Language Selection

"ரிலையன்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நம்பகத்தன்மை என்று பொருள். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமே ரிலையன்ஸ் நிறுவனம்தான். "ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையில் கறிவேப்பிலை வாங்கினாலும் பில் போட்டுக் கொடுக்கிறான்' என்று படித்த அறிவாளிகள் சில பேர் சிலிர்த்துக் கொள்கிறார்கள். பில்லை வைத்துத் தாளிக்கவா முடியும்? அன்றாடம் பத்து லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் கடையில் ஆள் வைத்து பில் போடுவதில் என்ன அதிசயம் இருக்கிறது?


காலை 3 மணிக்கு எழுந்து கோயம்பேட்டுக்குச் சென்று சரக்கெடுத்து ஒரு வண்டி காய்கறியை டி.வி.எஸ்.50இல் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கி, "இரண்டு ரூபாய் கத்தரிக்காய், ஒரு ரூபாய் வெங்காயம்'' என்று கேட்கும் ஏழை மக்களுக்கு அதை விற்பனை செய்யும் அண்ணாச்சி, கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?


வாட் விரிவிதிப்பும், பில் போட்டு வியாபாரம் செய்யச் சொல்லி சிறுவணிகர்களுக்கு அரசாங்கம் கொடுத்துவரும் நிர்ப்பந்தமும் நுகர்வோரின் நலனுக்காகச் செய்யப்படுபவை அல்ல. சிறுவணிகர்களை வரி விதிப்புக்கு உள்ளாக்கி, அதிகாரிகள் மூலம் சித்திரவதை செய்து தொழிலை விட்டே துரத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை வளர்த்து விடுவதுதான் அரசின் நோக்கம்.


பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய கால்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு வெளிநாட்டுக் கால்களையெல்லாம் லோக்கல் கால் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.


மண்ணையும் கல்லையும் காலி அட்டைப் பெட்டிகளையும் பில் போட்டு வெளிநாடுகளுக்கு "ஏற்றுமதி' செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை அரசாங்கத்திடமிருந்து சுருட்டினார் திருபாய் அம்பானி. அப்பன் செய்த திருட்டுகளைப் பட்டியல் போடவேண்டுமென்றால் அதற்குத் தனியாகப் புத்தகமே போட வேண்டும். அப்பனை விஞ்சுகிறார்கள் பிள்ளைகள். ஜவுளி, எண்ணெய் சுத்திகரிப்பு, பங்குச்சந்தை, தொலைபேசி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் என்று கால் வைத்த துறைகளிலெல்லாம் களவாணித்தனம் செய்கிறார்கள்.


சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, "இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?


பில் போட்டுத் தொழில் நடத்துவதாகப் பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அம்பானி, டாடா, பிர்லா போன்றோருடைய நிறுவனங்களின் யோக்கியதை இதுதான். இந்த யோக்கிய சிகாமணிகள்தான் அரசு வங்கிகளுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருப்பவர்கள். ஆண்டுதோறும் 15,000 கோடி, 20,000 கோடி வரிபாக்கி வைப்பவர்கள். இந்தியாவுக்கே இரண்டு ஆண்டுகளுக்குப் பட்ஜெட் போடுமளவுக்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களும் இவர்கள்தான்.


இந்த விவரங்களையெல்லாம் நாம் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கவும் இல்லை. இட்டுக் கட்டிச் சொல்லவுமில்லை. இவையெல்லாம் சர்வகட்சிகளையும் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள். எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்திகள்.