பிரான்சில் தொடரும் இனவாத வன்முறைகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் நேரடியாகவே தொடர்புடையவை. வன்முறையை கட்டுப்படுத்தல் என்ற நிறவெறிக் கூச்சலே, அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் என்ற நம்பிக்கையே வன்முறையை ஊக்குவிக்கின்றது.

 அந்த வகையில் பொலிசாரின் நடத்தைகள் மூலம், வன்முறை மேலும் தீ விட்டு எரியும் பிரச்சனையாக மாற்றப்படுகின்றது. பின் இதைக் கட்டுப்படுத்தி காட்டுவதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாகிவிட முடியும் என்ற இன்றைய உள்துறை அமைச்சரின் அரசியல் வியூகம், எதிர்வினையான வன்முறையாக மாறுகின்றது. இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தும் இனவாதம் சார்ந்த அரசியல் அணுகுமுறையே, தீவிர நாசிக் கட்சியான தேசிய முன்னணி அரசியலாக கடந்த காலத்தில் இருந்து வந்தது. அதை இன்று ஆளும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் தனது அரசியல் கோரிக்கையாக்கி, வன்முறையை எரியவிட்டுள்ளார்.

 

பாரிஸ் சுற்றுப்புறங்களில் தொடங்கிய வன்முறை படிப்படியாக பிரான்ஸ் முழுக்க பரவிப் படர்ந்து வருகின்றது. 27.10.2005 அன்று 15, 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயர் அழுத்த மின்சார மின் அழுத்திக்குள் சிக்கி இறந்து போன நிகழ்வைத் தொடர்ந்தே, இந்த வன்முறைகள் பீறிட்டுக் கிளம்பின. சம்பந்தபட்ட இருவரின் மரணம் ஏதோ ஒரு வகையில் பொலிஸ்சாருடன் தொடர்புடையதாகவே இருந்தது. இம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி சரியான உண்மையான தரவுகளை பெறமுடியாது உள்ளது. பொலிஸ் தரப்பு செய்திகளே பொதுவான செய்தியாக, உத்தியோகபூர்வமற்ற செய்திகள் பற்பலவாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் பொலிசார் இருந்துள்ளனர் என்பதும் உண்மை. பொலிசாருக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது மர்மாகவே உள்ளது. மின் அழுத்தியைச் சுற்றி இருந்த அண்ணளவாக 4 மீற்றர் உயரமான மதிலை எப்படி அவர்கள் கடக்க முடிந்தது என்பது, பல மர்மங்கள் நிறைந்த கேள்வியாக எம்முன் உள்ளது. சம்பந்தபட்ட இருவரும் இதுவரை எந்தக் குற்றத்திலும் ஈடுபட்ட ஆதாரங்கள் கூட கிடையாது. இப்படி சம்பவம் மர்மமாகவே உள்ளது. இச் சம்பவம் ஒருபுறம். நாம் பிரான்சின் இந்த நிலையை சரியாக புரிந்துகொள்ள, இந்த சம்பவத்துடன் மட்டும் வைத்து நிலைமையை ஆராயமுடியாது.

 

1.இருவரின் மரணத்துடன் பாரிஸ் புறநகரப் பகுதியிலும், பின் பிரான்ஸ் தேசம் முழுக்க இன வன்முறைகள் நடப்பதற்கான சமூக அடிப்படைகள் என்ன?

 

2.இந்த வன்முறைக் கலவரங்களில் யார் ஏன் ஈடுபடுகின்றனர்?

 

3.இது பற்றிய பல்வேறு தரப்பு சார்ந்த கருத்துகள் என்ன?

 

4.தமிழ் தரப்பின் கருத்துகள் என்ன?

 

நாம் இதற்குள் கட்டுரையை ஆய்வு செய்வது அவசியமாகி விடுகின்றது. பொதுவாக இது பற்றிக் கருத்துக் கூறுவோர் பொலிசை எதிர்த்து அல்லது ஆதரித்து விவாதம் செய்வோராக சமூகம் பிளவுண்டுள்ளது. இதற்குள் அங்கு இங்கும் கருத்துச் சொல்வோரும் உள்ளனர்.

 

உண்மையில் இதை வன்முறைக்குள்ளும் மற்றும் பொலிஸ் சட்ட ஒழுங்குக்குள்ளும் வைத்து விடையத்தை புரிந்துகொள்ளவே முடியாது. அப்படி பார்ப்பதே பெரும்பாலானோரின் சிந்தனையாக உள்ளது. உண்மையில் என்ன நடக்கின்றது? ஏன் இவை நடக்கின்றது?

