி சொத்து சேர்த்த ஒரு கிரிமினலின் கடை வாசலில் கியூவில் நிற்கிறீர்களே உங்களுக்கு இது அவமானமாக இல்லையா?'' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல அவர்களைக் கேட்க வேண்டும்.


தெரியாமல் தவறு செய்யும் படித்த முட்டாள்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்; தெரிந்தே தவறு செய்யும் காரியவாதிகளிடம் காறி உமிழ்வதைப் போலப் பேசவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாக சென்னை நகரின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இந்த பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும்.
எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடை காய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீடாக இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.