Language Selection

ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.


உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும்தான் இவர்களுடைய உண்மையான எசமானர்கள். ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சேவகம் செய்வதன் மூலமும், ஃபோர்டு, ஹூண்டாய், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் பாக்கு வைத்து அழைப்பதன் மூலமும்தான் நம்முடைய நாடு முன்னேற முடியும் என்பதே இவர்களுடைய கொள்கை.


பெரும்பான்மை உழைக்கும் மக்களுடைய தொழிலையோ வாழ்க்கையையோ இவர்கள் ஒருக்காலும் பாதுகாக்க மாட்டார்கள். நம்முடைய போராட்டங்களை ஆதரிப்பதாக இவர்கள் சவடால் அடிப்பதை நம்புவதும், இவர்களை மேடையில் உட்கார வைத்து மாலை மரியாதை செய்வதும், இவர்களிடம் நடையாய் நடந்து மனுக்கொடுப்பதும் ஏமாளித்தனமில்லையா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விலைபேசும் இந்தக் கொள்கைகள் திடீரென்று இன்றைக்கா அமல்படுத்தப்படுகின்றன? 1994இல் காட் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட்ட நாளிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு இன்று மிகத் தீவிரமாக அமலாகி வருகின்றன. தொலைபேசி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், இன்சூரன்சு மற்றும் வங்கி ஊழியர்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், பருத்தி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நீலகிரி தேயிலை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், வணிகர்கள் என்று எல்லாப் பிரிவு மக்களும் தமக்குப் பாதிப்பு வரும்போதெல்லாம் போராடியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்கள் நடந்திருந்தபோதிலும் அநேகமாக யாரும் வெற்றி பெறவில்லையே, ஏன்?


ஏனென்றால், ஒரு பிரிவு மக்கள் இப்படிப் போராடும்போது மற்றவர்கள் அதைப்பற்றிக் கடுகளவும் கவலைப்பட்டது கூட இல்லை. அவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் ஒடுக்குவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று ஒதுங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்கூட மற்றவர்கள் அக்கறை காட்டியதில்லை.


ஆனால் எதிரிகளைப் பாருங்கள். டாடாவுக்கும் பிர்லாவுக்கும் அம்பானிக்கும் வால்மார்ட்டுக்கும் என்னதான் தொழில் போட்டி இருந்தாலும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கும், வாட் வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கும், வங்கி இன்சூரன்சு துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவதற்கும் ஒரே அணியில் நின்று அரசை நிர்ப்பந்திக்கிறார்கள்.


அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.


அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் தான் முடியும்.