 

குறித்த சம்பவங்கள் இரண்டு மரணங்களின் எதிர்வினையல்ல. இவை திட்டமிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் அல்ல. மாறாக தன்னெழுச்சியான பிரஞ்சு அல்லாத சமூகத்தின் எதிர்வினை நிகழ்;சியே. பிரான்சில் இந்த வருடம் மட்டும் நகர்ப்புற கெரிலா தாக்குதலுக்கு உட்பட்டு 30000 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றால், இ;தன் சமூக விளைவுகள் தான் என்ன?. பிராஞ்சு சமூகத்தில் அன்றாடம் வன்முறைகள் நிகழ்கின்றன என்பதும், இன்றைய சம்பவங்கள் ஒரு எழுச்சியாக உள்ளது அவ்வளவே. இந்த வன்முறைகள் நேரடியாக, வெள்ளையின மக்களை குறிவைத்த ஒரு தாக்குதலாக நடப்பதில்லை. மாறாக பொருட்களை சேதமாக்குவதாக, பொலிசுடன் மோதுவதாக உள்ளது. இங்கும் இன அடிப்படையில் திட்டமிட்டு தெரிவு செய்த தாக்குதலாக நடப்பதில்லை. குறிபட்ட இனம் பெரும்பான்மையாக தாக்குதலில் ஈடுபடும் போது, தனது இனத்தைத் தவிர்த்து அல்லது சலுகை வழங்கி வன்முறையை நடத்துவதில்லை. இது மிக முக்கியமான ஒரு அம்சம் கூட. உதிரியான களவுகளின் போது மட்டும் மனிதர்கள் தாக்கப்படுவதும், இனம் கண்ட வகையில் சிறுபான்மை இனங்கள் மேலானதாக இவை அமைகின்றது.

 

உண்மையில் இந்த வன்முறையின் மூலம் என்பது, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கைகள் தான் காரணமாகும்;. சமூகங்களை பிளந்து அவர்களை ஒடுக்க கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியின் எதிர்வினைகள் தான் இவை. பிராஞ்சு வெள்ளையின ஆளும் வர்க்கம், திட்டமிட்ட வகையில் வெள்ளையினம் அல்லாத பிரிவுகள் மீதான ஒடுக்குமுறையின் எதிர்வினை தான் இந்த வன்முறைகள். குறிப்பாக பல பத்து வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தாலும், பிரஞ்சு பிரஜாவுரிமை இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இதனால் அண்ணளவாக 20 முதல் 30 லட்சம் மக்கள் வாக்களிக்கும் உரிமையற்றவர்களாகவே உள்ளனர். பிரஞ்சு அல்லாத வாக்குரிமையற்ற இந்த மக்களையிட்டு, வெள்ளை இன நிற அரசியல் வாதிகளுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. விரும்பினால் பிச்சை போடுவார்கள் அவ்வளவே. இதனால் பிராஞ்சு அரசியல் இயல்பாகவே வெள்ளையினத்தவரை பிரதிநிதித்துவப் படுத்திவிடுகின்றது.

 

இந்த வன்முறையில் ஈடுபடுவர்களின் முதல் தலைமுறையினர் யார் என்று பார்த்தால், பிரஞ்சு தேசத்தை நிர்மாணித்த அரையடிமைக் கூலிகள். பிரான்சின் இன்றைய அழகிய தோற்றத்தை நிர்மாணிக்க இறக்குமதியான அன்றைய அரை அடிமைக் கூலிகளின் குழந்தைகள் தான், இன்று அதை வன்முறை மூலம் சேதமாக்க முனைகின்றனர். தமது வாழ்வை இழந்து எரிந்து கிடக்கும் சமூகம், அனைத்தையும் எரிக்கின்றது. தனக்கும் தனது வாழ்வுக்கும் உதவ மறுத்த கல்வி நிலையங்கள், தான் நுகர முடியாத வாகனங்கள் என அனைத்தையும் எரியூட்டுகின்றது.

 

இந்த தலைமுறையின் முதல் தலைமுறை இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் நகரத்தை மீள நவீனமாக கட்டியமைக்க, அரை அடிமைகளை பிரான்ஸ் ஏகாதிபத்தியம் அரபு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்தனர். அவர்களை தங்க வைக்கவென நகர்புறச் சேரிகளை உருவாக்கி, அதில் அரை அடிமைகளாகவே வாழ் நிர்ப்பந்தித்து சுரண்டியது பிரஞ்சு முதலாளி வர்க்கம். மிகக் கேவலமான வாழ்க்கை முறையையும், வாழ்விடங்களையும் திணித்து, வெள்ளையினம் நெருங்காத வண்ணம் அந்த சமூகத்தை ஒதுக்கியே வைத்தனர்.

 

வெள்ளையினம் அவர்களை மிகவும் நாகரீகம் குன்றிய ஒரு சமூகமாக கருதும் வண்ணம், அவர்களின் வாழ்வை திட்டமிட்டே மிகக் கீழ்நிலையில் வாழவைத்தனர். மூன்றாம் உலகில் சேரிகளை ஒத்த குடியேற்றங்களில் அவர்களின் இழிந்துபோன வாழ்க்கை தொடங்கியது. ஒருபுறம் கடுமையான வறுமை, மறுபுறம் குளிரை எதிர்கொள்ள முடியாத குடிசைகளில்; அந்தத் தலைமுறை நசிந்து கிடந்தது. மிகவும் பணிவுள்ள கூலிகளாகவே அடங்கியொடுங்கி இருக்கும் வகையில், பிராஞ்சு முதலாளித்துவ இயந்திரம் கசக்கிப் பிழிந்தது. உண்மையில் இந்த மக்களின் இழிவான வாழ்வில், பிரஞ்சு முதலாளி வர்க்கம் கொழுத்து மேலும் நாகரீகமடைந்தது.

