பொள்ளாச்சிச் சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி "கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்ட்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாகக் கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?
"சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் சிறுவணிகர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது'' என்று தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். "நாம் கடை வைத்திருப்பதைப் போல அவனும் ஒரு கடை வைக்கிறான். யாரிடம் சரக்கு தரமாகவும் மலிவாகவும் இருக்கிறதோ அவர்களிடம் மக்கள் வாங்கப் போகிறார்கள். இதில் கவø0லப்படுவதற்கு என்ன இருக்கிறது'' என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு அம்பானி என்பவன் ஆயிரம் சரவணா ஸ்டோர்சுக்கு சமம். ஒரு வால்மார்ட் நூறு அம்பானிகளுக்குச் சமம்.
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மறுமுனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.