Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இன்று பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஊட்டி முதலான காய்கனிச் சந்தைகளில் மற்ற வியாபாரிகளைக் காட்டிலும் அதிக விலை தருவதாக ஆசை காட்டி விவசாயிகளைக் கவர்ந்திழுக்கும் ரிலையன்ஸ், கொஞ்ச காலத்தில் அந்தச் சந்தைகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். பிறகு கத்தரிக்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் ரிலையன்ஸ் சொல்வதுதான் விலையாக இருக்கும். மற்றவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டிவிடுவதால் அவனுடன் போட்டி போட சந்தையில் வேறு வியாபாரிகளே இருக்க மாட்டார்கள்.


"விதை தருகிறேன், உரம் தருகிறேன், பூச்சி மருந்தும் தருகிறேன், காய்கனிகளைப் பயிர் செய்து கொடு'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையையும் ரிலையன்ஸ் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த வலையில் சிக்கிய விவசாயிகள் கொத்தடிமைகளைப் போல அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கிக் கொள்வார்கள்.


அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட நிலைமையைத் தமிழகத்தின் விவசாயிகளும் எதிர்கொள்ள நேரும்.


இது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நவீனப் பண்ணை விவசாயம், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் போன்றவற்றை ரிலையன்ஸ் ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இந்த நவீன விவசாயத்தில் விளையும் பொருட்களுடன் சிறு விவசாயிகளின் பொருட்கள் சந்தையில் போட்டி போடவே முடியாது. திவாலாகி நிலத்தை ரிலையன்சுக்கே விற்றுவிட்டுக் கூலி வேலை தேடி நகரங்களுக்கு ஓடி வருவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இருக்காது.