 

நாகரீகமான பிரஞ்சு தேசத்தின் நவீன நிர்மாணங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து, இவர்கள் வேண்டாக் கூலிகளாக மாற்றப்பட்டனர். மறுபக்கம் அரசுக்கு எதிரான பிரஞ்சு தேசமக்களின் சமூக கொந்தளிப்புகளால் மட்டும்தான், அவர்களை இங்கு வாழவைக்க வேண்டிய ஒரு நிலை உருவானது. அத்துடன் அவர்களின் வாழ்வியல் அடிப்படை மீதான கேள்விகள், அது சார்ந்த போராட்டங்கள், இவர்களுக்காக பிரஞ்சு சமூகத்தின் போராட்டங்களே அவர்களுக்கான நவீன குடியிருப்புகளை அமைக்கவும் நிர்ப்பந்தித்தது.

 

இதற்கு ஏற்ப அரசு வீட்டுத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளையின ஆதிக்க அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் பிரஞ்சு சமூகங்களுடன் கலக்காத வகையில், திட்டமிட்ட இனக் குடியிருப்புகளையே உருவாக்கினர். இக்குடியிருப்புகள் பல அடுக்கு மாடிகளாலானது. இவை பிரஞ்சு தேசத்தவர்கள் அல்லாத குடியேற்றத் திட்டங்களாகவே அமைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களின் அவை குறித்த இனங்களின் குடியிருப்புக்களாகவே உருவாக்கினர். இது மிக மோசமான மக்கள் விரோத கிரிமினல் குற்றமாகும்.

 

இப்படி உருவான குடியேற்றங்கள் மிகவும் திட்டவட்டமான புறக்கணிப்புக்குட்பட்ட ஒரு சூழ்நிலையில், வெள்ளையின வாழ்விடங்களை விடவும் மிகத் தரம் தாழ்ந்த நிலைக்குள் வைக்கப்பட்டது. இந்தப் பெற்றோரின் எதிர்காலக் குழந்தைகளின் கல்வி கூட பெருமளவுக்கு தனித்துவமானதாகவும், பிரஞ்சு சமூகத்துடன் கலக்காத வகையில் குடியேற்றத்தை அண்டிய பகுதியில் அமைந்து இருந்தது. இங்கு இனத் தூய்மை பேணும் நாசிய அணுகுமுறையே இதன் மையக்கூறாக இருந்தது.

 

இந்த குடியேற்றங்களில் பெருமளவில், சமூக கட்டுமானத்துக்கு என மிகக் குறைந்த கூலிக்காக கொண்டுவரப்பட்டு பின் வேலையிழந்தவர்களின் குடியேற்றமாக மாறியது. சமூக பொருளாதார கூறுகளில் மிகவும் பின்தங்கிய ஒரு சமூகமாக மாற்றமடைந்தது. இதை மூடிமறைக்க, அவர்களின் சொந்த நாட்டு பண்பாடுகளில் காணப்பட்ட மிகப் பிற்போக்கான சமூகக் கூறுகள் ஊக்குவிக்கப்பட்டது. பிற்போக்கான சமூகக் கூறும் மிக இறுக்கமான வடிவில் வளாச்சியுற்றது. பிரஞ்சு சமூகத்தில் இருந்து அன்னியமாக இக்குடியேற்றங்கள் மற்றொரு பண்பாட்டு கலச்சாரத்தின் இறுக்கமான போக்கில், தனது பிற்போக்கு அம்சங்களுடன் திருப்தியடைய வைக்கப்பட்டது. வேலையின்மை, வறுமை இதில் இருந்து தப்ப சமூக உதவியை நம்பி வாழ வேண்டியநிலை. சமூக உதவியை அதிகம் பெற, அதிக குழந்தை என்ற தத்துவம் இக்குடியிருப்புகளின் எழுதப்படாத சட்டமாகியது. இதனால் எதிர்கால சந்ததியின் நெருக்கடியை இது மேலும் பறைசாற்றியது.

 

குறித்த சமூகங்கள் பிரஞ்சு சமூகத்திடமிருந்து திட்டமிட்ட வகையில் மிகவும் ஒதுக்கப்பட்ட ஒரு நிலையில், தமது பிற்போக்கான சமூகக் கூறுகளின் வளர்ச்சியுடன் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தான் பிரஞ்சு ஆளும் வர்க்கம் விரும்பியது. சொந்த அரசியல் நலனுக்காகவும், வெள்ளையின இனவெறிக் கொள்கைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் இது பாதகமான வகையில் திட்டமிட்ட ஒன்றாகவே அமைந்தது. புதிதாக பிரான்சுக்குள் வந்தோரையும் இக் குடியேற்றங்களுக்குள் திணித்தனர். அல்லது இதுபோன்ற குடியேற்றங்களையே உருவாக்கி அதில் நிலைநிறுத்தினர்.

 

ஆனால் இந்த தலைமுறையின் குழந்தைகளோ, அடங்கியொழுகிய ஒரு சமூகத்தின் (அதாவது பெற்றோரின்) கட்டுக்கோப்பை ஏற்க மறுக்கும் வகையில் அவர்களின் சூழல் நிர்ப்பந்தித்தது. பெற்றோரிடம் காணப்பட்ட மிக பிற்போக்கான கூறும், வெள்ளையினத்தவரின் திட்டமிட் இன ஒடுக்குமுறையும், அவர்களை தனித்துவமாக்கியது. இது பெருமளவில் லும்பன் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஒரு வன்முறைக் குழுக்களாகவே உருவாகின. இவர்களுக்கென ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், பெற்றோரும் பிரஞ்சு வெள்ளையினச் சமூகமும் உதைத்து தள்ளியது. இது நாடு முழுக்க ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலும், ஒரே மாதிரியானதாக குறித்த குடியிருப்புகளில் உருவாகியது. இது பிரஞ்சு பொதுக் கலாச்சார நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதால், அவர்களைக் கையாள்வது ஒரு முரண்பாடாகவே மாறியது. இதை எதிர் கொள்ளும் போது, இதைப் பிழற்சி குன்றிய ஒன்றாக காண்பதில் இருந்தே எடுக்கும் முடிவுகள், அனைத்தும் தவறானதாக மாறியது.

