தங்களுடைய கொள்ளை இலாபத்துக்காக எந்தவிதமான கிரிமினல் வேலையையும் கொலைபாதகத்தையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பது அரசுக்குத் தெரியும். அப்புறம் ஏன் இவர்களைப் பாக்கு வைத்து அழைத்து, தொலைபேசி, மின்சாரத்தில் தொடங்கி தானியக் கொள்முதல், சில்லறை வணிகம் வரை அனைத்தையும் அரசாங்கமே இவர்கள் கையில் ஒப்படைக்கிறது? பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் உள்ளூர் விவசாயமும், தொழிலும், வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லாப் பிரிவு மக்களும் எதிர்த்துப் போராடினாலும் அதைப் பற்றி எந்தக் கட்சியும் கொஞ்சம் கூடக் கவலைப்படாதது ஏன்?


கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறி விட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளை அடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லாக் கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றுகின்றன.