Language Selection

‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில ஆயிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?


பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் - ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து ‘வாக்காளப் பெருமக்கள்’ ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. ஆனால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.


நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணை யார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.


நாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?


கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?


பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் ஆயிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?


தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்து கிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?


பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?


“என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்” என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ‘பெரிய’ சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.


விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.


சினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?


விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். ‘சின்ன ஜமீன்’ கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?


குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத் திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?


திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை..... தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த ‘சலுகை’களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?


கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?


பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஆஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?


உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள்.


உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், ‘வாக்காளப் பெருமக்களாகவே’ நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.


வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.