 

பிரஞ்சு சமூகப் பொருளாதாரத்தில் நுகர்வுக் கலாச்சாரமே முதன்மைப் பண்பாடாக உள்ள ஒரு அமைப்பில், அதை நுகர்வது என்பது இலட்சியமாக வாழ்க்கையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாழ்க்கை நெறியாக புகட்டப்படுகின்றது. கல்வி முதல் பொழுது போக்கு ஊடகங்கள் வரை இதையே மீளமீள ஓதுகின்றன. இந்த நிலையில் இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை அடைய முடியாத வகையில், இக்குடியேற்ற பெற்றோர்கள் வேலையிழந்து அல்லது ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் என்ற ஒரு வாழ்க்கை முறை உள்ளது. ஒருபுறம் வேலையின்மை, மறுபுறம் மிதப்படுத்தும் பணத்தை சொந்த நாட்டுக்கு அனுப்பவேண்டிய ஒரு நிலைமை. இது இவர்களின் குழந்தைகளுக்கு மிக முரண்பாடான ஒன்றாகவே அமைந்தது. குழந்தை தனது சொந்த நுகர்வில் மட்டும் கவனத்தை குவிக்கும் இச் சமூக அமைப்பில்;, பெற்றோரின் நடத்தைகள் முரண்பாடானதாக மாறுகின்றது. பெற்றோரின் வேறுபட்ட சிந்தனை மற்றும் கலாச்சார முறைமை மற்றும் தமது பிற்போக்கு அம்சங்களை குழந்தைக்கு திணிக்க முயலுதல் எல்லாம் முரண்பாடாகவே மாறுகின்றது. குழந்தை இதற்கு எதிராக முரண்பாடாகவே வளருகின்றது.

 

மறபுறத்தில் பிரஞ்சு சமூகத்தில் இருந்த நிறம் சார்ந்த இனம் சார்ந்த புறக்கணிப்பு ஒரு முரண்பாடாகவே இக் குழந்தைகள் உணருகின்றன. அனைத்தும் பிஞ்சில் இருந்தே இக் குழந்தைகள் அனுபவித்த ஒரு முரண்பாடூடாக வளருகின்றன. வெள்ளையின நிறவெறிக் கொள்கை கல்வி ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் இவர்களை புறக்கணிக்கும் போது, வீதியில் அராஜகவாத லும்பன்களாக வீசியெறியப் படுகின்றனர். பிரஞ்சு இனவாத நடத்தைகள், இவர்களை வீதியில் அலையும் சமூக லும்பன் கும்பலாக உருவாக்கியது. இது பிரஞ்சு தேசம் முழுக்க குறித்த குடியிருப்புக்களின் தொடர்பற்ற ஒரு நிலையிலும் கூட ஒரு பொதுப்பண்பாகும். அவர்கள் பிரஞ்சு பண்பாடாக உள்ள நுகர்வை அடைய ஒரு வெறிகொண்ட மனிதர்களாகவும், அதேநேரம் பணம் கொடுத்தே வாங்க முடியாத வாழ்க்கை நிலைமை, லும்பதனமான வன்முறையின் பிறப்பிடமாகின்றது. இதுவே அராஜகவாதக் கும்பலாக மாற்றம் எடுக்கின்றது. இருப்பதை எல்லாம் அடித்து நொருக்கும் பண்பாடாகவே மாறுகின்றது. எந்த சமூக ஓழுங்கையும் மறுக்கும், இயல்பான வன்முறைக் கும்பலாக மாறுகின்றது. மற்றவனிடம் இருப்பதை பறிப்பதும், அதை நுகர்வதும் இதன் கொள்கையாகின்றது. சமூகத்தையிட்டு ஒரு பொதுப்பார்வை இவர்கள் கொண்டிருப்பதில்லை.

 

இப்படி முரண்பாடாகவே சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் ஒரு சமூகம் எதைச் செய்யுமோ, அதை அப்படியே செய்கின்றது. இது எங்கும் யாருக்கும் பொருந்தும்;. தமிழ் பேசும் மக்களுக்கும் கூட பொருந்தும்;. இதன் விளைவு தான் இன்றைய இனம் சார்ந்த சில பிரிவினரின் கலவரம் சார்ந்த வன்முறைகள். எதற்கும் அஞ்சாத வன்முறையாளராக இவர்கள் மாறுகின்றனர். இவர்களுக்கு என்று எந்த இலட்சியமும் இச் சமூக அமைப்பில் இல்லாமையால், எதற்கும் துணிந்து வன்முறையில் ஈடுபடுகின்றது. இதனால் தான் இதை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. சட்டம் மற்றும் தண்டனைகளுக்குள் இது அடங்கிப் போய்விடுவதில்லை. இது சமூக ரீதியாக மட்டும் தீர்க்கப்பட வேண்டியவையாக உள்ளது. ஆளும் வர்க்கத்தினரிடையேயான முரண்பாடாக இது மாறுகின்றது. இதனால் இந்த வன்முறை பிரஞ்சு அரசியலில் மிக முக்கிய இன நிறவாத அரசியல் விடையமாகிவிட்டது.

