Language Selection

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடை யிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.


தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. ஆனால், சென்னைத் துறைமுகத்தை ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ஆர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.


ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ஆற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை "ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு' ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.


“நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்” என்கிறார் தயாநிதி மாறன். “·போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்” என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. “தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் கருணாநிதி.


சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.


உலக வங்கி - உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்து வதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.


இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறு மாற்று தெரியாததால், “ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று சிந்திக்கிறார்கள். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் “விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தா லென்ன?” என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.


லஞ்சத்தை வெறுத்த மக்களை ‘லஞ்சம் தவிர்க்க முடியாதது’ என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.


இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமான வர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், ‘ஜனநாயகம்’ என்பதும், ‘வாக்குரிமை’ என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.


நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக ஆக்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த ஆதிக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.


நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?


இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல; வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ் பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.


அந்த ராவ் பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.


மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.


இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.


நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.


“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் ‘தேசிய மக்கள் படை’, பெருவின் ‘ஒளிரும் பாதை’, என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!