எனவேதான், "குறிப்பிட்ட சில ரகங்களைச் சேர்ந்த நூல்கள் கைத்தறிக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்ற விதிமுறை இருந்தது. "தீப்பெட்டி, நோட்டுப்புத்தகம், ஊறுகாய், ஊதுபத்தி, தின்பண்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் சிறு தொழிற்சாலைகளில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும், பெரிய தொழிற்சாலைகள் அவற்றை உற்பத்தி செய்யக்கூடாது'' என்று விதி இருந்தது.
"பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் நுழைந்து என்ன தொழிலை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்'' என்ற உலகமயமாக்கல் கொள்கையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கூறிய விதிமுறைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்யப்பட்டு விட்டன. தீப்பெட்டி முதல் ஊதுபத்தி வரை அனைத்திலும் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து விட்டன. பல சிறு தொழில்கள் அழிந்து விட்டன. மிச்சமிருப்பது சில்லறை வணிகம். அதையும் அழிப்பதற்கு அம்பானியும், டாடாவும் பிர்லாவும் அமெரிக்கக் கம்பெனிகளும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். வழக்கம் போல அரசாங்கம் அவர்களுக்குத் துணை நிற்கிறது.