 

குறித்த சம்பவம் தொடங்கிய பகுதியில் வேலை இல்லாத் திண்டாட்டம் 25 சதவீதத்துக்கு மேலானதாக உள்ளது. அதாவது பிரான்சில் வேலை இல்லாத் திண்டாட்டம் 10 சதவீதமாக உள்ள போது, இங்கு அது 25 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. குறித்த பகுதியில் இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீகிதத்தை தாண்டுகின்றது. சில குடியிருப்பு கட்டிடங்களில் இது 100 சதவீகிதத்தையும் கூட எட்டிவிடுகின்றது. இது வன்முறை பிரதேசங்கள் எங்கும் ஒரேவிதமாக உள்ளது. பொதுவாகவே சமூகத்தில் இருந்தும், முற்றிலும் மாறுபட்ட பிரதேசங்களாகவே இவை உள்ளது. வேலையின்மை பெருமளவில் வெள்ளையினம் அல்லாதவர்களிடையே தான் அதிகமாக உள்ளது. வேலையில்லாத நிலையிலும், எந்தவிதமான சமூகப் பொழுது போக்குமற்ற நிலையில், வீதிகளில் வன்முறை கொண்டு திரியும் உதிரிக்குழுக்களாகவே இவர்கள் மாற்றப்படுகின்றனர்.

 

பிரஞ்சு சமூகம் இந்த வன்முறைக்கான சமூகக் காரணங்களை கண்டறிந்து தீர்க்கத் தவறிவிடுகின்றது. முன்பு அரசில் இருந்த சோசலிச அரசு இவர்களை கட்டுப்படுத்த அவர்களின் தொடர் குடியிருப்புகளையே இடித்து தள்ளி, வன்முறை இளைஞர்களை இடமாற்றி புதிய தொடர் குடியேற்றங்களை நடத்தினர். அதாவது வன்முறை குழுக்களுக்கு இடையிலான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வன்முறையை கட்டுப்படுத்தப் போவதாக இதன் மூலம் பீற்றினர். அத்துடன் அவர்களில் ஒருவரை தெரிவு செய்து பொழுதுபோக்கு கலாச்சார மையங்களை கடந்த காலத்தில் திறந்தனர். இதன் மூலம் சமூக வன்முறைகனைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினர். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின் அந்த சமூக மையங்களையும், கலாச்சார நிலையங்களையும், பொழுது போக்கு மையங்களையும் மூடியதுடன், அவர்களை வேலையைவிட்டே துரத்தியடித்தது.

 

அதற்கு பதிலாக பொலிஸ் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், சிவில் உடை பொலிஸ்சாரை பெருமளவில் அமர்த்தி வன்முறையைக் கட்டுப்படுத்த போவதாக கூறி, பொலிஸ்சாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. பொலிஸ் தனது கையில் அதிகாரத்தைக் கொண்டு, இந்த சமூகங்கள் மீதான இனவாத அணுகுமுறையைக் கையாளுகின்றது. பொலிஸானது சமூகத்தின் முன் தன்னை வன்முறையற்ற ஒன்றாக காட்டி நடித்து வந்த பாத்திரத்தை தாண்டி, வன்முறை கொண்ட பொலிஸ் குண்டர்களாக நடமாடத் தொடங்கினர். இந்த சமூகத்தை எந்தநேரமும் கண்காணிக்கும் ஒரு இனவெறிக் கும்பலாகவே, தமத சொந்த நடத்தைகள் மூலம் மாறிவருகின்றனர்.

 

இந்தப் போக்கு வன்முறை கொண்ட இளைஞர் குழுக்களின் முன் சவாலாக மாறிவருகின்றது. அந்த இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் எங்கும் பொலிசாருக்கு எதிரான வகையில், தூசணத்தால் எழுதப்பட்ட சுலோகங்கள் முதல் குறித்த சில மந்திரிகளுக்கு எதிராகவும் கூட சவால் விடப்பட்டு எழுதப்படுகின்றது. உண்மையில் பொலிசாரின் அதிக அதிகாரம் கொண்ட நடத்தைகளை எதிர்த்து சவால்விடும் வகையில், இளைஞர் குழுக்கள் அணுகத் தொடங்கினர். இதுவே நகர்புறக் கெரிலா வகையிலான வன்முறைத் தாக்குதலாக மாறியது. ஏன் இந்த வன்முறை குழுக்கள் உருவாகின்றன என்ற ஆராய்ந்து தீர்க்க முற்படாத நிலையில், அதிகரித்த அதிகாரம் கொண்ட பொலிஸ் நடைமுறை மற்றும் சட்டங்கள் மூலம் பரிகாரம் காணும் அரசின் நாசி அரசியல் சார்ந்த வழிமுறை, வன்முறையை மேலும் அதிகரிக்க வைக்கின்றது.

