Language Selection

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து வாடிக்கையாளர்களைப் பலவிதமாகப் பித்தலாட்டம் செய்து கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடைசியாகத்தான் செல்போன் சேவையைத் தொடங்கியது.


வெளிநாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்கி லாபமாக மட்டும் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் ஈட்டி வந்த வி.எஸ்.என்.எல். நிறுவனத்தையே வெறும் 1440 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் தூக்கிக் கொடுத்தது பாரதிய ஜனதா அரசு. 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பாரத் அலுமினியம் கம்பெனி என்ற அரசுத்துறை நிறுவனம், வெறும் 552 கோடி ரூபாய்க்கு ஸ்டெர்லைட் முதலாளிக்கு விற்கப்பட்டது. ஏழைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் தரமான ரொட்டியை வழங்கி வந்த 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள "மாடர்ன் புட்ஸ்' என்ற அரசுத்துறை நிறுவனம் வெறும் 104 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அரசு வங்கிகள், இன்சூரன்சு, அனல்மின் நிலையங்கள் அனைத்தும் இப்படித்தான் அந்நிய நிறுவனங்களுக்குக் கூறு கட்டி விற்கப்படுகின்றன.


இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டுமல்ல, ஆறுகளையும் அணைக்கட்டுகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது அரசு. நம்முடைய நாட்டின் தேவைக்கே வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, வங்காள விரிகுடாவில் எண்ணெயும் எரிவாயுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை அரசுடைமை ஆக்காமல் அம்பானிக்கு உடைமை ஆக்குகிறது அரசு.


தனக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டித்தரும் அரசுத்துறை நிறுவனங்களையே அந்நியக் கம்பெனிகளுக்கு விற்கத் தயங்காத அரசு, கோயம்பேட்டு சந்தையை அம்பானிக்குக் காவு கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


பள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்கம் கட்டுவதில்லை. இருக்கின்ற பள்ளிகளையே பராமரிப்பதில்லை. போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்தால் பிள்ளை உருப்படாது என்ற நிலைமையை அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்குகிறது. நர்சரிப் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்தும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. கந்துவட்டித் தொழிலைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருப்பதால் எல்லாக் கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கல்வித் தொழில் நடத்தி கல்லா கட்டுகிறார்கள்.


அரசாங்கம் மருத்துவமனைகள் கட்டுவதில்லை. அரசு மருத்துவ மனையே சவக்கிடங்கு போலத்தான் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. இப்போது சென்னையில் சின்னம்மை பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதற்கு தடுப்பூசி கிடையாது. தடுப்பூசியின் விலை 1300 ரூபாய். நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. அதை மருந்துக் கடையில் வாங்கினால் 1500 ரூபாய். இருக்கிற மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும் கிடையாது. கல்வியைப் போலவே மருத்துவமும் முதலாளிகள் கொள்ளை லாபமடிப்பதற்கான தொழிலாக மாற்றப்பட்டு விட்டது.


அரசாங்கம் சாலை போடுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டு விட்டன. அவர்கள் வழி நெடுக சுங்கச் சாவடி வைத்து எல்லா வாகனங்களுக்கும் வரி வசூல் செய்கிறார்கள்.


சாராயம் விற்கும் அரசாங்கத்தால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தர முடியவில்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய ஆறுகள் ஏரிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து அதை பாட்டில் 14 ரூபாய் என்று நமக்கே விற்பனை செய்கிறார்கள். நிலத்தடி நீர் என்னும் பொதுச்சொத்தை ஒரு பன்னாட்டு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றிக் கொள்ளையடிக்க அனுமதி வழங்குகிறது அரசாங்கம்.


அரசாங்கத்தால் சென்னை நகரில் குப்பை வாரக்கூட முடியவில்லை. அதையும் "ஓனிக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அவன் வெள்ளைக்காரனை வைத்தா குப்பை வாருகிறான்? நம்முடைய இளைஞர்களை குறைந்த கூலிக்கு மாடுபோல வேலை வாங்கி கோடிக்கணக்கில் லாபத்தைக் கொண்டு போகிறான்.


"அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க வேண்டியதில்லை. கல்வியோ, மருத்துவமோ, தண்ணீரோ, கக்கூசோ எதுவாக இருந்தாலும் அவனவன் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாமே பன்னாட்டு முதலாளிகளும் இந்நாட்டு முதலாளிகளும் லாபம் பார்ப்பதற்கான தொழில்கள்'' என்று கூறும் தனியார்மயம் என்ற இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்சொன்ன எல்லா அயோக்கியத்தனங்களும் தேசத்துரோக நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படுகின்றன.


கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தையும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றி, இல்லாதவர்களும் ஏழை எளியவர்களும் பரிதவித்துச் சாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம், அம்பானியின் காய்கறி வியாபாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய வியாபாரிகளையும், தொழிலாளிகளையும் பற்றியா கவலைப்படப் போகிறது?