Language Selection

கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று ஒழிக்கும் இந்த அயோக்கியத்தனத்தைவிடப் பெரிய பயங்கரவாதம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 4 கோடிக் குடும்பங்களை நரபலி கொடுத்து 4 முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் கொள்கையை விடக் கொடூரமான பயங்கரவாதக் கொள்கை வேறு ஏதாவது உண்டா?


காய்கறிக் கடையும், மளிகைக் கடையும் நடத்த நமக்குக் கற்றுக் கொடுக்கத்தான் அம்பானியையும் அமெரிக்காக்காரனையும் இங்கே அழைத்து வருகிறதா இந்த அரசாங்கம்? ரிலையன்ஸ் கடை வைக்காததால் சென்னையில் "ஃபிரெஷ்ஷான' காய்கனிகள் கிடைக்கவில்லை என்று இந்த அரசாங்கத்திடம் மக்கள் முறையிட்டார்களா?


நன்கொடை என்று கொள்ளையடிக்கின்றன தனியார் பள்ளிகள்; புதிதாக அரசுப் பள்ளிகள் துவங்குவது இல்லை, இருக்கின்ற பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை. கழுத்தில் கத்தி வைத்துப் பணம் பறிக்கின்றன தனியார் மருத்துவமனைகள்; அரசு மருத்துவமனைகள் இல்லை. இருக்கின்ற மருத்துவமனைகளிலும் மருந்தில்லை. சின்னம்மைக்குத் தடுப்பூசி இல்லை. நாய்க்கடிக்குக் கூட மருந்தில்லை. போதுமான பேருந்துகள் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வக்கில்லை. கோடை வந்தால் குடிநீரில்லை, கொசுவை ஒழிக்கத் துப்பில்லை. அவசரத்துக்கு ஒதுங்குவதற்குக் கூட சாலையோரங்களில் கழிப்பறை இல்லை.


இவையெதற்கும் எதுவும் செய்ய வக்கில்லாத அரசாங்கம் "மக்களுக்கு ஃபிரெஷ்ஷாகக் காய்கனிகள் கிடைக்கவில்லையே'' என்று ரொம்பவும் கவலைப்பட்டு "ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷை' அழைத்து வந்திருக்கிறது.


படித்த இளைஞர்களுக்குக் கூட வேலை தர வக்கில்லாத அரசாங்கம், மக்கள் தானே முயன்று, கையை ஊன்றிக் கரணம் போட்டு, வாழ்வதற்கு ஒரு வழி தேடிக்கொண்டால் அதில் மண் அள்ளிப் போடுவதற்கு அம்பானியையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் அழைத்து வருகிறது.


சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?


அம்பானியின் கடையில் அடுக்கி வைத்திருப்பவையெல்லாம் என்ன அதிசயக் காய்கனிகளா? கோயம்பேட்டில் விற்கப்படும் அதே ஊட்டி முட்டைக்கோசும், கம்பம் கத்தரிக்காயும்தான். ஆனால் அதையே கழுவித் துடைத்து கண்ணாடி ஷோ கேஸில் வைத்து, கடைக்கு குளுகுளு வசதியும் செய்து சுத்தம் என்றும் ஃபிரெஷ் என்றும் பிரமிக்க வைக்கிறார்கள்.


தமிழகத்தின் கிராமப்புறங்களில் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடியாகவே கொள்முதல் செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். எந்தக் காய் எங்கே மலிவோ அதை நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் கொண்டு வந்து புழல் அருகில் ஒரு குளிரூட்டப்பட்ட கிடங்கில் காய்கனிகளைக் குவிக்கிறது. அங்கிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புகிறது. வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்களை எந்திரங்களில் வைத்து வெட்டி பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்கிறது.


"காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது. இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.


துவங்கிய சில நாட்களுக்குள்ளேயே சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற காய்கனிக் கடைகள் எல்லாம் சுடுகாடாகி விட்டன. கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குப் பல வியாபாரிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். தமிழகத்தின் காய்கனிச் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தில் 3,000 கோடி ரூபாய் மூலதனத்தை தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒதுக்கியிருக்கிறது ரிலையன்ஸ் என்கிற இந்தப் பிசாசு.


ஐந்து வட்டிக்கும் பத்து வட்டிக்கும் கடன் வாங்கி, அதிகாலை 3 மணிக்கு ஷேர் ஆட்டோ பிடித்து, கோயம்பேட்டில் சரக்கெடுத்து, அதை நாள் முழுவதும் தெருத்தெருவாகக் கூவி விற்று, விற்காத சரக்கு அழுகிப் போகுமே என்று பயந்து, வந்த விலைக்குத் தள்ளி விட்டு, கந்து வட்டிக் கடனடைத்து, மிச்சமுள்ள காசில் கஞ்சி குடிக்கும் ஏழை வியாபாரிகளால் இந்தப் பிசாசுடன் எப்படிப் போட்டி போட முடியும்?


"இன்றைக்குள் விற்காவிட்டால் நாளை அழுகி நட்டமாகி விடுமே' என்ற கவலை ரிலையன்சுக்கு இல்லை. அவனிடம் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் இருக்கின்றன. இந்தக் கடையில் விற்காவிட்டால் இன்னொரு கடைக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் இருக்கின்றன. இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழுகாமல் பதப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.


அவன் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கத் தேவையில்லை. அரசு வங்கிகளில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் சொந்தப் பணத்தைப் போலப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அம்பானிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அவன் போலீசு மாமூல் கட்ட வேண்டியதில்லை. அரசும் அதிகாரவர்க்கமும் நாயைப் போல அவன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.


"விலையைக் குறைத்து விற்றால் நட்டமாகிவிடுமே' என்ற கவலையே அவனுக்கு இல்லை. இரண்டு வருடங்கள் நட்டத்தில் தொழில் நடத்தி, சந்தை முழுவதையும் கைப்பற்றிய பிறகு, ஆறே மாதத்தில் போட்ட காசை எடுக்கும் கலை அவனுக்குத் தெரியும்.