 

இதன் விளைவும் இந்த அராஜகவாத வன்முறைக் கும்பலுக்கும் இடையில் எந்த தொடர்பற்ற ஒரு நிலையிலும் கூட, அவர்களின் நடத்தையில் ஒரு ஒருமித்த இணைப்பை ஏற்படுத்திவிடுகின்றது. இதன் எதிர்வினை சகல மட்டங்களில் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக இப்படி 1000 மேற்பட்ட இடங்களில், தமக்குள் ஒழுங்குபடுத்தப்படாத அதேநேரம் இணைந்து செயலாற்றக் கூடிய வகையில், பொலிஸ் நடவடிக்கைகளே தன்னியல்பாக இணைப்புகளை உருவாக்கிவிடுகின்றது. உண்மையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட பொலிசார், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது திணறுகின்றது. அந்தளவுக்கு சமூக முரண்பாடு தீவிரமான நிலையை அடைந்துள்ளது.

 

பொலிசாரின் இனவாதம் சார்ந்த அன்றாட நடத்தைகள் தான், இவர்களின் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வகையில் ஒரு அடிப்படையாகவே மாற்றி விடுகின்றது. இந்த நிலையில் இன்றைய உள்துறை அமைச்சர் சாக்கோசியே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில்; வலதுசாரி கட்சின் வேட்;பாளராக போட்டியிட உள்ளார். அவர் வழமையான வலதுசாரிக் கொள்கைக்கு பதிலாக, தீவிர இனவாதியான லுப்பெனின் அரசியல் கொள்கைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிபெற முடியும் என்று கருதுகின்றார்.

 

நாசிய இனவாதியான லுப்பென் கட்சிக்கு உள்ள இனவாத நிறவாத அரசியல் செல்வாக்கை உடைக்க, அக் கட்சியின் இனவாதக் கொள்கைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தனது வெற்றி சாத்தியம் என்று நம்புகின்றார். இந்த வகையில் நாசிய இனவாதக் கொள்கைகள் பலவற்றை தனதாக்கி, லுப்பெனுக்கே சாவல் விடுமளவுக்கு இனவாதியாக வளர்ச்சியுறுகின்றார். இதை லுப்பனே தீட்டி தீர்த்து சொல்லும் நிலைக்கு, அரசியல் நிலவரம் மாறிவருகின்றது.

 

வன்முறையை கட்டுப்படுத்துவதே நிற இனவாதிகளின் அரசியல் கொள்கைகளில் பிரதான கொள்கையாக உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவது என்பது, வன்முறையில் பெருமளவில் ஈடுபடும் வெளிநாட்டவர் மீதான நடவடிக்கையே. இதை அடிப்படையாக கொண்டே தேர்தல் வியூகங்கள் நடைமுறையில் வளாச்சியுறுகின்றன. வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு, இன்றைய வன்முறைகள் அவசியமாகிவிட்டது. வன்முறையை அதிகரிக்க வைப்பதன் மூலம், அதைக் கட்டுப்படுத்தும் அரசியல் கதாநாயகர்களுக்கே தேர்தல் வெற்றி என்பது இன்றைய உள்துறை அமைச்சரின் கொள்கை மட்டுமல்ல, தீவிர இனவாத நாசிகளின் கொள்கையும் கூட. இந்த வகையில் பொலிஸ் வன்முறை இந்த சமூகங்களுக்கு எதிராக அதிகரிப்பதன் மூலம், எதிர் வன்முறையை அதிகரிக்க வைக்கமுடிகின்றது. இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அதிகாரத்தை பெறுதல் என்ற இலட்சியம் இன்றைய அரசியலாக உள்ளது.. இதை நோக்கித் தான், இந்த வன்முறை நகருகின்றது.

 

அண்மைக் காலமாக வெளிநாட்டவர்களின் சிறு தொழில் துறைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்றுமில்லாத வகையில் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. சட்டப்படி நடவடிக்கை என்ற பெயரில், வெளிநாட்டவரின் வர்த்தக முயற்சிகள் முடக்கப்படுகின்றன. இது ஒரு இனவாத அடிப்படையில் தொடர்ச்சியாகவே அன்றாடம் நடக்கின்றது. வெளிநாட்டவர்களின் மேல் கடுமையான அழுத்தம் மற்றும் நிர்ப்பந்தங்கள் மூலம் வெறுப்பை வளர்க்கின்றனர். மறுபுறம் இந்தச் சமூகங்களை குற்றப் பரம்பரையினராக, இது போன்ற நடவடிக்கைகள் மூலம் காட்டி, பிரஞ்சு சமூகத்தை இனவாதமாக்கும் அரசியலலை நகர்த்துகின்றனர்.

 

இன்று பிரஞ்சு சமூகத்தில் குற்றங்களை எடுத்தால் அதிகளவுக்கு திட்டமிட்ட குற்றங்களைச் செய்வோர் பிரஞ்சு சமூகத்தவராகவே உள்ளனர். ஆனால் உதிரியான வன்முறையை எடுத்தால், வெளிநாட்டு சமூகமாக உள்ளது. குற்றத்தின் தன்மையே தன்னியல்பான ஒரு சமூக ஆய்வாகி, பலவற்றை போட்டுடைக்கின்றது. திடட்மிட்ட குற்றங்கள் தான் ஆபத்தானவை அபாயகரமானவை. ஆனால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இந்த இனவாதிகள் யாரும் பீற்றுவதில்லை. உதிரிக் குற்றங்களை கட்டுப்படுத்துவது பற்றி பீறிடுவது, உள்ளடகத்தில் நிறவெறிக் கொள்கையே.

