ஏன் இந்த நிலைமை? "விவசாயிக்கு சலுகை வழங்கக் கூடாது, வங்கிக் கடன் கொடுக்கக் கூடாது, உரமானியம் கொடுக்கக் கூடாது, அரிசி, கோதுமை முதலானவற்றை அரசாங்கம் கொள்முதல் செய்யக்கூடாது, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும், ரேசன் கடைகளை இழுத்து மூட வேண்டும்'' என்பதெல்லாம் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகள்.
இந்த ஆணைப்படிதான் எல்லா அரசாங்கங்களும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. அரசாங்கம் நெல் கொள்முதலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. இந்திய உணவுக்கழகம் கையில் வைத்திருந்த தானியங்களை பாதி விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இந்திய விவசாயிக்கு கிலோ கோதுமைக்கு 7 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கும் அரசாங்கம் கிலோ 10 ரூபாய் விலையில் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதியும் செய்திருக்கிறது.
ஏழை மக்கள் சோறு தின்ன வேண்டுமே என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தாராளமயக் கொள்கைகளின் கீழ் உணவு தானிய வியாபாரத்திலேயே பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருக்கும் இந்த அரசாங்கம், அவர்கள் குழம்பு வைப்பதைப் பற்றியா கவலைப்படப் போகிறது?
காய்கனி விற்பனையில் மட்டுமல்ல, கறிக்கடை வைக்கவும் பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கிறது அரசு. சென்னையில் இறைச்சி வியாபாரமும் தொடங்கப் போகிறது ரிலையன்ஸ். சென்னையில் இறைச்சிக் கூடங்களையும் கறிக்கடைகளையும் நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்களின் வாழ்க்கையும் இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது.