Language Selection

உணவு தானிய விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இன்றே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் தானியக் கொள்முதல் செய்வதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்து கொள்ள ஊக்குவித்து வருகிறது அரசு. அது மட்டுமல்ல, அரிசி, கோதுமை, பருப்பு முதலான அனைத்திலும் முன்பேர வணிகத்தையும் ஆன்லைன் வணிகத்தையும் மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று தானிய விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன.


இந்த விலை உயர்வால் விவசாயி 5 காசு கூட ஆதாயம் அடையவில்லை. உற்பத்தி செய்யும் விவசாயி கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கிறான். வாங்கிச் சாப்பிடும் மக்களும் விலைவாசி உயர்வால் கடனாளி ஆகியிருக்கிறார்கள். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் மட்டும்தான் கொழுத்திருக்கிறார்கள். இவர்கள் சில்லறை வணிகத்திலும் நுழைந்துவிட்டால் பஞ்சத்தையும் பேரழிவையும்தான் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்ட் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.


இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றிக் கேட்டால் "அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது'' என்று பதில் சொல்லும் அமைச்சர்கள் நாளை அரிசி கிலோ 50 ரூபாய் விற்றாலும், வெங்காயம் கிலோ 100 ரூபாய் விற்றாலும் "சர்வதேசச் சந்தையில் விலை ஏறிவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்ற பதிலைக் கூசாமல் சொல்வார்கள்.


"சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காகத்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?


இந்திய நாட்டின் விவசாயிகளையும், நுகர்வோரையும் இந்த நாட்டின் சில்லறை வணிகர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றும், அவர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதற்காகத் தான் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கூறுகிறார்கள். இத்தகைய முதலாளிகளின் பிடியில் இருக்கும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைக்கின்றன.


நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.


இது அப்பட்டமானதொரு பித்தலாட்டம். சிறுவணிகர்களுக்கு எதிராக நுகர்வோருக்குக் கொம்பு சீவிவிடும் சதி. "பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', "ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', "பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.


"தள்ளுவண்டியில் திறந்து போட்டு வியாபாரம் செய்பவர்களிடம் பொருள் வாங்காதே, பில் போடாத மளிகைக் கடையில் சாமான் வாங்காதே'' என்று பிரச்சாரம் செய்யும் இந்த யோக்கியர்கள், அவர்களிடம் "ஓட்டு வாங்கமாட்டோம்'' என்று மட்டும் ஏன் சொல்வதில்லை?


தெருவில் சாக்கடை ஓடுவதற்கும், கார்ப்பரேஷன் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதற்கும், சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பதற்கும், குப்பைகள் குவிந்து கிடப்பதற்கும் சிறு வணிகர்களா பொறுப்பு? ஈயையும் கொசுவையும் அவர்களா உற்பத்தி செய்கிறார்கள்? அரசாங்க மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் பேருந்து நிலையங்களும் என்ன யோக்கியதையில் இருக்கின்றன? இதற்கெல்லாம் யார் பொறுப்பு?