 

உண்மையில் இந்த வன்முறையாளர்கள் சமூகத்தில் இருந்து அன்னியமான சூழலில், தனித்துவிடப்பட்ட நிலையிலேயே உருவாகின்றனர். பிரஞ்சு பாட்டாளி வர்க்கத்தில் தனது விடுதலை பற்றி நம்பிக்கையீனங்கள் தான், இதற்கான முக்கிய காரணம்;. சமூகத்தின் விடுதலை பற்றி சொந்த உணர்வு சிதையும் போது, பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கையை இனம் காணமுடியாத சமூகமாக மாறுகின்றது. இந்த நிலையில் அந்த சமூகதத்தின் அவலநிலையை இனம் காணமுடியாத போது, இதை மாற்றியமைக்கும் போராட்டத்தை பிரஞ்ச சமூகம் முன்னெடுக்க முடிவதில்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்தி போராட முடியாத ஒரு நிலையில், பாதிக்கப்படும் சமூகத்தில் உதிரித்தனமான லும்பன் தனமான வன்முறைக் கும்பலாகவே அவை சீரழிகின்றது.

 

பரிஸ் நகரில் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டிடத் தொகுதி முழுக்கவே எரிந்த நிகழ்ச்சிகள் கூட மிக அண்மையில் தான் நிகழ்ந்தன. குறிப்பாக இந்த வீட்டுக் குடியிருப்புக்கள் எப்படி உள்ளன என்று தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டன. துர்நாற்றமும் அதற்கேற்ப அழுகிப்போன வீடுகளில், அந்த மக்கள் மட்டும் வாழவில்லை. பூஞ்சணம் சுவர் வண்ணமாக அலங்கரிக்க அதில் கரப்பான் பூச்சிகள் நீந்தி விளையாடு;கின்றன. எலி முதல் எல்லா உயிரனத்தினதும் குடியிருப்புகள் அவை. இங்கு மனிதர்கள் வாழமுடியாத நிலையில், அங்கு வாழ்க்கை நடத்தும் மக்கள் எப்படி தமது வாழ்வுடன் சிதைந்து போகின்றார்களோ, அப்படித் தான் அந்தப் பெற்றோரின் குழந்தைகளும் கூட சிதைந்து போகின்றார்கள். உலகில் நாகரிகமான பாரிசில் இப்படி வீடுகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நிலையிட்டு கண்டு கொள்ளாத ஒரு சமூகம், என்ன தார்மீகப் பலத்துடன் இந்த வன்முறையை கண்டிக்க முடியும்.

 

இப்படி பலவிதமாக வளரும் குழந்தைகள், வன்முறையில் ஈடுபட்டால் பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் என்று வலதுசாரி அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். நகைப்புக்குரிய இந்த வாதம் சட்டமானால், நீதிமன்றத்தில் ஒரு பெற்றோரின் ஒரு குழந்தை வன்முறையுடனும் அதே பெற்றோரின் மற்றைய குழந்தை வன்முறையில் ஈடுபடாவிட்டால், எப்படித்தான் தீர்ப்பை வழங்குவர். தண்டனை தாய்க்கா! அல்லது தந்தைக்கா! அல்லது இருவருக்குமா! குற்றத்துக்கு காரணம் பெற்றோரின் வளர்ப்பு என்ற வாதமே நகைப்புக்குரியது. குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு கணிசமாக உள்ளது என்ற போதும் கூட, குழந்தையின் மொத்த வளர்ச்சியையும் தீர்மானிப்பது அந்த குழந்தையைச் சுற்றியுள்ள சமூகம் தான். குழந்தைக்கு முன்னால் காட்டப்படும் அனைத்து சினிமாவும் (காட்டூன் உட்பட) வன்முறை கொண்டதே. ஆனால் குழந்தை வன்முறையில் ஈடுபடக் கூடாது என்ற அரசியலே நகைப்புக்குரிய ஒன்று மட்டுமல்ல, சமூகத்தையே ஏமாற்றுவதே.

 

இதேநேரம் லும்பன் தனம் கொண்ட அராஜக சமூகங்கள் பிரஞ்சு சமூகத்தில் இருக்கின்றன. அவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவதில்லை. மாறாக அரசுக்கு எதிராக மட்டும் வன்முறையில் ஈடுபடுகின்றன. இங்கு திட்டமிட்ட ஒழுங்குமுறை உண்டு. ஆனால் அதில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதுடன், உதிரி வன்முறைக் கும்பலாகவே உள்ளது. உண்மையில் இந்த சமூகத்தின் இனவெறிக் கொள்கைக்கு எதிராக பிரஞ்சு சமூகம் போராடாத வரை, இனவாதிகள் விரும்பும் வன்முறையும் பொலிஸ் ஆட்சியுமே மேலும் வக்கிரமடையும்.

 

இது பற்றி புலம்பெயர் தமிழர்கள் எப்படி எதிர் வினையாற்றுகின்றனர். நாங்கள் தமிழ்; பாசிசத்தை ஆதரிக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், பாசிசம் சொல்லும் ஒழுங்கு கட்டுப்பாட்டை இயல்பில் ஆதரிப்பவராக மாறிவிடுகின்றனர். பிரஞ்சு உள்துறை அமைச்சரை ஆதரிக்கும் வகையில் இவர்கள் கூச்சலெழுப்புகின்றனர். சட்டம், ஒழுங்கு என்று பிதற்றுகின்றனர். வேலையற்றோருக்கு வழங்கும் சமூக உதவியை எடுத்து, திண்டுவிட்டு தினவெடுத்து திரிவதாக வம்பளக்கின்றனர்.

