சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?


கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் "லே'ஸ்'' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?


சுத்தம் சுகாதாரம் என்ற இவர்களுடைய பேச்செல்லாம் முழு மோசடி. அழுகிப் போன பழத்தையும், ஈ மொய்க்கும் தின்பண்டத்தையும் வாங்கித் தின்றால் வாந்தி, பேதி போன்ற சின்ன நோய்கள்தான் வரும். அவற்றைக்கூட சமாளித்து விடலாம். பன்னாட்டுக் கம்பெனிகளின் ஜிகினாத்தாள் சரக்குகள் சின்ன நோய்களை எல்லாம் உருவாக்குவதில்லை. புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பது, இதயநோய் போன்ற பெரிய ஆட்கொல்லி நோய்களைத்தான் அவை உருவாக்கும். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், சொத்தை விற்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஏனென்றால் நோயை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அதற்கான மருந்தையும் உற்பத்தி செய்து அதிலும் கொள்ளையடிக்கின்றன.


கொள்ளை இலாபம் ஈட்டுவதொன்றுதான் பன்னாட்டுக் கம்பெனிகளின் நோக்கம். அதற்காகத்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கனிகள் மனிதனின் உடலுக்கு என்ன தீங்குகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய விதைகளைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்துவதற்கும் சோதனை செய்து பார்ப்பதற்கும் இந்திய அரசே அவர்களை அனுமதித்திருக்கிறது.


இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத்தான் சமீபத்தில் கோவை விவசாயிகள் பிடுங்கி எறிந்தார்கள். தன்னுடைய இலாபத்துக்காக எத்தகைய கொலைபாதகத்தையும் செய்வதற்கு அஞ்சாத ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை நம்பி நம் வயிறை ஒப்படைப்பதென்பது, கொலைகாரனின் கையில் உயிரை ஒப்படைப்பதற்குச் சமமானது.