 

உண்மையில் சமூக உதவி 18 வயதுக்கு கூடியவர்களுக்கு 26 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கிடையாது. அவர்களின் பெற்றொருக்கும் கூட இதற்காக எந்த சமூக உதவியும் கிடையாது. இங்கு திண்டு தினவெடுத்தல் என்ற வார்த்தை ஒரு இழிவான அடிப்படையில் பிதற்றுவதே. ஊரில் "பள்ளு பறைகள்" திண்டு தினவெடுப்பதாக இழிவாடிய எமது உயர் சாதிய சமூகங்கள், இங்கு "கறுவல் அடை" என்று இழிவாடுகின்றனர்.

 

சிலர் கேட்கின்றனர் இரவு எட்டு மணிக்கு பிறகு வீதியில் இளைஞர்களுக்கு என்ன வேலை என்கின்றனர். தாம் மிகச் சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாகவும், சட்டத்துக்கு கட்டுப்பட்டவராகவும் கூட காட்டுகின்றனர். ஆனால் தனது குழந்தைகள் இதில் ஈடுபடுவதில்லை என்றும், ஈடுபடுபடப்போவதில்லை என்றும் நம்புகின்றனர். பணிவுள்ள கூலிகளாக இருப்பதே, தமது இனத்தின் மிகப் பெரிய பெருமை என்ற பீற்றுகின்றனர். இதைத் தான் இன்று வன்முறையில் ஈடுபடும் குழந்தைகளில் பெற்றோரும் கூட ஒரு காலத்தில் கூறியவர்கள்.

 

தமிழ் குழந்தைகளின் இன்றைய நிலையென்ன. அவர்கள் இன்னமும் பெற்றோரின் கட்டுபாட்டில் இருக்கக் கூடிய சிறிய வயதில் பெருமளவில் காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் வன்முறையாளரக வளரக் கூடிய அனைத்துச் சூழலும் வீட்டில் காணப்படுகின்றது. உதாரணமாக தமிழ் பெற்றோரின் குழந்தைகள் படுக்கப்போகும் நேரமே, பெருமளவில் இரவு பன்னிரண்டு மணிதான். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பின்பு, இரவு பன்னிரண்டு மணி வரை பெற்றோருடன் (கிழவன் கிழவியுடன்) வீட்டில் இருக்குமா அல்லது வீதியில் நிற்குமா? நிச்சயமாக வீதியில் தான். வீட்டில் 12 மணிவரை வீட்டில் இருக்கக் கூடிய பொதுச் சூழல் சாத்தியமே இல்ல. மற்றொரு உதாரணம் பெருமளவில் குழந்தைகளை தாய்மார் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள் சென்று விடுகின்றனர். தமிழ் தாய்மாரின் தொனதொனப்பு குழந்தைகளை வீட்டைவிட்டு வீதியில் நிறுத்தும். இப்படி சாதாரணமாக பல விடையங்களைப் பார்க்கமுடியும். எமது குழந்தைகள் வன்முறையில் ஈடுபடக் கூடிய சூழல் வீட்டில் இருந்தே உருவாகின்றது.

 

இன்று தமிழ் குழந்தைகள் பலர் வீதிகளில் நிற்கின்றனர். சனத்தொகை வீகிதத்துடன் இதை ஒப்பிடின் வன்முறை கொண்ட தமிழ் குழுக்கள், சில குறித்த தமிழ் பிரதேசங்களில் காணப்படுகின்றனர். கொலை, கொள்ளை, அடிதடி, வன்முறை, பாலியல் வன்முறை என்று தமிழரின் சில விசேட குணத்துடன், எதையும் எப்படியும் செய்யும் ஒரு நிலையில் காணப்படுகின்றனர். ஏன்; இன்று இந்த வன்முறை பற்றி, முரண்பட்ட நேர் எதிரான அபிப்பிராயம் கூட குடும்பத்தில் காணப்படுகின்றது. பெற்றோர் பொலிஸ் பக்கம் நிற்க, சுதந்திரமான குழந்தைகள் இளைஞர்கள் பக்கம் நிற்கின்றனர்.

 

எமது சிந்தனை முறை துரோகி, தியாகி என்ற மட்டும் மதிப்பிட்டு பழகியதால், பொலிசை ஆதரிப்பது அல்லது பொலிசாருக்கு எதிரான கும்பல் வன்முறையை ஆதரிப்பது என்று எங்கும் ஒரு விதண்டாவாதங்கள் அரங்கேறுகின்றன. இந்த வன்முறை கும்பலின் உருவாக்கம் என்பது, அந்த சமூகத்துக்கு மட்டுமான பொது விதியல்ல. இது எமக்கும் பொருந்தும். இதை எமது விதண்டாவாதங்கள் தடுத்து நிறுத்திவிடாது. மாறாக இதன் உண்மை முகத்தை கண்டு, அதை நாம் உணர்ந்து எதிர்வினையாற்றும் போதுதான், இதில் இருந்து எமது குழந்தைகளையும் சமூகத்தையும் சரியாக வழிகாட்டமுடியும்.

08.11.2005